Skip to content
Home » பூமியும் வானமும் #5 – சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய சுல்தானா

பூமியும் வானமும் #5 – சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய சுல்தானா

சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய சுல்தானானா

1398ஆம் ஆண்டு ஓட்டோமான் துருக்கியப் பேரரசை சுல்தான் பேயசித் (Bayezid I) ஆண்டு வந்தார். ஐரோப்பா மற்றும் ஆசியாவெங்கும் பரந்து விரிந்திருந்த ஓட்டோமான் அரசை எதிர்க்கும் ஆற்றல் அன்று எந்த ஐரோப்பிய மன்னனுக்கும் இல்லை. கப்பம் செலுத்தியும், சமாதான ஒப்பந்தம் போட்டும் நாட்டைக் காப்பாற்றிக்கொண்டார்கள். செர்பிய மன்னன் அவரிடம் போரில் தோற்று தன் தங்கை டெஸ்பினாவை அவருக்குத் திருமணமும் செய்து வைத்து தன் நாட்டை காப்பாற்றி கொண்டான்.

பேயசித்தை வீழ்த்தும் சக்தி படைத்த மன்னன் கிழக்கே உஸ்பெகிஸ்தானில் இருந்தான். அவன்தான் தைமூர். தைமூரை ஒரு குறுநில மன்னனாக, கொள்ளைக்காரனாகதான் பேயசித் பார்த்தார். அதனால் அவர் தைமூருக்குப் போதுமான மரியாதை கொடுத்து கடிதம் எழுதவில்லை. கோபமடைந்த தைமூர் படையெடுத்து வந்துவிட்டான்.

ஒரே நாள் மட்டுமே நீடித்த இந்தப் போரில் பேயசித்தின் படை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியுற்றது. பேயசித் தன் குடும்பத்துடன் தைமூரிடம் பிடிபட்டார். அவரைக் கூண்டில் அடைத்து வைத்த தைமூர் அதன்பின் அவரை மன்னித்து விடுதலை செய்துவிட்டான். ஆனால் பேயசித்தின் மனைவியர் பலர் தைமூரிடம் பிடிபட்டு அடிமைகளாக கொண்டு செல்லபட்டனர்.

அவமானமடைந்த பேயசித் அதிக நாள் உயிரோடு இருக்கவில்லை. அதன் பின்னர் ஓட்டோமான் வம்சத்தில் பட்டத்து ராணி என ஒருவர் இருக்கும் வழக்கமே ஒழிந்துவிட்டது. பட்டத்து ராணி இருந்தால்தானே இப்படி அவமரியாதைக்கு உள்ளாவார்கள்? மன்னர் யாரையும் கல்யாணம் செய்து கொள்ளாமல் அடிமைகளாக மட்டுமே பெண்களை வைத்திருந்தால்?

அதன்பின் 200 வருடங்களுக்கு ஓட்டோமான் சுல்தான்கள் யாரும் பட்டத்து அரசிகளை வைத்திருக்கவில்லை. அடிமைப் பெண்களின் மகன்களாகவே ஓட்டோமான் சுல்தான்கள் அரியணை ஏறினார்கள். ஓட்டோமான் வம்சத்தின் ஒப்பற்ற மாமன்னரான சுல்தான் சுலைமான் மட்டுமே இந்தப் பழக்கத்தை உடைத்தெறிந்து உக்ரேனிய அழகி ரோக்சிலானாவை மணந்துகொண்டார். ரோக்சிலானா ஒன்றும் சாதாரண பெண் இல்லை. ஓட்டோமான் வம்சத்தையே தீர்த்துக் கட்டியவர். ஆம், வரலாறு அப்படித்தான் திகிலுடன் அவர் பெயரைப் பதிவு செய்துள்ளது.

0

ரோக்சிலானா, சுல்தான் சுலைமான்
ரோக்சிலானா, சுல்தான் சுலைமான்

1520ஆம் ஆண்டு ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் பத்தாவது சுல்தானாக அரியணை ஏறினார் சுல்தான் சுலைமான். Suleiman the Magnificient என வரலாற்றில் அழைக்கப்படும் பெருமை மிகுந்த மன்னர் அவர். அவர் மகன் முஸ்தபா. முஸ்தபாவின் தாய் குல்பஹார். ஆனால் ஓட்டோமான் வழக்கபடி அவர் அடிமைப்பெண். முஸ்தபா மிகப்பெரும் வீரன். தந்தைக்குப் பின்னர் அவன் சுல்தானாக இருந்திருந்தால் ஓட்டோமான் சாம்ராஜ்ஜியம் மிக உன்னத நிலையை அடைந்திருக்கும். பாரசிக போர்முனையில் தளபதியாக தந்தையின் கட்டளையை ஏற்று பணியாற்றி வந்தான் முஸ்தபா.

சுலைமான் மற்ற மன்னர்களை போல் அந்தபுரம் வைத்திருந்தார். அதில் அழகிகள் ஏராளம். ஆனால் குல்பஹார் மேல் இருந்த அன்பால் அந்தப்புரத்துக்கு அதிகமாக போகாமல் இருந்தார். அத்தகைய மன்னர் விதிவசத்தால் அந்தப்புரத்தில் இருந்த உக்ரேனிய அழகி ஒருத்தியைச் சந்தித்தார். அவர்தான் ரோக்சிலானா.

ஓட்டோமான் அந்தப்புர நடைமுறைப்படி மன்னருடன் ஓர் இரவை கழித்த அடிமைகளுக்குப் பதவி உயர்வு உண்டு. அதே சமயம் ஆயுள் முழுக்க அந்தப்புரத்தில் இருந்தும் மன்னரைச் சந்திக்கக்கூட இயலாமல் மடியும் அழகிகளும் உள்ளனர். மன்னருக்குக் குழந்தை பெற்றுக்கொடுப்பது அடிமைகளின் அந்தஸ்தை உச்சத்துக்கு உயர்த்தும். ஆனால் அது ஒரு விதத்தில் ஆபத்துக்கும் அறிகுறி.

காரணம் ஓட்டோமான் வம்ச வழக்கபடி மன்னர் மறைவுக்குப் பின்னர் உள்நாட்டு யுத்தம் மூளும். மன்னரின் மகன்களில் ஒருவர் தன் சகோதரர்கள் அனைவரையும் தோற்கடித்து ஆட்சிக்கு வருவார். ஆட்சிக்கு வந்த பின்னர் தன் சகோதரர்கள் அனைவரையும் ஒன்று கொல்வார் அல்லது கண்களைப் பறிக்க உத்தரவிடுவார்.

ஆக, மன்னருக்குக் குழந்தையைப் பெற்றுக்கொடுத்து, அந்தக் குழந்தை ஜெயித்து மன்னனால் அந்த அடிமையின் நிலையே அதன்பின் தலைகீழாக மாறிவிடும். அவர் ராஜமாதா ஆகிவிடுவார். ஆனால் தன் பிள்ளை கொல்லப்பட்டால் அப்புறம் துணையின்றி தன் இறுதி காலத்தை தன் சக்களத்தி ஆட்சியின்கீழ் அவர் கழிக்க வேன்டியிருக்கும்.

இந்நிலையில் மன்னருடன் ஓர் இரவைக் கழிக்கும் வாய்ப்பை அடைந்த ரோக்சிலானா அன்று என்ன மாய மந்திரம் போட்டாரோ தெரியவில்லை. குல்பஹாரை அன்றி பல வருடங்களாக வேறு யாரையும் ஏறிட்டுப் பார்த்திராத மன்னர் அதன்பின் ரோக்சிலானாவே கதி என்று மாறிவிட்டார். மன்னருடன் மூன்று குழந்தைகளை ஈன்றார் ரோக்சிலானா. சலீம், பேயசித், ஜஹாங்கீர் என மூவரும் ஆண்கள். இளவரசன் முஸ்தபாவுக்குப் போட்டி உருவானது.

அந்தச் சூழலில் காதலில் வீழ்ந்த தசரதன் கைகேயிக்கு கொடுத்த வாக்குறுதியை போல் மன்னர் சுலைமானும் ஒரு கட்டத்தில் ரோக்சிலானாவுக்கு, ‘உனக்கு என்ன வேண்டுமோ கேள். கொடுக்கிறேன்’ என்றார்.

ரோக்சிலானா கேட்ட வரம் ஆட்டோமான் சாம்ராஜ்ஜியத்தையே அசைத்தது. ‘நான் இன்று வரை உங்கள் அடிமைதான். எனக்கு நீங்கள் விடுதலை அளிக்கவேன்டும்.’

‘இவ்வளவுதானா?’ என விடுதலை அளித்தார் மன்னர்.

அதன்பின் ‘நான் இப்போது சுதந்தரமான பெண். என்னை மீண்டும் அடைய வேண்டுமெனில் நீங்கள் என்னைத் திருமணம் செய்துகொள்ளவேன்டும்’ என்றார் ரோக்சிலானா.

‘அது ஓட்டோமான் வழக்கத்தில் இல்லாத நடைமுறை’ என்றார் மன்னர்.

‘அப்படியானால் என்னை மறந்துவிடுங்கள்’ எனச் சொல்லிக் கதவை மூடினார் ரோக்சிலானா.

இந்தப் போராட்டம் சில மாதங்கள் தொடர்ந்தது. இறுதியில் வழக்கத்தை மாற்றி ரோக்சிலானாவை மணந்து ஹுர்ரம் சுல்தானா என்ற பெயருடன் பட்டத்து ராணியாக்கினார் மன்னர்.

இப்போது குல்பஹார் அடிமை. ஹுர்ரம் சுல்தானா அரசி. முஸ்தபா அடிமையின் மகன்.

இந்தச் சூழலிலும் மன்னர் முஸ்தபாவைதான் அடுத்த மன்னனாக அறிவிக்க எண்ணியிருந்தார். முஸ்தபா பெரும் வீரன். ஹுர்ரம் சுல்தானாவின் மகன் பேயசித் பெரும் பெண் பித்தன். திறமையற்றவன். இரன்டாம் மகன் சலீம் தந்தையைப் போல் வீரன். ஆனால் அவனும் இளையவன். ஜஹாங்கீர் சிறுவன்.

ஹுர்ரம் சுல்தானாவின் பிள்ளை அரசனாக வேண்டுமெனில் முஸ்தபா சாகவேண்டும். அதை விடுத்து சுல்தானாவுக்கு வேறு எந்தத் தேர்வும் இருக்கவில்லை. சுல்தானாவின் மூன்று மகன்களில் ஒருவன்தான் ஆட்சிக்கு வரமுடியும். மற்ற இரு பிள்ளைகள் இறக்கவேண்டும். தன் மகன்களில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை சுல்தானா தேர்வு செய்தால் மற்ற இருவருக்கு அது மரண தண்டனையாக மாறிவிடும்.

மனதைக் கல்லாக்கிக்கொண்டு தன் மூத்த மகன் பேயசித்தை மன்னனாக்கலாம் என முடிவு செய்தார் சுல்தானா. முதலில் முஸ்தபாவுக்கு எதிராகக் காய்களை நகர்த்தினார். பாரசிக போர்முனையில் இருந்த முஸ்தபா தன் தந்தைக்கு எதிராக புரட்சி செய்ய பாரசிக மன்னனுக்குத் தூதனுப்பியது போன்ற போலி ஓலை ஒன்று தயாரானது. அது வேண்டுமென்றே மன்னர் சுலைமானின் படைகளிடம் பிடிபடும்படி செய்தார்.

முஸ்தபாவை விசாரணைக்கு அழைத்தார் தந்தை. போக வேண்டாம் எனப் பலரும் கூறியும், அதை மீறி தந்தையின் கூடாரத்துக்கு எந்த ஆயுதமும் இன்றி சென்றான் முஸ்தபா. கூடாரத்தில் மன்னர் இல்லை. பதிலுக்கு முஸ்தபாவை கையில் கொலைக்கயிறு ஏந்திய வீரர்கள் சூழந்தனர். முஸ்தபாவைச் சூழந்த வீரர்கள் அவனது கழுத்தில் கயிற்றை நெறித்து கொன்றார்கள்.

இப்படிப்பட்ட ஒரு வீரமும், குணமும் நிரம்பிய மகனை மன்னர் கொல்வார் என்பதை அன்று சுல்தானுக்கு எதிரியாக இருந்த ஐரோப்பிய மன்னர்களே எதிர்பார்க்கவில்லை. முஸ்தபாவின் மரணம் அவர்களுக்கு அத்தனை பெரிய மகிழ்வை அளித்தது. வியப்பையும் அளித்தது.

ஆக, அரியணைக்கு உரிமை கொன்டாட ஹுர்ரம் சுல்தானாவின் பிள்ளைகள் அன்றி யாரும் அற்ற நிலை உருவானது. சுல்தானா பேச்சைக் கேட்டு முஸ்தபாவை கொன்றிருந்தாலும் அதனால் மன்னரின் உடல்நலமும் மனநலமும் அதன்பின் மிகவும் குன்றியது. ஐரோப்பிய அரசர்களைக் கதிகலங்க வைத்த மன்னர் சுலைமான் அதன் பின்னர் போருக்கே போகவில்லை. தன் இறுதிகாலத்தை ஹுர்ரம் சுல்தானாவுடனே கழித்தார்.

அடுத்து ஆட்சிக்கு வருவது யார் என பேயசித்துக்கும் சலீமுக்கும் போர் மூண்டது. இதில் பேயசித்தே வெற்றி பெற்றான். சலீமும், ஜஹாங்கீரும் கொல்லப்பட்டனர். 11ஆவது சுல்தானாக பதவி ஏற்றான் பேயசித்.

பேயசித் பதவியேற்றதும் பயந்து, பதுங்கியிருந்த ஐரோப்பிய மன்னர்கள் அனைவரும் ஒன்று கூடினர். மிகப் பெரும் கடற்படையைத் திரட்டினர். லெபான்டோ எனும் இடத்தில் அதுவரை தோல்வியே அறியாத ஓட்டோமான் கடல் படைக்கும், ஐரோப்பியக் கடல் படைக்கும் இடையே மிகப் பெரும் யுத்தம் ஒன்று நடந்தது. தளபதி டான் ஜான் தலைமையில் அந்தப் போரில் (1571) ஐரோப்பியர் மாபெரும் வெற்றியை அடைந்தனர்.

லெபான்டோவில் அடைந்த கடற்படை வெற்றிக்குப் பின்னர் பிரிட்டிஷ், ஸ்பானிய கடற்படைகள் ஆசியா முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டன. ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்கு அடிகோலியது அந்த யுத்தம்தான். அந்த வெற்றியை அடைந்தவுடன் போப்பைச் சந்திக்கச் சென்றார் தளபதி ஜான்.

‘கடவுளிடம் இருந்து ஒருவர் நல்ல அறிகுறியுடன் வருவார். அவர் பெயர் ஜான்’ என்ற பைபிள் வசனத்தைச் சொல்லி அவரை வரவேற்றார் போப்.

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *