Skip to content
Home » பூமியும் வானமும் #23 – ஆயிரம் ஆண்டு தவறுகள்

பூமியும் வானமும் #23 – ஆயிரம் ஆண்டு தவறுகள்

ஐஸ்லாந்து பாலைவெளி

பிளாஸ்டிக் கனவுகள்

2018.

கொலம்பியாவில் இருக்கும் கான்செப்டோஸ் பிலாஸ்டிகோஸ் நிறுவனத்துக்கு யூனிசெஃப்பிடம் இருந்து ஒரு போன்கால் வருகிறது. கான்செப்டோஸ் பிளாஸ்டிகோஸ் கொலம்பியாவில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து ஹாலோபிளாக் கற்களை தயாரிப்பார்கள். இண்டர்லாக்கிங் முறையில் தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக் ஹாலோபிளாக்குகளைப் பயன்படுத்திக் கட்டும் கட்டடங்களின் சுவர்களுக்கு மணல், செங்கல் அவசியம் இல்லை. அஸ்திவாரத்துக்கு மட்டும் தேவை.

யூனிசெஃப் அவர்களிடம் ஒரு ஐடியாவை முன்வைக்கிறது. ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டில் கொடூரமான வறுமை நிலவுகிறது. அங்கே பள்ளிக் கட்டடங்கள் கட்ட அரசிடம் காசு இல்லை. நீங்கள் ஏன் அங்கே சென்று உங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளைக் கட்டக்கூடாது?

நிதி உதவிக்கான பணத்தை நாங்கள் கொடுக்கிறோம். அங்கே சிமெண்டு தொழிற்சாலைகள் இல்லை, போதுமான எஞ்சினியர்கள் இல்லை. உங்கள் தொழில்நுட்பம் மிக எளிமையானது. குறைந்த செலவில் பள்ளிகளைக் கட்டலாம்.

‘ஆனால் அத்தனை பிளாஸ்டிக்குக்கு எங்கே போக?’

‘ஐவரி கோஸ்டில் உள்ள அபிட்ஜான் எனும் நகரில் மட்டும் ஆண்டுக்கு 288 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. அங்கே ஒரு மகளிர் சுய உதவிக்குழு பிளாஸ்டிக்கை எல்லாம் சேகரிக்கிறது. அதை என்ன செய்வது என அவர்களுக்கும் தெரியவில்லை. நீங்கள் அவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் போதுமான பிளாஸ்டிக் கழிவுகள் கிடைக்கும்.’

2018ல் ஐவரி கோஸ்டில் முதலாவது பிளாஸ்டிக் பள்ளிக்கூட்டம் கட்டப்பட்டது. ஒரு பள்ளிக்கூடம் கட்ட அங்கே ஒன்பது மாதங்கள் ஆகும். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தில் வெறும் ஐந்தே நாட்கள்தான் ஆனது. இதன் வெற்றியைப் பார்த்துவிட்டு ஐவரி கோஸ்ட் அரசுக்கு ஒரே உற்சாகம். முதலாவது பிளாஸ்டிக் ரிசைக்ளிங் தொழிற்சாலை அமைய அனுமதி கொடுத்துவிட்டது. இதே மாடலில் 500 பள்ளிகள் கட்டபட்டன. 2030ஆம் ஆண்டுக்குள் 25,000 பள்ளிகளாக இந்த எண்ணிக்கை உயரவிருக்கிறது.

இந்த மறுசுழற்சித் தொழில்நுட்பம் மட்டும் இல்லையெனில் இத்தனை பள்ளிகளைக் கட்டுவது சாத்தியமே இல்லை. ஒரு சிறு தொழில்நுட்ப வளர்ச்சி, ஒரு தலைமுறையின் கல்விக்கண்ணைத் திறந்துவிட்டுள்ளது.

0

ஆயிரம் ஆண்டு தவறுகள்

1945.

ஐஸ்லாந்தின் வனத்துறை அதிகாரி அலாஸ்கா சென்றுவிட்டு இரு சூட்கேஸ்களுடன் திரும்பினார். மகராசனா போகட்டும், வரட்டும். அவர் எங்கே போனால் எனக்கு என்ன என கேட்கிறீர்களா?

இன்னும் கொஞ்சம் பழைய பிளாஷ்பேக்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வைக்கிங்குகள் ஐஸ்லாந்தில் வந்து இறங்குகிறார்கள். அதன் மூன்றில் இரண்டு பகுதி வனமாக இருந்தது. அத்தனை மரங்களையும் வெட்டி கப்பல் கட்டி உலகெங்கும் சுற்றினார்கள். நைட்ரஜன் மிகக் குறைவாக உள்ள மண் என்பதால் அங்கே மரங்கள் வளர்வது மிக சிரமம். 20ம் நூற்றாண்டில் ஐஸ்லாந்தின் வனப்பகுதி வெறும் 1.5% தான்.

நிலவு மாதிரி மரங்கள், புல், பச்சை எதுவுமே இல்லாத பாலைவெளி ஐஸ்லாந்து. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் எல்லாம் இங்கே வந்து நிலாவில் வாகனம் ஓட்டுவது எப்படி இருக்கும் எனப் பயிற்சி எடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஐஸ்லாந்தில் வேகமாகப் பரவக்கூடிய ஏதாவது செடிகளை இறக்குமதி செய்வதற்காக ஐஸ்லாந்து வனத்துறை அதிகாரி அலாஸ்கா சென்றார். சென்று லூபின் (Lupine) எனும் செடியின் விதைகளுடன் திரும்பினார்.

லூபின் ஓர் அதிசயமான பட்டாணி வகைச் செடி. அதில் வளரும் ஒருவகை பாக்ட்ரியா நைட்ரஜனை உள்ளே இழுத்து வேர்கள் வழியே நிலத்தில் செலுத்தும். மண்வளம் பெருகும். மணல்புயலால் சாலைகள் அடிக்கடி மூடபட்ட நிலை மாறியது. லூபின் கடினமான குளிரையும் தாங்கும். மண்புழுக்கள், நத்தைகள் மண்ணில் வளர்ந்தன.

லூபினை வைத்து சோயாபீன்ஸ் மாதிரி மாடுகளுக்கான உணவைத் தயாரிக்கும் ஆராய்ச்சி நடந்துவருகிறது. சிலவகை தோல்நோய்களுக்கும் அது மருந்து. விரைவில் லூபின் ஐஸ்லாந்தின் நிலபரப்பை மாற்றியபின் ஐஸ்லாந்து லூபின் ஏற்றுமதியைக்கூடப் பெருமளவில் துவக்கலாம்.

ஆக ஒரு தவறைச் சரி செய்ய ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

0

எருமையும் வன வளமும்

எருமைத்தோல் என்று சுரணையற்று இருப்பவர்களைத் திட்டுவோம். திபெத்திய எருமைகள் இந்திய எருமைகளைவிட கொடூரமான குளிரைத் தாங்கக்கூடியவை. யாக் என்று பெயர். ஐரோப்பிய, அமெரிக்க எருமைகளுக்கு பைசன் என்று பெயர். நம் ஊர் எருமைகளுக்கு இல்லாத அளவு அவற்றின் உடலெங்கும் கம்பளிப் போர்வை இருக்கும். கூடுதல் குளிரைத் தாங்கும். சுமார் மைனஸ் 40 டிகிரி அளவுக்கு.

ஒரு காலத்தில் பல மில்லியன் பைசன்கள் ஐரோப்பாவெங்கும் சுற்றித்திரிந்தன. பசுக்களால் தாங்க முடியாத குளிரை எருமைகள் தாங்கியதால் ஸ்பெயின் முதல் சைபீரியாவரை மக்களுக்கு ஏற்ற உணவாக இருந்தன. லட்சகணக்கான பைசன்கள் வரிசையாக நடந்து சென்றதால் கொடூரமான பனியில் நெடுஞ்சாலைகள் உருவாகின. அவற்றில் அம்மாதிரி பாதையை உருவாக்கும் வலிமையற்ற பல மிருகங்கள் நடந்து சென்றன.

தரை முழுக்க பனியாக இருந்தாலும் காலாலும் கொம்பாலும் பனியை அவை எட்டி உதைத்து, அகற்றி புல்லை உண்டன. அதனால் க்ளியர் ஆன பகுதிகளில் மற்ற சிறு மிருகங்கள் புற்களை உண்ணமுடிந்தது.

ஒரு எருமையின் எடை 800 கிலோ. ஒரு நாளைக்கு எட்டு லிட்டர் சாணியை வெளியேற்றும். மில்லியன் கணக்கில் பைசன்களின் சாணி உரமாகப் பொழிந்து மண்வளம் செழித்தது. அடர்ந்த காடுகளின் மரங்களின் இலைகளை அவை உண்டதாலும் கிளைகளை முறித்ததாலும் சூரிய வெளிச்சம் படமுடியாத அளவுக்குக் காடுகளால் மூடிக்கிடக்கும் வனப்பகுதிகளிலும் சூரியவெளிச்சம் உள்ளே புகுந்து மரங்களுக்குக் கீழே இருக்கும் செடிகளும் வளர ஆரம்பித்தன. தீப்பிடிக்கும் அபாயம் குறைந்தது.

ஆனால் மக்கள் தொகை பெருகப் பெருக எருமைகள் வேட்டையாடப்பட்டன. ஒரு கட்டத்தில் போலந்தின் ஒரே ஒரு காட்டில் மட்டும் 600 பைசன்கள் எஞ்சியிருந்தன. ரஷ்யாவின் காகசஸ் மலையில் சில தப்பிப் பிழைத்து இருந்தன. போலந்து மன்னர்கள் பைசனை வேட்டையாடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை விதித்ததால் அவை தப்பின. ஆனால் அவர்கள் நல்லெண்ணத்தில் எல்லாம் தடை விதிக்கவில்லை. அவர்களுக்கு வேட்டையாட பைசன்கள் வேண்டும். அதனால் ஒரு 600 எருமைகளை விட்டு வைத்தார்கள்.

இரண்டாம் உலகப் போரின் கொடூரமான பட்டினிச் சூழலில் ஜெர்மானியப் படைகள் அந்த 600 எருமைகளையும் சுட்டுத் தின்ன, ரஷ்யாவின் எருமைகளும் அழிய, இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயம் ஐரோப்பிய பைசன் முழுமையாக அழிந்த உயிரினமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் எங்கெங்கோ மிருகக்காட்சி சாலைகளில் தப்பிப் பிழைத்த 12 எருமைகளைப் பிடித்து வந்தார்கள். 1952ல் பண்ணைகளில் வைத்து பைசன்களின் இனப்பெருக்கம் துவங்கியது. இப்போது சுமார் 8500 ஆக அவற்றின் தொகை பெருகியுள்ளது. அவற்றைக் கொஞ்சம், கொஞ்சமாக ஐரோப்பியக் காடுகளில் விட்டு, ஜி.பி.எஸ் மூலம் கண்காணிக்கிறார்கள். சில லட்சம் பைசன்கள் உருவானால் மீண்டும் வன வளம் செழிக்கும் என்கிறார்கள்.

புவியியலே இப்படி ஒன்றை மற்றொன்று நம்பி இருக்கும் சுழற்சிதான்.

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *