இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பிரிட்டனின் கடல் வணிகத்தை முடக்க ஹிட்லர் ‘யூ’ போட்டுகள் எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஏவினான்.
அத்துடன் கிராஃப் ஸ்பீ எனப்படும் ஒரு போர்க்கப்பலையும் அனுப்பினான். அது ஆப்பிரிக்கா அருகே ஒளிந்துகொண்டு அங்கே வரும் பிரிட்டிஷ் கப்பல்களைத் தாக்கிக்கொன்டிருந்தது. ஒன்பது பிரிட்டிஷ் சரக்குக் கப்பல்கள் அதனால் மூழ்கடிக்கப்பட்டன. அதை வேட்டையாட பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் கிளம்பியவுடன் கிராஃப் ஸ்பீ எங்கோ சென்று பதுங்கிக்கொண்டது.
அந்தக் கப்பல் எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறது என யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் ஹார்வுட் எனும் பிரிட்டிஷ் கமாண்டர் அது போர் நடக்காத தென் அமெரிக்காவுக்குச் சென்று பதுங்கியிருக்கலாம் எனக் கணக்கு போட்டார். மூன்று கப்பல்களுடன் சென்று அதைக் கண்டுபிடித்துத் தாக்கினார்.
கடுமையான போர். மூன்று பிரிட்டிஷ் கப்பல்களை கிராஃப் ஸ்பீ ஒற்றையாகச் சமாளித்து அடித்தது. மூன்று பிரிட்டிஷ் கப்பல்களுக்கும் பெருத்த அடி. அனைத்துக் குண்டுகளும் தீர்ந்துவிட்டன. எரிபொருள் காலி.
ஆனால் எப்போதுமே போரில் அனைவரும் தன்னை விட எதிரி பலமான நிலையில் இருப்பதாகத்தான் நம்புவார்கள். ஜெர்மன் போர்க்கப்பலும் அப்படியே நம்பியது. பிரிட்டிஷ் கப்பல்களின் மோசமான நிலை அதற்குத் தெரியாது. எத்தனை பிரிட்டிஷ் கப்பல்கள் உள்ளன என்பதும் தெரியாது.
மேலும் புதியதாக பிரிட்டிஷ் கப்பல்கள் வந்தாலும் வரலாம். அதனால் உருகுவே நாட்டுக்குச் சென்று அடைக்கலம் கோரியது. உருகுவே துறைமுகத்துக்கு வெளியே அடிபட்ட நிலையில் மூன்று பிரிட்டிஷ் கப்பல்களும் நின்றன. இங்கிலாந்திடம் அப்போது உருகுவேக்கு அனுப்ப போர்க்கப்பல்களும் இல்லை. ‘நீங்களே எதாவது செய்து சமாளியுங்கள்’ எனச் சொல்லிவிட்டார்கள்.

பிரிட்டிஷ் கேப்டன் ஹார்வுட் அதன்பின் ‘ஒரு பெரிய பிரிட்டிஷ் படை உருகுவே நோக்கி வந்துகொண்டிருப்பதாக’ ஒரு வதந்தியைப் பரப்பினார். உருகுவே துறைமுகம் பரபரப்பானது. ஜெர்மானியப் போர்க்கப்பல் காப்டன் அதிர்ச்சி அடைந்தார்.
பிரிட்டிஷ் கப்பல் படை வருமுன் துறைமுகத்தை விட்டு வெளியேறி அங்கே நிற்கும் மூன்று கப்பல்களையும் தாக்கலாம். ஆனால் எதிரியிடம் ஆயுதம் இல்லை என்பது அவருக்கு தெரியாது. எத்தனை கப்பல்கள் இருக்கும் என்பதும் தெரியாது. பிரிட்டிஷாரும் கப்பலை அங்கேயும், இங்கேயும் ஓட்டிச்சென்றும், புகையை விட்டும் நிறைய போர்க்கப்பல்கள் இருப்பதான தோற்றத்தை உருவாக்கினார்கள்.
பிரிட்டிஷ் படையிடம் கப்பல் சிக்குவதைவிடத் தானே மூழ்கடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு கப்பலை மூழ்கடித்துவிட்டு ஜெர்மானிய கேப்டன் தப்பி ஓடினார். அதன்பின் உருகுவே ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்துகொண்டார்.
ஆக வெறும் ராஜதந்திர உத்திமூலம் ஒரு குண்டையும் சுடாமல் எதிரி கையாலேயே அவன் கப்பலை மூழ்கடிக்க வைத்தார் கமாண்டர் ஹார்வுட்.
0
1941.
ஸ்காட்லாந்தின் அந்தக் கிராமத்தின்மீது ஒரு ஜெர்மன் விமானம் பறக்கிறது. பறக்கும் விமானத்தில் இருந்து விமானி பாராசூட்டுடன் குதிக்கிறார்.
பாராசூட்டில் இருந்து விடுபட முடியாமல் தவித்தவரை ஒரு விவசாயி போய் மீட்கிறார். ‘நான் உங்கள் எதிரி அல்ல, நான் உடனே ஹாமில்டன் பிரபுவுடன் பேசவேண்டும்’ என அந்த விமானி சொல்ல, விவசாயி குழம்புகிறார். ஹாமிலட்ன் பிரபுவின் மாளிகை அருகேதான் இருந்தது. சரி என சொல்லி கூட்டிப்போய் உணவு கொடுத்து போலிசிடம் தகவல் சொல்ல, போலிஸ் வந்து அவரைக் கைது செய்கிறது.
‘யார் நீங்கள்?’ என அந்தக் கிராமத்து போலிஸ் அதிகாரி கேட்க வந்த பதிலை கேட்டு துள்ளி விழுகிறார்.
‘ரூடால்ப் ஹெஸ். ஜெர்மனியின் துணை பியூரர்’. ஹிட்லருக்கு அடுத்து ஹெர்மன் கோரிங். அவருக்கு அடுத்து ரூடால்ப் ஹெஸ். ஜெர்மனியின் மூன்றாம் நிலை தலைவர், துணை பியூரர். இவர் ஏன் ஸ்காட்லாந்தில் தனியாக விமானத்தில் வந்து குதிக்கவேண்டும்? ஹாமில்டன் பிரபுவுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?
1923.
புரட்சிக்காரனாக இருந்த ஹிட்லரை ஜெர்மன் போலிஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. ஹிட்லருடன் சிறையில் ஒரே அறையில் அடைபட்டு இருந்தவர் ரூடால்ப் ஹெஸ். ஹிட்லர் சிறையில் எழுதிய மெயின் காம்ப் நூலை தட்டச்சியது இவர்தான். நூலின் சில பகுதிகளை அவரே எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
அதன்பின் ஹிட்லருக்கு நம்பகமான, விசுவாசமான நண்பனாக இருந்தார் ஹெஸ். ஹிட்லர் ஆட்சியைப் பிடித்ததும் மூன்றாம் நிலைத் தலைவராக உயர்ந்தார். ஹிட்லர் கொல்லப்பட்டால் அடுத்த பியூரர் கோரிங். அவருக்கு அடுத்து ஹெஸ்.
ஆனால் ஹெஸ்ஸுக்கு மரியாதை கொடுத்த அளவு அவரது பேச்சை ஹிட்லர் கேட்கவில்லை. தனது எந்த ஆலோசனையும் கேட்கப்படவில்லை, தனக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை என்பதை அறிந்து ஹெஸ் வருத்தம் அடைந்தார். ஹிட்லரின் நம்பிக்கையைப் பெறுவதற்கு ஒரு திட்டம் தீட்டினார்.
பிரிட்டனில் ஹாமில்டன் பிரபுவை அவரது நண்பருக்குத் தெரியும். அவரிடம் ஓர் அறிமுகக் கடிதம் வாங்கி வைத்துக்கொண்டார். ஹாமில்டன் பிரபுவைப் போய் சந்தித்தால் அவருக்கு மன்னர் வரை செல்வாக்கு உண்டு. அவருடன் பேசி மன்னரைச் சந்தித்து, சர்ச்சிலை பதவி நீக்கம் செய்யச் சொல்லிவிட்டு, அடுத்த பிரதமரிடம் பேசி சமாதான உடன்படிக்கை செய்துகொன்டு வெற்றி வீரனாக ஜெர்மனி திரும்பினால் எப்படி இருக்கும்?
தன் மரியாதை கூடும். ஹிட்லர் மூக்கின் மேல் விரலை வைப்பார். ‘ஹெஸ், நீ இத்தனை பெரிய சாகசக்காரனா’ என்று திகைத்துப்போவார் இல்லையா?

வாய் விட்டுச் சிரிக்கக்கூடிய இந்தத் திட்டத்தை நிறைவேற்ற விமானத்தில் பறக்கும் பயிற்சி எல்லாம் எடுத்துக்கொன்டு, லண்டன் மேல் பெரிய குண்டுவீச்சு தாக்குதல் நடந்த சமயம் ஸ்காட்லாந்துக்குப் பறந்து ஹாமில்டன் பிரபுவின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் பாராசூட்டில் குதித்து மாட்டிக்கொண்டார் ஹெஸ்.
சர்ச்சிலுக்குத் தகவல் போனதும் அவரால் நம்பவே முடியவில்லை. அவருக்கு தகவலை சொன்னதே ஹாமில்டன் பிரபுதான். அவருக்கும் ஒரே அதிர்ச்சி. தன்னை தவறாக சர்ச்சில் நினைத்துவிடுவாரோ என்றும் பயம். ஆனால் சர்ச்சில் அப்படி எதுவும் நினைக்கவில்லை.
ஹெஸ் மனநிலை சரியில்லாதவர் என்று அந்தத் திட்டத்தைக் கேட்டதும் அவர் தெரிந்துகொண்டார். ‘அவனை பிடித்து காவலில் வையுங்கள். அப்புறம் பார்ப்போம்’ எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
விஷயம் தெரிய வந்ததும் ஹிட்லருக்கு ஒரே அதிர்ச்சி, குழப்பம், கோபம். ‘அது எப்படி ஜெர்மன் விமானப் படைக்குத் தெரியாமல் தனி ஆளாக ஹெஸ் விமானத்தை ஓட்டிப்போவார்?’ என்று அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. கோபத்தில் ஹெஸ்ஸைத் திட்டி தீர்த்தார்.
போர் முடிந்ததும் ஹெஸ்ஸை விசாரணைக்கு அழைத்துப் போனார்கள். அவர் மேல் பெரியதாக எந்தக் குற்றசாட்டும் இல்லை. ‘எனக்கு எதுவும் தெரியாது’ என சொல்லியிருந்தால் விட்டிருப்பார்கள். ஆனால் சும்மா இருக்காமல் ஹெஸ் ‘நான் ஹிட்லரின் விசுவாசமான தொண்டன். நாஜி கட்சியின் ஊழியன். நாங்கள் எந்தத் தப்பும் செய்யவில்லை’ என வீர வசனம் பேச, ஆயுள் தன்டனை கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
93 வயதுவரை ஜெயிலில் ஃபர்ஸ்ட் கிளாஸ் கைதியாக நல்ல வசதியாகத்தான் வாழ்ந்தார் ஹெஸ். 1987இல் தனது 93ஆம் வயதில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வரலாற்றில் எத்தனையோ காமெடிகள் நடந்திருந்தாலும் இப்படி எதிரி நாட்டில் தன்னந்தனியாக சென்று குதித்த துணை அதிபர் மாதிரியான சம்பவம் வேறு ஏதேனும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அதனாலயே ஹெஸ் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார்.
0