1891ல் அம்பேத்கர் பிறந்தார். அதே காலதத்தில்தான் மஹர்களின் போராட்டங்கள் பொது வெளியில் வர ஆரம்பிக்கின்றன. சாதியின் உள்ளும் வெளியிலும் நடந்த மாற்றங்கள் மூலம் மஹர்களின் மனங்களில் தோன்றிய புதிய எண்ணங்கள் அம்பேத்கர் மனதிலும் தோன்ற ஆரம்பித்தன. வழக்கமான கிராமத்துப் பணிகளிலிருந்து விலகி, படித்த, ராணுவத்தில் பணி செய்த மஹர்களோடு பழகும் வாய்ப்பு அவருக்கு இளம் வயதில் வாய்த்தது. ராணுவ வீரர்களின் மீது மிகுந்த மதிப்பு கொண்டவராக வளர்ந்தார். கிராமங்களில் காணப்படும் இந்து மதத்தில் இருந்து மாறுபட்ட சடங்குகள் மிகுந்த இந்து மதத்தைப் பற்றியும் அறிந்துகொண்டார். வாழ்க்கையும் அவருக்கு நகரப் பகுதிகளில் தான் அதிகமாக இருந்தது.
தெற்கு பம்பாயின் குன்றுகளுக்கு நடுவில் தனிமைப்பட்டுக் கிடந்த ரத்னகிரி கிராமத்துக்குச் செல்வது வெகுவாகக் குறைந்தது. அவரது தூரத்து உறவினர்கள் மட்டுமே அப்போது அங்கு வாழ்ந்து கொண்டிருந்தனர். மகாராஷ்டிராவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்து சீர்திருத்த இயக்கங்கள் அனைத்துமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியறிவு அளிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் தொடக்கத்தில் இருந்தே செயல்பட்டன. அம்பேத்கருக்குக் கிடைத்த அப்பெரும் கல்விச் செல்வம் பல சாதி இந்து ஆசிரியர்களாலும், சீர்திருத்த மனப்பான்மையோடு இருந்த சில இளவரசர்களாலும்தான் கிடைத்தது.
பிராமணரல்லாதவர்களும் விவசாய சாதியினராகவும் இருந்த மராத்தி மக்களின் இயக்கங்களும் அம்பேத்கர் மீது தாக்கங்களை ஏற்படுத்தின. அதிலும் 18271890ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த ஜோதிபா பூலே என்ற பிராமணரல்லாத போராளி, புதிய இயக்கங்களை ஆரம்பித்தார். பிராமணர்களின் அளவில்லாத அதிகாரங்களை, மேலாண்மையைக் கேள்விக்குட்படுத்தி, அனைத்து சாதிகளின் சமத்துவத்துக்காகப் போராடினார். அவருடைய குரலும் அம்பேத்கர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.
மஹர் இயக்கத்தின் மீது புதியதோர் தாக்கம் இருபதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது. சுதந்தரப் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் பங்களிப்போ ஆர்வமோ எதுவும் இருந்திருக்கவில்லை. இந்த நிலையில், 1909ல் இருந்து ஆங்கிலேய அரசிடமிருந்து தொடர்ச்சியாக பல நன்மைகளை மஹர்கள் பெறத் தொடங்கினர். சீர்திருத்தங்களைக் கொண்டு வரவிரும்பிய ஆங்கிலேய ஆணையக் குழுக்கள் நாடு முழுவதும் பயணம் செய்து மக்களிடம் கருத்துக் கேட்டது. அதன் மூலமே கீழ்நிலை சாதியினருக்கு முதல் முறையாகத் தங்கள் குறைகளை வாய் திறந்து சொல்லக்கூடிய வாய்ப்பு உருவானது.
1919க்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கத் தொடங்கியது. அது காலப்போக்கில் அதிகரித்துவந்தவண்ணம் இருந்தது. சட்டசபையில் அவர்கள் தரப்பில் ஒரு குரல் எழும்புவதைக்காட்டிலும், நாட்டின் மக்களில் ஆறில் ஒரு பங்கினராக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுடைய அரசியல் முக்கியத்துவம் அதிகரிப்பது அவசியமாக இருந்தது. தேசம் மெதுவாக ஜனநாயகமயமாகிக் கொண்டிருந்தது. பெரும்பான்மையாகவும் சிறுபான்மையாகவும் இருந்த இந்து முஸ்லிம் சமூகங்களிடையே நிரந்தரமான மோதல் இருந்துவந்தது. தேசத்தின் ஆறில் ஒரு பங்கு மக்கள் அந்த இரண்டு சமூகங்களின் பழமைவாதக் கட்டமைப்புகளுக்கு வெளியில் இருந்தநிலையில், தமது அரசியல் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கினர்.
புதிதாகப் பிறந்த இருபதாம் நூற்றாண்டில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழிந்த பின் அம்பேத்கர் ஒரு தலைவராக உருவாகும் வாய்ப்பு வந்தது. அவரின் முன்னோடி வாலங்கரைவிட அம்பேத்கருக்குக் கிடைத்த வாய்ப்புகள் மிக அதிகம். இரட்டைப் பணியை எளிதாக அவர் மேற்கொண்டார். ஒருபுறம் தன் சாதி மக்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் சீர்திருத்தங்களைக் கொண்டு வரமுயன்றார். மறுபுறம் அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக அரசாங்கத்திடம் பேசிவந்தார்.
1890ல் வாலங்கர் தீவிரமான, அதேநேரம் அரசியல் நெளிவு சுளிவுகள் இல்லாத பாணியிலான விண்ணப்பத்தை அரசிடம் கொடுத்திருந்தார். 1919ல் அம்பேத்கர் நீண்ட, அரசியல் நிபுணத்துவ மொழியில் கூடுதல் பிரதிநிதித்துவம் கேட்டு விண்ணப்பங்களைக் கொடுத்தார். இந்த இரு நிகழ்வுகளுக்கு நடுவே மகாராஷ்டிரத்தில் பல இடங்களில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. நிர்வாக அமைப்பும் வலுவடைந்திருந்தது. வேறு சில தாழ்த்தப்பட்ட மக்கள் மஹர்களை விடவும் அதிகமாக முன்னேறியிருந்தனர். திருவிதாங்கூரின் ஈழவர்கள் ஸ்ரீ நாராயணகுரு தலைமையிலும் வழிகாட்டலிலும் 1902லேயே தங்களுக்கென்றே தனித்தனியான பள்ளிகளையும், கோயில்களையும் சாதி இந்துக்களுக்கு இணையாக உருவாக்கி முன்னேறத் தொடங்கியிருந்தனர்.2 மெட்ராஸ் மாகாணத்தின் ஆதி திராவிடர்கள் கிறிஸ்துவப் பிரசாரகர்களின் முயற்சிகளால் பெரும் மாற்றங்களைக் கண்டிருந்தனர். இந்தியாவின் மேற்குப் பகுதியில் மஹர்கள் கண்ட மாற்றங்களைவிட இவர்கள் அதிகமாக முன்னேறியிருந்தனர்.3 1912ல் வங்காளத்தில் இருந்த நாம சூத்திரர்கள் கல்கத்தாவில் தங்களுக்கான சாதி நிறுவனம் ஒன்றை உருவாக்கியிருந்தனர்.4
மேற்சொன்ன முனைப்புகளுக்கு மாற்றாக, மஹர்கள் தங்கள் சாதிக்கான மாநாடுகள் பலவற்றை நடத்தியிருந்தபோதிலும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சாதி நிறுவனம் எதையும் நிறுவியிருக்கவில்லை. பெரார் பகுதியில் ஒரு சில புதிய பள்ளிகள் மஹர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனால், பெருமளவிலான கல்வி வாய்ப்புகள் சாதி இந்து சீர்திருத்த அமைப்புகள், கிறிஸ்துவ அமைப்புகள் மூலமாகவே கிடைத்து வந்தன.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் சமூக, சமய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. பம்பாய், புனே, கிழக்குப் பகுதியில் நாசிக் பகுதிகளில் இருந்த மஹர்களிடையேயும் இந்த மாற்றங்கள் பரவின. இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கலாம்; ஆனால், ஆங்கிலேய அரசோடு தொடர்பு கொண்டிருந்த தலைவர்களாலோ சாதி இந்துக்களில் உள்ள சீர்திருத்தக்காரர்களாலோ இம்மாற்றங்கள் நடக்க ஆரம்பித்திருந்தன. இவற்றால் செல்வாக்கு பெற்ற மஹர்கள் கிராமப்புற பாரம்பரிய தொழில்களில் இருந்து விலகிவந்துவிட்டிருந்தனர். அவர்களுக்கு வேறு வாழ்வாதார வழிகள் திறந்துவிட்டிருந்தன. அம்பேத்கரின் நவீன சொல்லாடல்களைப் புரிந்துகொள்ள முடிந்த ஒரு குழு ஒருங்கிணைக்கப்படத் தயாராக உருவாகிவிட்டிருந்தது.
அம்பேத்கருக்கு ‘பாபா சாகேப்’ என்ற மரியாதைக்கும், அன்புக்கும் உரிய பெயர் கொடுக்கப்பட்டது. மஹர்கள் அவரைக் கிட்டத்தட்ட கடவுள் போலவே மதித்துப் போற்றிவந்துள்ள நிலையில் மஹர்களுக்காக அவர் செய்த சேவைகளை மிகையின்றிச் சொல்வது சிரமமே. அவர் மஹர் இயக்கத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் திறம்பட முடுக்கிவிட்டார். சமுதாயம், சமயம், அரசியல் என்று அனைத்துத் தளங்களிலும் வழிநடத்தினர். அது எந்த அளவுக்கு அழுத்தமாக இருந்ததென்றால் இந்த முன்னேற்றங்களில் பிற விஷயங்கள், காரணிகள் ஆற்றிய பங்கு பற்றி எதுவும் சொல்லப்படமுடியாமல் போய்விட்டது. சுருக்கமாகச் சொல்வதானால், 1920ன் நடுப் பகுதிக்குப் பிறகு மஹர்கள் வரலாறு எழுதப்பட வேண்டுமானால் அதன் மையப் புள்ளியாக அம்பேத்கர்தான் இருப்பார் என்றே சொல்ல வேண்டும். மஹர் சாதியினரின் நவீன மற்றும் இந்து மரபு சாரா வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அம்பேத்கரே.
0
அம்பேத்கரின் உலகம்: தலித் இயக்க உருவாக்கம்
எலினார் ஸெல்லியட்
தமிழில்: தருமி
நூலைப் பெற: Amazon | FlipKart