பாலைவனம், மரங்களே இல்லாத இடம் மங்கோலியா. இம்மாதிரி கடும் துன்பங்கள் நிறைந்த பகுதிகளிலிருந்து வரும் படைகள் பெருத்த வெற்றிகளை குவிக்கின்றன. வளம் கொழிக்கும் பூமிகளில் இருக்கும் படைகளால் இவற்றுக்கு ஈடுகொடுக்க முடிவதில்லை.
வசதியும் வளமையும் நம் ஆன்மாவையும் உடலையும் அழிப்பதுபோல எதுவும் அழிப்பதில்லை, கடுமையான தட்பவெட்பமும், பயிற்சிகளும் நம்மை செதுக்குவதுபோல எதுவும் செதுக்குவதில்லை.
பாரசிகத்தின் மாபெரும் மன்னர், சைரஸ். பைபிளில் போற்றி புகழபட்ட யூதர் அல்லாத ஒரே சக்கரவர்த்தி. பஞ்சாப் முதல் கிரேக்கம் வரை நீண்ட நிலபரப்பை ஆண்டவர். இரானின் மலைப்பகுதிகளில் இருந்து வந்து மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தவர். வெற்றிபெற்றதும் பெரிய அரண்மனை கட்டிக்கொன்டு சுகபோகமாக வாழ்வார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் பழையபடியே எளிமையான வாழ்வையே தொடர்ந்தார் சைரஸ். கேட்டதுக்கு ‘முரட்டு நிலத்தில் வாழ்ந்தால் உலகை ஆளலாம். வளமையான நிலத்தில் வாழ்ந்தால் அடிமையாகதான் இருக்கவேண்டும்’ என்றார்.
பண்டைய கிரேக்க நாடு ஸ்பார்ட்டா. போரில் இவர்களைத் தோற்கடிக்கவே முடியாது எனும் அளவு புகழ் பெற்றவர்கள். ஒன்றரை லட்சம் பேர் கொண்ட பாரசிகப் படையை எதிர்த்து 300 ஸ்பார்ட்டன் வீரர்கள் போர் புரிந்த கதையை 300 எனும் ஆங்கில படத்தில் கண்டோம்.
தற்போதைய ஆங்கிலமொழியில் ஸ்பார்ட்டன் என்றால் ‘வசதி, வாய்ப்புகளைத் துறந்து எளிமையான வாழ்வு வாழ்பவன்’ எனப் பொருள். அந்த அளவு அந்த மக்கள் வசதியையும், இன்பத்தையும் துறந்து எளிய வாழ்வு வாழ்ந்தார்கள்.
ஸ்பார்ட்டன் சிறுவர்கள் சிறுவயது முதல் குளிர்நீரில் குளிக்க பழக்கப்படுத்தபட்டார்கள். மன்னர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. குளிர்ந்த ஐரோப்பிய நாடுகளில் ஆண்டு முழுக்க குளிர்ந்த நதி நீரில் குளிப்பது கொடுமையான விசயம். மாவீரன் அலெக்சாண்டர்கூட பிறப்பு முதல் இறப்பு வரை இப்படியே குளித்துப் பழகியவன்.
ஸ்பார்ட்டா சிறுவர்களுக்குச் செருப்பு அணிய அனுமதி இல்லை. செருப்பு அணியாமல் அவர்கள் ஓடி பயிற்சி எடுக்கவேண்டும். பத்தாவது வயதில் அவர்கள் வாயில் நீரை நிரப்புவார்கள். வாய் நிறைய நீருடன் 16 கிமி வெறும் காலில் ஓடவேண்டும்.
அவர்கள் உணவு என்பது மூன்று வேளையும் வெறும் பன்றி ரத்தத்தில் செய்த கஞ்சிதான். வேறு எந்த உணவும் கிடையாது. ஆனால் பன்றி ரத்தம் போரடித்தால் கடைத்தெருக்களில் என்ன வேண்டுமானாலும் திருடி சாப்பிட்டுக்கொள்ளலாம். திருடினால் பெற்றோர் எதுவும் சொல்லமாட்டார்கள். திருடி பிடிபட்டால் கடைகாரர் சவுக்கால் அடிப்பார். பெற்றோரும் அடிப்பார்கள். ‘ஏன் திருடினாய்?’ என கேட்டு அடிக்கமாட்டார்கள். ‘ஏன் திருடி பிடிபட்டாய்?’ என்றுதான் கேட்பார்கள்.
அடிவாங்குகையில் அழக்கூடாது. என்ன அடித்தாலும், உயிரே போனாலும் அழக்கூடாது. கடுமையான அடிகளை வாங்கிக்கொன்டு வாயைத் திறக்காமல் உயிரைவிட்ட சிறுவர்கள்கூட உண்டு. இம்மாதிரி வலி தாங்கும் பயிற்சிகள்தான் அவர்களைப் பின்னாளில் போர்க்களத்தில் வலியை தாங்கிக்கொண்டு மாபெரும் சாதனைகளைச் செய்ய தூண்டின.
இம்மாதிரி கடுமையான சோதனைகளில் தேறி வந்தவர்கள் அலெக்சாண்டர், செங்கிஸ்கான் ஆகியோர்.
செங்கிஸ்கான் வென்ற நிலப்பரப்புக்கு ஈடுயிணை ஏதுமில்லை. அவரிடம் இல்லாத வசதிகள் இல்லை. ஆனால் அவர் அடிப்படையில் மங்கோலியாவில் வாழ்ந்த எளிய வேட்டைகாரர். சீனா, பாரசிகம் ஆகிய நாடுகளை வென்றாலும் அங்கெல்லாம் தங்கி வசதிகளை அனுபவிக்காமல் மங்கோலியாவின் கடும் குளிரில் அதன் புனித மலையான கர்தூன் புர்கானில் தனிமையில் இருப்பதே அவருக்குப் பிடிக்கும். ‘எனக்கு மாளிகைகளும், சுகவாசமும் வேண்டாம்… மங்கோலியாவின் டெண்ட்வாசமே எனக்கு பிடித்தது’ என்பார்.
மங்கோலியர்களின் முக்கிய நோக்கம் போர் புரியாமல் எதிரிகளைச் சரணடைய வைப்பதுதான். காரணம் எளிது. அவர்களின் படைபலம் 1- 2 லட்சம் அளவில்தான் இருந்தது. போர் என வந்தால் நாட்டின் அனைத்து ஆண்களும் போருக்குக் கிளம்புவார்கள். 10% உயிரிழப்பு என வந்தால் கூட மிகப்பெரும் அளவில் நாட்டில் உள்நாட்டு பொருளாதாரம் கெடும். பலதார மண சமூகத்தில் ஒரு ஆண் இறந்தால் நாலைந்து குடும்பங்கள் அநாதையாகும்.
அதனால் போரிடாமல் எதிரிகளைச் சரணடைய வைக்க அவர்கள் பல உளவியல் உத்திகளை கையாண்டார்கள். ஒரு நாட்டின் தலைநகரை முதலில் தாக்கமாட்டார்கள். எல்லைப்புறங்களில் இருக்கும் சிற்றூர்களைத் தாக்குவார்கள். அங்கே ஒருவர் விடாமல் வெட்டிச் சாய்த்துக் கொல்வார்கள். அதன்பின் ஓரிருவரை மட்டும் தப்பிச் செல்ல அனுமதிப்பார்கள். அவர்கள் அடுத்த ஊர்களுக்கு போய் நடந்த கொடுமைகளை எடுத்துச் சொல்லிப் பீதியை கிளப்புவார்கள்.
மங்கோலியர்கள் இதில் பல கோடி ஆண்டு தொன்மையான வேட்டை உத்திகளை பயன்படுத்தினார்கள். சிங்கங்களும் ஓநாய்களும் மான் கூட்டத்தைத் தாக்குமுன் மெதுவாக சத்தமே இல்லாமல் அவற்றைச் சுற்றி வளைக்கும்… அதன்பின் மூன்று திசைகளிலும் இருந்து நெருங்கி மான்கூட்டத்தைத் துரத்த, மான்கள் மீதமிருக்கும் திசையை நோக்கி ஓடும். அங்கே இருக்கும் சிங்கங்கள் அவற்றைத் தாக்க, விருந்துதான்.
மங்கோலியர்கள் அதேபோல் கூட்டமாக மிருகங்களை வளைத்து, டமாரங்களை அடித்து ஒரு திசையை நோக்கி ஓடவிட்டு அங்கே தாக்கி பெருமளவில் அவற்றை வேட்டையாடுவார்கள். மனித இனம் தோன்றும் முன்பே தோன்றியவை இத்தகைய வேட்டை உத்திகள்.
இதே உத்தியின்படி, கிராமங்கள் சுற்றி வளைத்து எரிக்கப்படும். பெருத்த எண்ணிக்கையில் ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் கொல்லப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் கூட்டம், கூட்டமாகத் தலைநகரை நோக்கி ஓடுவார்கள். தலைநகர் முழுக்க அவலக்குரல்கள், மங்கோலியர்கள் இழைத்த கொடுமைகளைச் சொல்லி அழுவார்கள்.
கோட்டையின் உணவு தீரும். நகரின் கட்டமைப்புகள் இத்தனை பெரும்கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறும். வீரர்கள் மங்கோலியர்களின் கொடுமைகளைக் கேட்டு உள்ளுக்குள் குலைநடுங்குவார்கள்.
நாட்கள் செல்லச் செல்ல மேலும், மேலும் கிராமங்கள் தாக்கப்பட்டு இறுதியில் மங்கோலியர் படை கோட்டை முன் வந்து நிற்கும். ‘சரணடைந்தால் யாரையும் கொல்லமாட்டோம். போர் என வந்தால் கோட்டையில் ஓர் உயிர்கூட மிஞ்சாது’ என்பார்கள். பல கோட்டைகள் இப்படி பயமுறுத்தியே பிடிக்கபட்டுள்ளன. பல்லாயிரம் மங்கோலிய வீரர்களை இழந்தபின் பிடிபட்டிருக்கவேண்டிய கோட்டை எந்த இழப்பும் இன்றி பிடிக்கப்படும்.
ஆனால் இந்த வெற்றிகள் எல்லாம் எத்தனை நிலையற்றவை என செங்கிஸ்கான் பின்னாளில் உணரத் தொடங்கினான். வெற்றிகள் குவியக் குவிய அவனது வீரர்களின் பொருளாசை அதிகரிக்கவே செய்தது. சும்மா வேட்டையாடி மகிழ்ச்சியாக இருந்தவர்கள் இப்போது பொன், பொருள், பெண்கள் என போகங்களில் வீழ்ந்தார்கள். மங்கோலியப் புல்வெளியில் இருந்த டெண்டுகளில் விலையுயர்ந்த ரத்தினங்களும் வைரங்களும் எந்த பலனும் இன்றி கண்னாடிக்கல் மாதிரி தொங்கின.
ஏதெதோ நாட்டு அரசிகள், பிரபுக்களின் மனைவியர், இளவரசிகள் பிடிபட்டு மங்கோலிய தொழுவங்களில் ஆடுகளுக்குப் புல்லும், தண்ணீரும் காட்டும் வேலையைச் செய்தார்கள். போருக்கு தொடர்ந்து போகவில்லை என்றால் தனக்கே எதிராகக் கிளர்ச்சிகள் வரும் என செங்கிஸ்கான் நினைத்தான். வெற்றிகள் குவியக் குவிய பொருள் குவிந்தது. வீரர்களின் பேராசை அதிகரித்தது.
கத்தியை எடுப்பது எளிது, கீழே வைப்பது கடினம்.
0