இந்தோரிலுள்ள கஸ்தூர்பா ஆசிரமத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்திருந்த கையெழுத்துப் பிரதியொன்று கண்டெடுக்கப்பட்டது. புரட்டிப் பார்த்தபோதுதான் அது ஒரு புதையல் என்பது தெரியவந்தது. கஸ்தூர்பாவின் நாட்குறிப்புகள் அவை. ஜனவரி முதல் செப்டெம்பர் 1933 வரை கஸ்தூர்பா எழுதி வைத்த குறிப்புகள் அவை. 135 பக்கங்கள் நீளும் அந்த நாட்குறிப்பை துஷார் காந்தி விரிவான அடிக்குறிப்புகளோடும் விளக்கங்களோடும் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். ‘The Lost Diary of Kastur, My Ba’ எனும் நூலிலிருந்து சில பகுதிகள் தமிழில்.
0
பாபு, செகான் என்ற இடத்தில் குடியேறலாம் என்று முடிவு செய்திருந்தார். அவரது கனவு கிராமத்தின் வாழும் மாதிரியாக அந்த இடம் மாற இருந்தது.
ஆசிரமம் மெல்ல உருவம் பெற்றுக் கொண்டிருந்தது. முதலில் ஆதி ஆசிரமம். ஒரு சிறிய, ஒற்றை அறை கொண்ட சேற்றாலான சுவர்கள். கட்டுமான செலவு நூறு ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும்; பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் அந்த இடத்திலிருந்தே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது பாபுவின் நிபந்தனை.
ஆனால், அதிக மனிதர்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டனர்; அங்கு தங்க வருவதாகக் கூறத் தொடங்கினர்; இதனால், சில வசதிகள் சேர்க்கப்பட்டன: பொதுச் சமையலறை ஒன்று சேர்ந்து கொண்டது; அதன்பின்னர் பசுக்களுக்கான தொழுவம் ஒன்றும். பாபுவைச் சுற்றி ஆசிரமம் உருவாகிக் கொண்டிருந்தது.
கோடையின் பிற்பகுதியில், பேத்தி மனுவுடன் பா, சேகானுக்கு வந்தார். அந்த ஆசிரமம் அப்போது சேவாகிராம் என்று அழைக்கப்பட்டது. ஆசிரமத்திற்கு வரும் பார்வையாளர்கள் வார்தா ரயில் நிலையத்திலிருந்து ஐந்து மைல் தூரம் நடக்க வேண்டும்.
தூசிப் பறக்கும் மண் சாலை. அவ்வப்போது தேள்களும் பாம்புகளும் குறுக்கும் நெடுக்குமாக ஓடும். பாபுவின் குடிசையில் ஒரு மூலையில் அவரும் மனுவும் தங்கிக் கொண்டனர்; ஆனால், தனக்குத் தனியாக ஒரு குடிசை வீடு கட்டித்தர வேண்டும் என்று பா வேண்டிக்கொண்டார். அந்தக் குடிசையில் குடியேறும் வரை ஒரு நாடோடி போன்ற வாழ்க்கையைத் தொடர அவர் முடிவு செய்தார்.
டிசம்பர் 1936 ‘பா குடில்’ வசிப்பதற்குத் தயாராக இருந்தது. ஓர் அறை. சுவர்களும் தரையும் மண்ணால் பூசப்பட்டிருந்தன. ’டெரகோட்டா’ ஓடுகள் வேய்ந்த கூரை. அத்துடன் ஒரு விசாலமான வராந்தாவும் இருந்தது. பாபு நிர்ணயித்திருந்த நூறு ரூபாய் வரம்பைக் காட்டிலும் சிறிது அதிகமாகவே செலவாகிவிட்டது.
பாபு, அதை ’அரண்மனை’ என்று அழைத்தார். தனது புதிய வீட்டில் குடியேறிய பா, தனக்கான சமையலறையை அமைத்துக்கொண்டார்; தனது உணவையும் சமைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். குடிலுக்குச் சென்றதும் அவர் செய்த முதல் காரியம் ஒரு புனிதமான துளசிச் செடியை நட்டது. வாழ்நாள் முழுவதும், அவர் எங்கு வசித்தாலும் அங்கு ஒரு துளசிச் செடியை நடும் பழக்கத்தைப் பின்பற்றினார்; அதைப் பேணி வளர்த்து, தினமும் துளசியை வணங்குவதை வழக்கமாகக் கொண்டார். இதுவே அவருடைய இறுதி இல்லமாக இருக்கக்கூடும்; ஆனால், மற்றுமொரு விருப்பமற்ற நகர்வு அவருக்காகக் காத்திருந்தது; வாழ்வின் இறுதிக் காலத்தின் அவர் அடைய நினைத்த அந்த இடம், எப்போதும் நகர்ந்து கொண்டேயிருந்தது.
பா, மிக விரைவில் சேவாகிராமில் தனக்கான, சுதந்திரமான இயங்கும் வெளியை நிறுவிக்கொண்டார். ஆசிரமவாசிகளுக்கான மிகக் கடுமையான பெரும்பான்மை விதிகள் அவருக்காகத் தளர்த்தப்பட்டன, ஆனால் அவர் அவற்றை அதிகமாக மீறவில்லை; பாபுவின் கட்டளைகள் அனைத்தையும் அவர் பணிவுடன் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. பாபுவும், சற்றுக் கடுமை தணிந்தவராகத்தான் நடந்துகொண்டார்.
ஒருமுறை, மணிலால் தனது குடும்பத்தினருடன் ஆசிரமத்திற்கு வந்திருந்தார். வந்த இடத்தில் அவரது நான்கு வயதான இளைய மகன் அருண் (என் அப்பா) காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டான். பாபு அவருக்குப் பிடித்தமான சிகிச்சையைப் பரிந்துரைத்தார்: பட்டினியும், அடிக்கடி வெந்நீர் குடிப்பதும்.
மூன்றாவது நாளே அருணின் காய்ச்சல் குறைந்துவிட்டது. அவனுக்கு பெரும்பசி. குணமாகிவிட்டதால், அவனுக்கு உணவளிக்கலாம் என்று என் பாட்டி கருதினார். ஆனால், பாபுவோ, சிகிச்சையை முழுவதும் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே பட்டினியை இன்னும் மூன்று நாட்கள் தொடர வேண்டும்; அப்போதுதான் அனைத்து நச்சுகளும் அவன் உடலிலிருந்து வெளியேறி, உடல் சுத்தமாகும் என்றார்.
அருண் பசியால் அலறத்தொடங்க, சுசீலா கலங்கிப் போனார். ஆனால், பாபுவின் உத்தரவை மீறும் தைரியம் அவருக்கு இல்லை. அந்த நேரத்தில் புதிதாகப் பிழிந்த ஆரஞ்சு சாறுடன் பா வந்தார்; அருணுக்கு அவர் கையாலேயே அந்தக் குவளை சாற்றை புகட்டினார். பாவின் தலையீட்டை பாபு ஏற்றுக்கொண்டார்.
0
மற்றொரு முறை, பாபுவின் உத்தரவுகளை பா மீண்டும் மீறினார். அக்டோபர் 2, (1935) பாபுவின் பிறந்தநாள். மகிளா ஆசிரமத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் அன்று சேவாகிராமிற்கு வருவதும் பகல் பொழுதை அங்கு கழிப்பதும் ஒரு வழக்கமாகி இருந்தது. அந்த ஆண்டும் பாபு அவர்களை வருவதற்கு அனுமதித்தார் ஆனால், ஆசிரமம் அவர்களுக்கு உணவு அளிக்காது, எனவே அவர்களுக்கான உணவை அவர்களே எடுத்து வர வேண்டும் என்று கூறிவிட்டார்.
சுமார் பதினைந்து முதல் இருபது பெண்களும், சிறுமிகளும் அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலையில் தங்களுக்கான உணவுடன் சேவாகிராமிற்கு வந்துவிட்டனர். மதிய உணவு நேரம். அவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து, கட்டிக்கொண்டு வந்திருந்த உணவைச் சாப்பிடத் தொடங்குவதை பா பார்த்தார். மற்ற ஆசிரமவாசிகளுடன் அமர்ந்து அவர்கள் ஏன் சாப்பிடவில்லை என்று கேட்டார்; பாபுவின் உத்தரவு பற்றி அவர்கள் விளக்கினர்.
பா, அவர்களை தனது குடிசையின் வராந்தாவில் வந்து அமருமாறு அழைத்தார். கோதுமை மாவு, நெய் மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட சில இனிப்புகளை அவர் எப்போதும் வைத்திருப்பார். அவற்றை அந்தப் பெண்களுக்கு பகிர்ந்தளித்தார்.
பின்னர், ஆசிரமத்தின் சமையலறையிலிருந்து சில பொருட்களை எடுத்து வந்து கிச்சடி சமைத்து, அவர்களுக்கு நெய் மற்றும் தயிருடன் பரிமாறினாள். பாபுவின் கட்டளை மதிக்கப்படாதது பாபுவிடம் தெரிவிக்கப்பட்டது. ஒரு வறண்ட புன்னகையுடன் அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
0
ஒருமுறை பா இமாலயத் தவறொன்றைச் செய்தார். அதற்காக அவருக்கு அவ்வளவு எளிதாக மன்னிப்புக் கிடைக்கவில்லை. அத்துடன், அவரது மீறலுக்காக, பாபு தன் தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள நேரிட்டது.
தீண்டத்தகாதவர்களின் மீட்பிற்கான பிரசார இயக்கம் ஒன்றையொட்டி அரிஜன் யாத்திரையை ஒரிசாவின் டெலாங் மாகாணத்தில் பாபு அறிவித்திருந்தார். இப்போது அதற்கு ஒடிஷா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவருடன் தானும் செல்வதென்று பா முடிவு செய்தார். மேலும் சில ஆசிரமப் பெண்மணிகளும் அவருடன் இணைந்துகொண்டனர்: என் பாட்டி, சுசீலா, மகாதேவ் தேசாயின் மனைவி துர்காபென்.
பூரி ஜெகநாதர் புனித ஆலயம் டெலாங்கிற்கு அருகில்தான் இருந்தது. கோவிலுக்குள் சென்று வழிபடும் ஆசையை பாவால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஒரு பிரச்சனை. தாழ்த்தப்பட்ட சாதியினருக்குக் கோயிலில் அனுமதியில்லை. தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்படும் மனிதர்கள் வளாகத்திற்குள் நுழைய முடியாது. சாதிப் பாகுபாட்டையும் பிரிவினையையும் கடைப்பிடிக்கும் கோவில்களுக்குச் செல்லமாட்டேன் என்று பாபு உறுதியேற்றிருந்தார். அதனால் ஜெகந்நாதர் கோவில் தடை எல்லைக்குள் வந்துவிட்டது.
ஒரு நாள் காலை, பாவும் அவருடன் சில பெண்களும் பூரிக்குப் புறப்பட்டனர். அவர்கள் ஊரைச் சுற்றிப் பார்க்கச் செல்வதாக பாபு கருதினார். மனிதரிடையே பாரபட்சம் காட்டும் இந்தப் பிரிவினை நடைமுறையை எதிர்த்து கோவிலுக்குள் அவர்கள் நுழையமாட்டார்கள்; தீண்டத்தகாதவர்கள் இந்த இடத்திற்கு மேல் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இடத்தை அவர்கள் தாண்டிச்செல்ல மாட்டார்கள் என்றும் நம்பினார்.
ஆனால், இறைவனை வணங்கும் ஆசையை பாவால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு பாரம்பரியமான, ஆழ்ந்த மத நம்பிக்கையுடைய, இந்து மேல் தட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர்; திருமணம் செய்து கொண்ட வீட்டிலும் அனைத்துச் சடங்குகளும் முறையாகச் செய்யப்படுகின்றன. கணவனின் சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் முக்கியத்துவம் உணர்ந்தவர்; அவற்றில் அவரும் பங்கு கொண்டிருக்கிறார்; எனினும், அவர் வளர்க்கப்பட்ட முறையில் அவரது ஆன்மாவிற்குள் பொதிந்து போய்விட்ட சடங்கார்ந்த விஷயங்களை அவரால் கைவிட முடியவில்லை.
விளைவாக, தனது மருமகள் சுசீலாவின் எச்சரிக்கையையும் புறக்கணித்த பா, தடைசெய்யப்பட்ட கோவிலின் கருவறைக்குள் நுழைந்து வழிபாடு செய்தார். மகாதேவின் மனைவி துர்காவும் அவருடன் சேர்ந்து கொண்டார்; இறுதியில் சுசீலாவும் தயக்கத்துடனும் பயத்துடனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். இதைக் கேள்வியுற்ற பாபுவுக்கு வேதனையும் எரிச்சலும் ஏற்பட்டது.
அன்று மாலை, பிரார்த்தனை முடிந்தபின் அவர் ஆற்றிய உரையில், பாவின் அத்துமீறல்களைக் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், தன் இயல்பிற்கு உண்மையாக நடந்துகொண்டார்; சாதி பாகுபாடு என்ற அநீதி குறித்தும், மனிதரிடையே பாரபட்சம் காட்டப்படுவதையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவரது மனைவிக்குக் கற்பிக்கவில்லை என்று தன்னையே குற்றஞ்சாட்டிக்கொண்டார்; அதாவது அவரது மனைவியின் செயல், அவரது தோல்வியால் விளைவு.
எனவே, தண்டனையாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அதே தோல்விக்காக மகாதேவையும் பாபு விமர்சித்தார். பா தன் தவற்றை உணர்ந்து வருந்தினார்; அனைவரின் முன்னிலையில் பாபுவால் தான் கண்டிக்கப்பட்டதால் மகாதேவ் மிகவும் வேதனைப்பட்டார்.
மறுநாள் காலை, அவர் தனது பணியை ராஜினாமா செய்ய விரும்புவதாக பாபுவிடம் தெரிவித்தார். பாபு காயமடைந்தார். அவர் மகாதேவிடம், ‘மகாதேவ், நான் உன்னை என் மகனாகவே ஏற்றுக் கொண்டுள்ளேன். சில நேரங்களில் ஒரு தந்தையாக உனக்கு அறிவுரை கூறும் உரிமையை எனக்கு நீ மறுப்பாயா?’ என்று கூறினார்.
இருவரும் தங்கள் தவறுகளை ‘அரிஜன்’ இதழில் எழுதினர். மகாதேவ், பாபுவின் அதிருப்திக்கு ஆளானதால் ஏற்பட்ட வருத்தத்தை வெளிப்படுத்தினார்:
மேலுலகத்தில் ஒரு துறவியுடன் வாழ்வது,
பேரின்பமும் புகழும் தருவது; ஆனால்
பூமியில் ஒரு துறவியுடன் வாழ வேண்டும்
என்பது முற்றிலும் வேறொரு கதை
பாபுவும் மகாதேவும் பரிகாரத்திற்காகப் பட்டினி இருந்தனர்; பாபு உண்ணாவிரதம் இருந்தபோது, பா தனது உணவை மிகவும் குறைத்துக் கொண்டார்.
0