இறந்த காலமும் நிகழ்காலமும்; வரலாறும் பயணமும்; பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான நூல், நமித் அரோராவின் Indians : A Brief History of a Civilization. பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் பெற்றிருக்கும் வ. ரங்காசாரியின் அழகிய மொழிபெயர்ப்பில் இந்நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நூலின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள்.
***
இந்தியாவின் மறைந்த நகரங்கள்
மறைவது என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? நான் சிறுவனாக இருந்தபோது, ‘மறைந்த நகரங்கள்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன், ஒருவித மயக்கத்துக்கு ஆளானேன். ஒரு முழு நகரமே மறைந்துவிட்டதா? காணாமல் போய்விட்டதா? எப்படி அது சாத்தியம்?
நாம் பார்க்கும் இந்தப் புற உலகத்துக்கும் கலாசார உலகத்துக்கும் ஒருவித உறுதித்தன்மையும் நிரந்தரத் தன்மையும் இருக்கிறது என்ற மாயையில் நாம் வாழ்கிறோம். மாற்றங்கள் நிகழ்வது தவிர்க்கமுடியாதது என்று தெரிந்தும் இவையெல்லாம் நம் காலத்துக்குப் பிறகும் இப்படியே தொடரும், நம்முடைய பாரம்பரியத்தையும் சந்ததியையும் தொடர்ந்து சுமந்துவரும் என்று நினைக்கிறோம்.
எப்போதோ வாழ்ந்து மறைந்த பல நகரங்களையும் நாகரிகங்களையும் தொல்லியல் துறையினர் தோண்டி எடுத்து வெளிப்படுத்துகிறார்கள் என்பது தெரிந்தும், இந்த மாயையில் நாம் தொடர்கிறோம். வியப்பில் ஆழ்த்துகிற இடங்களான மச்சு பிச்சு, ஆங்கோர் வாத், மெம்பிஸ், மொகஞ்சதாரோ, பெர்சிபோலிஸ் ஆகியவற்றைப்பற்றி அறிந்தபிறகும் இப்படி நினைக்கிறோம். இப்படிக் காணாமல் போன நகரங்களும் நாகரிகங்களும் என்னுடைய கற்பனையை வெகுவாகக் கவ்விப்பிடித்துவிட்டதால், அவற்றில் பலவற்றை நேரிலேயே போய்ப் பார்த்துவந்தேன். அதற்குப் பிறகும் அவற்றின்மீதான ஈர்ப்பு எனக்குக் கொஞ்சமும் குறையவில்லை.
இப்படியொரு புத்தகத்தை எழுதவேண்டும் என்ற எண்ணம் 2004ல் ஒரு பயணத்தில் இருந்தபோதுதான் எனக்கு ஏற்பட்டது. அதற்கு முந்தைய 15 ஆண்டுகளில், அதாவது 1989 முதல், அமெரிக்காவிலும் ஐரோப்பியக் கண்டத்திலும் படித்தும், வேலைசெய்தும் வாழ்ந்தபோது என்னுடைய குடும்பத்தாரைப் பார்க்க மிகச் சில நாள்கள் மட்டுமே இங்கே தங்கியிருக்கும் பயணத்தை மேற்கொள்வேன்.
கைநிறைய சம்பளம் கிடைத்தபோதிலும் என்னுடைய வேலையைத் தொடர்ந்து செய்யும்போது ஏற்பட்ட அயர்ச்சியினாலும் உலகத்தைச் சுற்றிப்பார்த்து விடவேண்டும் என்ற ஆசையாலும் லத்தீன் அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு அடிக்கடி தனியாளாகவே சுற்றுப் பயணம் கிளம்பிவிடுவேன்.
வரலாற்று அறிஞர் மிரியம் பேர்ட் எழுதியதைப்போல, ‘பயணம் என்பது வெறுமனே இடங்களைப் பார்த்து வருவது என்பதற்கும் மேல், வாழ்க்கை முறையில் ஆழமாகவும் நிரந்தரமாகவும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாறுதல்களைப் பார்ப்பது’ என்பதை நானும் உணரத் தொடங்கினேன்.
அந்தப் பதினைந்து ஆண்டுகளில் என்னிடம் ஏற்பட்ட மாறுதல்களைப்போல, இந்தியாவிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அவற்றைப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஏக்கம் என்னுள் பெரிதானது.
இதே எண்ணம், சமீபத்தில் நான் சந்தித்த, என்னுடைய வாழ்க்கைத் துணைவியாருக்கும் ஏற்பட்டது. 2004ல் நானும் அவளும் நாங்கள் செய்யும் வேலையிலிருந்து இரண்டு ஆண்டுகள் விடுதலை பெற்றோம். இருபது நாடுகளில் 110 இடங்களுக்கு இந்த இரண்டாண்டுகளில் சென்றோம். இயற்கைத் தலங்கள், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்கள், மலைகள், கடற்கரையோரப் பகுதிகள், மறைந்துவிட்ட நகரங்கள், பொங்கி வழியும் பெருநகரங்கள் என்று பலவற்றையும் பார்த்தோம்.
புதுப்புது அனுபவங்களைச் சந்திக்கவேண்டும் என்ற ஆவலில் மிகவும் சாதாரணமான ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கினோம். பல இடங்களுக்கு நடந்தும், பேருந்துகள், ரயில்கள், படகுகள், கார்கள், ஸ்கூட்டர்கள், பைக்குகள், ரிக்ஷாக்கள், ஒட்டகம் என்று பலவகைகளிலும் பயணப்பட்டோம். அப்போது எடுத்த புகைப்படங்களை, குடதணதூச்.ணஞுt என்ற தளத்தில் புகைப்படத் தொகுப்புகளாக அவ்வப்போது பதிவிடத் தொடங்கினேன்.
என் வாழ்க்கையையே வேறுவிதமாக மாற்றக்கூடிய அனுபவமாக அது அமைந்துவிட்டது. நாங்கள் பார்த்த இடங்களில் பலவற்றில் நான் லயித்துவிட்டேன். ஒவ்வொன்றும் புதிய கேள்விகளை எழுப்பின. அமெரிக்காவுக்கு நாங்கள் திரும்பியவுடன் அந்த அனுபவங்கள் என்னுடனேயே தங்கிவிட்டன. அவைபற்றி மேலும் ஆழ்ந்து படிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. இந்தியாவின் கடந்த காலத்துக்கும் நிகழ்கால சமூகத்துக்கும் இடையிலான தொடர்ச்சிகளையும், தொடர்பு அற்றுப் போய்விட்டவைகளையும் அவை உணர்த்தின.
இந்த இடங்கள் தொடர்பாக குறுங் கட்டுரைகள் பல எழுதினேன். இந்திய நாகரிகம் தொடர்பாக ஒத்திசைவான கருத்துகள் மெள்ள மெள்ள என் மனதில் உருவெடுத்தன. இந்தியாவின் தொன்மையான பல ஊர்களுடனும் நினைவிடங்களுடனும் எனக்கேற்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் அவற்றுக்குப் பின்புலமாக அமைந்தன.
அதே சமயம், கடந்த காலம்பற்றி அறிவதில் இந்தியர்களுக்கு ஆர்வம் பெருகி வருகிறது என்பதையும் கவனித்தேன். நவீனத்துவம், முதலாளித்துவம், தேசியவாதம் ஆகிய கருத்துகள் காரணமாக, உலகில் நமக்கான இடம் எது என்பதைப் புதிய வழிகளில் புரிந்துகொள்வதில் அந்த ஆர்வம் வெளிப்படுகிறது. முன் எப்போதையும்விட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நாம் அதிகம் செல்லத் தொடங்கி, புதிதாக அங்கு எதையாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்பட்டுள்ளது. இங்கே என்ன நடந்தது? அது ஏன் முடிவுக்கு வந்தது?
சோகம் என்னவென்றால் புதிதாக வெளியாகும் தகவல்கள் பெரும்பாலும் சுவாரஸ்யமில்லாமலும், உண்மைக்கு மாறாகவும், ஏதோ ஓர் இன அல்லது மொழிச்சார்பு அடிப்படையிலான தகவலாகவுமே இருக்கின்றன. அவை அறிவார்ந்த நுட்பத்துடனோ, மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவோ, வெளிப்படையானதாகவோ, ஆதாரமாகக் கொள்ளத்தக்கதாகவோ, பரிவூட்டுவதாகவோ இருப்பதில்லை.
நம்முடைய கடந்த காலத்தை நாம் எந்தக் கோணத்தில் பார்க்கிறோமோ அதுவே இந்தியாபற்றிய நம்முடைய கண்ணோட்டத்துக்கு வடிவம் தரும்போக்கு அதிகமாகிக்கொண்டு வருகிறது. அத்துடன் நாம் ஒரு சமூகமாக எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதையும் அது வழிநடத்துவதாக இருக்கிறது.
நானும் என்னுடைய வாழ்க்கைத் துணையும் 2013ம் ஆண்டில் எங்களுடைய வேலையிலிருந்து நிரந்தரமாக விலகிக் கொண்டு நீண்ட காலம் தங்கும் எண்ணத்துடன் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டோம். கட்டுரைகள் பல கொண்ட ஒரு புத்தகத்தையும், ஒரு நாவலையும் எழுதி முடித்த பிறகு முந்தைய இரண்டு ஆண்டுகள் பயணத்தின்போது எங்களுடைய கவனங்களை மிகவும் ஈர்த்த ஊர்கள், இடங்கள்மீது எங்களுடைய பார்வைகளைச் செலுத்தினோம். பழங்கால மற்றும் மத்திய கால இந்தியாவில் காணாமல் மறைந்து, பிறகு கண்டுபிடிக்கப்பட்ட உலகங்கள் அவை. அவற்றைப்பற்றிய கதைகளை விரிவாக எழுதுவது என்று முடிவு செய்துவிட்டேன்.
இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்குவரை பரவியுள்ள பல இடங்களையும், ஆதி கற்காலம் முதல் நவீன காலம் வரையுள்ள வெவ்வேறு காலகட்டங்களையும் பரிசீலித்தேன். இறுதியாக ஆறு இடங்களைப்பற்றி எழுத முடிவு செய்தேன். ஏன் இந்த ஆறு இடங்களை மட்டும் தேர்வு செய்தேன், ஏன் மற்ற இடங்களைத் தேர்வு செய்யவில்லை என்ற கேள்விகளுக்குப் பதில் அளிப்பது கடினம். தொலைந்துபோன அல்லது மறைந்துபோன இந்த ஆறு இடங்களை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற சுய விருப்பமே இதற்குக் காரணம். வெவ்வேறு கடந்த காலங்களைக் கொண்ட நம் நாட்டில் இந்த ஒவ்வொன்றும் தனித்துவமான கடந்த காலத்தைக்கொண்டிருந்தன. இந்தியர்களை மேலும் ஆழ்ந்து புரிந்துகொள்ள இவை முக்கியத் திறவுகோல்களாக இருக்கும் என்பது என்னுடைய அனுமானம். ஒவ்வொன்றும் நல்ல பயணத்துக்கு உத்தரவாதமாகத் திகழ்கின்றன அவற்றுள் பொதிந்துள்ள மர்மங்களும் அவற்றால் கிடைக்கக்கூடிய பலன்களும் விவரிக்க முடியாதவை.
தொன்மைவாய்ந்த இடங்களுக்கான பயணக் கட்டுரையாகவும் அந்த இடங்களின் வரலாறுகளை அப்படியே சொல்லும்வகையிலும் இப்புத்தகத்தை எழுதத் திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு இடத்தின் மக்களுடைய வாழ்க்கையின் சாராம்சங்களையும் அவர்களுடைய திட்டவட்டமான நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட சமூக, கலாச்சார, அரசியல் நிறுவனங்களையும், அவர்களுடைய வாழ்க்கைப் போராட்டங்களையும் வாழ்நிலைகளையும், இந்தியக் கலாச்சாரத் தளத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பாரம்பரியங்களையும் இதில் காண்பது என்னுடைய நோக்கம்.
இப்படி எழுதுவதற்கு அறிஞர்கள் எழுதியுள்ள ஆராய்ச்சிக் குறிப்புகளையும், மூலாதாரமான தரவுகளையும் பயன்படுத்திக்கொள்வேன். இவை தொல்லியல் அறிஞர்களின் ஆய்வறிக்கைகள் தொடங்கி, அந்தந்த காலத்தில் நம் நாட்டுக்கு வந்த வெளிநாட்டு யாத்ரீகர்கள் அவர்களுடைய பயணக் குறிப்புகளில் இந்தியா குறித்து எழுதியுள்ளவை வரை அடங்கும். இந்தப் பயணக் குறிப்புகள் சிந்து நதி தீரத்துக்கும் அப்பால் உள்ள இந்தியப் பகுதிகளைப்பற்றிய குறிப்புகளுமாகும்.
இன்டஸ் என்ற வார்த்தையின் சமஸ்கிருத வடிவம் சிந்து. பாரசீக நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் சிந்து என்று உச்சரிக்க முடியாமல் இந்து என்றார்கள். இந்து என்ற சொல் மதத்தைக் குறிப்பிடும் வார்த்தை அல்ல. இந்தியர்களை இன ரீதியிலும் புவியியல் ரீதியிலும் குறித்த சொல்லாகும்.
தாங்கள் சந்தித்த இந்தியர்கள் குறித்து அவர்கள் என்ன நினைத்தார்கள், இருவேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் சந்தித்துக்கொண்டதால் இந்தியர்களைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்கிருந்த தடைகள் என்ன என்பது தெரிய வேண்டும். அவற்றை எழுதும்போதே, இந்த இடங்களுக்கு ஒரு பயணியாகச் சென்று பார்த்த எனக்கேற்பட்ட அனுபவங்களையும் இதனூடே எழுதுகிறேன். இந்த இடங்களுக்கு கடந்த காலத்துக்கும் இப்போதைக்கும் உயிர் கொடுத்து செறிவான, தூண்டிவிடும்வகையிலான விவரங்களைச் சொல்ல விழைகிறேன். பெரிய வரலாற்றை எழுதும் நோக்கில் மிகச்சிறிய தகவலைக்கூட விட்டுவிடக்கூடாது, நகைச்சுவையான துணுக்குகளையும் சேர்த்துவிடவேண்டும் என்பதும் நோக்கம். இப்படி எழுதுவதன்மூலம் கடந்தகால வரலாற்றின் விளைவாக உருவான போக்குகள், மாறுதல்கள், இந்திய நாகரிகத்தில் ஏற்பட்ட முறிவுப் பாதைகள் ஆகியவற்றின்மீது ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிவிட முடியும் என்று நம்புகிறேன்.
நம்முடைய மூதாதையர்களுக்கு ஏற்பட்ட சிந்தனைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றை நம்முடைய தலைமுறையின் சிந்தனைகள், உணர்ச்சிகளுடன் பிணைத்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் இப்படி எழுதுகிறேன். இப்படித்தான் எழுதவேண்டும் என்று தீர்மானித்துவிட்டபடியால் தரவுகளைத் தேடவும், தொன்மையான ஆறு இடங்களுக்கு மீண்டும் செல்வதற்கும் பயணத் திட்டங்களை வகுத்தேன். மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு இந்தப் புத்தகத்தைத் தயாரித்துவிட்டேன்.
கடந்த காலத்தை எப்படி அணுகுவது?
இழந்த உலகத்தின் கதையை எப்படிச் சொல்வது? தெரிந்த உண்மைகளை மட்டும் சொல்வதன் மூலம் வரலாற்றை உண்மையாக எழுதலாம் என்று சிலர் சொல்லக்கூடும். உண்மைகளை மட்டும் சொல்வதென்றால் என்ன பொருள்? உண்மைகள் என்பவை ஒன்றாகவும், அவற்றுக்கான விளக்கங்கள் வேறாகவும் இருக்கும். உண்மைகள் அல்லது தகவல்கள் தாங்கள் எப்படி அப்படிப்பட்ட தகவல்களாகத் தொடர்கின்றன என்று தன்னிலை விளக்கம் தர முடியாதவை.
நாமேகூட சில தகவல்களைத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கவனிப்போம், வேறு சிலவற்றுக்கு அப்படி முக்கியத்துவம் தரமாட்டோம் எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் தருபவை கதைகள் மட்டுமே.
ஒவ்வொரு கதையிலிருந்தும் பிரிக்கமுடியாதவை கதை சொல்லியின் உணர்வுத் திறன். அந்த உணர்வுத் திறனானது அவருடைய அரசியல், தனிமனித அடையாளம், கலாச்சாரம் ஆகியவற்றைச் சார்ந்தது.
இது புதிதல்ல, எல்லாக் கதைகள் விஷயத்திலும் இது வழக்கமானதே. இந்த நூலில் உள்ள என் கதைகளும் அப்படிப்பட்டவைதாம். பாரபட்சமற்ற தகவல் திரட்டுகளோ, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்த வரலாற்றாளரோ, அறிவியல்பூர்வமான வரலாறோ கிடையவே கிடையாது. கதைசொல்லியின் சொந்தக் கண்ணோட்டமும் சார்புத் தன்மையும் பின்னிப்பிணைந்தவைதாம் வரலாறு. எந்தெந்த அம்சங்களை முன்னிலைப்படுத்தவேண்டும், எந்தெந்த அம்சங்களுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்துச் சொல்லவேண்டும் என்பதையெல்லாம் எழுதுகிறவர்தான் தீர்மானிக்கிறார்.
உண்மையைச் சொல்வதென்றால் எல்லா வரலாறுமே புனைகதைகள்தான் என்கிறார் வரலாற்றாசிரியர் ஹேடன் ஒயிட். வரலாற்று உண்மைகளை அறிவியல்பூர்வமாக சரியா தவறா என்று சரிபார்த்துவிடலாம், வரலாறோடு கூறப்படும் கதைகள் அப்படிப்பட்டவை அல்ல என்கிறார் ஹேடன். கதைகள் கூறப்படுகின்றன அல்லது வரலாற்றாசிரியர்களால் கையாளப்படுகின்றன. அவை வரலாற்றுத் தரவுகளில் இருக்காது. வரலாற்று உண்மைகளுக்குத் தரப்படும் வரலாற்றையொட்டிய பொருள்தான் வரலாற்றுக் கதைகள். இவை ஒருவகையில் திணிக்கப்படுபவை அல்லது சதிபோல திட்டமிட்டு எழுதப்படுபவை. இவை தவிர்க்கப்பட முடியாதவை. நியாயம் என்று ஏற்கப்படுபவையும்கூட. இவற்றின் அடியாழத்தில்தான் அரசியல் இருக்கிறது.
உண்மைதான், நடுநிலையான கதைகளோ விருப்பு வெறுப்பற்ற கதைகளோ இல்லையென்றாலும், ஓரளவுக்காவது உண்மையும், தார்மிக உணர்வும் கலந்திருக்கவேண்டும் என்ற கருத்துடையோருக்கு சில கதைகள் மிகவும் உயர்ந்ததாகவும் பிறவற்றைவிட நன்கு விளக்கும் தன்மை இருப்பதாகவும் தோன்றிவிடுகிறது. அத்தகைய கதைகளை அடையாளம் காண்பதற்கு மனித நாகரிகங்கள் அனுபவங்களுடன்கூடிய ஆழ்ந்த புலமையை மனித இனத்துக்கு வழங்கியிருக்கிறது. தொடர்ந்து வரும் கலாச்சாரங்கள் எதைக் கூறுகின்றன, எழுத்துப்பூர்வமான தகவல்கள் எதைத் தெரிவிக்கின்றன என்பதை இவற்றிலிருந்து ஆராயவும் புதிய ஆதாரங்கள் அல்லது புதிய பகுப்பாயும் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு துறைகளில் ஆழங்கால் பதித்த அறிஞர்களின் விவாதங்களுக்கு உட்படுத்தியும் இந்தக் கதைகளின் உண்மை, நோக்கம், நம்பகத்தன்மை ஆகியவற்றை இறுதி செய்துவிடமுடியும்.
இந்தச் சாதனமானது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டும் செயலுக்கு இணையானதாக ஒருபோதும் வடிவமைக்கப்படவில்லை. மாறாக, வரலாற்றிலிருந்து பெற்ற அறிவின் உதவியுடன் புதிய தரவுகளை ஆராய்வதன் மூலம் ஏற்கத்தக்கவகையில் அதை விளக்குவதற்கே பயன்படுத்தப்படுகிறது. இது முழுக்க முழுக்கக் குறைபாடுகளே இல்லாத வழிமுறை அல்லதான் என்றாலும் மாற்று வழிமுறைகள் இத்தகைய அணுகுமுறைக்கு அன்னியமாக இருப்பதால், அவற்றால் மோசமான முடிவுகள்தான் கிடைக்கும் என்பது தெளிவு.
‘வாக்கிங் சின்ஸ் டேபிரேக்’ என்ற நூலில் வரலாற்றாசிரியர் மோட்ரிஸ் எக்ஸ்டெய்ன்ஸ், ‘முன்கூட்டிய அனுமானம் ஏதுமில்லாமல் வரலாற்றை எழுதுவது சாத்தியமில்லை. அடுக்கடுக்கான சில யோசனைக் குறிப்புகளைத் தெரிவிப்பதன் மூலம் வரலாற்றுக் கருத்தைத் தூண்டவும், வரலாறு தொகுக்கப்படவும், வரலாற்றுக் கருத்தை உருப்பெறச் செய்யவும் முடியும். வரலாறு சிந்தனையைத் தூண்டவேண்டுமே தவிர, இதுதான் உண்மை என்று கட்டளையிடுவதாக அமைந்துவிடக்கூடாது.
அது கருத்துகளைக் கொண்டுசெல்வதற்கான வாகனமாக இருக்க வேண்டும், அதுவே பயணத்தின் இறுதிப் புள்ளியாகிவிடக்கூடாது’ என்று வரையறுக்கிறார். வரலாறு என்பது புதிய சிந்தனைக்கு வழிகளைத் திறந்துவிடும் அதேவேளையில், கடந்தகாலம் எப்படிப்பட்டது என்பதைப்பற்றிய புதிய புரிதல்களையும் அளிப்பதாக இருக்கிறது.
நான் வளர்ந்த பிறகு பல வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் படித்திருக்கிறேன். அவற்றில் சிலர் எழுதிய நூல்கள் மற்றவர்களுடையதைவிட அதிகம் பிடிக்கும். என்னுடைய கருத்துப்படி யார் நல்ல வரலாற்று ஆசிரியன்? போதுமான அளவுக்கு உணர்திறனும், கற்பனாசக்தியும், ஆழ்ந்த கண்ணோட்டமும், சமூகம்பற்றிய புரிதல்களால் தனக்குக் கிடைக்கும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதில் உண்மைக்கும் நேர்மைக்கும் இடம் தந்து, மனச்சார்பின்றி சரியான தொலைவில் விலகி நின்று வரலாற்றை எழுதுகிறவரே நல்லாசிரியர்.
உலகத்தை, அதில் உள்ளவர்கள் எப்படிப் பார்க்கிறார்களோ அப்படியே பார்த்து, புரிந்துகொண்டு, கூடுமானவரையில் அந்தந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்பதையும் உணரவேண்டும். மொழி வழியாக தெளிவாக அறிந்து, வலுமிக்க முயற்சிகள் மூலம் ஆராய்ந்து, தனக்குக் கிடைத்த மூலங்களின் தரம் எப்படிப்பட்டது என்று சளைக்காமல் துருவிக் கண்டுபிடித்து, தான் எட்டும் முடிவு உண்மையானதுதான் என்று முழு நம்பிக்கை பெற்ற பிறகு எழுதுகிறவரே நல்ல வரலாற்றாசிரியர். வெவ்வேறு காலகட்டங்களிலும் இடங்களிலும் வாழ்ந்த மனித சமூகங்களைப்பற்றிப் படித்ததில் கிட்டும் தொடர் எண்ணங்களின் நியாயத்தன்மையின் அடிப்படையில் வரலாற்றை எழுதவேண்டும்.
அது மட்டுமல்ல, வரலாற்று ஆதாரங்கள் பொய்கூட சொல்லக்கூடும். எதைப் பார்க்கிறோமோ அதுவே உண்மையான தோற்றம் அல்ல என்பதையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இந்திய ராஜதானிகளில் வரலாற்றை எழுதியவர்கள் தங்களுடைய புரவலர்கள் மெச்சிக்கொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களுடைய அரசியல், கலாச்சார, ராணுவ, காதல்கள வெற்றிகளை மிகைப்படவே எழுதிவிட்டார்கள். ஏதென்ஸ் நகர தொல்கலைகள்பற்றிய வரலாற்றைப் படித்தால் அந்தச் சமூகத்தில் பெண்களுடைய நிலைமை மிக உயர்வாக இருந்தது என்ற முடிவுக்கே நாம் வருவோம். கஜுராஹோ என்ற இடத்தில் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள பாலுணர்வைத் தூண்டும் அழகிய சிற்பங்களைப் பார்த்தால் சண்டேளர்கள் ஆட்சிக் காலத்தில் எல்லாப் பெண்களுக்கும் பாலுறவு தொடர்பாக முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்ததாகவே முடிவுக்கு வரநேரும்.
முற்காலத்திலும் இடைக்காலத்திலும் இந்தியாவுக்கு வந்த யாத்ரிகர்கள் வெகு அபூர்வமாகத்தான் உள்ளூர் மொழிகளை அறிந்திருந்தார்கள். எனவே அவர்களுடைய பதிவுகளில் தவறுகளும், கேள்விப்பட்டு ஆனால் உறுதி செய்யப்படாத தகவல்களும், மொழி பெயர்ப்பில் தவறாகப் பொருள்கொள்ளப்பட்ட குறிப்புகளும் ஏராளம்.
நம்முடைய காலத்துக்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கும் நமது சந்ததியில் யாரோ, இருபத்தோராவது நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவீடனில் எழுதப்பட்ட புத்தகங்களை மட்டும் வாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், சுவீடனில் அந்தக் காலகட்டத்தில் குற்றச் செயல்கள்தான் அதிகம் நடந்துள்ளன என்ற (தவறான) முடிவுக்கு வரக்கூடும்.
காரணம் புனைவுகள் அனைத்தும் அப்படிப்பட்டவையாகவே எழுதப்பட்டன. உண்மை என்னவென்றால் உலகிலேயே சுவீடனில்தான் குற்றச் செயல்கள் குறைவு, ஆனால் மக்களுக்கு குற்றஞ்சார்ந்த நாவல்களையும் கதைகளையும் வாசிப்பதில் அபார ஆர்வம். ஒரு நல்ல வரலாற்றாசிரியர் என்பவர் எந்தெந்த ஆதாரங்களிலிருந்து எந்தெந்த முடிவுக்கு வரவேண்டும் என்ற உள்ளுணர்வை அல்லது வழிமுறையை உருவாக்கி வைத்திருப்பார்.
துரதிருஷ்டவசமாக, வரலாற்றாசிரியர்களும் அரசியலார் நோக்கங்களுக்கேற்பத் திரித்து எழுதும் உடந்தையாளர்களாகவும் இருந்துவிடுகிறார்கள். ஒரு சிலர், மற்றவர்களைவிட, குறிப்பிட்ட ஒரு குழுவுக்குச் சாதகமாகக் கடந்த கால நிகழ்வுகளைத் திரித்துப் பதிவு செய்கின்றனர். வரலாறு தனிப்பட்ட யாருக்கும் சொந்தமல்ல என்றாலும், சிலர் மிகவும் பாரபட்சமாகவே நடந்துகொண்டுவிடுகின்றனர். சிலர் ஆதாரங்களை வேண்டுமென்றே திணித்தோ, கொண்டுகூட்டிப் பொருள்கொண்டோ மேலாதிக்க உணர்வு உந்த திரித்து எழுதிவிடுகின்றனர்.
அப்படிப்பட்ட வரலாற்றுப் பதிவுகள், ‘எங்களுடைய கண்ணோட்டத்தில்’ என்ற அடைமொழிகளுடனேயே எழுதப்படுகின்றன அவை வரலாறு தொடர்பான கல்வியறிவை உயர்ந்த தரத்துக்கு இட்டுச் செல்லாது. அவை சமூகத்தின் பெரும்பான்மையினரின் வீண் பெருமைகளை வளர்க்கவே உதவும். அப்படிப்பட்ட கண்ணோட்டங்களில் எழுதப்படும் வரலாறுகள் மக்களின் சில பிரிவினரிடையே அச்சங்களைப் பெரிதுபடுத்தும். எதிர்ப்புணர்வையும் சில தொல்குடிகள் மீதான சார்புகளையும் ஏற்படுத்தும். மக்களுடைய சுமுகமான சமூக வாழ்க்கைக்கு ஆபத்தாகவும் மத ரீதியிலான மோதல்களுக்குக் காரணங்களாகவும் அமைந்துவிடும்.
என்னுடைய இந்த நூலில், கடந்தகாலம் தொடர்பாக வீண் பெருமைகளையோ, சிறுமைகளையோ நமக்குள் வளர்க்க விரும்பவில்லை. அதேவேளையில் நம்முடைய மூதாதையர்கள் மேற்கொண்ட பலவகைப்பட்ட, சிக்கலான வாழ்க்கைப் பயணங்கள் குறித்த புரிதல்களை அதிகப்படுத்த விரும்புகிறேன். கடந்த காலத்தை இடம்பெயர்தல், மோதல்கள், கலப்புகள், இணைந்து வாழ்தல், கூட்டுறவு ஆகிய சமூகக் கூறுகளின் விசையியக்க ஊடாட்டமாகவே பார்க்கிறேன்.
‘நம்முடைய கண்ணோட்டம்’ என்ற நோக்கில் அல்ல, ‘என்னுடைய கண்ணோட்டப்படி’ என்ற நோக்கிலேயே எழுதுகிறேன். அது கலாச்சார, உலகாயத அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும். எந்தவொரு தனிப்பட்ட சித்தாந்தக் கண்ணோட்டமும் அதில் இருக்காது. பல்வேறு விதமான கண்ணோட்டங்களையும் படித்து அதிலிருந்து அனுபவம் பெற்றுள்ளதால் நடுநிலையான அணுகுமுறையுடனேயே எழுத விரும்புகிறேன்.
அதே சமயம் தனிப்பட்ட தொடர்புகள், ஆழ்தல், பகுப்பாய்வுசெய்தல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் தருவேன். நான் உருவாக்கியிராத எது குறித்தும் பெருமையடைய வேண்டும் என்ற தன்முனைப்பு எனக்கில்லை. அதேசமயம் நியாயமான கொண்டாட்டங்கள், அதிசயங்கள் ஆகியவற்றில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. இந்தியாவின் கடந்த காலங்களில் இவ்விரண்டுக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருந்துள்ளன. அவற்றை இனிவரும் பக்கங்களில் வாசகர்கள் நிறையவே காண்பார்கள். இறுதியாக, கடந்த காலத்தைப்பற்றிய நல்ல பதிவு என்பது நிகழ்காலம்பற்றிய வாசகரின் விவேகமான உற்றறிவைப் பொருத்ததே அது.
இந்திய நாகரிகம்
நமித் அரோரா, தமிழில்: வ. ரங்காசாரி
நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books