Skip to content
Home » காந்தியை அறிதல் : ஒரு நூல் பட்டியல்

காந்தியை அறிதல் : ஒரு நூல் பட்டியல்

காந்தியை அறிதல்

உலக வரலாற்றில் பல பேராளுமைகள் வரலாற்றாசிரியர்களுக்கும் வரலாற்றார்வலர்களுக்கும் வற்றாத ஜீவநதிகளாக இருக்கின்றனர். மார்க்ஸ், லெனின் பற்றி ஒரு நூலகத்தையே நிரப்பக்கூடிய அளவுக்கு நூல்கள் வெளிவந்துவிட்டபோதிலும் இன்றும் அவர்கள் பற்றி புதிதாக வாழ்க்கை வரலாறுகள், வரலாற்றாய்வுகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. அப்படி ஒரு வரிசையில் இந்திய அளவில் மோகன்தாஸ் காந்தியைச் சொல்லலாம்.

காந்தி வரலாற்றாய்வாளர்களை விளக்கு விட்டில்பூச்சியை ஈர்ப்பதுபோல் ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். அதனாலேயே போதுமான வரலாற்று வெளிச்சம் கிடைக்காத இந்தியப் பேராளுமைகளாக ஜவாஹர்லால் நேருவும் அம்பேத்கரும் இருக்கிறார்கள்.

நான் காந்தியை அறிய நுழைவாயில்களாக இருந்தவர்கள் ஜவஹர்லால் நேருவும் லூயி ஃபிஷரும். இருவருமே மேற்கத்தியப் பார்வைக் கொண்டவர்கள். இன்றும் காந்தியை நான் பெரும்பாலும் மேற்குலக ஆய்வாளர்கள் வழியேதான் தொடர்ந்து அறிந்து வருகிறேன். இந்திய வரலாற்றெழுத்து இன்னும் பெருமளவு முதிராநிலையில் இருப்பது ஒரு பெரும் காரணம். தமிழ்ச்சூழல் இன்னும் மோசம்.

இன்னொரு காரணம் சற்றே விவாதத்துக்குரியது. மேற்கத்திய எழுத்தாளர்கள் கிறிஸ்தவ இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அந்தப் பண்பாட்டுத் தளத்தில் இருந்து எழுந்தவர்கள் என்பதால் காந்தியை அவர்கள் துல்லியமாகப் புரிந்துகொண்டார்கள். இந்து சமய கருத்தியிலாளர்களைவிட கிறிஸ்தவ இறையியல் கருத்தியயிலாளர்கள் காந்தியை வியந்து நோக்கி அவர் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள்.

காந்தி என்கிற பெருவாழ்வு நீங்கள் அவரை எவ்வளவு படித்திருந்தாலும் ஆச்சர்யப்படுத்த வல்லது. இங்கிருக்கும் நூற்பட்டியல் அப்பேராளுமையை ஒரு பெருங்கடலைச் சிமிழுக்குள் சிறைப்படுத்தும் முயற்சி.

வாழ்க்கை வரலாறுகள்

1. The Life of Mahatma Gandhi – Louis Fischer லெனினையும் ஸ்டாலினையும் அருகிலிருந்து கண்டவர் அமெரிக்கரான லூயி ஃபிஷர். அதன்பின்தான் காந்தியை அவர் வந்தடைந்தார். 1942இல் காந்தியுடன் ஒரு வாரம் தங்கியிருந்து அது பற்றியும் புத்தகம் (A Week with Gandhi) வெளியிட்டார் லூயி ஃபிஷர். பின்னர் காந்தி இறந்த சமயத்திலும் இந்தியா வந்து தங்கியிருந்தார். இன்றும் ஓர் ஆரம்ப நிலை வாசகனுக்கு காந்தியைப் பற்றி அறிந்துக்கொள்ள இந்நூல் சிறந்தது.

2. Gandhi Before India & Gandhi: The Years That Changed the World – Ramachandra Guha. வெகு நாட்களுக்குப்பின் காந்தியைப் பற்றி வெளிவந்த சிறப்பான வாழ்க்கை வரலாறு. காந்தி-தலித் உறவுகள் இன்று அதிகம் பேசப்படுகிறது. அதையும் கணக்கில் கொண்டு அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலும் காந்திக்கும் தலித்துகளுக்கும் இடையிலுமான உறவுக்குக் கணிசமான இடமளித்து எழுதப்பட்ட முதல் வாழ்க்கை வரலாறு இது. டி.ஜி. டெண்டுல்கரின் 9 தொகுதி வாழ்க்கை வரலாறு நீங்கலாக மற்ற வரலாறுகள் பெரும்பாலும் பூனா ஒப்பந்தம் சார்ந்து இரண்டு, மூன்று பக்கங்களில் அம்பேத்கரைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடுகின்றன.

3. An Autobiography or The Story of My Experiments With Truth: A Critical Edition — Translated by Mahadev Desai, Introduced and Annotated by Tridip Suhrud. காந்தியின் ‘சத்திய சோதனை’ புத்தகத்தை நேரடியாகச் சுட்டாமல் இந்தக் குறிப்பிட்ட நூலைச் சுட்டுவதற்கு காரணமுண்டு. காந்தியின் சுயசரிதையை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் மஹாதேவ் தேசாய். டிரிதிப் சுஹ்ருத்தின் இந்நூல் ஆங்கில மொழிப்பெயர்ப்பை குஜராத்தி மூலத்தோடு ஒப்பிட்டு அடிக்குறிப்புகளோடு வெளிவந்திருக்கும் செம்பதிப்பு.

4. Gandhi: Hind Swaraj and Other Writings — Edited by Anthony J. Parel. காந்தியின் ‘இந்து ஸ்வராஜ்’, டால்ஸ்டாய் கடிதப் பரிமாற்றம், நேருவுடனான உறவு, அரசியல் பார்வைகள் ஆகியவற்றின் தொகுப்பு.

5. Gandhi: A Memoir – William Shirer 1930களில் இந்தியாவுக்கு வந்தார் பத்திரிக்கையாளர் வில்லியம் ஷைரர். இவர் பின்னர் இரண்டாம் உலகப் போர் பற்றி எழுதிய நூல்களால் உலகப் புகழ் பெற்றார் (‘The Rise and Fall of Third Reich’). காந்தி பற்றிய சிறு நனவோடை வகைப் புத்தகம் ஒன்றை 1979-இல் ஷைரர் எழுதினார். 1930களில்தான் காந்தி-இர்வின் ஒப்பந்தம், இரண்டாம் வட்ட மேஜை மாநாடு, பூனா ஒப்பந்தம் என்று காந்தியின் வாழ்விலும் இந்திய அரசியலிலும் முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றை ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளரா கஷைரர் பதிவு செய்திருப்பார். காந்தியை ஓர் ஆளுமையாக பார்த்தபோதிலும் மனிதராகவும் பார்க்க ஷைரர் தவறவில்லை.

6. My Days With Gandhi —Nirmal Kumar Bose. காந்தி கொல்லப்பட்டு 5 ஆண்டுகளுக்குள் வெளிவந்த இந்நூல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதில்தான் முதல் முதலாக காந்தியின் பிரமச்சரியப் பரிசோதனைகள் வெளிப்படையாகப் பேசப்பட்டன.

7. Gandhi: A Brief Insight —Bhiku Parekh. வரலாற்று நாயகர்கள் குறித்து வாசகனுக்கு ஒரு கோட்டோவியம்போல் சித்தரிக்கும் இவ்வகை நூல்களுள் காந்தி பற்றிய நல்லதொரு அறிமுகம் இது. காந்தியின் நிறைகுறைகளை மிகச்சரியாக அறிமுகம் செய்யும் நூல்.

8. Great Soul: Mahatma Gandhi and His Struggle With India —Joseph Lelyveld. குஹாவின் வாழ்க்கை வரலாறுகள் வெளிவருவதற்குமுன் 2011இல் வெளிவந்த முக்கியமான, எளிதில் வாசிக்கக்கூடிய வரலாறு இப்புத்தகம். காந்தியின் கருத்தியல் பரிணாம வளர்ச்சியை நன்றாக விவரித்திருப்பார். தீண்டாமை ஒழிப்பு யாத்திரை, தலித்துகளுடனான உறவு ஆகியவற்றை மற்ற வாழ்க்கை வரலாறுகளைவிட நன்றாக விவரித்திருப்பார்.

9. My Gandhi —John Haynes Holmes ஜான் ஹோம்ஸ் என்கிற அமெரிக்கப் பாதிரியார் காந்தியை நீண்டநாட்களாக அறிந்து காந்தி பற்றி தொடர்ச்சியாகத் தன் திருச்சபையில் பிரசங்கம் செய்தவர். காந்தி கொல்லப்படுவதற்கு ஒன்றிரண்டு நாள்முன்பு அவரைச் சந்தித்துவிட்டு அமெரிக்கா திரும்பியவர். காந்தியை நேசித்த கிறிஸ்தவ இறையியலாளர்களுள் முக்கியமானவர். இன்னொருவர் ஹோவர்ட் தர்மன். ஆப்பிரிக்க-அமெரிக்கப் பாதிரியாரான தர்மன், காந்தியைச் சந்தித்தது குறித்து தன் “Jesus and Disinherited” புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். காந்தி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த தனக்கு முக்கியமான மானுடத் தத்துவத்தைப் புரியவைத்தார் என்று இவர் குறிப்பிடுகிறார்.

10. Gandhi’s Religion: A Homespun Shawl —J.T.F. Jordens. காந்தியைச் சாதியவாதி என்றும் இந்து மதத்தை முன்நிறுத்தியவர் என்றும் காழ்ப்புடன் விமரிசிப்பவர்கள் இன்றும் உள்ளனர். காந்தியின் மதக்கோட்பாடு மரபு சார்ந்ததல்ல, அது அவராக உருவாக்கி வரித்துக்கொண்டது. இதை ஜார்டன்ஸ் அழகாக விளக்கியுள்ளார்.

மற்றவர்களுடனான காந்தியின் உறவு

1. The Mahatma and the Poet: Letters and Debates Between Gandhi and Tagore 1915-1941 — Compiled and Edited by Sabyasachi Bhattacharya. காந்திக்கு தாகூர் ‘குருதேவ்’, தாகூருக்கு காந்தி ‘மகாத்மா’ ஆனால் இருவரும் கூர்மையான கருத்தியல் முரண்கள் கொண்டவர்கள், அதனை வெளிப்படையாக விவாதிக்கவும் செய்தனர்.

2. Together they Fought: Gandhi-Nehru Correspondence 1921-1948 — Edited by Uma Iyengar and Lalitha Zackariah. நேருவுக்கு காந்தி தந்தைக்கு ஒப்பானவர். இருவருக்கும் முரண்கள் இருந்தன. அவற்றை வெளிப்படையாகப் பேசிக்கொண்டனர். இந்திய வரலாற்றின்மீது பெரும் தாக்கம் செலுத்திய இவ்விருவரின் நீண்டநாள் கடிதப் பரிமாற்றம் ஓர் வரலாற்று ஆவணமாகும்.

3. Going Native: Gandhi’s Relationship with Western Women —Thomas Weber. தாமஸ் வெபர் காந்தி குறித்து முக்கியமான நூல்கள் எழுதியவர். காந்தியின் பாலியல் சார்ந்த கருத்தியல்களும் பெண்களுடனான அவர் உறவுகளும் மிகச் சுவாரசியமானவை, முக்கியமானவை. அவ்வகையில் ஆனி பெசண்ட், மார்கரெட் சாங்கர், மார்கரெட் பூர்க்வைட், மீரா பென் முதலான பல பெண்கள் குறித்து வெபர் எழுதியிருக்கிறார். ஏன் இந்தப் பெண்களும், அவர் போராட்டங்களில் பங்கெடுத்த வேறு பலரும், காந்தியை நாடினார்கள் என்று வெபர் மேற்கூறிய நூலில் ஆராய்ந்திருக்கிறார்.

காந்தியின் தாக்கம் : உலக அரசியல், வரலாற்று ஆளுமைகள்

4. Gandhi as Disciple and Mentor — By Thomas Weber. காந்தி எந்தெந்த ஆசிரியர்களின் மாணவராக இருந்தார், அவர் யாருக்கெல்லாம் ஆசிரியராக இருந்தார் என்று அற்புதமான கட்டுரைகள் மூலம் விளக்குகிறார் வெபர். காந்தியின் உலகளாவிய தாக்கத்தையும் பேசியிருக்கிறார். ஒருவகையில் இப்புத்தகம் காந்தியின் சீடர்களான வினோபா முதலானோர் குறித்து ‘unflattering’ சித்திரத்தை அளித்த வேத் மேத்தாவின் ‘Gandhi and his Apostles’ புத்தகத்தைச் சமன் செய்யும் படைப்பாகும். கென்னத் கௌண்டா போன்ற ஒருவர்மீது காந்தியின் தாக்கத்தை வெபர் விவரித்திருக்கிறார்.

5. Mahatma Gandhi and Martin Luther King Jr. : The Power of Non-Violent Action — Mary King. காந்தியைப் பற்றிய தன் இரங்கல் உரையில் காந்தி உலகுக்கே வழிக்காட்டும் நம்பிக்கை ஒளி என்றார் நேரு. அக்கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் உரிமைப் போரட்டத்துக்கு காந்தி பெரும் உத்வேகமாக இருந்தார். நிறைய ஆப்பிரிக்க-அமெரிக்க உரிமைப் போராளிகள் காந்தியை ஆதர்சமாக நேசித்தனர். அவர்களுள் மிகமுக்கியமானவர் மார்டின் லூதர் கிங். இவர் காந்தியிடமிருந்து என்ன கற்றார், தன் போராட்டமுறைகளில் காந்தியத்தை எப்படிப் புகுத்தினார் என்று மேரி கிங் விவரிக்கிறார்.

6. Gandhi in the West: The Mahatma and the Rise of Radical Protest —Sean Scalmer காந்தி ஒரு புரட்சியாளர் அல்லர் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஷான்ஸ் கால்மெர் அது தவறென்று காட்டுகிறார். ஒடுக்குமுறைக்கு எதிரான பல உலகப் போராளிகள் ஏதேனும் ஒருவகையில் காந்தியித்தின் ஒரு கீற்றையாவது சுவீகரித்திருக்கிறார்கள் என்பது இவர் வாதம்.

7. Mahatma Gandhi: Essays and Reflections on his Life and Work — Edited by Sarvepalli Radhakrishnan. காந்தியின் 79-ஆவது பிறந்தநாளுக்காக பேர்ல்பக், ஐன்ஸ்டீன் போன்றவர்களின் கருத்துகளைச் சேகரித்து வெளியிட்டார் ராதாகிருஷ்ணன். இத்தொகுப்பில் ரெவரெண்ட் சி.இ.எம்.ஜோட் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. எதிரி நம்மை எலும்பை நொறுக்கும் விதத்தில் நையப்புடைத்தாலும் ஒரு சுட்டுவிரலைக்கூட அவனுக்கு எதிராகத் தூக்கிவிடாத மனோதிடத்தை காந்தி அளித்தார் என்கிறார் ஜோட். காந்தியோடு முரண்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் ரெவரண்ட் அஸரியாவும் எழுதியிருக்கிறார். இத்தொகுப்பு பின்பு இரங்கல் குறிப்புகளையும் சேர்த்து வெளியிடப்பட்டது. தமிழ்ப் பதிப்பும் இருக்கிறது.

8. Gandhi in his Time and Ours: The Global Legacy of his Ideas —David Hardiman. காந்தியக் கருத்தியல்களின் தாக்கம், காந்தியின் உலகியல் நோக்கு, காந்தி காண விரும்பிய சமூகம் ஆகியன பற்றி நல்லதொரு அறிமுகம். பாலியல், பெண் உரிமைகள், தலித் உரிமைகள், இஸ்லாமியருடனான உறவு என்று முக்கியமான கோணங்களில் ஆசிரியர் காந்தியைப் பற்றிப் பேசுகிறார்.

காந்தியப் போராட்டங்கள்

1. Gandhi’s Rise to Power: Indian Politics 1915-1922 — By Judith Brown.காந்தி 1915இல் இந்தியாவுக்கு வந்தபோது திலகர் மிகப் பெரியஆளுமை. 1915-20 வரை காந்தி முன்னெடுத்த சம்பாரான், கேதா, அகமதாபாத் கிளர்ச்சிகள், ரவுலட் சட்டத்துக்கு எதிரான சத்தியாகிரகம், 1920இல் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஆகியனவற்றின்மூலமாக இந்திய அரசியலில் தவிர்க்கவியலாத சக்தியாக காந்தி உருவெடுத்ததைத் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக வாசகருக்குத் தெரிய வைக்கிறார் ஜூடித் பிரவுன். ஒவ்வொரு போராட்டத்தையும் ஒரு தேர்ந்த கலைஞன் போல் விதவிதமாக காந்தி முன்னெடுத்திருப்பதை இதைப் படித்துதான் தெரிந்துக்கொண்டேன்.

2. Gandhi Nonviolent Struggle and Untouchability in South India: The 1924-25 Vykom Satyagraha and the Mechanisms of Change —Mary Elizabeth King. காந்தியின் சாதிக்கு எதிரான செயல்பாடுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது அவரின் ஆரம்ப காலத்தில் (இந்திய அரசியலில்) நிகழ்ந்த வைக்கம் போராட்டம். பலரும் நினைக்கும் வைக்கம் வீரர் பற்றி இந்தநூலில் பிரமாதமாக எதுவும் இல்லை. ஏனென்றால் அதுதான் நிஜம்.

3. மண்ணில் உப்பானவர்கள்: விடுதலையை நோக்கிய மகத்தான யாத்திரை— சித்ரா பாலசுப்ரமணியன். தாமஸ் வெபரின் ‘On the Salt March’ முதலான நூல்களை ஆதாரமாகக் கொண்டு எளிய வாசகனையும் தேர்ந்த வாசகனையும் ஈர்க்கும் விதத்தில் உலக ஏகாதிபத்தியத்தின் தூண்களை அசைத்த பெரும் நிகழ்வு பற்றி மெலிதான உணர்ச்சி மேலீடும் நிறைய தரவுகளோடும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

காந்தியின் விமர்சகர்கள்

1. What Congress and Gandhi Have Done to the Untouchables? — Babasaheb Ambedkar. காந்தி சமகாலத்தில் தீவிரமான எதிர்ப்புகளைச் சந்தித்தவர். அவரோடு முரண்பட்டவர்களில் முதன்மையானவர் அம்பேத்கர். காந்தியைத் தீவிரமாக எதிர்ப்பதில் அம்பேத்கர் நியாய-அநியாயம் எதையும் பார்க்கவில்லை என்பதே உண்மை. இன்று அம்பேத்கரிய காந்தி எதிர்ப்பைப் பலர் எவ்வித விமர்சனமோ ஆய்வோஇன்றி ஏற்கிறார்கள். அம்பேத்கரின் விமர்சனங்களில் உண்மைகளும் இருந்தன, காழ்ப்பும் இருந்தன. இன்று அதிகமாக உயர்த்திப் பிடிக்கப்படும் இந்நூல் காந்தியே வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பாக ஹரிஜன் சேவா சங்க செயல்பாடுகள் குறித்து அதிகமான தரவுகளோடு அமைக்கப்பட்டது என்பதைப் பலரும் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இந்நூலுக்கு காந்தியின் தரப்பிலிருந்து மறுப்பும் வெளிவந்தது. Ambedkar’s Attack by K. Santhanam என்பதுதான் அந்தப் புத்தகம்.

2. Gandhi and Anarchy —C. Sankaran Nair. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் 1920இல் துவங்கப்பட்டதை அடுத்து 1922இல் சங்கரன் நாயர் இந்த காத்திரமான விமர்சன நூலை எழுதினார். காந்தி தன் அரசியல் வாழ்வின் ஆரம்பகாலம் தொட்டே பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பதை இன்று பலரும் அறிவதில்லை.

3. The South African Gandhi: Stretcher-Bearer of Empire — By Ashwin Desai and Goolam Vahed. காந்தியை ஒரு ஏகாதிபத்தியக் கைக்கூலி என்று அழைப்பது அவர் காலத்திலும் நடந்தது, இன்றும்நடக்கிறது. அப்படியான ஒரு நூல்தான் இது. ஆயினும் காந்திய வரலாற்றைப் பேசும் யாரும் இத்தகைய நூல்களையும் அவற்றிலுள்ள விமர்சனங்களையும் கணக்கில் எடுத்தே பேசவேண்டும்.

4. Indian Critiques of Gandhi — Edited by Harold Coward. அரவிந்தர், தாகூர், அம்பேத்கர்ஆகியோரின் காந்தி மீதான விமர்சனங்களும்; இந்து மகாசபை, இந்திய கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் ஆகிய குழுவினர் காந்தியின்மீது வைத்த விமர்சனங்களும் அவரோடு மேற்கொண்ட மோதல்களும் செவ்வனே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

காந்தி படுகொலை

காந்தி படுகொலைக்குப் பின்னாலுள்ள அரசியல் இன்னும் இந்தியர்களால் புரிந்துக்கொள்ளப்படவில்லை என்பதே என் முடிவு. கோட்சேவின் கொலை எவ்வளவு கொடூரமானது, அதில் எந்தளவு இஸ்லாமிய வெறுப்பு இயங்கியது, சாவர்க்கரின் பங்கு என்ன, கொலையின் அதிர்வலைகள் இன்றும் எவ்வாறு இன்றும் எதிரொலிக்கின்றன ஆகியவை விவாதிக்கப்படவேண்டும்.

1. Why I assassinated Gandhi? — Nathuram Godse. கோட்ஸேவின்வாக்குமூலம்இது.

2. The Death and Afterlife of Mahatma Gandhi – Makarand Paranjape. வலதுசாரி எழுத்தாளரான பரஞ்சபே இந்து மரபில் அதிகம் இடம்பெறாத தந்தையைக் கொல்லுதல் என்ற கோணத்தில் ஆரம்பித்து காந்தி கொலையின் தாக்கத்தை அலசுகிறார்.

3. Let’s Kill Gandhi: A Chronicle of his Last Days, The Conspiracy, Murder. Investigations and Trial – Tushar Gandhi. காந்தியின் கொள்ளுப் பேரனும் செயல்பாட்டாளருமான துஷார் காந்தி காந்திக் கொலை பற்றி விரிவான தகவல் சேகரிப்புடன் எழுதியது.

4. Hindutva and Violence: V.D. Savarkar and the Politics of History — Vinayak Chaturvedi. இப்புத்தகத்தைப் படித்தால் காந்தியின் கொலையில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு விளங்கும். மேலும் காந்திக் கொலையில் தொடர்புடைய பலர் பின்னர் எப்படிப் பொதுவாழ்வில் சகஜமாகக் கலந்தனர் என்பதும் தெரியவரும்.

0

பகிர:
nv-author-image

அரவிந்தன் கண்ணையன்

அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் வசிப்பவர். வரலாற்றார்வலர். குறிப்பாக, இந்திய சுதந்திரப் போராட்டம், காந்தி, நேரு வரலாறுகள் குறித்துப் படித்தும், எழுதியும் வருபவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *