Skip to content
Home » பூமியும் வானமும் #16 – ஜப்பானையும் இரானையும் ஏன் கைப்பற்ற முடியவில்லை?

பூமியும் வானமும் #16 – ஜப்பானையும் இரானையும் ஏன் கைப்பற்ற முடியவில்லை?

ஜப்பான் வணிகம் - டச்சுகாரர்கள்

ஜப்பான், 1543

போர்ச்சுகீசிய கப்பல்கள் இரண்டு ஜப்பானை அடைகின்றன. விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் பெருகுகிறது. ஜப்பானின் நாகசாகி நகரம் போர்ச்சுகீசியரின் முக்கியத் துறைமுகமாக இருக்கிறது. ஜப்பானில் கிறிஸ்தவமும் அவர்கள்மூலம் பரவுகிறது.

ஜப்பானிய ஷின்டோ சமயத்தில் மன்னர் தெய்வாம்சம் உள்ளவராகக் கருதப்படுகிறார். ஆனால் கிறிஸ்தவத்தில் மன்னரைக் கடவுளாக ஏற்கும் வழக்கம் இல்லை. இதனால் போர்ச்சுகீசியர்களுடன் மோதல் தொடங்கியது. ஆனால் அவர்கள்மூலம் நல்ல வர்த்தகம் நடைபெற்றதால் அவர்களை முழுமையாக வெளியேற்றவும் முடியவில்லை.

இந்தச் சூழலில் டச்சுகாரர்கள் வருகிறார்கள். ‘போர்ச்சுகீசியர்கள் செய்த அதே வணிகத்தை நாங்களும் செய்து கொடுக்கிறோம். மதத்தைப் பரப்ப மாட்டோம் என உறுதிமொழி கொடுக்கிறோம்’ என்கிறார்கள்.

அதன்பின் முழுமையாக போர்ச்சுகீசியர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்து கிறிஸ்தவ மதத்துக்குத் தடையும் விதிக்கிறது ஜப்பான். இதை எதிர்த்து ஜப்பானியக் கிறிஸ்தவர்கள் புரட்சியைத் தொடங்குகிறார்கள். நாகசாகி அருகே ஷிம்பாரா எனும் கோட்டைக்குள் புகுந்து கொள்கின்றனர். அந்தக் கோட்டையின் பின்புறம் கடல், முற்புறம் திறந்தவெளி.

37,000 கிறிஸ்தவர்கள். அவர்களை எதிர்த்து 1.25 லட்சம் சாமுராய்கள். முற்றுகை  துவங்குகிறது. சாமுராய்களின் தலைவன் இடாகுரா ஷிகமேசா (Itakura Shigemasa) வழக்கம் போல சாமுராய் வாள், வில் அம்புடன் மோத, கிறிஸ்தவர்கள் கோட்டைக்குள் இருந்து போர்ச்சுகீசிரியர்கள் கொடுத்த நவீன மாட்ச்லாக் துப்பாக்கிகளுடன் போரிடுகிறார்கள்.

சாமுராய்களுக்கு தோல்வி மேல் தோல்வி. கோட்டை மேல் தொடர்ந்த தாக்குதல்கள் அனைத்தும் பெரும் உயிரிழப்பில் முடிகின்றன. இடாகுரா ஷிகமேசாவும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லபட, சாமுராய்களின் படை சிதறும் சூழல் ஏற்படுகிறது.

மட்சுடைரா நொபுட்சுனா (Matsudaira Nobutsuna) எனும் புதிய சாமுராய் தலைமை பொறுப்பை ஏற்கிறான். அவன் டச்சுகாரர்களை அழைத்து கப்பல்களில் இருந்து கோட்டையைப் பின்னால் இருந்து பீரங்கிகளால் தாக்கச் சொல்கிறான். அவர்களும் சகக் கிறிஸ்தவர்களைக் கொல்வதா எனத் தயங்கவில்லை. ஜப்பானில் நுழைய இது ஒரு வாய்ப்பு. அதேபோல கோட்டையை அவர்கள் பின்னால் இருந்து தகர்க்கிறார்கள்.

கோட்டை இடியும் சூழலில் கிறிஸ்தவர்களிடம் இருந்து சாமுராய்களுக்கு ஒரு செய்தி வருகிறது. ‘37,000 பேரை எதிர்த்து 1.25 லட்சம் சாமுராய்களால் ஜெயிக்க முடியாமல் வெளிநாட்டவனிடம் உதவி கேட்கிறீர்களே? சாமுராய் வீரம் அவ்வளவுதானா?’

மற்றவர்களாக இருந்தால் அதைப் பொருட்படுத்தி இருக்கமாட்டர்கள். ஆனால் சாமுராய்களுக்கு இம்மாதிரி விஷயங்களில் மான உணர்ச்சி மிக அதிகம். டச்சுக்காரர்களைப் போகச் சொல்லிவிட்டு வெற்றியோ, தோல்வியோ நாமே பார்த்துக்கொள்வோம் என முடிவெடுக்கிறார்கள்.

அதன்பின் உத்தியை மாற்றி ‘ஏதோ ஒரு சமயம் துப்பாக்கியில் குண்டுகள் தீரத்தான் செய்யும். அவர்களின் குண்டுகள் தீரும் வரை போக்கு காட்டுவோம்’ எனச் சொல்லி  மரத் தடுப்புகள், மரக் கேடயங்களை அமைத்து அவற்றின் பின்னிருந்து கோட்டையைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

கோட்டைக்குள் குண்டுகளும் உணவும் தீர்ந்து போகிறது. அதன்பின் கோட்டைக்குள் சாமுராய் படைகள் நுழைகின்றன. கடும் போரின் முடிவில் கோட்டை சரண் அடைகிறது. 27,000 கிறிஸ்தவர்கள் உயிரை இழக்கிறார்கள். 22,000 சாமுராய்கள் இறந்தனர்.

அதன்பின் ஜப்பான் வணிகம் முழுக்க டச்சுகாரர்கள் கையில் வருகிறது. வாக்குறுதி அளித்தபடி அவர்கள் எந்தச் சமய பிரசாரத்திலும் ஈடுபடவில்லை. அடுத்த 250 ஆண்டுகளுக்கு டச்சுகாரர்களைத் தவிர்த்து அனைத்து ஐரோப்பியர்களுக்கும் கதவை மூடுகிறது ஜப்பான்.

‘காசேதான் கடவுளடா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா’ எனப் பாடியபடி காலனிய வணிகத்தில் திளைக்கின்றனர் டச்சுகாரர்கள்.

இரான்

பாரோக்களின் எகிப்து, கிரேக்கப் பேரரசு, ரோமானியப் பேரரசு, ஆட்டோமான் துருக்கி… என 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகின் பலம் வாய்ந்த பேரரசுகளின் பரம எதிரி இரான். இரானை வென்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எப்படி ஒரு நாட்டால் இத்தனை பேரரசுகளை எதிர்த்து நிற்க முடிந்தது?

காரணம் இரானின் புவிவியல்.

இரானுக்கும் இராக்குக்கும் இடையே ஜக்ரோஸ் மலைத்தொடர் உள்ளது. 900 கிமி நீளம், 240 கிமி அகலம். இந்த மலைத் தொடரின் கணவாய்களில் படைகளைச் சரியாக கணக்கிட்டு நிறுத்தினால் எத்தனை பெரிய பேரரசின் படைகளையும் சிறு படைகளைக் கொண்டு சமாளிக்கலாம்.

அப்படியும் மலையைத் தாண்டி வந்தால் இரு மிகப்பெரும் பாலைவனங்கள் உள்ளன. அதில் ஒன்று உப்பு பாலைவனம். 800 கிமி நீளம், 320 கிமி அகலம். இந்தப் பாலைவனத்தில் படைகளை முன்னேற்றிச் செல்வது இயலாத காரியம். முழுக்க சேற்று நிலம், அதை மூடி இருக்கும் உப்புப் பாறைகள். அதன் மேல் செல்லும் தேர்கள், குதிரைகள், டாங்கிகள் அனைத்தையும் அப்படியே அலேக்காக விழுங்கும் தன்மை கொண்டது இது.

ஜக்ரோஸ் மலைக்கு மேற்கே இராக்குக்கு அருகே தெற்கே சிறியதாக ஒரு 125 மைல் பரப்பு காணப்படுகிறது அல்லவா? மேற்கே இருந்து (இராக் வழியே) தாக்குபவர்களால் இந்தப் பகுதியைத்தான் கைப்பற்ற முடியும். ஆனால் அதுவும் எளிதல்ல. ஏனென்றால் அது முழுக்க சதுப்பு நிலம்.

ஆக மேற்கே இராக் வழியே இருந்து இரானைத் தாக்கிக் கைப்பற்றுவது கிட்டத்தட்ட இயலாத காரியம். அதைச் செய்தவர் அலெக்சாண்டர். ஆனால் அவரும் மிகவும் திண்டாடிவிட்டார். வெறும் 700 வீரர்களைக் கொண்ட ஒரு பாரசீகப் படைப் பிரிவு கணவாய்கள் வழியே தாக்குதல் நடத்தி அவரை மாதக் கணக்கில் திண்டாட வைத்தது.

இறுதியில் கிட்டத்தட்ட படுதோல்வி எனும் நிலையில், பிடிபட்ட கைதி ஒருவன் கணவாய் குறுக்கு வழியைக் காட்டிக்கொடுக்க, அலெக்சாண்டர் அதன்வழியே சென்று பின்னே இருந்து தாக்கி அந்தப் படைப்பிரிவை அழித்தார்.

இரான் இராக் போர் எட்டு வருடம் நடக்க காரணமும் இதுதான். இருதரப்பும் மாறி, மாறி அந்தச் சதுப்பு நிலப் பகுதியை கைப்பற்றுவார்கள். ஆனால் அதைத் தாண்டி அமைந்துள்ள ஜக்ரோஸ் மலையைக் கடந்து இரானுக்குள் நுழைய இராக்கால் முடிந்ததில்லை.

மலைக்குள் நுழைந்தால் கொரில்லா தாக்குதல் நடத்தி இரான் அவர்களை விரட்டும். இரானாலும் மலைகளில் டாங்கிகள், பீரங்கிகளை எளிதில் கொண்டு வந்து இராக்கைத் தாக்க முடியாது.

ஆக இருதரப்புக்கும் இடையே ஸ்டேல்மேட் எட்டு ஆண்டுகள் நீடித்தது. ஒருவரின் கை ஓங்கினால் மறுதரப்பு டிஃபன்ஸ் ஆடி டிரா செய்துவிடும்.

ஒரு கட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா இருவரும் இணைந்து இராக்குக்கு ஏராளமாக ஆயுதங்களை கொடுக்க, மலைக் கணவாய்களில் இராக்கிய டாங்கிகள் நுழைய, வேறு வழியின்றி ‘மனித அலை’ எனும் பெயரில் மக்கள் கையில் துப்பாக்கிகள், கிரனைடுகளை எல்லாம் கொடுத்து டாங்கிகள் மேல் விழச் சொன்னது இரான். ஏராளமான பொதுமக்கள் இறந்தாலும், டாங்கிகளுக்கும் பெருத்த சேதம்.  ஒருமுறை இராக்கின்  ஆயிரம் டாங்கிகளை இப்படி மீட்டு கைப்பற்றி புதிய டாங்கி பிரிவையே உருவாக்கியது இரான்.

இராக் எல்லை அருகே பதுங்குக் குழிகளை ஏராளமாகத் தோண்டி அதனுள் வீரர்களை இறக்கி இரானியப் படை உள்ளே வராமல் செய்தார் சதாம்.

எட்டு ஆண்டுகள் போர் நீடித்தது. லட்சக்கணக்கில் உயிர்ச் சேதம். இராக் ஜிடிபியில் 75% போருக்கு மட்டுமே செலவானது. யாருக்கும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்த போர் அது.

இரு வல்லரசுகளும் இராக்குக்கு உதவியும் இரானை அவர்களால் வெல்ல முடியவில்லை. இரானின் புவியியல் இரானைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது.

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *