Skip to content
Home » பூமியும் வானமும் #9 – கரிபியன் சொர்க்கம்

பூமியும் வானமும் #9 – கரிபியன் சொர்க்கம்

கரிபியன் சொர்க்கம்

2018ஆம் ஆண்டில் அந்தத் தீவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்த நாட்டின் தலைநகரில் முதன்முதலாக டிராபிக் சிக்னல்கள் மாட்டப்பட்டன. அதுவரை சிகப்பு, பச்சை, மஞ்சள் நிற டிராபிக் விளக்குகளைத் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருந்த அந்த ஊர் மக்கள் முதல் முதலாக தன் நாட்டுக்கும் டிராபிக் விளக்குகள் வந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

என்ன நாடு இது? செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ். வெஸ்ட் இண்டீஸ் என அழைக்கபடும் நாடுகளின் தொகுப்பில் உள்ள நாடு செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ். பரப்பளவில் சென்னை நகரின் நிலப்பரப்பில் 63% கொண்ட இரு தீவுகள் (104 சதுர மைல்), மக்கள் தொகை வெறும் ஐம்பதாயிரம்தான். ஆனால் தனிநபர் வருமானம் மலேசியா, சீனாவைவிடக் கூடுதல். இதற்கும் இந்த நாட்டில் வருமான வரி இல்லை, சொத்து வரி இல்லை. விற்பனை வரி மட்டும் உண்டு.

இதன் பாஸ்போர்ட் உலகின் மிக மதிப்பான பாஸ்போர்ட்டாகக் கருதப்படுகிறது. இதன் பாஸ்போர்ட் வைத்திருந்தால் அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் தென்னமெரிக்க நாடுகளுக்கும் விசா இன்றி செல்லமுடியும். காமன்வெல்த் பாஸ்போர்ட் என்பதால் பிரிட்டனுக்கும் விசா இல்லாமல் போகமுடியும். வரிகள் இல்லை என்பதால் க்ரிபோட்வில் கோடீஸ்வர்வர்கள் ஆன பலரும் செயிண்ட் கிட்ஸ் குடியுரிமை பெற்று அங்கே குடிவந்துகொன்டிருக்கிறார்கள். சுமார் 1 கோடி ரூபாய் அந்நாட்டில் முதலீடு செய்தால் குடியுரிமை பெறமுடியும்.

குற்றங்கள் மிகக் குறைவு. ஆண்டு முழுக்க மிதமான 23 டிகிரி செல்சியஸ் வெப்பம்தான். ஒரு நாளைக்கு ஐந்து நிமிடமாவது மழைபெய்யும் என்பதால் பெரியதாக வெயில் கொடுமை கிடையாது. இதனால் உலகப் பிரபலங்கள் பலரும் இங்கே வந்து ஜாலியாக விடுமுறையைக் கழித்துவிட்டுப் போவார்கள்.

தீவின் முக்கிய வருமானம் சுற்றூலாதான். பல சொகுசுக் கப்பல்கள் வந்துபோகுமிடம். நாட்டின் 70% மக்கள் சுற்றுலாதுறையில்தான் இருக்கிறார்கள்.

தீவைக் காரில் சுற்றிவர ஒருமணி நேரம்தான் பிடிக்கும். தீவின் நடுவே எரிமலை ஒன்று உள்ளது. ஆயிரம் மீட்டர் உயரம். அதைச் சுற்றி காடுகள். அதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கே இயற்கை சுற்றுலா போவார்கள். தவிர முழுக்க கடற்கரை, பீச்சுகள், விதவிதமான மீன்கள், பழங்கள்.

தீவில் சுற்றிப் பார்க்க பழைய பிரிட்டிஷ் காலக் கோட்டை ஒன்று உள்ளது. கடற்கரைகள் உள்ளன. எரிமலையும், காடுகளும், நதிகளும், ஏரிகளும் உள்ளன. டிராபிக் இல்லாத ஊர். தீவு மக்கள் பெரியதாக எதற்கும் அலட்டிக்கொள்வது இல்லை. மெதுவாக எழுந்து வேலைக்கு வந்து ரிலாக்ஸ்டாக வேலை செய்துவிட்டு போவார்கள். இதை ‘ஐலெண்ட் டைம்’ என்பார்கள். அதாவது நேரத்தைப் பற்றிப் பெரியதாகக் கவலைபடாமல், மெதுவாக, ஜாலியாக வேலை செய்வது.

இந்தியர்கள் இல்லாத ஊர் இல்லை என்பதுபோல் இங்கே இந்து ஆலயம் ஒன்று உள்ளது. ஐந்து இந்திய உணவகங்கள் உள்ளன. இங்கிருக்கும் மருத்துவக் கல்லூரியில் சில இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள்.

ஓய்வுபெற்றவர்கள் வாழவும் நல்ல ஊர். ஜனநாயகம் உள்ள ஊர். இந்தியர்கள் விசா எடுக்காமல் செல்லலாம். கிரிக்கெட் மைதானம் உள்ளது, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளன.

இப்படிப் புவியியல், அரசியல் அனைத்தும் சாதகமாக இருப்பதால் கரிபியன் கடலின் சிறப்பான நாடுகளில் ஒன்று செயிண்ட் கிட்ஸ்.

ஜமைக்கா

1494ஆம் ஆண்டு இந்தத் தீவில் வந்து இறங்கிய கிறிஸ்டோபர் கொலம்பஸ் அதன் அழகைக் கண்டு பிரமித்தார். அதன் பெயரைக் கேட்டபோது பூர்வகுடியினர் ‘க்ஸமைக்கா’ என சொல்ல ‘ஜமைக்கா’ என அதற்குப் பெயர் வைக்கப்பட்டது.

ஜமைக்கா கரிபியன் கடலில், கியூபாவுக்கு அருகே இருக்கும் நாடு. நாட்டின் பரப்பளவு 10,000 சதுரகிமி. மக்கள் தொகை வெறும் 29 லட்சம்தான். ஒப்பீட்டளவில் சென்னையின் பரப்பளவு 161 சதுரமைல், மக்கள் தொகை 46 லட்சம் (புறநகர் பகுதிகளை எல்லாம் சேர்க்காமல்).

பூர்வகுடியினர் எல்லாம் ஸ்பானியர்களால் கொல்லப்பட, அதன்பின் தீவில் வேலை செய்ய ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளைப் பிடித்து வந்தார்கள். அதன்பின் 200 ஆண்டுகள் கழித்து தீவு பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டது. அடிமை முறை ஒழிந்தபின் இந்தியாவில் இருந்து ஒப்பந்தக்கூலிகளைக் கூட்டி வந்தார்கள். இப்படி இந்தியரும் ஆப்பிரிக்கரும் கலந்த ஓர் இந்தோ-கரிபியன் மக்கள் கூட்டம் அங்கே உருவானது.

அதன் உணவும் ஆப்பிரிக்க, இந்திய கலாசாரத்தைப் பிரதிபலித்தது. ஜெர்க் சிக்கன் மிகப் பிரபலமான உணவு. சிக்கனில் நிறைய மசாலாக்களைப் போட்டு மெதுவாக பார்பெக்யூ செய்வார்கள். அக்கிப்பழமும் உப்புமீனும் மிகப் பிரபலமான உணவு. வாழைப்பழத்தை எண்ணெயில் பொறித்து உண்ணும் வழக்கமும் உண்டு.

உலகிலேயே மிக அழகான கடல்பகுதிகள் என கரிபியன் மற்றும் தெற்கு பசிபிக் கடல்பகுதிகளைச் சொல்லலாம். தவிர அமெரிக்காவுக்கு அருகேயும் இருப்பதாலும், ஆங்கிலம் பேசும் நாடு என்பதாலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல்களில் வருவார்கள். சுற்றுலா அவர்களின் முக்கிய வருமானம். நாட்டின் தனிநபர் வருவாய் இந்தியாவைவிட சற்று கூடுதல். ஆனால் இந்தியாவைவிட இரு மடங்கு காஸ்ட் ஆஃப் லிவிங் கூடுதல்.

ஜமைக்கா பாஸ்போர்ட் இருந்தால் தென்னமெரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இன்றிப் போகலாம். பாஸ்போர்ட் வாங்குவதும் சிரமம் இல்லை. ஐந்து வருடம் தீவில் வசித்தால் குடியுரிமை பெற்றுவிடலாம்.

தீவின் மோசமான விஷயங்களாக சாலைப் போக்குவரத்தை குறிப்பிடலாம். டிரைவர்கள் காட்டுத்தனமாக காரை ஓட்டுவார்கள். பெரிய அளவில் அடிதடி சண்டைகள் நடக்கும். பல டூரிஸ்ட் பகுதிகளில் இருப்பதுபோல் பிக்பாக்கெட், டூரிஸ்டுகளை ஏமாற்றுவது ஆகியவையும் நடக்கும்.

நான் ஜமைக்கா போன சமயம் டூர் கைடு ‘சாலையில் விற்கும் எந்த உணவையும் வாங்கவேண்டாம். உள்ளே கஞ்சா வைத்துக் கொடுப்பார்கள். சாப்பிட்டபின் மேலும் சாப்பிடணும் மாதிரி இருக்கும். அப்ப கூடுதல் விலைக்கு கேட்பார்கள்’ என்றார். உண்மையோ பொய்யோ? அதன்பின் எதையும் அங்கே வாங்கிச் சாப்பிடவில்லை.

கிரிக்கெட் போட்டிகள் நடக்கையில் அமெரிக்காவில் இருந்து அங்கே போனால் ஜாலியாகக் கூட்டமில்லாத மைதானங்களில் போட்டிகளைக் கண்டு ரசிக்கலாம். டிக்கெட் விலையும் மிக மலிவு எனக் கேள்வி.

ஜமைக்கன் ரம்மும், மியூஸிக்கும், ஜெர்க் சிக்கனும் மிகப் பிரபலம் என்பதால் கிரிக்கெட் பார்க்க போய்விட்டு, எல்லாக் காசையும் விட்டுவிட்டும் வரலாம்.

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *