காந்தி ஓர் இந்துவாகப் பிறந்து வளர்ந்தவர். அந்த மத அடையாளத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு முன்போ பின்போ எந்த இந்துவும் அவரளவுக்கு ஆபிரகாமிய மதங்களுடன் தீவிரமாக உரையாடியதில்லை.
போலாக், காலென்பாக், மற்றும் குறிப்பாக சோஞ்சா ஸ்லேஷின் ஆகியோருடன் கொண்டிருந்த நட்பு என்ற லென்ஸ் வழியாக அவர் யூத மதத்தைப் புரிந்துகொண்டார் . கிறிஸ்துவ மதத்தில் அவருக்குத் தனிப்பட்ட முறையிலும், இறையியல் ரீதியிலும் ஈடுபாடு இருந்தது.
யூத மதச் சிந்தனையால் அவ்வளவாகக் கவரப்படாத அவர் தனிவழி (ஹெடெரோடாக்ஸ்) கிறிஸ்துவ நூல்களால் பெரிதும் கவரப்பட்டார். இவற்றில் முதன்மையானது டால்ஸ்டாயின் ‘இறைவனின் ராஜ்ஜியம் உங்களுக்குள்ளே’ என்ற புத்தகம்.
இஸ்லாமுடன் அவரது உறவு ஓரளவு தனிப்பட்ட முறையிலானது என்றாலும் ஓரளவு அரசியல் மற்றும் நடைமுறை நிர்ப்பந்தம் சார்ந்தது. அவர் குரானைப் படித்திருந்தார் (அனேகமாகப் பல தடவை). இருந்தாலும் பகவத் கீதை அல்லது மலைப்பிரசங்கம் அளவுக்குக் குரான் அவரை நெகிழச்செய்யவில்லை.
அவருக்குச் சில முஸ்லிம் நண்பர்கள் இருந்தார்கள்; ஆனால், அதைவிட மிக அதிகமாக அவரது கவனம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதிலேயே இருந்தது.
இவைதான் இந்தியாவைப்போலவே, தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்களிடையே முக்கிய சமூகங்கள். இந்த சர்வசமய அரவணைப்பைவிட அதிகம் வியப்புக்குரிய விஷயம் ஆளும் இனத்தின் மீது அவருக்கு எந்தக் கசப்புணர்வும் இல்லாதிருந்தது.
இதற்கான வேர்கள் லண்டனில் அவர் செலவிட்ட ஆண்டுகளிலும், சைவ உணவுக்காரர்களுடன் அவர் கொண்ட நட்பான பரிமாற்றங்களிலும் இருக்கின்றன. 1891 மே மோதம் இங்கிலாந்தை விட்டுக் கிளம்பும்போது, ‘வருங்காலத்தில் நாம் கலாசார ஒற்றுமையையும் இதயங்களின் ஒற்றுமையையும் நோக்கிச் செல்வோம்’ என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, டர்பனில் வெள்ளையர் கும்பலொன்று அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கிய சம்பவத்தில் காந்தி அவரைத் துன்புறுத்தியவர்களை அல்லாமல், அவருக்குத் துணையாக நின்ற வெள்ளையர்களையே நினைவில் வைத்துக்கொண்டார். அதற்கும் பிறகு, டிரான்ஸ்வாலில் தீவிரமான இன ஒதுக்கலுக்கு ஆளானபோது, காந்தி ஒடுக்கியவர்களோடு ‘உடன்படும் அம்சங்களை’ தேடினார்; அவர்களுடன் ‘முற்றிலும் சமாதானத்துடன்’ வாழமுடியும் என்றே நம்பினார்.
பல ஆண்டுகள் பிரிட்டிஷ்காரர்களிடமும் போயர்களிடமும் தொந்திரவுக்கும், வசைபாடலுக்கும் ஆளானபோதும் ‘வெள்ளைத் தோலோ பழுப்புத் தோலோ, எல்லா உடலுக்குள்ளும் குடியிருக்கும் மனித இயல்பின் ஒருமையை’ நாடுபவராகவே இருந்தார்.
ஐரோப்பியர்களுக்கு, காந்தியுடன் நட்பாக இருப்பது உண்மையில் கடினமாகத்தான் இருந்தது; இதற்காக அவர்கள் நம் பாராட்டுக்கும் உரியவர்கள் ஆகிறார்கள்.
0
இன, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமலிருப்பதில் காந்தி எங்கும், எப்போதும் அபரிமிதமான ஆற்றல் பெற்றிருந்தார். 1890கள், 1900களின் தென்னாப்பிரிக்காவிலும் அப்படியே. காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில் இருவரும் அவ்வளவாகப் பிரபலமாகாத நேரத்தில் 1906ல் அவர்களிடையே நிகழ்ந்த சந்திப்பு இங்கு கவனிக்கத்தக்கது.
ட்ரான்ஸ்வால் பிரிட்டிஷ் இந்திய சங்கம் சார்பாக காந்தி, குடியேற்ற நாடுகளுக்கான துணையமைச்சராக அப்போது இருந்த சர்ச்சிலைச் சந்திக்கச் சென்றிருந்தார். ஜோஹன்னஸ்பர்க்கின் விரீடேட்ராப் என்ற பேட்டையின் தலையெழுத்தை முடிவுசெய்வது தொடர்பான சந்திப்பு அது.
அந்தப் பகுதியில் டச்சு நாட்டவரான பர்கர்களும், இந்தியாவிலிருந்து குடியேறியவர்களும் அருகருகே வியாபாரம் செய்துவந்தார்கள். இது மரபுகள், பழக்க வழக்கங்கங்கள், ஏன், மனித இயல்புக்கே விரோதமானது என்று சர்ச்சில் கருதினார். சர்ச்சிலுக்கு இந்த விஷயத்தில் இருந்த பார்வைகளும், தப்பெண்ணங்களும் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலபோயர் யுத்தத்தின்போது உறுதிபட்டிருந்தன.
எனவே, விரீடேட்ராப் இல் இந்தியர்களை வசிக்கவும், வியாபாரம் செய்யவும் அனுமதிக்கும்படிக் கேட்டபோது சர்ச்சில் சொன்னார், ‘ஐரோப்பிய, ஆசிய, மற்றும் இந்நாட்டுக் குடும்பங்களை அருகருகே கலவையான சமூகமாக வாழ அனுமதிப்பதில் பல்வேறு தீமைகள் இருக்கின்றன.’
காந்தியால் அந்த வாதத்துடன் ஒத்துப்போக முடியவில்லை. அவர் அதே ஜோஹன்னஸ்பர்க் நகரத்தில் ஏற்கெனவே ஒரு ஐரோப்பிய தம்பதிகளுடன் தன் வீட்டைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அந்தத் தம்பதிகளில் ஒருவர் கிறிஸ்துவர், மற்றவர் யூதர்.
காந்தியின் பரந்த மனோபாவம் அவருடன் வீட்டைப் பகிர்ந்துகொண்டவர்களில் ஒருவரது வெளியிடப்படாத நினைவுக்குறிப்பு ஒன்றில் அழுத்தமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஹென்றி போலாக் தன் நண்பரும் தலைவருமாக விளங்கியவரைப் பற்றி எழுதுகிறார்:
‘அவர் பிறப்பால் ஒரு வைஷ்ணவ பனியா; இயல்பால் ஒரு பிராமணர்… நன்னெறியைப் போதனையால் அன்றி, சக மனிதர்களுக்கு வாழ்ந்து காட்டிக் கற்றுக்கொடுத்த ஆசானாக விளங்கியவர்; தன்மேல் நம்பிக்கை வைத்தவர்களை தீரத்துடன் காப்பாற்றும் செயலூக்கத்தில் சத்திரியர்; சக மனிதர்களிடையே மிகவும் எளியவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும் பணியாற்றிய சேவகராகத் தன்னை வரித்துக்கொண்டதில் ஒரு சூத்திரர்.
‘பகவான் ராமகிருஷ்ணரைப்பற்றி ஒன்று சொல்வார்கள். அவர், தீண்டத்தகாதவர்களின் மேலான வெறுப்பிலிருந்தும், ஆணவத்திலிருந்தும் தான் விடுதலை பெற்றுவிட்டதை உறுதிசெய்யும் விதமாக, பறையர் ஒருவரது குடிசையைத் தன் முடியாலேயே பெருக்கிச் சுத்தம் செய்தாராம். இரு பிறப்பாளரும் (அதாவது மேல் சாதியர்) பிரதம அமைச்சரின் மகனுமானவர் (காந்தி) தன் கையாலேயே தன் வீட்டிலும் தான் அடைக்கப்பட்டிருந்த சிறைகளிலும் கழிவறைகளைச் சுத்தம் செய்வதைப் பலர் பார்த்திருக்கிறார்கள்.’
காந்தியால் எப்படி எல்லா சாதிக்காரராகவும், சாதியே இல்லாதவராகவும் இருக்க முடிந்தது என்று கூறிய பிறகு, போலாக் அவர் கடைப்பிடித்த சர்வசமய சமத்துவ தத்துவத்தை வலியுறுத்துகிறார்:
அவரைப் பொறுத்தவரையில் மதம் என்பது சக்திவாய்ந்த, சகலத்தையும் ஏற்றுக்கொள்கிற சகிப்புத்தன்மை; மாபெரும் கருணையே அனைத்திலும் பெரிய நற்பண்பு.
பிறப்பால் இந்துவான அவர் மொகமதியர்கள், கிறிஸ்தவர்கள், ஜொராஷ்டிரியர்கள், யூதர்கள், பௌத்தர்கள், கன்ஃபூஷியர்கள் என எல்லா மனிதர்களையும் ஆன்மிக சகோதரர்களாகக் கருதினார். அவர்களுக்கிடையில் அவர் எந்த வேறுபாடும் காட்டுவதில்லை. எல்லா சமயநெறிகளும் மீட்சிக்கு இட்டுச்செல்பவையே; அனைத்துமே கடவுளைக் காணும் வழிகளே; மனிதர்கள் தம்மிடையேயான உறவில் முதலில் சக மனிதர்கள், அதன் பின்னரே மதங்களைப் பின்பற்றுபவர்கள் என்று அவர் உணர்ந்திருந்தார். எனவே, எல்லா மதங்களையும் சார்ந்தவர்களும், எந்த மதங்களையும் சாராதவர்களும் கூட அவருடைய நண்பர்களாகவும், அபிமானிகளாகவும், அவருக்கு உதவுபவர்களாகவும் இருந்தார்கள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது தென்னாப்பிரிக்க அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கும்போது காந்தி இவ்வாறு நினைவுகூர்ந்தார் :
‘ஃபீனிக்ஸ் மற்றும் டால்ஸ்டாய் பண்ணைகளில் இருந்தவர்கள், மதப் பிரிவுகளின்படிப் பார்த்தால் பவ்வேறு சாதிகளைச் சேர்ந்த இந்துக்கள், சன்னிகள், ஷியாக்கள், புராட்டஸ்டன்டுகள், கத்தோலிக்கர்கள், பார்சிகள், யூதர்கள் ஆகியோர்.
‘அவர்கள் செய்துவந்த வேலைகளில் கட்டடக்கலை, இதழியல், சட்டம், வியாபாரம் போன்றவை அடக்கம். அவர்கள் இப்போது தமது மத நம்பிக்கைகளையும், கல்வித் தகுதிகளையும், பொதுவான ஆசிரம வேலைகளில் கரைத்துக் கொண்டு, அச்சிடுவது, தோட்டவேலை, தச்சுவேலை, வீடு கட்டுவது போன்றவற்றைச் செய்தார்கள்.
‘சத்தியமும் அகிம்சையும் மத வேறுபாடுகளை உருக்கிவிட்டது; ஒவ்வொரு மதத்திலும் அழகைக் காண நாங்கள் கற்றுக் கொண்டோம். தென்னாப்பிரிக்காவில் நான் ஏற்படுத்திய இரண்டு காலனிகளிலும் எந்த மதப்பூசலையும் தான் பார்த்ததில்லை. உடல் உழைப்பு அலுப்பூட்டுவதாக இல்லாமல், உவகை தருவதாக இருந்தது.’
ஃபீனிக்ஸிலும் டால்ஸ்டாய் பண்ணையிலும் இருந்த குடியிருப்புகள் வேறுபட்டவை சந்திக்குமிடமாக, ஒன்று கலக்கும் பானையாக இருந்தன. குடியேறியவர்கள் ஒன்றாக வசித்து ஒன்றாக உழைத்தார்கள். சமூக, சமய வேறுபாடுகள் ஒன்றுமில்லாமல்போய், இதெல்லாம் ஒரு விஷயமேயில்லை என்று ஆகிவிட்டன.
0
தன் சொந்த வர்க்க, மத, இனப் பின்னணிகளைக் கடந்து வரும் ஆற்றலில் காந்தி தன் சமகாலத்தில் வாழ்ந்த எல்லோரையும் விஞ்சியிருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் அமைக்கப்பட்டபோது, அது பல்வேறு பிரிவுகளையும், இனக்குழுக்களையும் சேர்ந்த தேசியவாதிகளை ஏற்றிக்கொள்கிற ஒரு ‘நோவாவின் கப்பல்’போல இருந்தது.
காங்கிரஸ் தோன்றி முப்பது ஆண்டுகள்வரை அது முதன்மையாக நடுத்தர வர்க்கமும், பெருநகர்களும் சார்ந்ததாகவே இருந்தது. டாக்டர்களும், வழக்கறிஞர்களும், பத்திரிகை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் அதன் வருடாந்திரக் கூட்டங்களுக்குத் திரண்டு வந்தனர். விவசாயிகளுக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் பிரதிநிதித்துவம் இல்லை. முஸ்லிம் தலைவர்களும் விலகிச் சென்றனர். தாழ்த்தப்பட்ட சாதியிகளைச் சேர்ந்த அறிவுஜீவிகளும் சீர்திருத்தவாதிகளும் கூட அப்படியே.
மேலும் காங்கிரஸ் முழுக்கவே ஆண்களின் அமைப்பாகத்தான் இருந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. காந்தியின் அரசியல் ஆசான்களான தாதாபாய் நௌரோஜியும், கோபால கிருஷ்ண கோகலேயும் பிரிவினை சார்ந்த பக்கச் சார்புகள் இல்லாதவர்கள். இருவரும் இந்தியர்களாகவே இருந்தார்கள்; குஜராத் பார்சியாகவும், இந்து மராத்தியராகவும் அல்ல.
கோகலே சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது நிறுத்தப்படவேண்டும் என்று முதலில் குரல்கொடுத்த ஒருசில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். இருந்தாலும் அன்றாட வாழ்வில் நௌரோஜி, கோகலே இரண்டு பேருமே நகரம் சார்ந்த, செயல் திறம் மிகுந்த, மேல்தட்டு ஆண்கள் என்ற சூழலுக்குள் அடைபட்டே இருந்தார்கள். இருவருமே தொழிலாளிகளை (வியாபாரிகளைக் கூட) தமது நண்பர்களாகவோ சகாக்களாகவோ கருதவில்லை.
0
தென்னாப்பிரிக்காவில் காந்தி
ராமச்சந்திர குஹா
தமிழில்: சிவசக்தி சரவணன்
நூலைப் பெற: Amazon | FlipKart