சமூக வலைத்தங்கள் எங்கிலும் சபிக்கப்படும் ஜீவன்களில் லிபரல்கள் முக்கியமானவர்கள். வலதுசாரிகளிடமும் இடதுசாரிகளிடமும் சம அளவிலான விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொள்பவர்களும் லிபரல்கள்தான்.
இப்படிப்பட்ட சூழலில் லிபரலிசம் (தமிழில்: தாராளவாதம், சுதந்திரவாதம் ) பற்றியும் அது சந்திக்கும் சிக்கல்கள் பற்றியும் அதன் எதிர்கால நோக்கங்கள் பற்றியும் பேசும் நூல்தான் ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா எழுதி சமீபத்தில் வெளியாகி இருக்கும் ‘Liberalism and Its Discontents’.
தீவிரத்தன்மை கொண்ட சித்தாந்தங்கள் வலது மட்டும் இடது ஆகிய இரண்டு துருவங்களிலும் தலைதூக்கி வரும் இக்காலகட்டத்தில் நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒரு தத்துவத்தின் விழுமியங்களைத் தூக்கிப்பிடிப்பதும் பாதுகாப்பதும் அவசியமாகும். இந்நூல் பேசும் கரு என்பது லிபரலிசம் சந்தித்துவரும் விமர்சனங்களைப் பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளை பரிந்துரைக்கும் ஒன்றாகவே அமைந்துள்ளது.
நவதாராளவாதம் (Neoliberalism) என்று சொல்லப்படும் பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக செவ்வியல் தாராளவாதம் (Classical Liberalism ) என்ற அரசியல் தத்துவத்தை நிறுவும் ஒன்றாகத்தான் இந்நூல் அமைந்திருக்கிறது. நிதி மற்றும் பொருளாதார மேலாண்மையிலும் திட்டமிடலில் அரசின் தலையீடு அவசியம்; மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை அரசே பூர்த்தி செய்ய வேண்டும்; பேச்சு சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது; அதிகாரப் பரவலாக்கம் அனைத்துத் துறைகளிலும் நடைபெறவேண்டும்; தனிமனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டிய அதே நேரத்தில் வரம்புகளை மதிக்கும் ஒன்றாகவும் அவை இருக்கவேண்டும் போன்ற இந்நூலின் பரிந்துரைகளை மிதவாத சோஷலிஸ்டுகளும் ஏற்பர்.
0
கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தை எதிர்த்த சீர்திருத்த இயக்கத்தின் தோற்றம் லிபரலிசம் என்ற தனிமனிதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பின்னர் ஏற்பட்ட புத்தொளி இயக்கமும் தொழிற்துறை வளர்ச்சியும், இந்தத் தத்துவத்தை மதத்தின் பிடியில் இருந்து பிரித்து மதச்சார்பற்ற அரசியல் தத்துவமாக ஆக்கியது. அமெரிக்காவின் உருவாக்கத்தில் இந்த அரசியல் தத்துவம் பெரும் தாக்கத்தை செலுத்தியது, பிரெஞ்சுப் புரட்சியின் அடிப்படையாக லிபர்ட்டி அமைந்திருந்தது. இந்த இடத்திலதான் லிபரலிசம் என்ற தத்துவம் ஜனநாயகம் என்ற அரசாங்க முறைக்கு மிக நெருங்கிய ஒன்றாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டது.
அமெரிக்காவில் 13ஆவது சட்டத்திருத்தம் அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்டியது, ஐரோப்பாவில் தாராளவாத ஜனநாயக (Liberal Democracy) நாடுகளின் உருவாக்கம் வீரியமாக நடைபெற்றது. பெண்களுக்கு வாக்குரிமை என்பது 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஐரோப்பா முழுவதும் நடைமுறைக்கு வந்தது. காலனியத்தின் விளைவாக இது மற்ற நாடுகளுக்கும் பரவியது, முதல் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருமந்தம் திட்டமிடலில் அரசாங்கத்தின் பிடியை இறுக்கியது. ஹிட்லர் முசோலினி போன்ற சர்வாதிகார கொடுங்கோலாட்சிக்கு இது வித்திட்டது. இதன் விளைவாக நடந்த இரண்டாம் உலகப்போர் பல்வேறு மாற்றங்களுக்குத் தொடக்கமாக அமைந்தது . ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி போன்ற அமைப்புகளும் இச்சமயத்தில் உருவானவையே.
அனைத்துத் தாராளவாத ஜனநாயக அரசுகளின் ஒரு பகுதியாக திட்டமிடல் (State Planning) ஏற்றுக்கொள்ளப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் அபார வளர்ச்சியும் இதற்கொரு காரணம் எனலாம். ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தது. 1960களில் அமெரிக்காவில் நடந்த மனித உரிமைச் செயல்பாடுகள் விடுபட்டவர்களையும் ஒன்றிணைத்தது. திட்டமிடல் அதிகரிக்க அதிகரிக்க அதற்கு எதிரான பொருளாதாரத் தத்துவங்களும் அறிவுப்புலத்தில் வளர்ச்சியடைய தொடங்கின. வளர்ச்சி குன்றிய சமயத்தில் ரொனால்ட் ரீகன் மற்றும் மார்க்கரேட் தாட்சர் ஆகியோரின் வருகை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நடந்தேறியது. அவர்களது நவதாராளவாத பொருளாதார கொள்கை முற்றிலுமாக அரசின் பிடியை பொருளாதாரத் துறையில் நீக்க வேண்டுமென்றது.
1990களில் நடந்த சோவியத் ஒன்றியத்தின் சிதைவு பொருளாதார புலத்தில் நவதாராளவாதக் கொள்கை பரவலுக்கு மேலும் வித்திட்டது. 2008இல் ஏற்பட்ட பொருளாதார தேக்கம் நவதாராளவாதப் பொருளியல் தத்துவத்தின் மீதான விமர்சனங்களை அதிகரித்தது. உலகம் முழுக்கவே அசமத்துவம் என்பதும் மூலதன குவிப்பு என்பதும் அதிகரித்தது. பொருளாதார துறையில் நவதாராளவாத கொள்கை பல சிக்கலுக்கு வித்திட்டது. அரசியல் மற்றும் சமூகச் சூழலில் லிபரலிசத்துக்கு எதிரான சிந்தனைப் போக்கு உலகெங்கும் எழுச்சி அடைத்தது. டொனால்ட் டிரம்ப் (அமெரிக்கா), ஜைர் பால்சோனரோ (பிரேசில்), நரேந்திர மோடி, செர்ஜியோ மேட்டரெல்லா (இத்தாலி) போன்ற வலதுசாரி தத்துவத் தலைமைகளுக்கு வித்திட்டது.
லிபரலிசம் என்ற தத்துவம் பரிணமித்த விதத்தை இப்படியாகச் சுருக்கமாக சொல்லலாம்.
0
1970களுக்குப் பிறகான சீனாவின் எழுச்சி லிபரலிசப் பொருளாதாரக் கொள்கையான சந்தை திறப்பால் சாத்தியமானதொன்று. மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் மக்களில் அன்றாட வாழ்க்கையில் இந்தத் தத்துவம் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இன்று புழங்கும் தொழில்நுட்பச் சாதனங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
1990களுக்குப் பிறகு நடைபெற்ற பொருளியல் வளர்ச்சிக்கு சந்தையும் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையும் முக்கியமானவை. அதே நேரத்தில் இந்த அசமத்துவமும் அதிகரித்தது. உளவியல் ரீதியான சிக்கல்களையும் இவை அதிகரித்தன. உழைப்புக்கும் உழைப்பாளிக்கும் இடையிலான தொடர்பு அற்றுப் போய், உழைப்பின் அந்நியமாதல் நடைபெற்றது.
கலாசாரப் புலத்தில் தேசியவாதம் என்ற தத்துவம் மதம், இனம், நிறம் போன்ற பிறப்பு சார்ந்த ஒன்றின் அடிப்படையில் எழுச்சி பெற்றது. இது பன்மைத்துவத்திற்கு எதிராக நின்றது. உலகமயமாக்கலை எதிர்த்தது. புலம்பெயர்ந்த அயல்நாட்டவருக்கு எதிரான மனநிலை பூர்விக மக்களிடத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.
மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இந்தியா போன்ற தெற்காசிய பகுதிகளிலும் இந்த கலாசார தேசியவாதத்தின் எழுச்சி மதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தியாவில் இந்துத்துவமாக அது வெளிப்பட்டது. லிபரலிசத்துக்கு எதிரான தன்மைகளைக் கொண்டிருக்கும் இந்த வலதுசாரி தத்துவத்தின் எழுச்சியை லிபரலிசம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது நம்முன் இருக்கும் கேள்வி. அதற்கான பதிலை இந்நூல் வழங்க முயல்கிறது.
0
தொழில்நுட்ப வளர்ச்சி லிபரலிச தத்துவத்திற்கு எதிரான மற்றுமொரு சிக்கலை உருவாக்கி இருக்கிறது. சமூக ஊடகமும் பத்திரிகைத் துறையும் அரசுக்கு நெருக்கமான பெருமுதலீட்டும் நிறுவனங்களின் கையில் சென்று சேர்ந்துள்ளது. இதற்கு எதிரான சட்டங்கள் ஏற்பட்டால் ஒழிய பேச்சுரிமை, பிரைவசி, தனிமனித உரிமை ஆகியவற்றைப் பாதுகாக்க முடியாது . இதையும் முக்கிய சமகால பிரச்சனையாக சுட்டிக்காட்டுகிறார் ஃபுகுயாமா.
செவ்வியல் தாராளவாதத்தின் முக்கிய அம்சங்களாகச் சிலவற்றைப் பட்டியலிடலாம்:
1. தனிமனித உரிமைக்கும் சுயமரிதைக்குமான முக்கியத்துவம்
2. யதார்த்தத்தை ஒத்த பகுத்தறிவுப் பார்வை
3. சொத்துரிமை, பரிவர்த்தனை செய்யும் உரிமை.
லிபரலிசத்தின் அடிப்படையாக தனிமனிதவியம் இருந்தாலும் சமூகத்துடனான தொடர்பும் முக்கியமானதுதான். மனிதனின் பக்குவப்படுத்தலுக்கு இது இன்றியமையாதது. அவன் அந்நியமாகாமல் இருக்க இந்தத் தொடர்பு அவசியம். தாராளவாத ஜனநாயக நாடுகளில் தனிமனிதவியமும் கூட்டுவாதமும் சேர்ந்தே இயங்குகின்றன. லிபரலிசம் என்ற அரசியல் கொள்கைக்கு அத்தகைய நெகிழ்வு தன்மை இயல்பிலேயே இருப்பதாகவும் பலதரப்பட்ட பார்வையை அரவணைக்கும் பண்பை அது கொண்டுள்ளதாகவும் சொல்கிறார் ஃபுகுயாமா.
நாளுக்கு நாள் உலகமயமாக்கலின் விளைவாக பன்மையான மக்கள் திரள் அனைத்து ஜனநாயக நாடுகளிலும் உருவாகி வருகிறது. இத்தகைய பன்மைத்துவத்திற்கு எதிரான குரல்களும் ஒருபுறம் வலுக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தக் குரல்கள் எல்லாம் ஜனநாயகம் என்ற அரசியல் தத்துவத்திற்கு எதிராகச் செயல்படத் தொடங்கியிக்கிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்த லிபரலிசம் அவசியமான ஒன்று என்றும் அதைப் பாதுகாப்பது அவசியம் என்றும் சொல்கிறார் நூலாசிரியர்.
மேற்கத்திய அரசுகள் மேற்கொண்ட காலனிய நடவடிக்கைகள் குறித்தும் அதனால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்தும் இந்நூல் பெரிதாக பேசவில்லை. சிஐஏ, என்ஐஏ போன்ற லிபரல் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஏற்படுத்திய சீரழிவுகளும் இந்தத் தத்துவம் வெறுக்கப்பட முக்கியக் காரணமாக இருக்கையில் அவற்றைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் இருப்பது போதாமையே.
இடஒதுக்கீடு குறித்து இவர் கொண்டிருக்கும் பார்வை மீண்டும் பொருளாதார காரணி மற்றும் தகுதி என்ற அம்சத்தின் அடிப்படையில் தான் அனைத்தும் அமையவேண்டும் என்ற ரீதியில் உள்ளது. (மைக்கேல் சாண்டெல் இதுகுறித்து விரிவாக எழுதியிருக்கிறார்).
சமகால ஜனநாயக அரசுகள் நிகழ்த்திவரும் போர்களையும் அவற்றுக்கான உதவிகளையும் விமர்சனத்துடன்தான் பார்க்கவேண்டி இருக்கிறது. ஆனால் இந்நூல் முற்றிலுமாக அதைப் புறக்கணித்துள்ளது.
இப்படி நிறைகளையும் குறைகளையும் கொண்டுள்ள இந்நூல் சமகாலத்தின் அரசியல் சிக்கலைப் பேசுகிறது என்ற வகையில் முக்கியமானது. அந்த வகையில் அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய ஒன்று. ஃபுகுயாமாவின் முந்தைய நூலான Identity: The Demand for Dignity and the Politics of Resentment மிகச் சிறந்த ஒன்றாக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில் இந்நூல் ஏமாற்றமளிக்கிறது. இருந்தாலும் அரசியல் ஆர்வலர்கள் இதைத் தவறவிடக்கூடாது.
0