Skip to content
Home » பூமியும் வானமும் #14 – திபெத்தின் பலதார மணம்

பூமியும் வானமும் #14 – திபெத்தின் பலதார மணம்

திபெத்தின் பலதார மணம்

திபெத்துக்குச் சென்ற மார்க்கோ போலோ (14ம் நூற்றாண்டு) அங்கிருந்த கிராமங்களில் நிலவிய வித்தியாசமான ஒரு வழக்கத்தை குறிப்பிடுகிறார்.

அந்தக் கிராமத்துக்கு வரும் புதியவர்கள் கிராமத்து மக்களின் வீடுகளில் தங்குவார்கள். அன்று இரவு அவர்களிடம் அந்த வீட்டின் இளம்பெண்களை அனுப்பி வைப்பார்கள். காரணம் திபெத்தில் கன்னிப்பெண்களை கல்யாணம் செய்துகொள்ள யாருமே விரும்பமாட்டார்கள் என்பதுதான்.

காலையில் அந்த விருந்தினர் அந்தப் பெண்ணுக்கு ஒரு சின்ன பரிசு (வளையல், செயின்) கொடுப்பார். விலையுயர்ந்த பரிசு அல்ல. சம்பவம் நடந்தது என்பதற்கு ஆதாரமாகச் சும்மா ஒரு நினைவுப் பரிசு. இப்படி ஒரு 20- 25 பேரிடம் பரிசு பெற்றபிறகே அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகும்.

மார்க்கோ போலோ மட்டுமல்ல, அங்கே காலனியாதிக்கக் காலகட்டத்தில் சென்ற ஆங்கிலேயர் பலரும் இப்படிப்பட்ட சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

திபெத்தில் இப்படி ஒரு சடங்கு நிலவ காரணம் அங்கு கடைபிடிக்கப்படும் பலதாரமுறை. அதிலும் பெண்கள்தான் பலதாரமணம் செய்துகொள்வார்கள். மலைப்பகுதியான திபெத்தில் விளைநிலம் மிகக் குறைவு. அதனால் குடும்பத்திலுள்ள ஆண்கள் எல்லாரும் ஆளுக்கொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் விளைநிலம் பிரிந்துவிடும்.

அதனால் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் எல்லாரும் ஒரே பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வார்கள். குடும்பத்தில் உள்ள பெண்களையும் இப்படி இன்னொரு குடும்பத்தில் உள்ள ஆண்களுக்குத் திருமணம் செய்து அனுப்பி வைத்துவிடுவார்கள்.

பலதாரமணம் – கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் இளவரசர் பீட்டர் எடுத்த புகைப்படம், காலிம்போங், 1956

பலதாரமணம் செய்யும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகள் யாருடையது என எப்படித் தெரிந்துகொள்வது? அதை எல்லாம் யாரும் கண்டுகொள்வது இல்லை. எல்லாக் கணவரும் மனைவியின் குழந்தைகளை எல்லாம் தன் குழந்தையாக நினைத்து வளர்க்கவேண்டும். இப்படிப்பட்ட முறையால் ஜனத்தொகையும் மிகுந்த கட்டுப்பாட்டில் இருக்கும். நிலமும் பிரிபடாமல் இருக்கும்.

எல்லா வீடுகளிலும் இப்படி அல்ல. நிலம் வைத்திருக்கும் பெருந்தனக்காரர்கள் வீடுகளில்தான் இப்படியொரு வழக்கம். நிலமற்றவர்கள் எல்லாருக்கும் ஒருவனுக்கு ஒருத்தி ரூல்தான்.

ஒரு வீட்டில் எல்லாமே பெண் குழந்தைகளாக இருந்தால் என்ன செய்வது?

அந்த வீட்டில் மட்டும் ஒரே மருமகனைக் கொண்டுவந்து அவனுக்கு மட்டும் அக்கா- தங்கைகளைப் பலதாரமணம் செய்து வைப்பார்கள்.

இப்படிப்பட்ட பலதாரமண முறை நிலவுவதால்தான் மார்க்கோ போலோ சொன்ன பயிற்சி முறை அங்கே நிலவியது. திபெத்தில் மட்டுமில்லை நேபாளத்திலும் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திலும் இமயமலைப் பகுதியில் பல கிராமங்களில் இதுதான் நடைமுறை.

சீனாவின் பிடியில் திபெத் வந்த பின்பு சட்டம் போட்டு இதை அவர்கள் தடுத்தாலும், அதை அமுல்படுத்துவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. கிராமங்களில் நிலத்தைப் பிரிப்பதை எல்லாம் அத்தனை எளிதில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். எல்லாம் பணக்காரக் குடும்பங்கள் என்பதால் அண்ணன் டாக்டர், தம்பி வழக்கறிஞர் இருவருக்கும் ஒரே மனைவி என்றுதான் சிஸ்டம் இருக்கும்.

மசாடா

கிபி 73ம் ஆண்டு. ஏசு இறந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறது. இஸ்ரேலை காலனியாக ஆண்டு வந்த ரோமுக்கும் யூதர்களுக்கும் போர் மூண்டது. பைபிளில் வரி வசூல் செய்பவர்களைப் பற்றிய மிகக் கடுமையான வர்ணனைகளைக் காணலாம். ரோமானியப் பேரரசின் வரி வசூல் அத்தனை கொடூரமானதாக இருந்தது.

வரி கொடுக்க முடியாமலும், ஒடுக்குமுறை தாளாமலும் யூதர்கள் கிளர்ச்சியில் இறங்கினார்கள். அதில் மிகத் தீவிரமான குழுவுக்கு ஸெலாட்ஸ் எனப் பெயர். மசாடா எனும் மலைக்குச் சென்று அங்கே ஏரோது மன்னன் கட்டியிருந்த கோட்டையைக் கைப்பற்றினார்கள்.

அந்தக் கோட்டை, மலையின் உச்சியில் இருந்தது. மலையின் மேலே செல்லும் ஒற்றையடிப் பாதை மட்டுமே உச்சிக்குச் செல்லும் ஒரே வழி. அந்த வழியை அடைத்தால் கோட்டையைக் கைப்பற்றவே முடியாது. மலையின் உச்சியில் நீர் நிறைய இருந்ததால் ஆண்டுக்கணக்கில் கோட்டை முற்றுகையைச் சமாளிக்க முடியும்.

ஆயிரம் யூதர்கள் கோட்டையைப் பிடிக்க, அதைக் கைப்பற்றும் பொறுப்பு லூசியஸ் பிளேவஸ் சில்வா எனும் ரோமானியத் தளபதியிடம் கொடுக்கப்பட்டது. அவர் 15,000 வீரர்களுடன் மலையை முற்றுகை இட்டார். அவர் செய்த முதல் வேலை மலையைச் சுற்றி மைல் கணக்கில் கோட்டை சுவர் அமைத்ததுதான். ஆக, சுவரைத் தாண்டி எந்த யூதரும் தப்பமுடியாது என ஆனது.

மசாடா

மசாடா முற்றுகை

அதன்பின் மலை அடிவாரத்தில் பாறைகள், மண் எல்லாவற்றையும் வெட்டி எடுத்துகொண்டு வந்து நிரப்ப ஆரம்பித்தார்கள். மலைக்கு எதிரே ஒரு செயற்கை மலையை உருவாக்கினால் அங்கிருந்து பாறைகளை வீசும் இயந்திரங்களை வைத்து கோட்டையைத் தகர்த்துவிடலாம். மரப்பாலங்கள் மூலம் எதிரே உள்ள மலைக்குச் சென்றுவிடலாம்.

புர்ஜ் கலிபா மாதிரி இரு மடங்கு பெரிய மலையை இரண்டு ஆண்டுகள் வேலை செய்து உருவாக்கினார்கள். அங்கிருந்து பாறைகளை வீசும் சீஜ் இயந்திரங்கள் மூலம் பாறைகளை வீசி கோட்டைச் சுவரை உடைத்தார்கள்.

மறுநாள் காலை கோட்டைக்குள் நுழைவது என திட்டம். காலையில் அதுபோல நுழைந்து பார்த்தால் கோட்டையில் இருந்த 960 யூதர்களும் தற்கொலை செய்துகொண்டு இருந்தார்கள். தற்கொலை யூத மதப்படி குற்றம் என்பதால் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்து போயிருந்தனர்.

ஆக உலக வரலாறு காணாத புதிய வகை கோட்டை முற்றுகை இப்படி ஒரு பெரிய துயரத்தில் முடிந்தது. இன்று மசாடா ஒரு பெரிய வரலாற்றுச் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

0

பகிர:
nv-author-image

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *