Skip to content
Home » பூமியும் வானமும் #7 – வலிமையே வெல்லும்

பூமியும் வானமும் #7 – வலிமையே வெல்லும்

வசீலி அலெக்செயெவ்

சோவியத் ரஷ்யாவின் குளிர்ந்த காடுகளில் மரம் வெட்டும் அந்த 11 வயது சிறுவனைக் கண்டு சக தொழிலாளர்கள் பிரமித்தார்கள். இது நடந்தது 1950களில். நல்ல பெரிய மரங்களை அவன் அனாயசமாகத் தூக்கினான். சோவியத் அதிகாரிகளுக்குத் தகவல் பறக்க, கொத்தாக வந்து அவனை அள்ளிக்கொண்டு போய் பளுதூக்கும் பயிற்சி கொடுத்தார்கள்.

ஆனால் விரைவில் எந்த கோச்சுக்கும் தனக்கு பயிற்சி கொடுக்கும் திறமை இல்லை என்பதை அவன் கண்டறிந்தான். இவனது பயிற்சி முறை படு வித்தியாசமானது. குளிர்காலத்தில் பனிபடர்ந்த வோல்கா நதியில் எடை தூக்கும் பார்பெலைத் தூக்கி போடுவான். அதன்பின் நதியில் இறங்கி, அந்த நடுக்கும் குளிரில் அதை மேலே தூக்குவான். அதன்பின் அதைத் தூக்கியபடி மேலேறி கரைக்குக் கொண்டுவருவான்.

வெயிட்டை தூக்கி முடித்தவுடன் கீழெ போடு எனச் சொல்லியும் இவன் பார்பெலை கீழே போடமாட்டான். இரண்டு, மூன்று நிமிடங்கள் அப்படியே நிற்பான். அப்போதுதான் ‘பார்பெலுடன் நாம் ஒன்றமுடியும்’ என கவித்துவமான விளக்கம் கொடுப்பான்.

இதனால் கோச்களுக்கும் இவனுக்கும் பெரிய சண்டை. விரைவில் ‘எனக்கு எந்த கோச்சும் வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டான். நம்பர் ஒன் வீரன். யாராலும் எதுவும் சொல்லமுடியவில்லை. விருப்பம் போல் செய்து தொலையட்டும், மெடல்கள் வந்தால் சரி என பல்லைக் கடித்தபடி விட்டுவிட்டார்கள்.

‘நான் மைதானத்தில் இறங்கும்முன்பே என் எதிரியை மனதளவில் கொன்றுவிடுவேன்’ என்பார் மைக் டைசன். இவன்தான் அந்த உத்தியை கண்டுபிடித்தவன். போட்டியில் எல்லாரும் வார்ம் அப் செய்கையில் இவன் சும்மா இருப்பான். எல்லாரும் வார்ம் அப் செய்தபின் இவன் வார்ம் அப் செய்ய தூக்கும் எடையைப் பார்த்தே சக போட்டியாளர்களுக்கு குலைநடுங்கும்.

போட்டி துவங்குமுன் மூன்று லிப்ட்களிலும் தான் தூக்கும் எடையை எழுதி கொடுக்கவேண்டும். சகப் போட்டியாள்ர்களில் மூன்றாம் லிப்ட் எடை யாருக்கு கூடுதலாக இருக்கிறதோ, அதைத் தன் முதல் லிப்ட் ஆக எழுதிக்கொடுப்பான். ஆக அதை பார்த்தவுடனேயே அவர்களில் பலரும் மேடை ஏறுகையில் ‘நமக்கு வெள்ளி அல்லது வெண்கலம்தான்’ என்று விரக்தியுடன்தான் மேடை ஏறுவார்கள். முதல் லிப்டிலேயே இவன் தங்கத்தை வென்றுவிடுவான். மூன்றாம் லிப்ட் உலக
சாதனை படைக்கும் லிப்ட் ஆக இருக்கும்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, 81 உலக சாதனைகளைப் படைத்து வெயிட் லிப்டிங் துறையை அடக்கி ஆண்டான் அவன். ‘உலகின் வேறு எந்த விளையாட்டிலும் ஒரு போட்டியில் ஒருவன் இந்த அளவு ஆதிக்கம் செலுத்தியதில்லை’ என அமெரிக்க ஊடகங்கள் திகைப்புடன் எழுதின.

0

வசீலி அலெக்செயெவ்

1970களில் முதல் முதலாக அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உலக வெயிட்லிப்டிங் போட்டியில் அவன் கலந்துகொள்கிறான். முதல்முதலாக அப்போட்டி தொலைகாட்சியில் அவனுக்காகவே ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ரஷ்யாவின் வீழ்த்தமுடியாத மாவீரனைப் பார்க்க தொலைகாட்சி முன் மக்கள் கூடினார்கள்.

உலகில் அதுநாள்வரை மனிதர்களால் தூக்கவே முடியாது என கருதபட்ட எடை 500 பவுண்டு (227 கிலோ). அதை பார்பெலில் போட்டான். அரங்கமே அதிர்ச்சியுடன் பார்க்க, பார்பெல் மேலெழுந்தது. ‘கரெக்ட் லிப்ட்’ என நடுவர்கள் விரலை உயர்த்தியவுடன் எடையைக் கீழே போட்டான். ஒட்டுமொத்த அமெரிக்காவும் ரஷ்யாவின் அந்த வெற்றியை அதிர்ச்சியுடன் பார்த்தது.

அதன்பின் சோவியத் ரஷ்யாவின் மாபெரும் ஹீரோ ஆனான் அவன். மனிதர்கள் யாரையுமே தனக்கு பிடிக்காது என சொன்ன லியனார்ட் பிரஷ்னேவ் இவன் ஒருவனை மட்டுமே தன் ஹீரோவாக கருதினார்.

அவன் வெறும் முரடன், எடை தூக்க மட்டுமே லாயக்கு என பலரும் கருதினாலும் அவன் மாபெரும் அறிஞன். எடை தூக்கும் நேரம் போக மற்றநேரம் படித்துக்கொன்டே இருப்பான். தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம். எஞ்சினியரிங் துறையில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றவன்.

யார் அவன்? இத்தனை நேரம் பெயரையே சொல்லவில்லையே?

வசீலி அலெக்செயெவ் (Vasily Alekseyev) என்பதுதான் அவன் பெயர். ரஷ்ய மொழியில் வலிமையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட பெயர் அது.

பளு தூக்கும் போட்டியாக இருந்தாலும் உடல் வலிமையை விடவும் அறிவு வலிமையே முக்கியத்துவம் பெறுகிறது. அறிவு வலிமை இருந்ததால்தான் வலிமை வென்றது என்றும் சொல்லலாம் அல்லவா?

0

பகிர:

2 thoughts on “பூமியும் வானமும் #7 – வலிமையே வெல்லும்”

Comments are closed.