Skip to content
Home » தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் – ஓரான் பாமுக்

தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் – ஓரான் பாமுக்

The Museum of Innocence : Orhan Pamuk

கால இடைவெளி, அனுபவங்களை நினைவுகளாகப் பரிணாமம் அடையச் செய்கிறது. நிச்சயமற்ற எதிர்காலத்தைக் கணக்கில் கொண்ட ஒரு நேரடி அனுபவம், தான் நிகழும் காலத்தையே புராதனத்தன்மை கொண்டதாக ஆக்க முயல்கிறது. மரணத்தின் விளிம்பைப் போன்ற எச்சரிக்கை உணர்வையும் அடுத்த நொடி தரவிருக்கும் ஆச்சரியங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளையும் ஒருங்கே கொண்டதாக இருக்கிறது இந்த நிச்சயமற்ற எதிர்காலம்.

எந்தவொரு அனுபவமும் அது நிகழும் கணத்தில் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. அது தன் பூரணத்துவத்துக்குக் காலத்தைத் தனக்கான தட்சணையாகக் கோருகிறது. அதன் நீடித்த ஆட்கொள்ளலுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் துணியும் ஒரு குருட்டு இதயத்தால் மட்டுமே அதன் ஒப்பற்ற ஆறுதலைப் பெற முடியும். ஏனெனில், அனுபவம் வெறுமனே உடனடி எதிர்வினைகளைத் தூண்டக்கூடிய அளவு மேலோட்டமானது. காலத்தால் சுமக்கப்பட்டு நீடித்திருக்கும் அதன் நினைவுகளே செறிவானது, ஆழமானது.

அனுபவங்களின் ஈரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் எத்தனிப்பில், அவற்றோடு தொடர்புடைய நினைவுப் பொருட்களைப் பாதுகாத்துக் கொள்வதன் வழியாக அவற்றுடன் கொள்ளும் உணர்வுப்பூர்வமான பந்தம் மூலமாக ஓர் அந்தரங்கமான சாசுவதமான பிணைப்பு உருவாகிறது. அத்தகைய நினைவுப்பொருட்கள் பொதுப்பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றின் பின்னால் உறைந்துள்ள கதைகள் சொல்லப்படுவதன் பெறுமதி என்னவாக இருக்கும்?. வதந்திகள், அவதூறுகள், பழிச்சொற்கள், கண்டனங்கள், இழப்புகள், அவமானங்கள் ஆகிய இடர்பாடுகள் அனைத்தையும் கடந்து ஒரு காதல் நீடித்ததிருந்ததற்கான அங்கீகாரத்தை எதிர்காலத்தில் தன் கதைகளைக் கேட்டு தங்களையும் அக்கதைகளோடும் நினைவுப் பொருட்களோடும் அடையாளப்படுத்திக் கொள்ளும் காதலர்களின் நெருக்கமான புரிதல்களில் பெறமுடியும் என்ற நம்பிக்கையில்தான்.

கெமல், ஃபூசன் இருவரின் காதலை மையமாகக் கொண்டது ‘தி மியூசியம் ஆஃப் இன்னஸென்ஸ் நாவல். கெமல் செல்வச் செழிப்பான குடும்பப் பின்னணி கொண்ட முப்பது வயது இளைஞன். ஃபூசன், நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவள். கெமலைவிடப் பன்னிரெண்டு வயது இளையவள். கெமலுக்கு ஃபூசன் தூரத்து உறவினள். சிறுவயதில் முக்கியமான குடும்ப நிகழ்வுகள், பண்டிகைக் காலங்களில் கெமலின் தாயின் அழைப்பின் பேரில் ஆடைகளைத் தைத்துத் தரும் பணிக்காக ஃபூசனின் தாயான நெசிப் தன் மகளுடன் கெமலின் வீட்டிற்கு வந்து தங்குவது வழக்கம். அவ்வாறே இருவருக்கும் அறிமுகம் ஆகிறது. பள்ளிப்படிப்பை அடுத்து கல்லூரி மேற்படிப்புக்காக கெமல் ஃபிரான்ஸ் சென்று அங்கு தங்கிவிட, கெமலுக்கும் ஃபூசனுக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் ஆகிறது.

பிரான்ஸில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இஸ்தான்புல் திரும்பி வந்த கெமல், வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தன் தந்தையின் நிறுவனத்தைச் சகோதரனோடு இணைந்து கவனித்துக் கொள்கிறான். அந்நிலையில் கெமலின் தற்போதைய வாழ்க்கைத் தரத்துக்கு இணையான சமுதாய அந்தஸ்து கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த செபலுடன் அவனுக்குத் திருமண ஒப்பந்தம் முடிவாகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் ஃபூசனும் கெமலும் சந்திக்க நேர்கிறது. வரவிருக்கும் கெமலின் திருமண நிச்சய நிகழ்வு பற்றி ஃபூசனுக்குத் தெரிந்தும், இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அதுவரை வாழ்க்கையில் பெரிதான லட்சியமோ குறையோ இல்லாமல் கடந்து வந்த கெமலின் ஒட்டுமொத்த எதிர்காலமும் தடம் புரள ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் ஃபூசன், செபல் இருவரும் கெமலை விட்டுப் பிரிகிறார்கள். அதிலும் செபலின் பிரிவு ஒருவகையில் கெமலுக்கு ஆசுவாசமாகவே இருக்கிறது. ஆனால் எவ்விதச் சமிக்ஞையும் காட்டாது, சொல்லிக்கொள்ளாமல் விட்டுச் சென்ற ஃபூசனின் பிரிவு கெமலை அணுவணுவாகச் சித்ரவதை செய்யத் தொடங்குகிறது.

ஒவ்வொரு நாளும் ஃபூசனின் வரவை எதிர்பார்த்தோ, அவளைப் பற்றிய ஏதேனும் ஒரு சிறு செய்தியாவது கிடைத்துவிடாதா என்ற பரிதவிப்புடனோ கெமல் தன் நாட்களைக் கழிக்கிறான். வெளியுலகத் தொடர்பு அவனுக்கு முற்றிலும் அந்நியமாகிறது. நண்பர்களை இழக்கிறான். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனமடைகிறான். தொழிலில் காட்டும் அலட்சியத்தால் நிறுவனம் பிளவுறுகிறது. குடும்ப உறுப்பினர்களைப் புறக்கணித்து தனியாக அறை எடுத்துத் தங்குகிறான். அறையே கதி என்று கிடந்து நாள் கிழமை, நேரம் பற்றிய நினைவை இழக்கிறான்.

எப்படியாவது ஃபூசனைக் கண்டுபிடித்துவிட மாட்டோமா என்ற பித்தேறிய நிலையில் தெருத் தெருவாகச் சுற்றி அலைகிறான். எதிர்ப்படும் முகங்களிலெல்லாம் ஃபூசனின் ஆவியுருவைக் கண்டு திகைத்தும் குழம்பியும் போகிறான். குருட்டுக் கற்பனைகளுக்கும் நினைவுகளுக்குமிடையே இடையறாது அல்லாடுகிறான். தூக்கமற்ற இரவுகளின் கனவுகளால் துண்டாடப்படுகிறான். ஆனாலும் அவனுக்குத் தன் நிலை குறித்து யார் மீதும் வெறுப்போ புகார்களோ இல்லை. குறைந்தபட்சம் தன்னால் இதற்காகவாவது பொறுப்பேற்றுக் கொள்ள முடிகிறதே என்று நிதான நிலையில் சுயநினைவு கட்டுக்குள் இருக்கும்போது மட்டும் சொற்பமாக ஆறுதலடைகிறான்.

இப்படியான காலகட்டத்தில் அவனுக்கு இருக்கும் ஒரே அரவணைப்பு ஃபூசனிடமிருந்து அவளுக்குத் தெரியாமல் அவ்வப்போது அவன் சேகரித்து வைத்திருந்த சிறு சிறு பொருட்களுடன் இருள் சூழ்ந்த தனிமையில் கழிப்பது மட்டுமே.

அதிர்ஷ்டவசமாக மீண்டும் ஃபூசனைக் காணும் சந்தர்ப்பத்தை விதி அவனுக்கு அமைத்துக் கொடுக்கிறது. ஆனால் இப்போது அவள் இன்னொருவனின் மனைவி ஆகியிருக்கிறாள்.

மொத்தம் 727 பக்கங்கள் கொண்ட நாவலில் கதைசொல்லியான கெமலின் வாழ்க்கை ஐந்து பரிமாணங்களில் மாற்றமடைகிறது. ஃபூசனைச் சந்திப்பதற்கு முன், ஃபூசனுடன் இருக்கும் பொழுதுகள், ஃபூசனின் பிரிவு, ஃபூசனின் திருமணத்திற்குப் பிறகான சந்திப்புகள், இறுதியாக ஃபூசன் மீதான தன் காதலின் நினைவாக அருங்காட்சியகம் அமைக்கும் முனைப்பில் கெமல் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பகுதி. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் கெமலின் ஆன்மாவை இயக்கும் விசையாக ஃபூசன் இருக்கிறாள்.

நாவலின் பெரும்பகுதி நனவோடையில் தீட்டப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்குத் துருக்கிய எழுத்தாளரான அய்ஃபர் டுன்ஷ் இன் ‘அஸீஸ் பே சம்பவம்’ நெடுங்கதைக்கும் தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் நாவலுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் புலப்படுகின்றன. இரண்டுமே நிறைவேறாத காதலின் வலியையும், அதனூடாகப் பயணித்து, அதன் வழியாகவே ஆறுதலை அடையும் பயணத்தையும் விவரிக்கின்றன. முன்னதில் இசை, இரண்டாவதில் உடைமைகள்.

ஒரு சாதாரண வெளிக்காட்சி அசாதாரணக் கண்ணோட்டத்தில் தட்டுப்படுவது தனக்கு விருப்பமான துணையின் அருகாமையிலும், அவர்கள் உடனில்லாத பிரிவுத் துயரிலும்தான். அப்போதான அடர்த்தியான தெளிவற்ற தீவிரமான மனநிலையை வெறும் கற்பனையால் கொண்டு வருவது சாத்தியமே இல்லை. இந்த இடத்தில் பாமுகின் மேதைமை நாவல் முழுவதிலும் அபாரமாக வெளிப்படுகிறது.

ஃபூசனுடன் தனியாக இருக்கும்போது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் தினசரி ஃபூசன் வீட்டிற்குச் சென்று அவளது குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்ணும் வேளைகளிலும் அவளைக் காண இயலாத தனிமையின் வெம்மையிலும் கெமலின் மனவோட்டச் சித்தரிப்புகளாகட்டும், ஃபூசனின் ஒவ்வொரு அசைவுகளும் கெமலின் மனதுக்குள் தூண்டி விடும் நம்பிக்கை, மகிழ்ச்சி, துயரம், அவநம்பிக்கை, பரிவு, கோபம், அளவற்ற காதல் என்று கலவையான உணர்வுகளாகட்டும் ஓர் ஓவியரின் கையில் தூரிகைக்குப் பதில் மொழியைக் கொடுத்தால் உரைநடையில் என்னவிதமான மாயாஜாலம் நடக்குமோ அதுவே பாமுக்கால் இங்கு சாத்தியமாகிறது. ஃபூசனின் அருகே கெமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும் புறவயமாகக் குறிப்பிடும்படியாக ஒன்றுமே நிகழாவிட்டாலும் அதுவுமே ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாக மாற்றமடைகிறது. நிச்சலனம்கூட ஓவியம் போன்ற துல்லியத்துடன் மிளிர்கிறது.

83 அத்தியாயங்கள் கொண்ட நாவலில் ‘Sometimes’ என்றொரு அத்தியாயம் வருகிறது. நாவலை நிறைவு செய்த பின்னும் இந்த ஓர் அத்தியாயத்தை மட்டும் இப்போது வரை பத்துக்கும் மேற்பட்ட முறை வாசித்திருப்பேன். நாவலில் கெமலின் இறுதி நோக்கமான ஃபூசனின் நினைவாக அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று தன் கதையை எழுத ஒப்பந்த எழுத்தாளராக வரும் பாமுக்கிடம் கெமல் சொல்வதாக ஒரு பகுதி வரும் (ஆம்! பாமுக் நாவலில் ஒரு கதாபாத்திரமாகவும் வருகிறார்!). இரண்டு அடுக்குத் தளம் கொண்ட அருங்காட்சியகத்தில் எந்த இடத்தில் நின்று ஒருவர் பார்த்தாலும் ஒட்டுமொத்த நினைவுச் சேகரிப்புகளையும் காண முடிவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நினைவுப் பொருளை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்வையாளர்கள் புரிந்துகொள்ள முடியும் என்று சொல்வதாக வரும்.

இந்தக் கருத்தை ஓர் இயல்பான நேரடி வாழ்க்கையின் அன்றாட, அதேசமயம், காதலின் காரணமாக ஒருபோதும் சலிப்பேற்படுத்தாத, இயந்திரத்தனமான நடவடிக்கைத் துணுக்குகளை மோன்டேஜ் பாணியில் பொருத்தி இந்த ‘Sometimes’ அத்தியாயம் முழுவதும் அடுக்கியிருப்பார் பாமுக். பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை நாவலில் வரும் ‘நீலவேணியின் பாதை’ அத்தியாயம் எப்படியான சிலிர்ப்பைத் தந்ததோ அதற்கு நிகரான அனுபவம் குறிப்பிட்ட இந்த அத்தியாயத்தில் கிடைத்தது.

நாவல் பற்றிய விமர்சனங்களைத் தேடிப் பார்த்ததில் பலர் 700 பக்கங்களுக்கு மேல் உள்ள நாவலின் பாதிப் பகுதி ஒரே சுழற்சி போல் நிகழ்வுகள் திரும்ப திரும்ப வருவது சலிப்பூட்டுகிறது என்று சொல்லியிருந்தார்கள். முரகாமியின் Killing Commendatore நாவலுக்கும் இதே எதிர்வினையைப் பரவலாகக் காண முடிந்தது. என் அனுபவத்தில் இது மிக மேலோட்டமான தட்டையான அவதானிப்பு.

ஒரே ஒரு கணம் அதுவரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கைப் பார்வையையே மாற்றுவது ஒற்றை லட்சியத்தை விடாப்பிடியாகப் பின்பற்றும் அசாதாரணமானவர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். Killing Commendatore நாவலின் மையக்கதாபாத்திரமான அநாமதேய ஓவியனும், தி மியூசியம் ஆஃப் இன்னஸென்ஸ் நாவலின் கெமலைப் போன்றோரும் அடிப்படையில் சாமானியர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் மாபெரும் லட்சியம் என்று எதுவும் கிடையாது. அதேசமயம் தனக்கென ஒரு சீரொழுங்கைத் தன்னியல்பாகக் கொண்டிருப்பார்கள். புற உலக விதிமுறைகள், பாசாங்குகள் அவர்களின் நடத்தையில் பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தன் அகம் இருண்டு விட்டதென்றால் இவ்வுலகமே மகிழ்ச்சியை அள்ளி வழங்கினாலும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. அதேபோல இவ்வுலகமே போர் போன்ற எத்தகைய பேரிடராலும் சிதைவுற்றாலும் அதுவும்கூட அவர்களைப் பெரிதாகப் பாதித்துவிடாது (இதற்கான உதாரணம் நாவலிலேயே வருகிறது).

இந்நாவலில் இருந்தே சொல்ல வேண்டுமென்றால் கலகம், ஆட்சிக்கவிழ்ப்பு, ஊரடங்கு, குண்டுவெடிப்பு என்று நாடே பீதியுற்றிருக்க கெமலின் நினைவுகளில் இவை வெறும் குறுக்கீடுகளாக மட்டுமே தென்படுகின்றன. ஒரு வருடமாக ஃபூசனைத் தேடி அலைந்து அவளது நினைவாலேயே பீடிக்கப்பட்டு, காணும் இடமெல்லாம் ஃபூசனின் பிம்பமாகத் தெரிய, பிரமை பிடித்ததுபோல் அவனை ஆட்டிப்படைத்து, அலைக்கழித்து, தீர்வில்லாத கையறுநிலையில் சிக்க வைத்து, அவன் ஆன்மா முழுவதையும் ஆட்கொண்டிருப்பது ஃபூசனின் பிரிவு தரும் தாங்க முடியாத துயர் மட்டுமே.

உணர்வுகள் பக்குவப்பட்டு ஆளுமையிலும் சிந்தனையிலும் முதிர்ச்சி அடையும் முன் ஒரு சாதாரண இயல்பினன் முன்னேற்றம் இல்லாத பல தொடர் ஏமாற்றங்களுக்குள், குருட்டுக் கற்பனைகளுக்குள் ஆழ வேண்டியிருக்கிறது. அவனது மீட்சிக்கான தருணங்கள் அருகருகே வாய்த்தபோதும் ஒரு சிறு இடறலில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தன் ஆன்மாவுக்காக அடகுவைக்கும் பதற்றம் உடனடியாக அவனைச் சூழ்கிறது. நெருங்கி நின்று பார்க்கும்போது அது சந்தம் மாறாத ஒரே செயல்பாடுகளின் சுழற்சி என்று தோன்றலாம். ஆனால் விலகி நின்று பார்க்கும்போது ஒவ்வொரு சுழற்சியும் தனித்துவமானது. ஒன்றின் தொடர் ஒற்றி நீண்டு கடந்து முன்னதனலில்லாமல் வேறொரு ஏமாற்றப் புள்ளியில் புதிதான வலியை அனுபவிக்க வந்து நிற்க நேர்ந்திடும் துரதிருஷ்டம் பிடித்த பயணமது.

முதல் முறையாக பூசன் தொட்டுப் பயன்படுத்திய உடைமைகள், பொருட்களை ரகசியமாகத் தன்னுடன் நினைவாக எடுத்துச் செல்ல கெமலுக்குக் காரணமாக அமைவது எவ்வித குறிப்புணர்த்தலுமில்லாமல், ஃபூசன் கண்காணாமல் சென்றுவிட்ட நாட்கள் அவன் மனதில் ஆழமாகப் பதித்த வலிமிகுந்த நினைவுகளே. எப்போது வேண்டுமானாலும் தனக்குக் கிடைத்திருக்கும் மகிழ்ச்சி கைவிட்டுச் சென்று விடக்கூடும் என்ற நிதானமான புரிதல் அந்தத் தற்காலிகமான போதையை நிலைநிறுத்தத் தேவையான முன்னெச்சரிக்கையை அவனிடம் தூண்டுகிறது.

எனக்குத் தனிப்பட்ட முறையில் நாவலில் ஒரு குறையாகப் பட்டது நாவலின் இறுதிப் பகுதி. ஃபூசனின் புரிந்துகொள்ள முடியாத மன இயல்பு ஒரு பக்கம் என்றாலும், நாவலின் இறுதிப் பகுதியில் ஒரு நொடியில் அவள் எடுக்கும் முடிவுக்குப் பின்னால் இருக்கக் கூடிய காரணங்களை கெமலைப் போலவே ஆரம்பத்தில் இருந்தே அவளின் எண்ணவோட்டங்களைப் புரிந்து கொள்ள முயன்று வரும் நம்மால் விரிவான ஒரு மீளாய்வு மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதன்பிறகு அவளின் நினைவாக அருங்காட்சியகம் அமைக்கும் செயலில் இறங்கும் கெமலிடம் உருவாகும் வெற்றிடம் நிதானத்தை நோக்கி மாற்றமடையும் பகுதி இன்னும் கொஞ்சம் விரிவான விவரிப்புகளுக்கு இடம் வைத்திருந்தாலும் கவனமுடன் சுருக்கப்பட்டதுபோல் தோன்றியது.

நாவலின் பெயரிலேயே இஸ்தான்புல் நகரில் நிஜமான அருங்காட்சியகத்தை நிர்மாணித்துள்ளார் பாமுக். கதையில் குறிப்பிடப்பட்டுள்ள ஃபூசன் பயன்படுத்திய உடை, தேநீர்க் கோப்பை, கம்மல், நெக்லஸ், சிகரெட் துண்டுகள், காலனி, கடிதங்கள், மேலும் 1970 காலகட்டத்தைய துருக்கியில் பிரபலமாக இருந்த ஆளுமைகளின் படம் பொறித்த அஞ்சல் அட்டைகள், மேற்கத்திய தாக்கத்தால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குளிர்பானப் பாட்டில்கள், ஒலிப்பதிவு சாதனம், கடிகாரம், பிரபலமான சினிமா கிசுகிசுக்கள் வெளியான செய்தி நாளேடுகள் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் துருக்கியில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த பொருட்களும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நாவலை வாசித்து முடிக்கும்போது அருங்காட்சியகத்தை நேரில் சென்று பார்க்கும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. அருங்காட்சியகத்தின் நுழைவுச்சீட்டாகக் கையில் நாவலின் பிரதி ஒன்றிருந்தால் போதும் அதிலேயே ஸ்டாம்ப் செய்து தந்து விடுவார்கள் (பக்கம் 713இல் டிக்கெட் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது). அதிர்ஷ்டமும் ஃபூசனின் ஆசீர்வாதமும் இருந்தால் எனக்கும் கூடிய விரைவில் அந்த வாய்ப்பு கைகூடும் என்று நம்பிக்கையில் நுழைவுச்சீட்டோடு காத்திருக்கிறேன்.

0

பகிர:
ரஞ்சித் குமார்

ரஞ்சித் குமார்

சொந்த ஊர் தென்காசி அருகில் சேர்ந்தமரம். சென்னையில் ஒரு தனியார் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிகிறார். வாசிப்பிலும் ஊர்சுற்றுவதிலும் ஆர்வம் அதிகம். அவ்வப்போது இலக்கிய விமரிசனங்கள் எழுதிவருகிறார். தொடர்புக்கு : ranjithlogin01@gmail.comView Author posts

2 thoughts on “தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் – ஓரான் பாமுக்”

  1. நூல்களைத் தொடர்ந்து உயிரோட்டமாக வைத்திருப்பது படித்தவர்களின் அனுபவ. பகிர்வுகளே!அவ்வகையில் இப்புதினம் தனித்துவமானது என்பதை இப்பதிவின் மூலம் அறிய முடிகிறது.அற்புதமான விமர்சன கட்டுரை.அருமையான வார்த்தை பிரயோகம்.

  2. சலாமத் ஜாபர்

    அருமையான நேர்த்தியான கட்டுரை.வரிகளும் அனுபவித்த உணர்வுகளையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் … வாழ்த்துக்கள் ரஞ்சித் குமார் சார்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *