1325ம் ஆண்டு. தற்போதைய மெக்சிகோ சிட்டி இருக்கும் பகுதிக்கு ஒரு நாடோடிக் கூட்டம் வந்து சேர்கிறது. ‘அஸ்டெக்’ எனப் பெயர். அப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஒரு பூர்வகுடி மன்னன் அவர்களை வரவேற்று தம் குடிமக்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டான். அஸ்டெக்குகளின் தலைவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்தும் வைத்தான். திருமணம் முடிந்ததும் ‘மாலையில் ஒரு சடங்கு இருக்கு. இரவு உணவுக்கு வரவேண்டும்’ என மன்னனை அழைக்க அவனும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டான்.
மணமகளை அழைத்துக்கொண்டு அஸ்டெக்குகள் தம் கோயிலுக்குப் போனார்கள். அங்கே மேடை மேல் பலிபீடத்தில் படுக்க வைத்தார்கள். அவர்களின் பூசாரி ஒரு கத்தியை உயர்த்தினார். அவளது நெஞ்சைக் கிழித்துத் துடிக்கும் இதயத்தை வெளியே எடுத்து தட்டில் வைத்து வழிபட்டார்.
மாலை, மன்னர் விருந்துக்கு வர மணமகன் மன்னரின் மகளின் தோலை உரித்து உடையாகத் தைத்து அணிந்துகொண்டிருந்தான். ஆவேசமடைந்த மன்னர் அவர்களைத் துரத்த அஸ்டெக்குகள் தப்பி ஓடினார்கள்.
அபோகாலிப்ஸோ படத்தில் வருவது போன்ற இந்த வழிபாட்டுமுறை அக்கால பூர்வகுடிகள் பலரிடம் இருந்த வழக்கம். இப்படி நரபலி கொடுத்தால்தான் மழை வரும், சூரியன் உதிக்கும் என நம்பிக்கொண்டு இருந்தார்கள். எதிரிகள், தம் குடும்பத்தினர், பிள்ளைகள்… என அனைவரையும் அவ்வப்போது பலிகொடுப்பார்கள். இறப்பவர்களும் ஆவி வடிவில் தம்முடனே இருப்பார்கள், மறுபிறவி எடுப்பார்கள் என நம்பினார்கள்.
அஸ்டெக்குகள் நாடோடி ஆகக் காரணம் அவர்களின் பூசாரியின் கனவில் வந்த கடவுள், ‘எங்கே கற்றாழை மேல் கழுகு உட்கார்ந்து இருக்கிறதோ, அதுதான் உங்களுக்கு நான் கொடுக்கும் புனித பூமி. அங்கே செல்லுங்கள்’ எனக் கட்டளை இட்டதுதான்.
தப்பி ஓடிய அஸ்டெக்குகள் ஒரு சதுப்புநிலத்தை வந்து அடைந்தார்கள். அங்கே ஒரு மிகப்பெரிய ஏரி. அதன் நடுவே தீவு. அதன்மேல் ஒரு கற்றாழை. அதன் மேல் ஒரு கழுகு! ‘கண்டோம் புனித பூமியை..!’ எனக் கொண்டாடினார்கள். அதன்பின் அந்தத் தீவில் ‘அமெரிக்காவின் வெனிஸ்’ எனச் சொல்லப்படும் ஒரு மாபெரும் நகரை அமைத்தார்கள். அன்றைய லண்டனைவிட ஐந்து மடங்கு பெரிய நகரம். உலகில் அதுபோன்ற நகரம் எங்கேயும் இல்லை எனச் சொல்லும் அளவுக்குப் பிரமிடுகள், ஆலயங்கள், வீடுகள், பாலங்கள் அமைத்தார்கள். மலையின் மேல் பாபிலோன் தொங்கும் தோட்டத்துக்கு ஒப்பான தோட்டத்தை அமைத்தார்கள். அதற்கான தண்ணீரை கால்வாய் மூலம் கொண்டுவந்தார்கள்.
அஸ்டெக்குகள் கட்டிய பிரமிடு எகிப்தின் கீஸா பிரமிடுக்கு ஒப்பானது. அதைவிடப் பெரிய கட்டடம் அன்றைய ஐரோப்பாவில் எங்கேயும் இல்லை. ரோமானியப் பேரரசை மிஞ்சும் வண்ணம் கட்டடக் கலை, பேரரசை விரிவாக்கல், கலை, நாகரிகம் எனச் செழித்து விளங்கியது அஸ்டெக் பேரரசு.
கோர்டேஸ் எனும் ஸ்பானியத் தளபதி வந்து அஸ்டெக் தலைநகரைப் பார்த்துப் பிரமித்து நின்றான். ஏதோ காட்டுமிராண்டிகள் வசிக்கும் பகுதி என்றுதான் ஸ்பெயினுக்கு அமெரிக்காவைப்பற்றிச் சொல்லப்பட்டு இருந்தது.
கோர்டேஸ் அஸ்டெக்குகளை வீழ்த்தக் காரணம் போர்த் திறமை அல்ல. ஸ்பானியர்களிடம் இருந்து பிளேக் நோய் பரவிக் கிட்டத்தட்ட முக்கால்வாசி அஸ்டெக் பேரரசு பிளேக்கால் அழிந்தது. பிளேக் எப்படிப் பரவும் என்பது ஸ்பானியர்களுக்கும் தெரியாது. அஸ்டெக்குகளுக்கும் தெரியாது.
பிளேக்கால் அழிந்த நிலையில் அஸ்டெக் பேரரசு வீழ்ந்தது. அவர்களின் தலைநகரைப் பிடித்த ஸ்பானியர்களுக்குச் சதுப்புநிலத்தின் ஏரிக்கு நடுவே இருந்த தீவை மெய்ன்டெய்ன் செய்யத் தெரியவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக ஏரியை அழித்தார்கள். ஏரிக்கு நடுவே நகரம் பரந்து விரிந்தது. அதுதான் இன்றைய மெக்சிகோ சிட்டி.
இன்றைய மெக்சிகோ சிட்டி பல லட்சம் மக்கள் வாழும் பெருநகரமாக இருப்பினும் அங்கே தண்ணீர்ப் பற்றாக்குறைதான். ஏரியை அழித்ததால் மழைக்காலத்தில் நகரம் வெள்ளக்காடாகும். நிலத்தடி நீரை எடுப்பதால் நகரின் கட்டடங்கள் கீழே அமிழ்ந்துகொண்டே போகும். அடிக்கடி பூகம்பம் வரும். கட்டடங்கள் சரியும்.
புவியியலை அஸ்டெக்குகள் வென்றதுபோல ஸ்பானியர்களால் வெல்ல முடியவில்லை. இத்தனை நூறு ஆண்டுகள் கழித்தும், இத்தனை தொழில்நுட்பம் வளர்ந்தும் அஸ்டெக்குகள் கையில் மெக்சிகோ இருந்தபோது இருந்ததன் சிறப்பில் ஒரு துளி இப்போது இல்லை. ஆனால் கேட்டால் அஸ்டெக்குகள் காட்டுமிராண்டிகள் என்பார்கள்.
0