மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள பிரெஞ்சு காலனியான மார்டினெக் தீவுகளில் வசிக்கும் ஜோசபைன் எனும் அந்த 16 வயது இளம் பெண்ணை அவள் தந்தை அழைக்கிறார்.
‘புயல் வந்து நம் கரும்புதோட்டம் எல்லாம் அழிந்துவிட்டது தெரியுமா?’
‘ஆம்.’
‘அதனால் உன் அத்தை அவளது 12 வயது மகள் கேதரினை பிரான்சில் உள்ள ஒரு பிரபுவுக்கு மணமுடித்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். அவரும் நமக்கு பணம் கொடுப்பதாக சொன்னார். ஆனால் கேதரீன் இறந்துவிட்டது உனக்குத் தெரியும். இப்போது அவளுக்கு பதில் உன்னை அவருக்குக் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறோம்.’
1779ம் ஆண்டு 16 வயதான ஜோசபைன் எனும் அந்த இளம் பெண் பாரிசுக்கு வந்தது இப்படித்தான். திருமணமாகி இரு குழந்தைகளும் பிறந்தன. ஆனால் அவளது கணவன் அவளை மணந்தது வாரிசு வேண்டுமென்பதால் தான் என அவள் கண்டறிந்தாள். அவள் வீட்டில் நல்ல தாயாக இருக்கவேண்டும். அவனுக்கோ பாரிஸ் முழுக்க ஏராளமான காதலிகள்.
இந்தச் சூழலில் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டு, புரட்சிகர பிரெஞ்சு அரசு அவள் கணவனைக் கொன்றுவிடுகிறது. வேறு வழியின்றி கணவன் குடும்ப தொடர்பால் அறிமுகம் ஆகியிருந்த பணக்காரப் பிரபுக்கள் சிலருடன் உறவு ஏற்படுத்திக்கொள்கிறாள் ஜோசபைன்.
அப்போது பிரெஞ்சு ராணுவத்தில் உயர்ந்து வந்துகொன்டிருந்த நெப்போலியன் எனும் இளம் தளபதியைச் சந்திக்கிறாள். நெப்போலியன் அவளைப் போலவே கிராமத்திலிருந்து வந்தவன். அவளைவிட ஆறு வயது இளையவன். பாரிஸ் நாகரிகம் தெரியாமல் அவன் தடுமாறிக்கொண்டிருந்தான். உயர்தட்டு வழக்கங்களை அவனுக்குக் கற்றுக்கொடுத்தாள் ஜோசபைன். நெருப்பில் கரையும் மெழுகாக அவளிடம் உருகினான் நெப்போலியன். ஜோசபைனுக்கோ அவன் அவளுடைய பல காதலர்களில் ஒருவன் மட்டுமே.
போர்க்களங்களில் இருந்து தத்து, பித்து என ஜோசபைனுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் உலகப் பிரசித்தம். அந்தக் கடிதங்களையெல்லாம் அவள் தன் பிற காதலர்களிடம் காட்டிச் சிரித்துக்கொன்டிருந்தாள்.
நெப்போலியன் மெல்ல மெல்ல உயர்ந்து மேலேறி வந்துகொண்டே இருந்தான். விரைவில் பிரான்சின் தலைவனாகும் அறிகுறிகள் தெரிந்தன. உடனே ஜோசபைன் அவனைத் திடீர் திருமணம் செய்துகொண்டாள்.
போனபார்ட் குடும்பத்துக்கு இது பேரதிர்ச்சி. தன்னைவிட ஆறு வயது மூத்தவள், இரு குழந்தைகளின் தாய், மேல்தட்டு பிரபுக்கள் மத்தியில் ‘புகழ்’ பெற்ற பெண். இவளை மருமகள் என கூட்டி வந்தால் எப்படி இருக்கும்?
ஆனால் காதலில் மயங்கியிருந்த நெப்போலியன் எதையும் கண்டுகொள்ளவில்லை. இத்தாலியோடு நெப்போலியன் போருக்குப் போன பொழுது ஜோசபைன் ஒரு பிரபுவுடன் உறவில் இருந்தாள். திரும்பி வந்த நெப்போலியனிடம் அவனுடைய குடும்பத்தார் இந்தக் கொடுமையைப் பகிர்ந்துகொண்டனர்.
கடும்கோபத்தில் அவளை விவாகரத்து செய்ய வந்த நெப்போலியனை ஜோசபைன் சமாதனம் செய்துவிட்டாள். அது அப்படியொன்றும் கடினமாக இல்லை. காரணம் நெப்போலியனுக்கும் இத்தாலியில் ஒரு காதலி இருந்தாள். அன்றைய பிரெஞ்சு மேல்தட்டில் இதெல்லாம் மிகவும் சகஜம் என சொல்லி இருவரும் மீண்டும் ஒன்றிணைந்து வாழ ஆரம்பித்தனர். போனபார்ட் குடும்பத்துக்கு பெப்பே காட்டி பிரான்ஸ் நாட்டின் அரசியும் ஆகிவிட்டாள் ஜோசபைன்.
ஆனால் நெப்போலியனுக்கு அவளால் ஒரு வாரிசை மட்டும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இதையே காரணம் காட்டி குடும்பத்தார் அவளை விவகாரத்து செய்யுமாறு நெப்போலியனிடம் சொன்னார்கள். ஆனால் அவளது 46வது வயது வரை நெப்போலியன் அவளை விவாகரத்து செய்யவே இல்லை. கடைசியில் இதற்கு மேல் அவளால் வாரிசைக் கொடுக்க முடியாது என்று தெரிந்தபிறகே விவாகரத்து செய்தான்.
1810ம் ஆண்டு ஜோசபைனை விவாகரத்து செய்த நெப்போலியன் தனக்கொரு புதிய மனைவியைத் தேடினான். அதற்கு முந்தைய வருடம்தான் அவனுடன் போரிட்டு ஆஸ்திரிய அரசு தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்திருந்தது. ஆஸ்திரிய இளவரசி மரி லூஸி 19 வயது நிரம்பிய பேரழகி. ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிய மொழிகளை அறிந்தவர். அவரைத் தனது மனைவியாக தேர்ந்தெடுத்த நெப்போலியன் திருமண ஒப்பந்தத்தை ஒரு கட்டளையாக வரைந்தான். ஆஸ்திரியத் தூதரை அழைத்து, ஆஸ்திரிய அரசு சார்பில் அதில் கையெழுத்திடுமாறு பணித்தான்.
ஆஸ்திரியத் தூதர் ஒரு தேவாலயத்தில் வைத்து விழா ஒன்றில் அதிகாரபூர்வமாக கையெழுத்து போட்டதும் திருமணம் முற்றுபெற்றதாக அறிவிக்கப்பட்டது. மரி லூஸியை பாரிசுக்கு அழைத்துவர படைகள் சென்றன. ‘என் நாடு எனக்கு இடும் கட்டளையை ஏற்பேன்’ என்று மரி லூஸி பாரிசுக்கு வந்து நெப்போலியனுடன் வாழ்க்கையைத் தொடங்கினார். 1811ம் ஆன்டு அரசகுல வாரிசாக ஓர் ஆண் மகனையும் பெற்றெடுத்தார். நாடே விழாக்கோலத்தில் மூழ்கியது.
அதன்பிறகுதான் சோதனைகள் தொடங்கின. ரஷ்யப் படையெடுப்பில் நெப்போலியன் தோற்றுப்போனான். அதன்பின் அவனது எதிரிகள் அனைவரும் ஒன்றுகூடி பிரான்சின் மேல் படை எடுத்தார்கள். மரி லூஸியின் நாடான ஆஸ்திரியாவும் அதில் கலந்துகொன்டு நெப்போலியனுக்கு எதிராக போரிட்டது. அதில் தோற்ற நெப்போலியன் எல்பா எனும் தீவுக்குக் கைதியாக கொண்டு செல்லபட்டான். மரி லூசியை தன்னுடன் அனுப்ப அவன் வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
நெப்போலியன் முதல் முறை தோற்று எல்பா தீவுக்கு கைதியாக கொன்டுசெல்லப்பட்ட நேரத்தில் அவனது முதல் மனைவி ஜோசபைன் நிமோனியா காய்ச்சலால் மரணமடைந்தாள். அப்போது அவள் வயது 51. அவளது இறுதி வார்த்தைகள் ‘போனபார்ட்… எல்பா…ரோமின் அரசனே…’
ஆஸ்திரிய மன்னர் தேர்ந்தெடுத்த இன்னொரு பிரபுவுடன் காதலில் விழுந்தார் மரி லூஸி. செய்தி அரசல் புரசலாக வெளியே கசிய, நெப்போலியன் எல்பா தீவில் இருந்து தப்பிவந்தான். மீன்டும் ஒரு போர் நடந்து, அதிலும் தோற்று, இம்முறை செயிண்ட் ஹெலனா தீவுக்கு நாடுகடத்தப்பட்டான்.
தன் மனைவியையும் மகனையும் பார்க்க அவன் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவனது மனைவியின் கள்ளக்காதல் மற்றும் ரகசிய திருமணச் செய்தி அவனுக்குச் சொல்லபட்டதா என்று தெரியவில்லை. ஆனால் அவனது கடைசி காலத்தில், கைதியாக இருக்கையில் இச்செய்தி அவனுக்கு ப்ரிட்டிஷாரால் தெரிவிக்கப்ட்டதாக ஒரு குறிப்பு உள்ளது.
நெப்போலியன் தன் இறுதிநாட்களில் சிறையில் இருக்கையில் ஜோசபைனை எண்ணி கதறினான். ‘என் வாழ்க்கையின் ஒரே உண்மையான காதல் ஜோசபைன் மேல் வைத்திருந்ததுதான்’ என்றான். மரி லூஸி அவனைக் கடைசி வரை வந்து பார்க்கவில்லை. கடிதம்கூட எழுதி அனுப்பவில்லை. அப்பாவைப் பார்க்க மகனையும் அனுப்பி வைக்கவில்லை.
1821ம் ஆண்டு நெப்போலியன் ஒரு கைதியாக இறக்கையில் அவனது இறுதி வார்த்தை ‘ஜோசபைன்’ என்பதாகவே இருந்தது.
0