1865ம் ஆண்டு. அமெரிக்க சிவில் யுத்தம் முடிவுக்கு வருகிறது. 625,000 மரணங்கள், நாலு ஆண்டுகள். போரில் தோற்று சரணடைய கிளம்பும் தெற்கு மாநிலப் படைகளின் தளபதி ஜெனெரல் லீ தன் வீரர்களை இறுதியாகப் பார்க்கிறார். அவர்கள் ‘இந்த சரண் அவசியம்தானா? வரும்காலம் நம்மை பற்றி என்ன சொல்லும்? நாம் இறுதிவரை போரிட்டு வீரர்களாக உயிர் துறப்போம்’ என்கிறார்கள்.
‘வருங்காலம் மோசமாகவே பேசும். ஆனால் உங்களையல்ல. சரணடைந்த தளபதி என என்னையே பேசும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. இந்தச் சூழலில் இதைத் தவிர சிறந்த தேர்வு எதுவும் உள்ளதா என்பதே கேள்வி. அப்படி எதுவும் இல்லை எனும் போது அந்த முடிவின் முழு பொறுப்பும் என்னுடையதே.’
தன்னிடமிருந்த மிகச்சிறந்த உடையை அணிந்துகொண்டு, சரணடைவதற்கு அடையாளமாகத் தன் வாளை எடுத்துக்கொண்டு செல்கிறார். யூனியன் படைகளின் தலைவரும், ஆபிரகாம் லிங்கனின் நம்பிக்கைக்குரிய தளபதியுமான ஜெனெரல் யுலிசீஸ் கிராண்டிடம் அந்த வாளை ஒப்படைக்கவேண்டும். ஒப்படைத்தால் சரணாகதி முழுமையடைவதாகப் பொருள்.
கிராண்டும் லீயும் ஏதோ நண்பர்கள் பேசுவதுபோல உரையாடுகிறார்கள். தளபதி லீ கொடுத்த வாளை மறுத்த தளபதி கிராண்ட் அவரையே அதை வைத்துக்கொள்ள சொல்கிறார். தோல்வியடைந்த வீரர்களுக்கு உணவளிக்கபடுகிறது.
‘போர் முடிந்தது. இனி அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டேன் என உறுதியளித்துவிட்டு உங்கள் வீடுகளுக்குச் செல்லலாம். அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கபட்டுள்ளது.’
லீ தன் வாளுடன் கம்பீரமாக விடைபெறுகிறார். கிராண்ட் வெற்றியைக் கொண்டாடவில்லை. தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
அறையில் இருந்து அனைத்தையும் பார்த்த லீயின் உதவியாளர் சார்லஸ் மார்ஷல், ‘அறையில் இருந்த கண்ணியத்தையும், இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் காட்டிக்கொண்ட மரியாதையும் வார்த்தையால் விவரிக்க முடியாது’ என எழுதுகிறார்.
போர் முடிகிறது. யூனியன் படைகள் வெற்றி பெற்றன. அமெரிக்கா உடையாமல் காப்பாற்றப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் அதன்பின் சுட்டுக்கொல்லப்பட, நாடு குழப்பமான சூழலில் இருக்க, தோற்ற தெற்கு மாநிலங்களை மீண்டும் தேசியச் சூழலில் இணைக்கும் பொறுப்பும், போரால் நிலைகுலைந்து போன நாட்டைச் சீரமைக்கும் பொறுப்பும் இருந்தது.
ஜெனெரல் யுலிசீஸ் கிரான்ட் இந்தச் சூழலில் அரசியலில் குதித்து ஜனாதிபதி ஆகிறார். தெற்கு மாநிலங்களை அன்பாக நடத்தியும் போரால் நிலைகுலைந்துபோன நாட்டையும் ஒருங்கிணைக்கிறார்.

0
1877ல் ஓய்வு பெற்றபின் ஜாலியாக ஓர் உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் யுலிசீஸ் கிராண்ட். ஐரோப்பா, இந்தியா, ஆசியாவெங்கும் கப்பலில் சுற்றிவிட்டு வீடு வந்து சேர்ந்தவருக்கு தன் கையில் சுத்தமாகப் பணம் இல்லை என்பது பிடிபட்டது.
அவரது நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான மார்க் ட்வைன் சுயசரிதை நூல் எழுத ஆலோசனை கூறினார். ஆனால் ‘எனக்கு நூல் எழுதத் தெரியாது’ என்று மறுத்தார் கிராண்ட். அப்போது வார்ட் எனும் ஒரு கயவன் அவருக்கு அறிமுகம் ஆனான். ‘நாம் இருவரும் சேர்ந்து பைனான்ஸ் கம்பனி தொடங்குவோம். உங்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறேன். நீங்கள் சும்மா ஒர்க்கிங் பார்ட்னர் ஆக மட்டும் இருந்தால்போதும்’ என்றான்.
இவரும் மகாநதி பட கமலஹாஸன் மாதிரி விவரம் தெரியாமல் மண்டையை ஆட்ட, அவன் ‘வார்ட் அண்ட் கிராண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் ஆரம்பித்து, வசூலில் ஈடுபட்டான். ஜனாதிபதி கிராண்டின் நிறுவனம் என்பதால் முன்டியடித்துக்கொண்டு மக்கள் அங்கே முதலீடு செய்தார்கள். கடைசியாக அவன் கிராண்டிடமும் வந்து ‘கொஞ்சம் பணத் தட்டுப்பாடு. ஒன்றரை லட்சம் டாலர் ஏற்பாடு செய்து கொடுங்கள்’ என்றான்.
கிராண்டும் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் சேகரித்து, மீதமுள்ள பணத்துக்கு வான்டர்பில்ட் எனும் பெரும் கோடீஸ்வரரிடம் போய் கடன் கேட்டார். அவரும் மறுப்பு சொல்லாமல் கொடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்ட வால்ட் இரவோடு, இரவாகத் தப்பியோட கிராண்ட் மாட்டிக்கொண்டார்.
கிராண்ட் மேல் எந்தத் தவறும் இல்லை என மக்கள் அவரை பெருந்தன்மையாக மன்னித்துவிட்டார்கள். தப்பி ஓடிய வார்ட் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் பணத்தை மீட்க முடியவில்லை. தன் வீட்டை விற்று கடனுக்குப் பணம் கட்டினார் கிரான்ட். அவரது மகனும் தன் சொத்துகள் அனைத்தையும் விற்று அப்பாவின் கடனைக் கட்டினார். ஆனாலும் 17 லட்சம் கடன் பாக்கி இருந்தது.
செய்தி அறிந்து அமெரிக்காவின் பணக்காரர்கள் எல்லாம் வந்து, ‘நாங்கள் கடனை கட்டுகிறோம். உங்கள் வீட்டை மீட்டு கொடுக்கிறோம்’ என்றார்கள். ஆனால் அதற்கு கிராண்ட் ஒப்புக்கொள்ளவே இல்லை.
வான்டர்பில்டிடம் வாங்கிய கடன் வேறு இருந்தது. அவர் மிகப்பெரிய கோடீஸ்வரர். அவருக்கு ஒன்றரை லட்சம் டாலர் என்பது ஒன்றுமே இல்லை. அவர் அந்தப் பணத்தை வேண்டாம் என்று சொல்ல, கிராண்ட் கேட்காமல் தான் தளபதியாக இருக்கையில் வாங்கிய வெள்ளி மெடல்கள், விருதுகளை எல்லாம் கடனுக்குப் பதிலாக கொடுத்தார். மிகுந்த வருத்தத்துடன் அதைப் பெற்றுக்கொண்டு ஒரு மியூசியத்தில் சேர்த்தார் வான்டர்பில்ட்.
அதன்பின் கிராண்ட் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட, ‘தொன்டையில் கான்சர். கொஞ்சம் நாள்தான் உயிருடன் இருப்பீர்கள்’ என மருத்துவர்கள் சொன்னார்கள். தான் இறந்தாலும் தன் பிள்ளைகளை, மனைவியை வறுமையில் விட்டுவிட்டுச் செல்வது அவரது மனதை உறுத்தியது. மகனிடம் வேறு 60,000 டாலர் கடன் வாங்கியிருந்தார். மார்க் ட்வைன் சொன்ன ஆலோசனை நினைவுக்கு வந்தது. ஒரு பதிப்பகத்துக்கு போய் ‘சுயசரிதை எழுதுகிறேன். 10% ராயல்டி கொடுங்கள்’ என ஒப்பந்தம் போட்டுவிட்டு வந்தார்.
செய்தி அறிந்த மார்க் ட்வைன் அவரை வந்து சந்தித்தார். ‘உனக்கு என்ன பைத்தியமா? 10% ராயல்டி புது எழுத்தாளர்களுக்கு கொடுப்பது. நீ யுலிசீஸ் கிராண்ட். வெப்ஸ்டர் என்ற பதிப்பகம் மூலம் உன் புத்தகத்தைக் கொண்டுவா. 20% ராயல்டி வாங்கிக் கொடுக்கிறென்’ என்றார்.
பதிப்பகத்தார் $20,000 அட்வான்ஸ் கொடுக்க முன்வர ‘நூல் விற்பனை ஆகவில்லை என்றால் உங்களுக்கு நட்டம் ஆகிவிடும்’ என கிராண்ட் மறுக்க, ‘நூல் வெளிவரும் வரை மாதம் $1000ஆவது பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்தி மார்க் ட்வைன் அவருக்கு அந்தப் பணத்தை வாங்கிக்கொடுத்தார்.
‘அமெரிக்காவை உடையாமல் காப்பாற்றிய தளபதி. அதன்பின் சிவில் யுத்தம் நடந்து நிலைகுலைந்திருந்த நாட்டை மீட்டவர். கடைசிக்காலத்தில் இப்படி கஷ்டபடுகிறாரே’ என மார்க் டவைன் வருந்தி கண்ணீர் சிந்தினார்.
அதன்பின் கிராண்டுக்கு உடல்நலம் குன்றிக்கொன்டே வந்தது. ஆனால் நாள் முழுக்க உட்கார்ந்து நூலை எழுதினார். எழுத முடியாமல் கை சோர்ந்தபோது, படுக்கையில் படுத்தபடி பேச, அவரது மனைவியும் மகனும் எழுதினார்கள். தன் மரணப்படுக்கையில் அவரால் எழுதவே முடியாமல் போய்விட்டது. தொண்டையில் வந்த புற்று நோயால் வாயும் குளறியது. ஆனால் நூலை முடிக்கும் நோக்கம் ஒன்றுமட்டுமே அவரை உயிருடன் வைத்திருந்தது.
மரணப் படுக்கையில் நூலின் கடைசி அத்தியாயத்தைப் பேசி முடித்தார். சிவில் யுத்தம் முடிவடைவதுடன் நூலும் முடிவடைய, ‘யுத்தம் முடிந்தது. இனி நாம் அமைதி கொள்வோம்’ என நூலின் கடைசி வாக்கியத்தை உச்சரித்தார். அதுதான் அவரது கடைசி வார்த்தைகளும்கூட. உயிர்ப்பறவை கூட்டைவிட்டுப் பறந்தது. அவரது கல்லறையில் ‘Let us have peace’ எனும் அவரது கடைசி வாசகம் பொறிக்கப்பட்டது.
அவரது மரணத்துக்குப் பின் அந்த நூல் வெளிவந்து விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது. அவரது கடன்கள் தீர்க்கப்பட்டன. அவரது மனைவிக்கு $4.5 லட்சம் கிடைத்தது. அமெரிக்க வரலாற்றின் முக்கிய நூல்களில் ஒன்றாகவும், சிவில் யுத்தத்தின் முக்கிய வரலாற்று ஆவனமாகவும் கிராண்டின் சுயசரிதை கருதப்படுகிறது.
பிழைக்கத் தெரியாத மனுஷன். வேறு என்ன சொல்ல?
(தொடரும்)
என்ன மாதிரி மனிதர்கள் சார். அழுதுட்டேன் 😪