‘ஒரு தீவு முழுக்கப் பெண்கள். அதில் ஆண்கள் எண்ணிக்கை 10% அல்லது அதற்கும் குறைவுதான். அந்தத் தீவுக்கு ஓர் இளைஞன் போய் இறங்குகிறான். அவனை அடைய அந்தத் தீவிலுள்ள பெண்கள் அனைவரும் போட்டிப் போட்டு அடிதடியில் இறங்க…. அதன்பின் இளைஞனுக்கு மதனகாமராஜ வாழ்க்கைதான்…’
இந்தத் தீமில் நிறைய படைப்புகள் காலம், தேசம், கலாசாரம் தாண்டி வந்திருக்கின்றன. ஆண்களின் காலம், தேசம் தாண்டிய கனவுலகம் எப்படி இருக்கும் என்பதற்கான சான்றாகவும் இதைக் கொள்ளலாம்.
பண்டைய கிரேக்கத்தில் இப்படிப் பெண்கள் மட்டுமே வாழும் அமேசான் பெண்கள் கதை உண்டு. அதை டி.சி காமிக்ஸில் வொண்டர் உமன் எனும் கதாபாத்திரத்துக்குப் பயன்படுத்தினார்கள். ஸ்டார்டி ரெக்கில் இப்படிப் பெண்கள் மட்டுமே இருக்கும் ஏஞ்சல் ஒன் என்ற உலகம் உண்டு.
பின்லாந்தில் சூப்பர் ஷீ எனும் தீவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. இந்தத் தீவை ஒரு பெண்ணியவாதி விலைக்கு வாங்கி சூப்பர் ஷீ ஆப் நிறுவியிருக்கும் பெண்களில் தேர்வு செய்யபட்டவர்களை மட்டுமே தீவுக்குள் அனுமதிக்கிறார். தீவில் ஆண்கள் மருந்துக்கும் கிடையாது.
எஸ்தோனியாவில் கிஹ்னு (Kihnu Island) எனும் தீவும் பெண்ணாதிக்கத் தீவுதான். அதன் ஆண்கள் மாதக்கணக்கில் மீன்பிடிக்க போய்விடுவார்கள். பெண்கள்தான் தீவை ஆள்வார்கள்.
இந்தக் கதை எல்லாம் இப்ப எதுக்கு என கேட்கிறீர்களா? நிஜமாவே இப்படி ஒரு தீவு இருந்தால் எப்படி இருக்கும்? வாருங்கள், பார்த்துவிடுவோம்.
0
1682ல் அந்த நாவல் ஜப்பானில் வெளிவந்தது. அதன் பெயர் ஆங்கிலத்தில் ‘The Life of an Amorous Man’. யோனோசுகே (Yonosuke) எனும் இளைஞனைப் பற்றியது. அவனுக்கு 19 வயது ஆகும்போது நிறைய சொத்துகளை விட்டுவிட்டு அவன் தந்தை இறந்துவிட அதன்பின் யோனோசுகே பெண் மோகத்தில் வீழ்கிறான்.
விதவிதமான கெய்ஷா பெண்களை அனுபவித்த பிறகும் பல பெண்களைக் காதலில் வீழ்த்திய பின்பும் அவன் திருப்தியடையவில்லை. ஜப்பான் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு கெய்ஷா விடுதிகளில் தங்கி ஒரு முழுமையான காமுகனாக மாறிவிடுகிறான்.
கெய்ஷா பெண்கள், பிரபுக்களின் மனைவியர், வணிகர்களின் மனைவி, மகள்கள் என்று தொடங்கி போகுமிடமெங்கும் காதலிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
தன் 54வது வயதில் Nyōgogashima (பெண்கள் தீவு) என்று ஒரு தீவு இருப்பதைக் கேள்விப்படுகிறான்.
ஜப்பானின் மேற்கு பகுதியில் தைவான் எல்லை அருகே இருந்த தீவு அது. அங்கே செல்வது அப்போது மிகவும் கடினம். அந்தப் பெண்கள் தீவில் ஆண்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் அங்கே சென்றால் ராஜபோக வாழ்க்கை வாழலாம் என்றும் தெரிந்துகொண்டு தன் சொத்துகள் அனைத்தையும் விற்று ஒரு கப்பல் நிறைய பொருட்களை ஏற்றிக்கொண்டு பெண்கள் தீவுக்கு செல்கிறான். அங்கே இருந்த பெண்கள் அவனைப் போட்டி போட்டு காதலிக்க, அதன்பின் அவன் மகிழ்ச்சியோடு வாழ்ந்ததாகச் சொல்லி நாவல் முடிவடைகிறது.
நூல் முழுக்க ஆசிரியர் அன்றைய ஜப்பானிய சமூகத்தைக் கடுமையாகக் கிண்டல் செய்கிறார். யோனோசுகே உறவுகொண்ட பெண்களின் எண்ணிக்கை 3742 என்கிறார். அது அன்றைய ஜப்பானில் இருந்த தெய்வங்களின் எண்ணிக்கை.
இப்படி ஒரு எதிர் கலாசாரத்தை முன்நிறுத்தி, கிளுகிளுப்பான வர்ணனைகளுடன் வெளிவந்த நாவல் ஜப்பானெங்கும் விற்பனையில் சக்கைபோடு போட்டது.
ஆனால் நூலைப் படித்த துடிப்பான சில இளைஞர்கள் நிஜமாகவே அப்படி ஒரு பெண்கள் தீவு இருக்கிறதா என ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். பெண்கள் தீவுக்குப் போகும் ஆண்களை அந்தத் தீவிலுள்ள பெண்கள் நிஜமாகவே போட்டிப் போட்டுக்கொண்டு காதலில் ஈடுபடுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்ததை அப்படியே உண்மை என்று அவர்கள் எடுத்துக்கொண்டனர்.
தீவு உண்மைதான் ஆனால் அது தொலை தூரத்தில் எங்கோ இருப்பதாக உறுதிப்படாத தகவல்கள் பரவின. அதனால் ஜப்பானிய இளைஞர்கள் சிலர் ‘உயிரே போனாலும் பெண்கள் தீவைக் கண்டுபிடிக்காமல் வரமாட்டோம்’ என்று சொல்லி படகில் கிளம்பிப் போனார்கள்.
ஜப்பானின் மேற்கே தைவானுக்கு அருகே இருக்கும் கடைசி தீவாக பெண்கள் தீவு குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக நிஜமாகவே அப்படி ஒரு தீவு இருந்தது.
ஜப்பானின் முக்கியத் தீவுகளில் இருந்து 1000 கிமி கடலில் சென்றால் அந்தத் தீவை அடையலாம். யோனாகுனி (Yonaguni) என்று அதற்குப் பெயர். அதன் மக்கள் தொகை 1,500 மட்டுமே என்பதாலும் தீவின் பல ஆண்கள் பக்கத்து தீவுகளுக்குக் குடியேறிவிடுவதாலும் தீவில் பெண்களின் எண்ணிக்கையே மிகுதி. அவர்களின் ஆதிக்கமும் மிகுதி.
ஆண்கள் பற்றாக்குறையால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கஷ்டம். கற்பு, ஒழுக்கம் மாதிரியான கான்செப்டுகளும் கடுமையாகக் கடைபிடிக்கப்படவில்லை. கல்யாணமே சற்று அரிதாகத்தான் இருந்தது.
அந்தத் தீவில் போய் இந்தப் பையன்கள் இறங்கியதும் நாவலில் சொன்னது போல பெண்கள் நிறைய பேர் தென்பட்டார்கள். காதலுக்கு எல்லாம் அவர்கள் மறுப்பே சொல்லவில்லை. ஆனால் சோறு, தங்க இடம் எல்லாம் சும்மா கிடைக்காதே? அதனால் இந்த இளைஞர்கள் விவசாய வேலையை ஒப்புக்கொண்டு அங்கே தங்கி, வயல் வேலை செய்து, காதல் போக வாழ்க்கையும் வாழ்ந்தார்கள்.
விவசாய சீசன் முடியும்வரை இந்த இளைஞர்கள் வயலில் வேலை செய்தபடியும் வாழ்க்கையை அனுபவித்தபடியும் சில மாதங்கள் கழத்துவிட்டு, ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். ஜப்பானில் போய் இறங்கியதும், ‘பெண்கள் தீவு நிஜமாவே இருக்கு’ என சொல்ல அடுத்த படகில் மேலும் பல இளைஞர்கள் கிளம்பி வந்தார்கள்.
தீவிலுள்ள பெண்களுக்கு ஒரே மகிழ்ச்சி. வேலை செய்ய ஆட்கள் இல்லாத குறை இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறு இளைஞர்களால் தீர்ந்ததில் அவர்களுக்குத் திருப்தியே.
இப்படி 17, 18ம் நூற்றாண்டுகளில் ஜப்பானெங்கும் ‘புகழ் பெற்ற’ யோனோகுனி தீவு இன்றும் ஜப்பானின் ஒரு பகுதியாக இருக்கிறது.
ஆனால் பழைய கதை எல்லாம் இப்போது கிடையாது. அந்தக் கதையை எல்லாம் விசாரித்தால் நாவல், கட்டுக்கதை என்பார்கள். ஆனால் ஜப்பானில் போய் Nyōgogashima (பெண்கள் தீவு) என்றால் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள்.
(தொடரும்)
ஆரம்பமே அட்டகாசமா இருக்குது தல.
அடுத்தடுத்த அத்தியாயங்களுக்காக காத்திருக்குறேன்.
பல் துறை வித்தகர் தல நியாண்டர் செல்வன் அவர்கள் வாழ்த்துக்கள் தல தொடர்ந்து எழுதுங்கள்.