Skip to content
Home » பூமியும் வானமும் #15 – திரையரங்கு இல்லை, உணவகம் இல்லை, செலவும் இல்லை

பூமியும் வானமும் #15 – திரையரங்கு இல்லை, உணவகம் இல்லை, செலவும் இல்லை

நவ்ரு தீவு நாடு

அமெரிக்காவில் இருப்பவர்களிடம் ‘உங்கள் நெருங்கிய நட்பு நாடு எது?’ எனக் கேட்டால் கனடா என்பார்கள். பாகிஸ்தானில் கேட்டால் சீனா என்பார்கள். பூடானிடம் கேட்டால் இந்தியா என்பார்கள்.

ஆனால் அப்காஸியா நாட்டில் போய் கேட்டால் நவ்ரு என்பார்கள். அதாவது நவரு என உங்களை சொல்ல மாட்டார்கள். அவர்களின் நெருங்கிய நட்புநாட்டின் பெயரெ நவ்ருதான்.

நவ்ரு உலகின் குட்டி சைஸ் தீவு நாடுகளில் ஒன்று. நீளம் ஐந்து கிமி, அகலம் நாலு கிமி. தீவின் பரப்பளவு எட்டு சதர மைல்தான். மக்கள் தொகை வெறும் 10,000. தென் பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா அருகே உள்ளது.

நவ்ரு

நவ்ரு

அப்காஸியா ஜார்ஜியாவில் இருந்து பிரிந்த குட்டி நாடு. அதன் மக்கள் தொகை 53,000. தமிழ்நாட்டின் ஒரு சின்ன கிராமத்தின் மக்கள் தொகைகூட இல்லாத அந்தக் குட்டி நாட்டை இதுநாள்வரை ரஷ்யா மட்டுமே அங்கீகரித்து இருந்தது.

திடீர் என நவ்ரு அப்காஸியாவை அங்கீகரித்தது மட்டுமில்லாமல் சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆன விழாவைக் கொண்டாட அப்காஸியா அதிபரை வரவேற்றது. ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா மாதிரி உலக நாடுகளின் அதிபர்கள் மத்தியில் தன்னையும் ஒரு அதிபராக மதித்து அழைத்து அமர வைத்து சிறப்பித்ததை எண்ணி அப்காஸியா அதிபர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

அவரும் நவ்ரு அதிபரைத் தன் நாட்டுக்கு அழைக்க 10 பேர் அடங்கிய அமைச்சர்கள் குழு அப்காஸியாவுக்குத் தனி விமானத்தை அமர்த்திக்கொண்டு போனது. நியூ யார்க்கில் இருந்து நவ்ருவின் அமெரிக்கத் தூதரும் அங்கே அழைக்கப்பட்டிருந்தார்.

எல்லாரும் ஒரு மேஜையில் அமர்ந்து ‘இரு நாட்டு உறவுகளை எப்படி மேம்படுத்துவது?’ என சீரியசாக டிஸ்கஷன் பண்ணினார்கள். நவ்ருவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என அமெரிக்கா, ஆஸ்திரேலியா எல்லாம் பல்லை நறநறக்க அதன்பின் தைவான் அந்த ரகசியத்தைப் புட்டு, புட்டு வைத்தது. ‘அவங்க எங்களை அங்கீகரிக்கணும்னு பல ஆன்டுகாலமா அவங்க எம்பிக்களுக்கு மாதா, மாதம் ஐயாயிரம் டாலர் ‘தேர்தல் நிதி’ கொடுத்துகிட்டு இருக்கோம்’.

இப்ப எம்பிக்களின் மாத வருமானம் டபிள் ஆகியிருக்கும்.

நவ்ருவை வெச்சு இப்படி எல்லோரும் காமெடி செய்துகொண்டு இருந்தாலும் நவ்ரு ஒரு காலத்தில் ரொம்பவும் வசதியாக இருந்த ஒரு நாடு. பாஸ்பேட் வளம் தீர்ந்ததும், மறுபடி ஏழை நாடாக மாறிவிட்டது. தீவு வட்டமான சைஸில் இருக்கும். ஒட்டுமொத்தத் தீவையும் 15 நிமிடத்தில் காரில் சுற்றி வந்துவிடலாம். தீவைச் சுற்றி மட்டுமே நாட்டின் ஒரே ஒரு சாலை போகிறது. ஒட்டுமொத்தத் தீவும் அந்தச் சாலையை சுற்றிதான் இருக்கிறது.

நவ்ரு தீவைச் சுற்றி மட்டுமே போகும் நாட்டின் ஒரே ஒரு சாலை

நாட்டில் டிராபிக் லைட்டே கிடையாது. ஸ்பீட் லிமிட் மணிக்கு 40 கிமிதான். போரடித்தால் மக்களின் ஒரே பொழுதுபோக்கு கார், ஸ்கூட்டர் என கிடைத்ததில் ஏறி தீவை சுற்றி வலம் வருவதுதான்.

தீவைச் சுற்றி அழகான தெற்கு பசிபிக்கின் சொர்க்கம் மாதிரியான பீச்சுகள் இருந்தாலும், தீவின் தொலைவு காரணமாக ஆண்டுக்கு 200 சுற்றுலா பயணிகள் வந்தாலே அதிசயம்தான். அதனால் தீவில் இரு ஓட்டல்கள்தான் உள்ளன.

இயற்கையாக வரும் தென்னை மரம் தவிர்த்து விவசாயம் பெருசாக இல்லை. மீனும் தேங்காயும் முக்கிய உணவுகள். கோகநட் ஃபிஷ் எனச் சொல்லி தேங்காய் செதில்களில் மீனைப் போட்டு புரட்டி எடுத்து மசாலா தடவி எண்ணெயில் பொறித்துச் சாப்பிடுவார்கள். இந்தத் தீவின் ஸ்பெஷல் உணவு அது. பலவகை மீன்களை க்ரில் செய்து சாப்பிடுவார்கள். பந்தன் பழம் என ஒரு சுவையான பழம் கிடைக்கும்.

தீவில் எதுவும் விளைவது கிடையாது. எல்லா உணவும் கப்பல்கள் வழியாகதான் வரவேண்டும். அதனால் காய்கறிகளை அவர்கள் பார்ப்பதே கடினம். தீவின் தேசிய உணவு சமைத்த அரிசி மேல் கேனில் இருக்கும் இறைச்சியைக் கொட்டி, அதன் மேல் ரெண்டு பொறித்த முட்டையை வைத்து சாப்பிடுவதுதான்.

காய்கறிகள் சரிவர கிடைப்பதில்லை என்பதால் தீவில் ஒபிசிட்டி அதிகம். 90% மக்கள் உடல் பருமனாக இருப்பார்கள். அதுவும் சாதாரண பருமன் அல்ல. மூணு ஆள் எடையை ஒருவரே சுமந்துகொன்டு இருப்பார்கள். ஆனால் அதை எல்லாம் சரி செய்ய சரியான உணவு இல்லையே? எல்லாம் கேனில் அடைத்த உணவும், பொறித்த உணவும்தான். மாலை வேலையில் தீவின் ஒரே ஏர்போர்ட்டில் வாக்கிங் போவதும் பெரிய, பெரிய ஸ்பீக்கர்களில் பாட்டுப் போட்டி நடத்துவதும், பிங்கோ ஆடுவதும்தான் பொழுதுபோக்கு.

வாக்கிங் செல்லும் நவ்ரு மக்கள்

திரையரங்கம் எதுவுமில்லை. அதனால் யுடியூப் மாதிரி தளங்கள் தவிர்த்து கப்பல்களில் வரும் டிவிடிக்கள் மூலம்தான் படம் பார்க்கமுடியும். தீவின் முக்கிய வருமானம் மீன், தேங்காய் ஏற்றுமதி. ஆஸ்திரேலிய அரசு தீவின் நடுவே பெரிய ஜெயிலைக் கட்டி வைத்து, ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளை அங்கே கொன்டு வந்து அடைக்கிறது. இதன்மூலம் நவ்ருவுக்கு ஒரு நல்ல தொகை வருமானம் வருகிறது.

எங்கோ இராக், ஆப்காஸ்னிதான், இலங்கை எனப் பலநாட்டு மக்கள் படகுகளில் ஏறி அகதியாக ஆஸ்திரேலியா வருவார்கள். ஆஸ்திரேலியா அவர்களைப் பிடித்து வந்து அடைக்கும் தீவுகளில் நவ்ருவும் ஒன்று.

ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக போக முயன்றால் நவ்ரு ஜெயிலுக்கு போகவேண்டியிருக்கும் எனப் பயந்து அகதிகள் பலரும் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிபோகும் ஐடியாவையே கைவிட்டுவிட்டார்கள்.

தீவில் பெரியதாக குற்றம், கொலை, கொள்ளை என எதுவுமில்லை. பார்க்கவும் எதுவுமில்லை. தீவின் பெரிய வேலைவாய்ப்பு என்பது அரசு வேலைதான்.

ஆஸ்திரேலியா, ரஷ்யா, தைவான் இப்படி பல நாடுகள் பசிபிக் கடலில் முக்கியமான இடத்தில் இருக்கும் நாடு என்பதால் இவர்களுக்கு நிதி உதவி செய்கின்றன.

நவ்ரு குடிமகனாக இருந்தால் பரபரப்பில்லாமல் காலையில் எழுந்து டிராபிக் இல்லாத சாலைகளில் ஆபிசுக்கு போய் வேலை பார்த்துவிட்டு, மாலையில் டின்னருக்கு தேங்காயில் பொறித்த மீனைச் சாப்பிட்டுட்டு விமான நிலையத்தில் வாக்கிங் போகலாம். ஆடலாம். பீச்சுக்கு போய் நீச்சல் அடிக்கலாம், மீன் பிடிக்கலாம். குடும்பத்துடன் டிவிடியில் பழைய படங்களைப் பார்க்கலாம்.

உணவகம் என்று பெரிதாக எதுவும் கிடையாது. பணத்தைச் செலவு செய்ய எந்த வழியும் கிடையாது.

உங்க உயிர் நண்பர்கள், எதிரிகள், சொந்தம், பந்தம், முன்னோர் வரலாறு, அலுவலகம், பள்ளி எல்லாமே எட்டு சதுர மைல் பரப்பளவில் இருப்பார்கள். சொர்க்கம் மாதிரி தீவில் ஜாலியான, ஆனால் போரான ஒரு வாழ்க்கை.

‘ஐ லைக் திஸ் ரிலாக்ஸ்ட் லைஃப்’ என்றால் உடனடியாகக் கிளம்பிவிடுங்கள் நவ்ருவுக்கு.

0

பகிர:
nv-author-image

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *