Skip to content
Home » பூமியும் வானமும் #22 – மலை, நதி, களிமண், நாணல்

பூமியும் வானமும் #22 – மலை, நதி, களிமண், நாணல்

கியூனிஃபார்ம் எழுத்து

தமிழகக் கிராமங்களில் இடி இடித்தால் ‘அர்ச்சுனா, அர்ச்சுனா’ என்று சொல்லும் வழக்கம் உண்டு. இடி, இடிக்கும் சத்தம் அர்ச்சுனன் தேர் ஓடுவது போல இருப்பதால் இப்படி ஒரு வழக்கம் வந்ததாக ஒரு கருத்து உண்டு.

அப்படியே தேரை திருப்பிக்கொண்டு துருக்கியின் டாரஸ் மலைகளுக்குச் செல்வோம். டாரஸ் என்றால் லத்தீனில் எருது என பொருள். இடி இடிக்கையில் டாரஸ் மலையில் அந்த இடிச் சத்தம் பட்டு தொடர்ந்து பல நிமிடம் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். அதை கேட்கையில் எருமைகள் ஓடுவது போல இருக்கும். அதனால்தான் அந்த மலைக்கு டாரஸ் மலை எனப் பெயர். அங்கே அடாட் (Hadad / Adad) எனும் மழைக்கடவுகளை வழிபட்டு வந்தனர். அவரது குறியீடு எருது.

அடாட் (Adad) - மழைக்கடவுள்
அடாட் (Adad) – மழைக்கடவுள்

இந்த டார்ஸ் மலையின் பனி உருகி இரு நதிகள் உருவாகின்றன. யூப்ரடிஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள். துருக்கி, சிரியா வழியே ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு ஓடி தெற்கு இராக்கில் கடலுடன் கலக்கின்றன. இந்த இரு நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிதான் இராக். இரு நதிகளுக்கு இடையே இருக்கும் நாடு என்பதை குறிக்கும் சொல் மெசபடேமியா. அதுதான் இதன் பழைய பெயர். ஆனால் அதற்கும் முந்தைய பெயர் ஒன்று உள்ளது. பாபிலோன், அதற்கும் முன்பு சுமேரியா.

தெற்கு இராக்கில் இரு நதிக்கரைகளிலும் ஏராளமான நாணல்கள் வளர்ந்திருக்கும். ஏராளமான களிமண்னும் கிடைக்கும். இந்தக் களிமண்ணை எடுத்து ஒரு டேப்லட் வடிவில், கூரான நாணலை எடுத்துதான் மனிதன் முதன்முதலாக எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகில் முதல் எழுத்து வடிவமான கியூனிஃபார்ம் எழுத்துகள் இங்கேதான் பிறந்தன.

கியூனிஃபார்ம் சித்திர வடிவிலான எழுத்து. ஓர் ஆளை குறிக்கவேண்டுமெனில் ஓர் ஆளை களிமண்ணில் வரைவார்கள். நாலு ஆட்டை குறிக்க ஆடு மாதிரி இருக்கும் சித்திர எழுத்துகளை நாலுமுறை தொடர்ச்சியாக வரைவார்கள்.

ஆக தெற்கு இராக்கில் சுமேரியாவில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு போல சித்திர எழுத்துக்கள் தோன்றின. பின்னாளில் எழுத்துவடிவம் பெற்றன.

ஒரு மணிக்கு 60 நிமிடம். ஒரு நிமிடத்துக்கு 60 நொடிகள். காலையில் 12 மணிநேரம், இரவில் 12 மணிநேரம். மாதங்கள் 12. இந்தத் தகவல்கள் அனைத்தும் சுமேரியர் உலகுக்கு அளித்த கொடை. சுமேரியரின் ஆன்டுக்கணக்கும் 60 ஆண்டு சுழற்சி அடிப்படையில் அமைந்ததே. இந்த அறுபது ஆண்டுக் கணக்கு சீனா, திபெத், இந்தியா, கொரியா, ஜப்பான் என பல நாடுகளுக்கு பரவியது.

சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியபின் அது சுமேரியாவுக்கு மிக அருகே இருந்தது. சிந்துநதி பகுதியில் இருந்து தெற்கு இராக்குக்குக் கப்பல்கள், படகுகள் சென்றன. மேலுகா என சிந்து சமவெளி மக்களை அவர்கள் அழைத்தார்கள். கால ஓட்டத்தில் சுமேரியா அழிந்தது. சிந்து சமவெளி நாகரிகமும் அழிந்தது. ஆனால் அதன் மக்கள் இந்தியா, இராக், இரான் எங்கும் பரவினார்கள். அவர்களால் பல புதிய நாடுகள், சமயங்கள், கலாசாரங்கள், மொழிகள் உருவாக்கபட்டன.

ஒரு மலை, இரு நதிகள், களிமண், நாணல்…. இவை மானுட இனத்தின் வரலாற்றை எப்படிச் செதுக்கியுள்ளன என்பதை அறிகையில் வியப்பாக இருக்கிறது அல்லவா?

0

1953.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த காரகோரம் கணவாய் மூடப்படுகிறது. எங்கேயும் இது பெரிய விஷயமாக இல்லை. காஷ்மிரில் மாட்டிக்கொண்ட ஷின் ஜாங் வணிகர்களைத் தவிர.

லடாக்கில்ன் வடக்கே காரகோரம் கணவாய் உள்ளது. காரகோரத்துக்கு மேற்கே சியாச்சின். கடக்க மிகவும் கடினமான பாதை. மிக உயரமான மலையில், ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் பகுதிகளில், குதிரைகளுக்கு உண்ண புல்கூட விளையாத பகுதி.

கடந்து வடக்கே போனால் அக்சாய் சின் – சீனாவால் பிடிக்கப்பட்ட காஷ்மிர் பகுதி. இதையொட்டிதான் 1962 இந்திய சீனா போர் நடந்தது. அக்சாய் சின்னில் புல், பூண்டு கூட விளையாது.

இந்த அக்சாய் சின்னைத் தாண்டி போனால் சீனாவின் ஜின் ஜாங் மாநிலம். மிக அருகே கிர்கிஸ்தான் நாடு. ஜின் ஜாங் மாநிலம் சீனாவைச் சேர்ந்திருந்தாலும் அதன் மக்கள் மத்திய ஆசிய மங்கோலிய-துருக்கிய வம்சாவழியினர்தான்.

‘சரி இந்த கதை எதுக்கு இப்ப?’ என நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. ஜின் ஜாங் மாநிலம், கிர்கிஸ்தான் நாடு எல்லாம் நம் இலக்கியங்களில் உத்திரகுரு எனும் பெயரால் அறியபட்டவை. சீதையைத் தேடி வடக்கே செல்லும் வானரங்களிடம் சுக்ரீவன் ‘வடக்கே இமயத்தைத் தாண்டினால் மாட்டுக்கறி உண்ணும் நாடுகள் வந்துவிடும். சக, யவன, உத்தர குரு, காம்போஜ நாடுகள் இருக்கும்…’ என்கிறான்.

சகர் என்பது மத்திய ஆசிய துருக்கிய நாடோடிகள். யவனர், தமிழ் இலக்கியங்களில் எல்லாம் வருபவர்கள். இன்றைய துருக்கி அன்று ஐயோனியா என அழைக்கபட்டது. ஐயோனியாவில் இருந்து வருபவர் யவனர் காம்போஜம் ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான். இங்கே இருந்து உத்தரப்பாதை எனும் பாதைவழியே இந்தியாவுக்குக் குதிரைகளை கொண்டுவந்து விற்பார்கள்.

ராமாயண காலம் முதலே காரகோரம் வழியே ஜின் ஜாங் கிர்கிஸ்தான் மக்கள் உத்தரகுரு எனும் பெயரில் வணிகத் தொடர்புகளுடன் இருந்திருக்கிறார்கள். 1953ல் சீனா காரகோரம் கணவாயை மூடுகையில் ஏராளமான ஜின் ஜாங் வணிகர்கள் காஷ்மீரில் மாட்டிக்கொண்டார்கள். அவர்கள் சீனாவுக்கு போகமாட்டேன் என சொல்ல, கடைசியில் துருக்கி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துக்கொண்டுவிட்டது.

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *