‘பகவத் கீதையும், குரானும் அருகருகே ஓதப்படும் வகையிலும், மசூதிக்கு அளிக்கும் அதே மரியாதை குருத்வாராவுக்கும் கிடைக்கும் வகையிலும் பாகிஸ்தானை உருவாக்க முடியுமா?’ என்று 1947 ஜூன் 7-ல் ஜின்னா மற்றும் அவருடைய சகாக்களுக்கு காந்தி சவால் விடுத்தார்.
ஆறு நாள்கள் கழித்து இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பரஸ்பரம் சிறுபான்மையினர் உரிமைகள் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைத்தார்.
‘ரஹீம் என்று அழைப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமா? பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பகுதியில் ராமா என்று அழைக்கத் தடை வருமா? கிருஷ்ணா என்று அழைப்பவர்கள் பாகிஸ்தானை விட்டு நாடு கடத்தப்படுவார்களா?’ என்று காந்தி கேள்வி எழுப்பினார் (ஜூன் 13).
ஜூலை 5 ஆம் தேதி பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு உரிமை வேண்டும் என்ற தனது முந்தைய கருத்தை காந்தி மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால் பாகிஸ்தான் எதிர்கொள்ளவிருக்கும் உண்மையான சிக்கல் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை எப்படி நடத்தப் போகிறது என்பதுதான்? குறிப்பாக முஸ்லிம்களிலேயே ஷியா, சுன்னி உள்படப் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவர்களைப் பாகிஸ்தான் எவ்வாறு நடத்தப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’.
இந்திய சுதந்திரம் மற்றும் பாகிஸ்தான் உருவான அதே 1947 ஆகஸ்ட் மத்தியில் பஞ்சாபில் பெரிய அளவில் படுகொலைகள் அரங்கேறின. ஆனால் அதே நேரம், இந்திய சுதந்திரப் போரின் முக்கியத் தலைவரான காந்தி, ஒரு சாதாரண மனிதராக, ஏழைகள் வாழும் கல்கத்தாவின் ஒரு பகுதியில் தங்கியிருந்தார். நிலைமை கட்டுக்குள் வரத் தன்னாலான உதவிகளைச் செய்த பிறகு, அந்த இடத்தை விட்டு வெளியேறி செப்டம்பர் 5 ஆம் தேதி தில்லி வந்தடைந்தார். அங்கிருந்து பஞ்சாப் செல்லத் திட்டமிட்ட நிலையில், இந்தியத் தலைநகரில் வன்முறை வெடிக்கவே வேறு வழியின்றி அங்கேயே தங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானார்.
இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது பாகிஸ்தானில் நடைபெற்ற வன்முறையும், கொலைவெறித் தாக்குதல்களும் காந்தியின் இதயத்தைக் கிழித்தன. தில்லியிலிருந்து கிளம்பி பாகிஸ்தான் போக முடிவெடுத்த நிலையில், அங்குள்ள மக்களுக்குத் தனது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்:
(செப்டம்பர் 18) ‘நான் பாகிஸ்தான் சென்றால் அங்குள்ள மக்களைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடவிடமாட்டேன். இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்காக உயிரை விடுவேன். அங்கேயே சந்தோஷமாகச் சாவேன். அதேபோல் இங்கும் மகிழ்ச்சியுடன் உயிரை விடத் தயாராக இருக்கிறேன்’.
(செப்டம்பர் 20) ‘குதா, அல்லா, ஈஸ்வர் மற்றும் ராமா ஆகியோரை நினைவுபடுத்திக் கொள்ள இதுவே தருணம். இந்த மூன்று பிரிவினரின் ரத்தம் (இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள்) ஒன்றுதான். இதை நிரூபிக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். இதைச் செய்து முடிக்கக் கடவுள் முன்பு கதறி அழுது கண்ணீர் விடுவேன். மனிதன் முன்னால் அழ மாட்டேன். ஆனால் ஆண்டவன் முன்பு செய்வேன்.
(செப்டம்பர் 23) நான் லாகூருக்குப் போக வேண்டும் …. நான் ராவல்பிண்டிக்குப் போக வேண்டும் …. தில்லியில் நீங்கள் சண்டை போடுவதைத் தவிர்த்தால், ஆண்டவன் எனது பிரார்த்தனைக்குச் செவிசாய்த்தான் என்று எடுத்துக் கொள்வேன். பிறகு ஆண்டவன் அருளுடன் பஞ்சாபுக்குச் செல்வேன். உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். தில்லியில் அமைதி திரும்பியவுடன், ஒரு நாள் கூட இங்கே தங்க மாட்டேன்’.
ஜனவரி 13 அன்று காந்தி தனது கடைசி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரு நாடுகளிலுள்ள சிறுபான்மை மதத்தவரின் பாதுகாப்பே இதன் நோக்கம் என்று அறிக்கை வெளியிட்டார். ஆறு நாள்கள் கழித்து தில்லி மக்கள் பிரதிநிதிகள் அங்கு வாழும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். காந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் கிளம்பத் தயாரானார்.
ஜனவரி 18 வழக்கமாக நடைபெறும் மாலை நேரப் பிரார்த்தனைக் கூட்டத்துக்காகக் கீழ்க்காணும் அறிக்கையைத் தயாரிக்க காந்தியின் உடலில் போதிய தெம்பு இருந்தது:
இப்போது முதல் இந்துக்களும், சீக்கியர்களும், முஸ்லிம்களும் சகோதரர்களைப் போல் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும், எந்தச் சூழலிலும், எந்தத் தூண்டுதலிலும், தில்லியில் வாழும் மக்கள், அகதிகள் உள்பட, ஒருவரை ஒருவர் எதிரிகளாகக் கருத மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளனர். இது மிகச் சாதாரண விஷயம் அல்ல.
கடவுளை மீது நம்பிக்கை வைத்துவிட்டால் பின்னர் எந்தச் சூழலிலும் மாற மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இது நடைபெற்றால் இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக இணைந்து உலகுக்குச் சேவை செய்வதுடன் அதை இன்னும் புனிதமாக்குவார்கள். இந்த ஒரேயொரு விஷயத்தைத் தவிர வேறு எதற்காகவும் நான் உயிர் வாழ விரும்பவில்லை.
காந்தி அடிக்கடி குறிப்பிடும் வரிகளில் ‘கடவுள்’ என்பதற்குப் பதிலாக ஏன் ‘சத்தியம்’ குறித்து அதிகம் பேசினார் என்பதையும் அவரே விளக்குகிறார்:
‘சத்தியம்’ என்பதன் பரிச்சயமான அர்த்தம் ‘கடவுள்’ என்பதால் நான் ‘சத்தியத்தின்’ பெயரில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன். ‘ஆண்டவனின்’ பெயரால் மக்கள் நிரபராதியா குற்றவாளியா, ஆண்களா பெண்களா, குழந்தைகளா பச்சிளம் குழந்தைகளா என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் பொய், பித்தலாட்டம், படுகொலைகளில் ஈடுபடுகிறோம். கடத்தல், கட்டாய மதமாற்றம் ஆகியவற்றையும் வெட்கமின்றிச் செய்து முடித்தோம். ஆனால் இவை அனைத்தையும் யாரேனும் ‘சத்தியத்தின்’ பெயரால் செய்தார்களா என்று எனக்குத் தெரியாது. எனவே எனது உதட்டில் அதே ‘சத்தியத்தின்’ பெயரை உச்சரித்தபடியே இந்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன்.
1948 ஜனவரி 20ல், பாகிஸ்தானிய அகதியும் காந்தியைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியவர்களுள் ஒருவனுமான மதன்லால் பஹ்வா திட்டமிட்டபடி, தில்லியில் நடைபெற்ற காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தின் மீது குண்டை வீசினான். ஆனால் அதே கூட்டத்தில் பங்கேற்ற இவனது கூட்டாளிகளால் மேலும் சில குண்டுகளை வீசவோ, துப்பாக்கியால் சுடவோ முடியாமல் போனது. அவர்கள் எப்படியோ தப்பித்துக் கொள்ள, பஹ்வா மட்டும் சிக்கிக் கொண்டான். அவன் மாட்டிக் கொள்ள தெய்வ பக்தி நிறைந்த ஒரு பெண்மணியே காரணம். அடுத்த நாள் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பஹ்வா மற்றும் அந்தப் பெண்மணி குறித்துக் காந்தி கீழ்க்கண்டவாறு கூடியிருந்தோரிடம் பகிர்ந்து கொண்டார்:
‘இதற்குக் காரணமானவன் மீது உங்களுக்கு எந்தவிதமான வெறுப்பும் இருக்கக்கூடாது. நான் இந்து மதத்துக்கு எதிரானவன் என்று இவனாகவே கருதிக் கொண்டான். தீயவர்களுக்குப் பலம் அதிகரித்துத் தர்மத்துக்குக் கேடு விளைவித்தால், அவர்களை அழிக்க ஆண்டவன் ஒருவரை அனுப்பி வைப்பான் என்று பகவத் கீதை நான்காவது அத்யாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அல்லவா. குண்டை எறிந்த இவனோ, என்னை அழிக்க ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்டதாக அவனாகவே நினைத்துக் கொண்டான். நான் அவனைப் பார்க்கவில்லை. ஆனால் காவல் துறையினர் கேட்ட போது நான் சொன்னதைத்தான் பதிலாகக் கூறினான் என்று கேள்விப்பட்டேன். அவன் நன்றாக உடை உடுத்தியிருந்தானாம்.
ஆனால் …. ஒருவனை நமக்குப் பிடிக்கவில்லை எனில் அவன் கெட்டவன் என்று அர்த்தமா? என்னைக் கெட்டவன் என்று கருதிக் கொண்டு யாராவது என்னைக் கொன்றால், ஆண்டவன் முன்பாக அவன் பதிலளிக்க வேண்டாமா? ஆண்டவனின் கட்டளையைத்தான் நிறைவேற்றினேன் என்று சொன்னால், அவனுடைய தீய செயல்களுக்கு ஆண்டவனையும் கூட்டாளி ஆக்குகிறான் என்பதுதானே பொருள்…
இவனுக்குப் பின்னால் இருப்பவர்களும், யாரோ ஒருவரின் கருவியாக உள்ள இவனும், இதுபோன்ற செயல்கள் இந்து மதத்தைக் காப்பாற்றாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில், என்னைப் போன்று செயல்பட்டால் மட்டுமே காப்பாற்ற முடியும். நான் குழந்தைப் பருவம் முதற்கொண்டே இந்து மத தர்மங்களைக் கடைப்பிடித்து வருகிறேன். என்னை வளர்த்த செவிலித்தாய், எப்போதெல்லாம் அச்சப்பட்டேனோ, அப்போதெல்லாம் ராம நாமத்தைச் சொல்ல வேண்டுமென்று கற்றுக் கொடுத்தார்.
எல்லாப் பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்ற நிலையில், ஐந்து அல்லது ஆறு வயதில் எப்படி இருந்தேனோ, அப்படியேதான் இன்றைக்கும் தீவிர இந்துவாக இருக்கிறேன். என்னைப் போன்ற தீவிர இந்துப் பற்றாளரைக் கொல்வதன் மூலம் இந்து தர்மத்தை அழிப்பதுதான் உனது விருப்பமா? சில சீக்கியர்கள் என்னிடம் வந்து இந்தப் பாதகச் செயலில் ஒரு சீக்கியன் ஈட்டுபட்டிருப்பான் என்று நினைக்கிறார்களா என்று கேட்டார்கள். ஆனால் அவன் சீக்கியன் இல்லை என்பது நிச்சயமாகத் தெரியும். அப்படியே அவன் சீக்கியனாக இருந்தால் என்ன? அல்லது ஒரு இந்துவாகவோ, முஸ்லிமாகவோ இருந்தாலும் என்ன? அவனுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து ஆண்டவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை…
அவன் சிக்கிக் கொள்ளப் படிப்பறிவில்லாத ஒரு பெண்மணியின் வீரமே காரணம். அவளின் தைரியத்தை மனமாரப் பாராட்டுகிறேன்’.
மேற்கூறிய கருத்துகளைக் கூறிய காந்தி ஒன்பது நாள்கள் கழித்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜனவரி 20 அன்று காந்தியைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியவர்களுள் ஒருவனான நாதுராம் கோட்சே, ஜனவரி 30 அன்று மீண்டும் திரும்ப வந்து காந்தியின் நெஞ்சை மூன்று குண்டுகளால் துளைத்துக் கொன்றான்.
0
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
ராஜ்மோகன் காந்தி; தமிழில்: ஜனனி ரமேஷ்