Skip to content
Home » பூமியும் வானமும் #13 – மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

பூமியும் வானமும் #13 – மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

1937. இரண்டாம் உலகப் போர் வரலாம் என்ற சூழல். பிரிட்டனின் விமானப்படை ஜெர்மனியின் விமானப் படையைவிடப் பலவீனமாக இருந்து. அப்போது டி ஹாவிலாண்ட் எனும் பிரிட்டிஷ் விமானக் கம்பெனி ஓர் ஆலோசனையைச் சொன்னது.

‘பிரிட்டிஷ் படை விமானங்கள் எடை அதிகம் மிகுந்தவை. கட்டுவதற்கு அலுமினியம் நிறைய வேண்டும். செலவும் அதிகம் பிடிக்கும். தயாரிக்க ஆகும் நேரமும் கூடுதல். அதனால் சின்னதாக இரண்டு பேர் உட்கார்ந்து போகும் வகையில் விமானத்தைத் தயாரிக்கலாம். அதை மரத்தில் செய்தால் தயாரிப்பு செலவு குறையும்.’

மர விமானம் என்றதும் பிரிட்டீஷ் ராணுவம், ‘இது ஜோக்கா, நிஜமா’ எனத் தெரியாமல் குழம்பியது. அதன்பின் ஐடியாவைத் தூக்கி தூர போட்டுவிட்டார்கள். ஆனால் கம்பெனி சும்மா இருக்காமல் மர விமானத்தைத் தயாரித்து ஓட்டியும் காட்டியது. மர விமானம் என்றால் சின்னதாகக் குண்டு விழுந்தாலும் தீப்பிடித்துக்கொள்ளும். ஆனால் பூமிக்கு மேலே 200 அடி உயரம் என்பது போல உயரம் குறைவாகப் பறந்து மெஷின் கன்னால் சுடலாம், குண்டுகளை வீசலாம்.

உலகப் போர் தொடங்கியதும் விமானப் பற்றாக்குறை, அலுமினியப் பற்றாகுறை அனைத்தும் சூழ்ந்துகொள்ள, வேறு வழியின்றி மர விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தது பிரிட்டன். பர்னிச்சர் கடைகள், பியானோ கடைகள் எல்லாம் விமான ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு நிறுவனங்களாக மாறின.

முதல் மர விமானத்தை பாரிசுக்கு அனுப்பி சோதனை வெள்ளோட்டம் நடத்தினார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை விமானம் பாரிசில் நுழைந்தது. 200 அடி உயரத்தில் பறந்தபடி நுழைந்ததால் எந்த ராடார் கண்ணிலும் படவில்லை. காலை பாரிஸ் சர்ச்சில் 200 ஜெர்மன் வீரர்கள் வழிபாடு நடத்திவிட்டு வெளியே வந்தார்கள். மெஷின் கன் மூலம் அனைவரையும் சுட்டுத் தள்ளிவிட்டு பாரிசின் மேலே பறந்து ரயில் நிலையம், போர் விமானங்கள் என எல்லாவற்றையும் சகட்டுமேனிக்குச் சுட்டுத் தள்ளி வெற்றியுடன் பிரிட்டன் திரும்பியது.

பிறகென்ன? அந்த டெரர் விமானம் மாபெரும் வெற்றி. மகிழ்ச்சியடைந்த பிரிட்டன் மும்முரமாக மர விமானத் தயாரிப்பில் இறங்கியது. ஏழாயிரம் விமானங்கள் தயாராகின. இவற்றை ஜெர்மானியர்கள் மரக் கொசுக்கள் என அழைத்தார்கள்.

தாக்கிவிட்டுச் செல்லும் ஒரு ‘மரக்கொசு’

கோபென்ஹாகனில் ஜெர்மானிய தலைமையகத்தை தாக்கிவிட்டுச் செல்லும் ஒரு ‘மரக்கொசு’

ஜெர்மனியின் ரயில்கள், பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும் விமானங்கள், அணைக்கட்டுகள், மின் நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவற்றை இவை தாக்கி வந்தன. ஒரே நாளில் ஒரு விமானம் இருமுறை ஜெர்மனிக்குச் சென்று தாக்கமுடியும்.

ஜெர்மன் போர் விமானங்களை இவற்றால் நேரடியாகத் தாக்க முடியாது. ஒரே குன்டு விழுந்தாலும் மரக்கொசுக்கள் காலி. அதனால் ஜெர்மன் விமான நிலையங்கள் அருகே இவை இரவில் பதுங்கியபடி விளக்குகள்கூட இல்லாமல் வட்டமடித்துக் கொண்டிருக்கும். ஜெர்மன் போர் விமானங்கள் இறங்குகையில் திடீர் என தோன்றி தாக்குதல் நடத்தும்.

248 ஜெர்மன் போர் விமானங்கள் இப்படி லேண்ட் ஆகையில் அழிக்கபட்டன. மரக்கொசுக்கள் வரும் என்ற பீதியிலேயே விமானத்தை அவசர, அவசரமாகத் தரையிறக்கி விபத்துக்கு ஆளானதும் ஏராளம்.

இரண்டாம் உலகப் போரின் மிக வெற்றிகரமான போர் விமானம் எனும் பட்டத்தை இந்த மரக்கொசு விமானங்கள் பிடித்தன. பின்னாளில் பிரிட்டனில் உயர்தர விமான டெக்லானஜியுடன் தரை இறங்கிய அமெரிக்கர்கள் மரக்கொசு விமானங்களைப் பார்த்து அதிர்ச்சியில் திகைத்து போனார்கள்.

‘இதை வைத்தா ஹிட்லர் கண்ணில் விரலை விட்டு ஆட்டினீர்கள்?’

0

முதலாம் உலகப் போர்.

ஜெர்மன் படை பெல்ஜியம் வழியாக பிரான்சின் உள்ளே நுழைய முயல்கிறது. எல்லைக்கோட்டில் பிரெஞ்சு, பிரிட்டிஷ் படைகள் அவர்களை எதிர்கொள்கின்றன. எண்ணிக்கையிலும் தொழில்நுட்பத்திலும் வலுக்குறைந்த பிரெஞ்சு-பிரிட்டிஷ் படைகள் ஒரு தற்காப்பு உத்தியை கையாள்கின்றன. அதுதான் பதுங்குகுழி யுத்தம் (Trench war).

எல்லையெங்கும் பதுங்குகுழிகளைத் தோண்டி அதனுள் ஒளிந்திருந்து சுடுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் பதுங்குகுழி யுத்தத்தை சரியாக எதிர்கொள்ளும் தொழில்நுட்பம் இல்லை. அதனால் பதுங்கு குழிகளுக்குள் இருந்து சுடுபவர்களை எதுவும் செய்ய முடியாமல் ஜெர்மானியர்களும் பதுங்கு குழிகளைத் தோண்டி, அதனுள் ஒளிந்துகொண்டு சுட ஆரம்பித்தார்கள். ஆண்டுக்கணக்கில் இந்த ஸ்டேல்மேட் நீடித்தது.

Trench warfare என அழைக்கபட்ட இந்த யுத்தம் எப்போது முடிவடையும் என யாருக்கும் தெரியாமல் இருந்தது. உணவும் ஆயுதமும் இருந்தால் பத்தான்டுகளுக்கும் மேலாக இந்தப் போரை நீட்டிக்கமுடியும். என்ன செய்து குழிக்குள் பதுங்கிபோரிடும் எதிரியை அழிப்பது?

Trench warfare

Trench warfare

ஓராண்டு போரிட்ட பின் ஜார்ஜ் போர்வெக் எனும் பிரிட்டிஷ் எஞ்சினியருக்கு அந்த ஐடியா தோன்றியது. இரு தரப்புக்கும் இடையே இருக்கும் இடைவெளி ஒரு சில கிமிதான். நாம் ஏன் பிரிட்டிஷ் பதுங்கு குழிகளுக்கு கீழே ஒரு சுரங்கம் தோண்டி ஜெர்மன் பதுங்கு குழிகளுக்கு அடியே சென்று மிகப்பெரிய அளவில் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்ககூடாது? இரவில் அவர்கள் உறங்குகையில் குண்டு வைத்தால் பல்லாயிரம் ஜெர்மானியர்கள் உயிரிழப்பார்கள்.

ஐடியா தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இதில் பல ரிஸ்குகள் இருந்தன. பிரிட்டிஷ் ரானுவ வீரர்களுக்கே தெரியாமல் சுரங்கம் தோண்டவேண்டும். காரணம் பல லட்சம் வீரர்களிடம் செய்தி பரவினால் ஜெர்மானியர்களுக்கும் தெரிந்துவிடும். பல கிமி நீளத்துக்கு சுரங்கம் தோண்டவேண்டும். அதற்கு ஏராளமான ஆட்கள் வேண்டும். களிமண் பகுதி அது என்பதால் சுரங்கம் தோண்ட புது டெக்னாலஜி வேண்டும். சத்தம் வராமல் சுரங்கம் தோண்டவேண்டும். மண்வெட்டி, கடப்பாறைகளைப் பயன்படுத்தினால் மேலே இருக்கும் பிரிட்டிஷ் வீரர்களுக்குத் தெரிந்துவிடும்.

சத்தமே இல்லாமல் வேலையைத் துவக்கினார்கள். மண்வெட்டிக்குப் பதில் காலால் சுரங்கம் தோண்டும் வகை கருவி ஒன்று உருவாக்காப்பட்டது. பலகை ஒன்றில் ஒருவர் சாய்ந்து படுத்துக்கொன்டு, காலால் ஸ்க்ரூ போன்ற கருவியை இயக்கி மண்ணைத் தோண்டி எடுத்து வீசும் கருவி அது. ஆண்டுக்கணக்கில் ரகசியமாகச் சுரங்கம் தோன்டினார்கள். 1917 வரை இரு ஆண்டுகள் சுரங்கம் தோண்டப்பட்டது.

ஜெர்மானிய படைகள் குவிந்திருந்த பகுதிகளின் அடியே சுரங்கம் பல கிளைகளாக சென்றது. இரு ஆண்டுகள் கழித்து அதில் 454 டன் வெடிமருந்தை பல இடங்களில் வைத்து நிரப்பினார்கள். பூமிக்கு கீழே 88 அடி ஆழத்தில் இந்தச் சுரங்கங்கள் இருந்தன. எல்லாம் தயார், இனி வெடிக்கவேண்டியதுதான் பாக்கி.

1917ம் ஆண்டு ஜூன் 7. இரவு 3:17 மணிக்கு இரு தரப்பு வீரர்களும் அசந்து தூங்குகிறார்கள். திடீரென ஒரு நைட்டிங்கேல் பறவை இரவில் பாடுகிறது. அதுதான் சிக்னல். 26 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன.

அதுநாள்வரை உலகிலேயே மனிதனால் உண்டாக்கபட்ட மிகப்பெரிய வெடிச்சத்தம் அதுதான் எனக் கூறப்படுகிறது. பெல்ஜியத்தில் வைத்த வெடி லண்டனில் கேட்டது. லண்டன் பல்கலைக்கழக சுவர்களில் எல்லாம் அதிர்ச்சி உண்டானது. ஏதோ நிலநடுக்கம் ஏற்பட்டதாக லண்டன் மக்கள் கருதினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.

ஒரே வினாடியில் பத்தாயிரம் ஜெர்மானியர்கள் சாம்பலானார்கள். ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்புவரை உலகிலேயே மிக அதிகமான மக்கள் ஒரே நொடியில் இறந்த சம்பவம் அதுவாகத்தான் இருந்தது. எல்லையெங்கும் பல மைல் தூரத்துக்கு ஜெர்மானியப் படை தெறித்து ஓடியது. அனைத்து இடங்களையும் பிரிட்டிஷ் படை பிடித்து முன்னேறியது. அதன்பின் நடந்த கடும்போரில் பிரிட்டன் வென்று ஆதிக்கநிலையை அடைந்தது.

போர் முடிந்தபின் ஜெர்மனி தோற்றதற்குக் கூறப்பட்ட முக்கிய காரணங்களில் இரண்டாவதாக இந்தச் சுரங்க குன்டுவெடிப்பு (Battle of Messenes) இருந்தது.

0

இரன்டாம் உலகப் போரில் ஜெர்மனி ரஷ்யா மேல் படை எடுத்தது.

துவக்கத்தில் ரஷ்யப் படை அடி மேல் அடி வாங்கியது. தோல்வி மேல் தோல்வி.

ஆனால் ஸ்டாலின் அசரவில்லை. போரில் உறுதியாக ஜெயிப்போம் என அடித்துச் சொன்னார். அதற்கு அவர் சொன்ன ஒரே காரணம். ‘ஜெர்மானியர்களிடம் எத்தனை புல்லட் இருக்கிறதோ, அதைவிட கூடுதலான ரஷ்யர்கள் இருக்கிறார்கள்.’

போரின் முடிவில் ஜெர்மானியர்கள் 11 லட்சம் ரஷ்யப் படை வீரர்களைக் கொன்றார்கள். அவர்கள் இழந்தது 728,000 பேரைத்தான். நாலாயிரம் டாங்கிகளை அழித்தார்கள். அவர்கள் இழந்தது அதில் பாதிதான்.

ஆனால் அழிக்க, அழிக்க புற்றீசலாக ரஷ்யப் படைவீரர்கள் கிளம்பி வந்துகொண்டே இருந்தார்கள். போரின் இறுதி ஆண்டில் சுமார் 60 லட்சம் படைவீரர்கள் ரஷ்ய ஆர்மியில் இருந்தார்கள். போர் துவக்கத்தில் ரஷ்யப் படையில் 20 லட்சம் வீரர்கள்தான் இருந்தார்கள்.

இத்தனை பேரை எப்படிக் கொல்லமுடியும்?

ஸ்டாலின்கிராட் போர் நினைவுச்சின்னம்

ஸ்டாலின்கிராட் போர் நினைவுச்சின்னம்

பெரிய நாடுகளை எதிர்க்கும் சின்ன நாடுகளுக்கு இதுதான் பிரச்சனை. என்னதான் படை வலுவாக இருந்தாலும், எதிரி முழுமூச்சாக போரில் இறங்கினால் சின்ன நாடுகளால் போரை வெல்லவே முடியாது. அவை தடுப்பாட்டம் மட்டுமே ஆடவேண்டும்.

0

பகிர:
nv-author-image

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *