நியூசிலாந்து
உலகிலேயே மனிதர்கள் கடைசியாகக் குடியேறிய நாடு என நியூசிலாந்தைச் சொல்லலாம். நியூசிலாந்தைப் பாலினேசியர்கள் கண்டுபிடித்துக் குடியேறுகையில் சுமாராக 13ஆம் நூற்றாண்டு இருக்கும். அதற்குமுன்? கிவி பறவைகள்தான் அந்தத் தீவில் சுற்றிக்கொண்டு இருந்தன. அதாவது தமிழகத்தில் ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன் ஆட்சி எல்லாம் நடந்து முடிந்த காலக்கட்டத்திலும்கூட நியூசிலாந்தில் மனிதனின் கால் தடம் பட்டிருக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளலாம்.
மனிதர்கள் மட்டுமல்ல, நியூசிலாந்து பெரிய மிருகங்களுக்கும் பூர்விகம் கிடையாது. கடல்வாழ் டால்பின்கள், திமிங்கிலங்கள், வவ்வால்கள்தான் அத்தீவின் இயற்கையான பாலூட்டிகள். மான், சிங்கம், பூனை, யானை உள்ளிட்ட எதுவும் அங்கே பூர்விகமா இல்லை. தீவில் தம்மை வேட்டையாட யாரும் இல்லாததால் கிவி பறவைகள்கூட பறப்பதை விட்டுவிட்டு நிலம்வாழ் பறவைகளாகிவிட்டன.
ஆஸ்திரேலியாவுக்குப் பக்கத்து நாடு என சொல்லிக்கொண்டாலும், ஆஸ்திரேலியா நியூசிலாந்தில் இருந்து 2000 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு நாடு. இந்தியாவில் இருந்துகொண்டு துபாய் என் பக்கத்து நாடு எனச் சொல்லிக்கொள்வதைப் போலத்தான் நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான தூரம். ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை எண்ணிக்கை குறைவு. நியூசிலாந்தில் அதைவிடக் குறைவு.
உத்தரப்பிரதேசம் அளவு பெரிய மாநிலத்தில், ஐம்பது லட்சம் பேர் வசிப்பதைக் கற்பனை செய்யமுடிந்தால் அதுதான் நியூஸிலாந்து. இங்கே 13ஆம் நூற்றாண்டில் பாலினேசியர்கள் குடியேறுகிறார்கள். வடக்கு, தெற்கு என இரு தீவுகள் இருக்கின்றன. விவசாய நிலம் வெகுக் குறைவு. ஆனால் புல்வெளிகள் மிக அதிகம். நாட்டின் 51% நிலபரப்பில் புற்கள்தான். அதனால் அங்கே எல்லோரும் செம்மறி ஆடுகளையும் மாடுகளையும் வளர்க்கிறார்கள். 51 லட்சம் பேருக்கு 2.5 கோடி செம்மறி ஆடுகள் உள்ளதால், மனிதர்களை விட ஐந்து மடங்கு செம்மறி ஆடுகள் அதிகமுள்ள நாடாக நியூசிலாந்து இருக்கிறது. இத்தனைப் புல்வெளிகள் இருப்பதால் கோல்ஃப் கிளப்புகளும் கூடுதலாக உண்டு.
நியூசிலாந்தின் பெரிய நகரம் ஆக்லாந்து. அங்கே மக்கள் தொகை வெறும் 16 லட்சம்தான். தலைநகரம் வெல்லிங்க்டன்.அங்கே 2.4 லட்சம் மக்கள் தொகை. ‘அத்திப்பட்டியில் கூட இதைவிட அதிகமான மக்கள் இருப்பார்களே. ஒரு நாட்டின் தலைநகருக்கு இவ்வளவுதான் மக்கள் தொகையா?’ எனக் கேட்கக்கூடாது. நாட்டு மக்கள் தொகையே சென்னையைவிட சரிபாதி குறைவுதான். பிறகு தலைநகரில் எத்தனைப் பேர் இருக்க முடியும்?
ஜப்பான்
ஜப்பான் என்றால் நான்கு பெரும் தீவுகள்தான். அந்த தீவுகளில் சிறியது ஷிகோகுத் தீவு. ஷிகோகுத்தான் ஜப்பானின் திருப்பதி, காசி, ராமேஸ்வரம் எல்லாம். அது ஒரு புனிதத்தீவு.
சுமாராக நாகாலாந்து அளவில் உள்ள அந்தத் தீவு முழுக்க 88 கோயில்கள் உள்ளன. அந்த 88 கோயில்களுக்கும் பாதயாத்திரைச் சென்று வழிபட்டு வருவது பக்தர்களின் வழக்கம். இதற்கு 45 நாட்கள் பிடிக்குமாம். அதிலும் வழியெங்கும் உள்ள புனித ஸ்தலங்கள், தீரத்தங்களில் நீராடி, வழிபட்டு, முழு யாத்திரையையும் முடிக்க 1400 கிலோ மீட்டர் பிடிக்கும் எனக் கணக்கிடப்படுகிறது. இதை வெள்ளையுடை அணிந்து பாத யாத்திரை மூலம் செய்வதே வழிமுறை.
இதை ஆயுளில் எட்டு முறை செய்யவேண்டும். ஏழுமுறை பிரதட்சணமாகவும், எட்டாம் முறை அபிரதட்சணமாகவும் தீவை வலம் வருவார்கள். ஷிகோகுத் தீவு முழுக்கப் பக்தர்களுக்கு என்று கட்டபட்ட மலிவு விலை ரயோகான் ஓட்டல்கள் இருக்கும். ஓட்டல்களுக்குள் சென்றதும் அவர்கள் நடக்க பயன்படுத்தும் தடியை வாங்கி கழுவிக் கொடுப்பார்கள். அதைக் கழுவுவதற்குப் போட்டியே நடக்கும்.
யாத்திரையை முடித்தபின் அவலோகிதேஸ்வரரின் இதய சூத்திரத்தை அனைவரும் பாடுவர்.
அதன் சில வரிகள்:
துயரமில்லை இல்லை, துயருக்கான காரணமும் இல்லை
துயர் நீங்குவதுமில்லை, துயரம் தீர வழியும் இல்லை
அறிவுத்திறனில்லை, அடைதல் இல்லை
ஏனெனில் எதையும் அடையும் அவசியமும் இல்லை
கடந்தேன், கடந்தேன். இது அனைத்தையும் கடந்தேன்! ஆனந்தம்!
நிலவில் கிருமிகள்
நிலவில் 3 நாட்கள் எல்லோரும் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள், மொத்தம் 6 முறை நிலவில் காலடி எடுத்து வைத்துள்ளார்கள். 3 நாட்கள் நிலவில் தங்கியிருக்கையில் மலம், ஜலம் எல்லாம் வரமாலாப் போகும்? நிலவில் எப்படிக் கழிப்பறைக்குச் செல்வது? டயப்பர்தான் ஒரே வழி. டயப்பரில்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
அந்த டயப்பரை அதன்பின் என்ன செய்வது? நிலவிலேயே ஒரு சரக்குப் பெட்டியில் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். இப்படி நிலவில் இருக்கும் பெட்டிகளில் விண்வெளி வீரர்களின் மலம், சிறுநீர், வாந்தி எல்லாமே பல இடங்களில் உள்ளன. அந்த வீரர்களில் பெண்கள் யாரும் இல்லை. இருந்தால் அவர்களின் மாதவிடாய் ரத்தமும் இருந்திருக்கும். சரி, இப்போது எதற்கு இந்த குமட்டும் தகவல்கள்?
50 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் வைக்கப்பட்ட இந்தக் கழிவு பெட்டிகளை மீண்டும் பூமிக்குக் கொண்டு வரவேண்டும் என இப்போது விஞ்ஞானிகள் தீவிரமாகப் பேசி வருகின்றனர். ஏன் இந்த வெட்டி வேலை எனக் கேட்கிறீர்களா? இது வெட்டி வேலை இல்லை. விண்வெளியை வெற்றிக் கொள்வதற்கான வேலை. மனிதக் கழிவில் ஏராளமான பாக்டிரியாக்கள் இருக்கும். ஆக, நிலவில் வீசப்பட்ட இந்தப் பெட்டிகளில் இருக்கும் பாக்டிரியாக்கள் 50 ஆண்டுகள் கழித்து இன்னமும் உயிருடன் இருக்கின்றனவா? மியூட்டேஷன் அடைந்து புதிய உயிரினங்களாகி இருக்குமா? எனச் சந்தேகம் தோன்றியுள்ளது.
50 ஆண்டுகள் கழித்து இன்னமும் பாக்டிரியாக்கள் கழிவில் உயிருடன் இருந்தால் அது ஒரு மகத்தான வரலாற்றுச் சாதனை. நிலவில் பிறந்த முதல் உயிரினமாக அந்தப் பாக்டிரியாக்கள் கருதப்படும். செவ்வாய், சனி என அனைத்து கோள்களுக்கும் இப்படிக் கழிவுகளைக் பெட்டிகளில் அனுப்பி வைத்தால் அங்கே புதிய உயிரினங்கள் தோன்றக்கூடும். நிலவைவிட உயிர்கள் தழைப்பதற்கான சூழல் செவ்வாயில் அதிகம் இருக்கிறது. எப்போது விண்கலம் புறப்படுகிறது எனக் கேட்கிறீர்களா? பைடன் தாத்தாவைத்தான் கேட்க வேண்டும்.
0