Skip to content
Home » பூமியும் வானமும் #17 – வேம்பயர்களின் சொர்க்கம்

பூமியும் வானமும் #17 – வேம்பயர்களின் சொர்க்கம்

Alaska

யாருமே அணுகமுடியாத வனாந்திரத்தில், பூமியின் கடைக்கோடியில் ஒரு பெரிய கட்டடம். அதில் 300 அபார்ட்மெண்டுகள். அதை விட்டு வெளியே கால் பதிக்க முடியாது. காரணம் பனிப்பொழிவு, குளிர்.

ஆண்டு முழுக்க அந்த அபார்ட்மெண்டில்தான் வசிக்கவேண்டும். ஆனால் உள்ளேயே மளிகை, மருத்துவ வசதி, ஜிம், சர்ச், தபால் ஆபிஸ், பள்ளி, காவல் நிலையம், ஓட்டல் எல்லாம் இருக்கிறது.

நல்ல சம்பளம். ஆனால் அதைச் செலவு எல்லாம் பண்ணமுடியாது. காரணம் அங்கே அமெசான் டெலிவரி எதுவும் கிடையாது. அபார்ட்மெண்ட் கட்டடத்தில் உள்ள மளிகைக்கடையில் உள்ள சில ஸ்வெட்டர்கள், உடைகள்தான் வாங்கமுடியும். ஆக என்ன செலவு செய்யப் போகிறீர்கள்? சம்பளம் முழுக்க சேமிப்புதான்.

0

விட்டியர், அலாஸ்கா (Whittier, Alaska). இரண்டாம் உலகப் போர் சமயம் அலாஸ்காவில் அமெரிக்க அரசு கடற்படைக்காக ஒரு துறைமுகத்தைக் கட்டியது. கடற்படையினர் தங்க ஒரு அபார்ட்மெண்ட் கட்டப்பட்டது.

1960களில் கடற்படை அந்த இடத்தைக் காலி செய்தது. ஆனால் அந்தத் துறைமுகத்தை க்ரூஸ் வரும் சுற்றுலா கப்பல்கள் பயன்படுத்த ஆரம்பித்தன. சரக்குக் கப்பல்களும் பயன்படுத்துகின்றன.

விட்டியரில் ஆண்டு முழுக்க வசிப்பவர்கள் என 250 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அனைவரும் அந்த ஒரே அபார்ட்மெண்ட் கட்டடத்தில்தான் தங்கள் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். கோடையில் க்ரூஸ் கப்பல்கள் வரும் காலத்தில் தற்காலப் பணியாளர்கள் மூலம் மக்கள் தொகை அதிகரிக்கும். ஆனால் சில மாதங்களில் அவர்கள் போய்விடுவார்கள்.

ஆன்டுக்கணக்கில் அபார்ட்மெண்ட் கட்டடத்தைவிட்டு வெளியே போகாதவர்களும் அங்கே இருக்கிறார்கள். வீடு, நண்பர்கள், மளிகைக்கடை, ஜிம், சர்ச்… டிவி, இணையம் என்று எல்லாமே கை எட்டும் தொலைவில் இருப்பதால் வெளியில் போகவேண்டிய அவசியமே ஏற்படவில்லை.

விட்டியர், அலாஸ்கா
விட்டியர், அலாஸ்கா

பிள்ளைகள் காலையில் எழுந்து சாப்பிட்டுவிட்டு அபார்ட்மெண்டில் உள்ள பள்ளிக்கு தாமே போய்விடுவார்கள். டிராபிக் ஜாம் என்பது காலையில் பணி நேரத்தில் லிஃப்டுகளில் ஏற்படுவதுதான். எல்லாமே ஒரே கட்டடத்தில் கிடைப்பதால் பலருக்கும் கார்கள் இல்லை. துணி, பர்னிச்சர் எதாவது வாங்கவேண்டுமெனில் காரை எடுத்துக்கொண்டு தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்குச் செல்லவேண்டும். சுரங்கம் திறக்கும் அந்த 1 மணி நேரத்தை மிஸ் பண்ணினால் காரிலேயே படுத்துத் தூங்கவேண்டும்.

எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும். அதனால் குற்றங்கள் எதுவும் இல்லை. யாருமற்ற வனாந்திரத்தில் ஒரே கட்டடத்தில் ஆயுள் முழுக்க வசிக்கவேண்டி இருப்பது வரமா, ஜெயில் தண்டனையா என அவர்களுக்கே குழப்பம்தான். அதனால் பலரும் ‘விட்டியரின் கைதி’ என்ற வாசகம் பொறித்த டிசர்ட்டை போட்டுக்கொன்டு இருப்பார்கள்.

0

வேம்பயர்கள் மனித ரத்தத்தைக் குடிப்பவை. ஆனால் சூரிய வெளிச்சம் அவற்றின் மேல் பட்டால் கருகி சாம்பலாகிவிடும். அதனால் இரவு நேரத்தில்தான் வேம்பயர்கள் வெளியே வரும்.

இப்படி இருக்கையில் ஆண்டுக்கு 2 மாதம் சூரியனே உதிக்காத ஊருக்கு அவை குடிபோனால் என்ன ஆகும்? அதுவும் அந்த ஊருக்கு சாலைகளே இல்லை. கடுமையான பனிப்பொழிவு விழுவதால் அந்த ஊருக்கு விமானங்களும் வராது. சுற்றி இருக்கும் சமுத்திரமே குளிரால் உறைந்துவிடுவதால் படகுகள், கப்பல்கள் எதுவும் வரமுடியாது.

அந்த ஊரில் 2 மாதம் தங்கி இருந்து ஊர் மக்களை எல்லாம் ரசித்து, ருசித்து சாப்பிட்டு ஜாலியாக இருக்கலாம் அல்லவா?

இதெல்லாம் என்ன கற்பனை என டென்ஷன் ஆகவேன்டாம். இது ஒரு புகழ் பெற்ற நாவல் மற்றும் சினிமாவின் கதை (30 Days of Night). கதையில் வரும் வேம்பயர்கள் பொய்யே தவிர அப்படி ஓர் ஊர் இருக்கத்தான் செய்கிறது.

அங்கே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18 அன்று மறையும் சூரியன் மீன்டும் ஜனவரி 23 வரை உதிக்காது. பகல் எல்லாம் இரவுதான்.

இது என்ன ஊர்?

பேரோ, அலாஸ்கா (Barrow, Alaska). அமெரிக்காவின் வடதுருவ பகுதியின் வடக்கு எல்லையில் கடைசியாக இருக்கும் ஊர். 55 சதுர கிமி பரப்பளவு. ஆனால் அதில் நாலாயிரம் பேர்தான் வசிக்கிறார்கள்.

வடதுருவத்தின் ஆர்டிக் சர்க்கிளில் இந்த ஊர் இருக்கிறது. வட துருவத்தில் இருந்து 800 கிமி தொலைவுதான். மிகக் கொடுமையான, கொடூரமான குளிர் அடிக்கும் ஊர். நவம்பரில் இருந்து பிப்ரவரி வரை சராசரியாக மைனஸ் 24 டிகிரி செல்ஷியஸ் குளிர் அடிக்கும். ஜூலைதான் வெப்பமான மாதம். ஆனால் அப்போதும் ஐந்து டிகிரி செல்ஷியஸ்தான் வெப்பம் இருக்கும்.

மே 10 அன்று உதிக்கும் சூரியன் ஆக்ஸ்ட் 2 வரை மறைவதில்லை. ஆண்டுக்கு 83 நாட்கள் 24 மணிநேரமும் சூரிய வெளிச்சம். நள்ளிரவில் சூரியன் இருக்கும். சுள்ளென வெயில் அடிக்கும். கடிகாரத்தைப் பார்த்தால் இரவு 12 மணி எனக் காட்டும்.

பேரோ, அலாஸ்கா
பேரோ, அலாஸ்கா

உலகின் மிக வடக்கே இருக்கும் சீன உணவகம் இங்கேதான் இருக்கிறது. உலகின் மிக விலை உயர்ந்த சீன உணவகமும் இதுதான் எனச் சொல்வதுண்டு. புல் பூண்டு கூட விளையாத பகுதியில் ஆன்டுக்குச் சில மாதங்கள் மட்டுமே விமானம் இயங்கும். கப்பல் மூலம்தான் அனைத்து உணவுப்பொருளும் வரவேண்டும் என்பதால் விலை கூடுதலாகத்தான் இருக்கும்.

சீல், வால்ரஸ், திமிங்கிலம், பனிக்கரடி போன்றவற்றை மக்கள் வேட்டையாடி உண்பார்கள். ஆயிரமாயிரம் வருடமாக அப்படித்தான் புசித்து வந்திருக்கின்றனர். தவிர சுற்றுலா மூலம் வரும் வருமானமும் உன்டு.

இந்த ஊருக்கு யார் சுற்றுலா வருவார்கள்? பூமியின் வடபகுதியில் இருப்பதால் அரோரா எனும் துருவ ஒளி இங்கே பிரகாசமாக இருக்கும். சூரியனின் ரேடியேஷன் பூமியின் மின்காந்த அலைகளுடன் மோதுகையில் வரும் கண்கொள்ளாக் காட்சி அது.

இரவு நேரம் காண ரம்மியமாக இருக்கும். குறிப்பாக ஜப்பானில் இருந்து இதைப் பார்க்க ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் அலாஸ்காவுக்கு வருவார்கள். அவர்களின் இந்தத் துருவ ஒளி பைத்தியம் அலாஸ்காவுக்கு நல்ல வருமானமாக அமைந்துவிட்டது

தவிர அலாஸ்காவில் வரி எதுவும் கிடையாது. அரசே பெட்ரோல் எடுத்த பணத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சப்சிடி வழங்கும். இந்த ஊரில் மதுவுக்குத் தடையும் உன்டு. குளிர்காலத்தில் குடித்துவிட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளக்கூடாது எனச் சொல்லி ஊரே சேர்ந்து மதுவிலக்கு கொன்டுவந்துவிட்டது.

ஆக புவியியலின் சவாலை சமாளித்து இந்த மக்கள் இப்படி வாழ்ந்துகொன்டிருக்க, ஹாலிவுட் இவர்களை வைத்து வேம்பயர் படமாக எடுத்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்.

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *