கன்னியாகுமரியில் இருந்து காரில் கிளம்பி ஸ்ரீநகருக்கு செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சுமார் 3600 கிமி தொலைவில் இருக்கும் ஓரிடத்துக்குச் செல்லும் வழியில் சுமார் எத்தனை லட்சம் பேரை பார்ப்பீர்கள், எத்தனை டிராபிக் ஜாம் ஆகும் என எதாவது கணக்கு இருக்கா?
ஆஸ்திரேலியாவின் மாநிலங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கு முனை நகரமான குனுனுராவில் இருந்து அதன் தெற்கு முனையான யூக்லா நகருக்கு காரில் போனால் வழியில் அதே 3500 கிமி தொலைவுதான் வரும். ஆனால் வழியெங்கும் பாலைவனம், ஆள் இல்லாத கிராமங்கள், நகரங்களைத்தான் காணமுடியும். பயணத்தின்போது சுமார் ஆயிரம் பேரைப் பார்க்க முடிந்தால் அதுவும் அதிசயம்தான்.
மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் நிலப்பரப்பு கிட்டத்தட்ட இந்தியாவுக்குச் சமம். ஆனால் அதன் மக்கள் தொகை 26 லட்சம்தான். அதாவது கோவை ஜனத்தொகைக்கு கிட்டத்தட்ட சமம். இந்தியா முழுக்க பெரிய நிலம் இருந்து அதில் கோவை நகரத்துக்குச் சமமான அளவு மக்கள் வசிக்கும் ஒரு பகுதியைக் கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா? அதுதான் மேற்கு ஆஸ்திரேலியா.
இந்த 26 லட்சம் பேரில், 20 லட்சம் பேர் பெர்த் எனும் ஒரே நகரில் வசிப்பதால் மீதமுள்ள ஆறு லட்சம் பேர் மாநிலம் முழுக்க (இந்தியாவுக்குச் சமமான நிலப்பரப்பில்) வாழ்கின்றனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து கிழக்கே போனால் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலம் வரும். அங்கேதான் ஆனா க்ரீக் (Anna Creek station) எனப்படும் உலகின் மிகப்பெரிய கால்நடைப்பண்ணை உள்ளது. இதன் சைஸ் எத்தனை தெரியுமா?
மூச்சை பிடித்துக்கொள்ளவும். இஸ்ரேலின் நிலப்பரப்புக்குச் சமமான நிலப்பரப்பு இந்தப் பண்ணையில் உள்ளது. ஆமாம், இஸ்ரேல் எனும் முழு நாட்டுக்குச் சமமான நிலப்பரப்பு மாட்டுப்பண்ணை ஒன்றுக்கு உள்ளது. இங்கே 10,000 மாடுகள் உள்ளன. இதை மேய்க்க எட்டு பணியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். சின்ன விமானங்களை பயன்படுத்தி மாடுகளை மேய்ப்பார்கள். இயந்திரங்கள் பால் கறக்கும். லாரிகள் வரிசையாக வந்து பால் ஏற்றிப்போகும். ஆனால் இருக்கும் முழு நேர பணியாளர்கள் எட்டுபேர் மட்டுமே.
இஸ்ரேல் அளவு பெரிய நிலப்பரப்பில் எட்டே எட்டு பேர் வசிக்கும் பண்ணை இருக்கும் மாநிலம் ஒன்றைக் கற்பனை செய்ய முடிந்தால் அதுதான் தெற்கு ஆஸ்திரேலியா.
ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவில் இந்தியாவை விட 2.4 மடங்கு பெரிய நிலப்பரப்பு உள்ளது. ஆனால் அதில் மொத்தமாக 2.6 கோடி பேர்தான் வசிக்கிறார்கள்.
தலைசுற்றுகிறதா? அதான் ஆஸ்திரேலியா. உலகிலேயே குடியேற மிகவும் கடினமான நாடுகளில் ஒன்று அது. சீனாவின் ஷாங்காய் நகரில் மட்டுமே ஆஸ்திரேலியாவைவிடக் கூடுதலான மக்கள் வசிக்கிறார்கள்.
ஒரு நகரம் நாடாகவும் கண்டமாகவும் இருந்தால் அது ஆஸ்திரேலியா.
பெர்த்
பெர்த் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அங்குள்ள வாகா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் தரையில் பந்துகள் பயங்கரமாக பவுன்ஸ் ஆகும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்த நகரமே கொஞ்சம் வித்தியாசமானதுதான்.
பெர்த் உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தபட்ட நகரம். பெர்த்துக்கு மேற்கேயும், தெற்கேயும் கடல். வடக்கேயும், கிழக்கேயும் பாலைவனம். பெர்த்தில் இருந்து இன்னொரு நகருக்குப் போகவேண்டும் என்றால் கிழக்கே 2100 கிமி பயணித்து அடிலைடுக்குப் போகவேண்டும்.
போகும் வழியில் நல்லர்பார் எனும் பாலைவனம் உண்டு. நலல்ர்பார் என்றால் ‘மரங்கள் அற்ற பகுதி’ எனப் பொருள். ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நேர் ரோடு இங்கேதான் இருக்கிறதாம். 146 கிமி. எந்த வளைவுகளும் இன்றி நேராகச் சென்றுகொண்டே இருக்கலாம். ஆனால் கார் பஞ்சர், ரிப்பேர் என்றால் காலி. காரை மறந்துவிடவேன்டியதுதான். ஆள் தப்புவதே கடினம். அதனாலேயே பெர்த்தில் கார் வைத்திருக்கும் பலரும் இன்னொரு நகருக்கு காரை ஓட்டிச் செல்வதில்லையாம்.
பெர்த் நகர பீச்சுகள் பலவும் கூட்டமின்றி அத்தனை அழகாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவின் பரப்பளவு இந்தியாவைவிட இரண்டரை மடங்கு அதிகம். அதன் மக்கள் தொகை ஹரியானாவுக்குச் சமம். வடசென்னையோடு தென் சென்னையை இணைத்தால் அதுதான் பெர்த் மக்கள் தொகை.
ஆலிஸ் ஸ்ப்ரிங்ஸ்
ஆஸ்திரேலியா கண்டத்தின் கடற்கரையோரம்தான் அதன் பெருநகரங்கள் அமைந்துள்ளன. பெருமளவிலான மக்கள் இங்கேதான் வசிக்கின்றனர். மத்திய ஆஸ்திரேலியாவை உலகின் பெரிய பாலைவனம் எனச் சொல்லலாம்.
அந்தப் பாலைவனத்தின் மத்தியில், அதாவது ஆஸ்திரேலியாவின் நடு சென்டரில் உள்ள ஊர்தான் ஆலிஸ் ஸ்ப்ரிங்ஸ். அங்குள்ளவர்கள் கடலை பார்க்கவேண்டும் என்றால் வடக்கே 1500 கிமி தள்ளி இருக்கும் டார்வின் நகருக்குப் போகவேண்டும். அல்லது தெற்கே இருக்கும் அடிலைடு நகருக்கு. அதன் பரப்பளவு மதுரை நகருக்குச் சமம். ஆனால் மக்கள் தொகை 26,000 பேர்தான். புவியியல் இதற்குக் கொடுத்த இந்தத் தனிமை எனும் சாபமே பெரும் வரமாக மாறியது.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் டார்வின் மேல் குண்டுமழை பொழிந்தபோது, ஆஸ்திரேலியாவின் கடலோர நகரங்கள் தாக்கப்படலாம் என்ற சூழலில் அனைத்துப் படைகளையும் ஆலிஸ் ஸ்ப்ரிங்க்ஸ் நகருக்குக் கொண்டு வந்தார்கள். இங்கே மிகப்பெரிய அமெரிக்கப் படைத்தளமும் இருந்தது.
இப்போதும் பைன் கேப் எனும் பெயரில் அமெரிக்க-ஆஸ்திரேலிய ராணுவத்தளம் இருக்கிறது. இங்கிருந்துதான் ரஷ்யாவின் போன்கால்கள், இணையதொடர்புகள் அனைத்தும் அமெரிக்க ராணுவத்தால் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டியிருப்பதால் ரஷ்ய அதிரடிப்படையினரால் தாக்குதல் நடத்த முடியாது அல்லவா?
தவிரவும் இங்கே 200 அமெரிக்க ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் குடும்பத்தோடு வசிக்கின்றனர். ஆலிஸ் ஸ்ப்ரிங்க்ஸ் நகரில்தான் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். பாதுகாப்பு அச்சமின்றி இவர்களால் நிம்மதியாக இங்கே வாழமுடிகிறது. உள்ளூர் மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்கிறார்கள்.
ஆலிஸ் ஸ்ப்ரிங்க்ஸ் நகரில் பொழுதுபோக என்ன செய்வார்கள்?
ஆஸ்திரேலியாவின் மிக உற்சாகமான சிறுநகரம் என ஆலிஸ் ஸ்ப்ரிங்க்ஸ் நகரைச் சொல்லலாம். சுற்றிலும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு யாருமே இல்லை எனும்போது நாம் தானே நம்மை உற்சாகமாக வைத்துக்கொள்ளவேண்டும்?
ஆயிரக்கணக்கான கிமி பயணம் செய்து செம்மண் பாலைவனம் வழியே ஆலிஸ் ஸ்ப்ரிங்க்ஸை வந்து அடையவேண்டும். வந்தால் செம்மண் பூமியில் பசுமையான மரங்கள் வரவேற்கும். இங்கே நிலத்தடி நீர் நிறைய உள்ளது. மால், நீச்சல் குளம், திரையரங்கம், உணவுகள், கடைகள் எல்லாம் உள்ளன.
அடிக்கடி கலைநிகழ்ச்சிகள் நடக்கும். தவிர சுற்றிலும் உள்ள பாலைவனத்துக்கு ஜீப்பை எடுத்துக்கொண்டு அட்வென்சர் சுற்றுப்பயணம் போவார்கள். டெண்ட் அடித்துத் தங்கி செம்மண் நிலத்தில் நிலா வெளிச்சம் விழுவதைக் கண்டு ரசிப்பார்கள்.
அருகே உலூரு (Uluru) எனும் பெயரில் ஒரு செம்பாறை உள்ளது. ஆயிரம் அடி உயரம், 3 கிமி நீளம், 2.5 கிமி அகலம். இத்தனை பெரிய பாறை அங்கே ஆஸ்திரேலியாவுக்கு நடுவே எப்படி வந்தது என யாருக்கும் தெரியாது. விஞ்ஞானிகள் சில தியரிகளைச் சொல்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் அது விண்ணில் இருந்து விழுந்த விண்கல் என்கிறார்கள். அதன் ஆயுள் 30,000 ஆண்டுகள் எனக் கணிக்கப்படுகிறது. யுனெஸ்கோ இதனை உலகின் பெருமைமிகுப் பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
பூர்வகுடிகள் இப்பகுதியில் குடியேறி 10,000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். அந்த வகையில் உலகின் மிகத் தொன்மையான ஆலயமாக உலூருவைக் கருதலாம்.
அடிலைடு, டார்வினுக்கு மத்தியில் ஆலிஸ் ஸ்ப்ரிங்க்ஸ் நகரம் இருப்பதால் இரு நகரங்களுக்கு இடையே 3000 கிமி செல்லும் ரயில் ஒன்றும் இங்கே நின்று செல்கிறது.
புவியியலின் சாபத்தையே வரமாக மாற்றிய ஆலிஸ் ஸ்ப்ரிங்கிஸ் நமக்குச் சொல்லும் பாடம் #geography_is_destiny என்பதுதான்.
0