Skip to content
Home » பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

ஒயம்யாகோன்

1924. சைபிரியாவின் மிகக் கொடூரமான குளிர் உள்ள அந்தக் கிராமத்தின் அதிகாரி தன் தெர்மாமீட்டரை எடுத்தார். மைனஸ் 71 டிகிரி செல்சியஸ் எனக் காட்டியது. அதை மாஸ்கோவுக்கு வழக்கம் போல ரிப்போர்ட் ஆக அனுப்பினார். அதன்பின் தன் வேலைகளைப் பார்த்தார்.

ஆனால் அந்த கிராமத்துக்கே வாழ்க்கை தந்த வள்ளலாகத் தான் மாறுவோம் என அவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார். தன் வரலாற்றுச் சாதனையை அறியாமல் அவர் மரணமும் அடைந்தார். ரஷ்யாவில் உலகப் போர் நடந்தது, கம்யூனிசம் நடந்தது, வீழ்ந்தது… புடின் வந்தார்… இணையம் வந்தது….

இணையத்தில் ‘உலகின் மிகக் குளிரான பகுதி எது?’ என பிபிசி சும்மா தேடியது. அண்டார்டிகா, வட துருவம் மாதிரி ஆள் இல்லாத பகுதிகளைத் தாண்டி மக்கள் வசிக்கும் பகுதிகளில் வரலாற்றில் பதிவான ரெகார்டுகளை எடுத்து பார்த்தால் 1924இல் பதிவான அந்த ஒயம்யாகோன் ரெகார்டுதான் சாதனையாக இருந்தது.

1924க்கு பிறகு அந்த அளவு குளிர் பதிவாகவே இல்லை. 1924ல் எத்தனை துல்லியமாக அளவுகள் அளக்கப்பட்டன என்பதில் எல்லாம் கேள்விகள் இருந்தன. ஆனால் நல்லதொரு டாக்குமெண்டரி எடுக்க ரொம்ப ஆராய்ச்சி எல்லாம் வேண்டியதில்லை…. ரெகார்டில் ஒயம்யாகோன்னு இருக்கா? ரைட்டு. அப்ப அங்கே போய் ‘உலகின் மிக குளிரான கிராமத்தில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்’ என்று ஒரு டாக்குமெண்டரி எடுக்கலாம்.

அங்கே போன பிபிசி அதிர்ச்சி அடைந்தது. சைபிரியாவின் ஆள் அரவமற்ற பனிப்பாலைவனத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் குட்டி கிராமம் அது. அங்கே பைப்புகள் எதுவும் வேலை செய்யாது. காரணம் கடும் குளிரால் பைப்பில் நீர் ஓடாது. உறைந்துவிடும். அதனால் எந்த வீடுகளிலும் தண்ணீர் பைப்புகள் கிடையாது.

தண்ணீர் வேண்டுமானால் கோடாரியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே போய் உறைந்துகிடக்கும் பனியை வெட்டி எடுத்து வீட்டுக்கு கொண்டுவந்து காய்ச்சித்தான் குடிக்கவேண்டும். எந்தக் காய்கறியும் விளையாது. அதனால் குதிரை மாமிசம், உறைந்து கிடக்கும் ஏரியின் பனியை குத்தி உடைத்து, தூண்டிலை போட்டுப் பிடிக்கும் மீன்… இவைதான் உணவு.
அந்தக் கிராமத்தின் விசேஷ உணவு ஸ்ட்ரோக்னைனா. உறைந்து கிடக்கும் மீனைச் சின்ன துண்டுகளாக வெட்டி அப்படியே பச்சையாக சாப்பிடுவதுதான் ஸ்ட்ரோக்னைனா.

கார்கள், ஜீப்புகளை ஆஃப் பண்ணவே முடியாது. எஞ்சினை அணைத்தால் பெட்ரோல் உறைந்துவிடும். 24 மணிநேரமும் வண்டியின் எஞ்சின் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

பாத்ரூம் போவது தனிக்கலை. வீட்டுக்கு வெளியே பாத்ரூம்கள் தனியாக கட்டபட்டிருக்கும். அங்கே போய் வேலையை முடித்துக்கொன்டு எத்தனை சீக்கிரம் பேண்டை போடமுடியுமோ, போட்டுக்கொண்டு ஓடி வந்துவிடவேண்டும். இல்லையென்றால் கடும்குளிரில் தோலில் பிராஸ்ட் பைட் வந்துடும். புருவங்களும் கண் இமை முடிகளும்கூட உறைந்துவிடும்.

ஒயம்யாகோன்

இங்கே மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?

அவர்களுக்கு வேறு எந்த வாழ்க்கை பழக்கம் கிடையாது. நாள் முழுக்க விறகு வெட்டுவது, வேட்டை ஆடுவது, மீன் பிடிப்பது மாதிரியான வேலைகள்தான். விறகு, தண்ணீர் சப்ளை எல்லாம் இல்லையென்றால் வாழ்க்கை நின்றுவிடும். வாரம் ஏழு நாளும் உழைத்தே ஆகவேண்டும்.

பேட்டரி, போன், எலெக்ட்ரானிக்ஸ் எதுவும் வேலை செய்யாது.

2010ல் அந்த டாக்குமெண்டரி வந்தது.

அதன்பின் ஒயம்யாகோனுக்கு ஒரு கல்ட் ஸ்டேட்டஸ் வந்துவிட்டது. அங்கே போய் அந்தக் குளிரில் ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்கவேண்டும் என உலகின் பல நாடுகளில் இருந்து டூரிஸ்டுகள் அங்கே போக ஆரம்பித்துவிட்டார்கள். கிராம மக்களுக்கு நல்ல வருமானம். டூரிஸ்டுகள் வருமானத்தால் அரசும் வீடுகளுக்கு பைப்பில் சுடுநீரை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. இணையம், டிவி எல்லாம் வந்துவிட்டது.

இப்படி கொடூரமான புவியியலே ‘உலகின் குளிரான கிராமம்’ என்ற அடைமொழியைக் கொடுத்து, அதற்கு வாழ்வையும் கொடுத்ததால் புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது.

டெல்லி

டெல்லிக்குப் போனால் அந்த வித்தியாசத்தைக் காணமுடியும். யமுனைக்கு கிழக்கே இருக்கும் நகரின் வடகிழக்கு (Northeast Delhi) பகுதி மிக ஏழைமையான பகுதியாக இருக்கும். உத்திரப் பிரதேசத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த மக்கள் முழுக்க கிழக்கு டெல்லியில்தான் தஞ்சமடைவார்கள். ஒப்பீட்டளவில் தூத்துக்குடிக்குச் சமமான பரப்பளவு (64 சதுர கிமி). ஆனால் தூத்துகுடி நகரின் மக்கள் தொகை 4.11 லட்சம் பேர்தான். வடகிழக்கு டெல்லியின் மக்கள் தொகை 22 லட்சம்.

நகர்ப்புர நெரிசல் என்றால் என்ன என அங்கே தெரிந்துகொள்ளலாம். குடிசைகள், தெருக்களில் தூங்கும் மக்கள், கொடூரமான நகர்ப்புர ஏழைமை, குற்றங்கள், மதக்கலவரங்கள்… எல்லாமே அங்கே காணமுடியும். டெல்லியின் 2020 கலவரங்கள் இங்கேதான் நடந்தன. இங்கிருந்துதான் பீகாரிகள், உபி மக்கள் கால்நடையாகக் கொரோனா சமயம் பீகாருக்குத் திரும்பிப் போனார்கள்.

அதே யமுனையைத் தாண்டி மேற்கே போனால் தென் மேற்கு டெல்லி நம்மை வரவேற்கும். மக்கள் தொகை அதே 22 லட்சம்தான். ஆனால் அதன் மக்கள் தொகை அடர்த்தி சென்னை மக்கள் தொகை அடர்த்தியில் ஐந்தில் ஒரு பங்குதான்.

தெருக்களில் பென்ஸ் கார்கள் ஓடும், கால்ப் மைதானங்கள் வரவேற்கும். மேட்டுக்குடி வர்க்கம் வசிக்கும் பகுதி. அதன் 60% மக்கள் தொகை சைவ உணவாளர்கள் என்றால் பார்த்துக்கொள்ளலாம். தென்மேற்கு டெல்லியின் அருகே உள்ள தெற்கு டெல்லியும் இதேபோல் வளமையான பகுதிதான். தெற்கு டெல்லியின் மேல்தட்டு பெண்களின் சுகவாசி வாழ்க்கையைப் பற்றி பல ஜோக்குகள்/மீஸ்ம்களைக் காணலாம்.

டெல்லியின் மேற்கு, தெற்கு பகுதிகளில் குடியேறியவர்கள் பஞ்சாப், ஹரியானா மாதிரி வளமான பகுதிகளில் இருந்து வந்தவர்கள். கிழக்கு/தெற்கு பகுதிகளில் குடியேறியவர்கள் உத்தரப் பிரதேசம், பீகார் மாதிரியான ஏழைமையான மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். அதனால் நகரின் ஒரு பகுதியில் கொடூர வறுமை, இன்னொரு பகுதியில் அதீத வளம்.

பணக்காரர்கள் அதிகரிக்கும்போது அந்தப் பகுதியில் வீட்டு விலை வானளவு உயரும். ஏழைகள் அப்பகுதியில் குடியேற முடியாமல் நகரின் ஏழைமையான பகுதிகளுக்குக் குடியேறுவார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் இருக்கும் பகுதி சுத்தமாக இருக்கும், சாக்கடைகள், கழிவுகள் அகற்றபடும்.

ஏழைகள் வசிக்கும் பகுதியில் இது நேர்மாறாக இருக்கும். அப்பகுதியை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏழைமையும் வன்முறையும் அங்கே தாண்டவமாடும். காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். அதன்பின் வன்முறையும் குற்றங்களும் மேலும் கூடும்.

ஒரே நகரம். ஆனால் அதற்குள் இரு வேறு உலகங்கள். இதனால்தான் புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது.

டையூ

குஜராத்தின் மேற்கு எல்லையில் இருக்கும் 38 கிமி பரப்பளவே உள்ள சின்ன தீவு. கோவா-டையூ-டாமன் எனச் சொன்னால்தான் பல இந்தியர்களுக்கு டையூ தீவு நினைவுக்கே வரும். ஆனால் வெறும் 38 கிமீ மட்டுமே பரப்பளவு உள்ள இந்தத் தீவு இந்திய வரலாற்றில் பெரிய பங்கை ஆற்றியுள்ளது என்றால் நமக்கு வியப்பாக இருக்கும். காரணம், அதன் புவியியல்.

டையூவில் இயற்கையான துறைமுகம் உண்டு. டையூவைத் தாண்டித்தான் குஜராத்தின் காம்பே வளைகுடாவில் நுழையமுடியும். மும்பை எப்படி மேற்கே இருக்கும் முக்கியத் துறைமுகமோ அப்படித்தான் ஒரு காலத்தில் டையூ இருந்தது. தவிர யேமெனில் இருந்து கடல்காற்று டையூவுக்கு அடிப்பதால் எகிப்தை ஆண்ட கிரேக்கக் கப்பல்கள் எளிதாக டையூவுக்கு வந்து வணிகம் செய்தன.

பின்னாளில் அராபியர்களுடன் வணிக தொடர்பும் இதனாலேயே ஏற்பட்டது. சாளுக்கியர் ஆட்சியில் குஜராத் இருக்கையில் எட்டாம் நூற்றண்டில் அராபியர்களுடன் கடற்போர்கள் எல்லாம் நடந்துள்ளன.

தவிரவும் டிசம்பர் மாதத்தில் குஜராத்தில் இருந்து கடல்காற்று நேராக ஆபிரிக்காவின் சான்ஸிபார் நகருக்கு வீசும். பாய்மரக்கப்பலில் ஏறினால் 25 நாளில் சான்ஸிபார் போய்விடலாம். சான்ஸிபார் டான்சானியாவில் இருக்கும் நகரம்.

அன்றைய மேற்கிந்தியாவின் பெரும் கடலோடிகள் சிந்திகள். குஜராத், பாகிஸ்தானின் சிந்த் பகுதிகளில் பெரும்பான்மையாக வசித்தார்கள். அதனால் உலகெங்கும் கப்பல்களில் பயனம் செய்து வணிகம் செய்தார்கள். ஆபிரிக்காவின் டான்சானியாவில் இன்றைக்கும் ஏராளமான குஜராத்தி சிந்திகள் உண்டு. பலரும் பல நூறான்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள். சிந்திகள் கடலோடிகள் என்பதால் அவர்களின் தெய்வம் ஜூலேலால், வருண பகவானின் அவதாரமாகக் கருதப்படுபவர்.

இந்தக் கடல் காற்று காரணமாக பாரசீகத்தில் இருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த பார்சிகள் முதன்முதலாக இறங்கியதும் டையூதான். ரத்தன் டாடாவின் முன்னோர் டையூ வழியாகத்தான் இந்தியா வந்தார்கள். போர்ச்சுகீசியர்கள் இந்தியா வந்ததும் டையூ, டாமனைப் பிடித்தார்கள்.

குஜராத் சுல்தான் துருக்கிய ஆட்டோமான் சுல்தானின் உதவியை நாட, ஒரு பெரும் கப்பற்படையை டையூவுக்கு அனுப்பினார் ஆட்டோமான் சுல்தான்.
1509ம் ஆண்டு டையூவில் உள்ள போர்ச்சுகீசிய கோட்டையில் ஒரு மிகப்பெரும் போர் நடந்தது. எகிப்து மாம்லூக் சுல்தானின் படைகள், ஆட்டோமான் துருக்கியின் படைகள், குஜராத் சுல்தானின் படைகள் என ஒரு ஐயாயிரம் பேர் டையூவைத் தாக்கினார்கள். அவர்களை எதிர்த்து நின்றது 800 பேர் கொண்ட போர்ச்சுகீசியப் படை மற்றும் நானூறு கேரள நாயர்கள்.

ஆனால் கடல்காற்று, டையூவின் புவியியல் அமைப்பைத் துல்லியமாக பயன்படுத்தி ஆட்டோமான் படைகளைச் சிதறடித்தது போர்ச்சுக்கல். கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக அனைத்து எகிப்திய மாலுமிகளும் கொல்லப்பட்டனர். அனைத்துக் கப்பல்களும் சிறைபிடிக்கப்பட்டன.

இந்தியாவில் ஆட்டோமான் துருக்கி நேரடியாக படைகளை அனுப்பிய சம்பவம் இது ஒன்றே. இதில் அவர்கள் ஜெயித்திருந்தால் குஜராத் மற்றும் மும்பை அவர்கள் கட்டுப்பாட்டில் வந்து பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு வந்திருக்கும் வாய்ப்பேகூட இல்லாமல் போய் இருக்கலாம்.

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *