Skip to content
Home » பௌத்த இந்தியா #3 – மன்னர்கள் – 2

பௌத்த இந்தியா #3 – மன்னர்கள் – 2

பௌத்த இந்தியா

உதயணனும் வாசவதத்தையும் பாதுகாப்பாக, வெற்றியுடன் நகரத்துக்குள் நுழைந்தனர். ஆடம்பரமாகவும் உரிய சடங்குகளுடன் அவள் உதயணனின் ராணியாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டாள்.

இப்படி, வாசவதத்தை உதயணனனை மணந்த கதை செல்கிறது; இரு பாரம்பரியக் கதைகள் குழப்பப்பட்டு ஒழுங்கற்ற முறையில் கூறப்படுவது போன்ற தோற்றத்தை இது தருகிறது. தெளிவானதொரு வரலாறு என்று யாரும் இதை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அநேகமாக, பலரும் அறிந்த பிரபலமான இந்தக் கதாபாத்திரங்களை வைத்து மீளுருவாக்கம் செய்து சொல்லப்படும் கதையாக இது இருக்கலாம்.

அறிஞர் ஒருவர்,  ‘உதயணன் அவளுடன் யானையின் மீதேறித் தப்பிச் செல்லும்போது, பிடிபட்டுத் தண்டிக்கப்படுவதிலிருந்து தப்பிக்க, தங்கம் நிறைந்த பையைப் பாதையில் வீசிச் சென்றான்’ என்று இந்தக் கதையை விவரிக்கும்போது, மீளுருவாக்கத்தில் செய்யப்படும் மிகச் சிறிய மாற்றமானது கதையின் சாராம்சத்தையே எவ்வளவு எளிதாக மாற்றிவிடுகிறது என்பதை நாம் காண முடிகிறது. ஆனால், இந்த மரபார்ந்த கதை, அவந்தியின் அரசன் பஜ்ஜோதாவும், கோசாம்பியின் அரசன் உதயணனும் அண்டை நாடுகளைச் சமகாலத்தில் ஆட்சி புரிந்தனர்; திருமணத்தால் தொடர்புடையவர்களாக இருந்தனர்; போரிலும் ஈடுபட்டனர் என்பதற்கு போதுமான ஆதாரமாக  இருக்கிறது.

0

கோசாம்பியின் வச்சஸ் அல்லது வம்சஸ் இனத்தவரின் அரசன் உதயணன் பற்றி வேறு பல விஷயங்களும் கேள்விப்படுகிறோம். ஒருமுறை ஓர் உல்லாசப் பயணத்தில் அவன் இருந்தான்; ஒருநாள் அவன் தூங்கிக்கொண்டிருக்கையில் பிந்தோலாவின் (பிந்தோலா பரத்வாஜர் – பௌத்த சமயத்தில் மிகவும் மதிக்கப்படும், பிரபலமானவர்) சமயச் சொற்பொழிவைக் கேட்க அரண்மனைப் பெண்கள் அவனறியாமல் சென்றுவிட்டனர். மது போதையிலிருந்த அவன் ஆத்திரமடைந்தான். பிந்தோலாவின் உடலின் மீது பழுப்பு எறும்புகளின் கூடு ஒன்றைக் கட்டிவைத்துச் சித்திரவதை செய்தான். ஆனால், அதே அரசன் சிறிது காலத்துக்குப் பின், பிந்தோலோவுடன் புலனடக்கம் குறித்து ஓர் உரையாடல் நடத்துகிறான். அதன் விளைவாக, அந்த அரசன் தன்னை புத்தரைப் பின்பற்றுபவனாக அறிவித்துக்கொண்டான்.  மற்றொரு உல்லாசப் பயணத்தின்போது, அவனது ராணி சாமாவதி தங்கியிருந்த கூடாரம் எரிந்துபோனது. பணிப்பெண்கள் பலரும் அப்போது ராணியுடன் தங்கியிருந்தனர். உதயணனின் தந்தை பெயர் பரந்தபா; அவனுக்கு போதி என்றொரு மகனும் இருந்தார். இவர் பெயரில் பௌத்தச் சுத்தபிடகம் ஒன்று உள்ளது. இவர் குறித்த வேறு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், உதயணன் புத்தருக்குப் பின்னும் உயிர் வாழ்ந்தார். ஆனால், அவருக்குப் பின் போதி அரியணை ஏறினாரா இல்லையா என்ற விவரம் நமக்குக் கிடைக்கவில்லை.

0

கோசல நாட்டு மன்னர் பசநேதி மிகவும் வித்தியாசமான குணமுள்ளவராகச் சித்தரிக்கப்படுகிறார். மூன்றாம் சம்யுத்த நிகயா முழுவதும் அவரைப்பற்றியே பேசுகிறது. அறநெறிச் சார்பு கொண்ட இருபத்தைந்து நிகழ்வுகள் அதில் கூறப்படுகின்றன. அந்த இலக்கியத்தின் பிற பகுதிகளிலும் அவரைப் பற்றிய குறிப்புகள் இணையான எண்ணிக்கையில் காணப்படுகின்றன. துணைக்கண்டத்தின் வடமேற்கில் புகழ்பெற்று விளங்கிய தட்சசீலத்தின் கல்விச்சாலையில் அவர் கல்வி கற்றார்; அங்கிருந்து திரும்பியதும், தந்தை மகா கோசலன் அவரை அரியணையில் அமர்த்தினார். ஆர்வத்துடன் அரசாட்சி செய்து அவரது கடமைகளைச் சரியாக நிறைவேற்றினார். நல்லவர்களின் தோழமையை நாடுபவராக இருந்தார்.

இந்தியர்களின் நன்கு அறியப்பட்ட சகிப்புத்தன்மைக்கு இணங்க, அதை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில், அனைத்துச் சமயத்தினரின் சிந்தனைப் பள்ளிகளுக்கும் ஒன்றுபோல் ஆதரவை வழங்கினார். சிந்தனையிலும் செயலிலும் அவர் கொண்டிருந்த இந்தச் சுதந்திரமான போக்கும் நடத்தையும், புத்தரைப் பின்பற்றுபவனாகத் தன்னை அவர் அறிவித்துக் கொண்டபோது மேலும் வலுப்படவே செய்தது. புத்தருடன் அவர் நேரடியாக நடத்திய உரையாடலின் விளைவு இது.

அரசர் புத்தரைப் பார்த்துக் கேட்டார்: ஏற்கனவே பலரும் நன்கு அறிந்த குருமார்கள் பலர் இருக்கின்றனர்; அவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் இளமையாக இருக்கும் நீங்கள், அவர்கள் அடைந்திராத உள்ளொளியை எப்படிப் பெற்றிருக்க முடியும்?

இதற்கு மிகவும் எளிமையான பதில் புத்தரிடமிருந்து வந்தது: இளையது என்பதால்  ‘எந்த மதக் கோட்பாடும்’ இகழப்படக்கூடாது; இளைஞனாக இருப்பவன் என்பதால், ஓர் இளவரசனை யாராவது அவமதிப்பார்களா? அதுபோல் இளமையான ஒரு விஷப் பாம்பையோ இள நெருப்பையோ மதிக்காமல் இருப்பார்களா? அந்தக் கோட்பாட்டின் இயல்பான சாரம்தான் சிந்தனைக்குரியது; அந்த குருவின் தனிப்பட்டக் குணாதிசயங்கள் (வயது) அல்ல.

இந்த உரையாடலின் போது மகா கோசலனின் சகோதரியும் பசநேதியின் அத்தையுமான சுமனாவும் இருந்தார். அந்தச் சமய அமைப்புக்குள் தன்னை இணைத்துக்கொள்ள அவர் முடிவு செய்தார், ஆனால், வயதான உறவுக்காரப் பெண்மணி ஒருவரைக் கவனித்துக் கொள்ளவேண்டிய நிலையில் அவர் இருந்தார். அதனால், இணைவது தாமதமாயிற்று.

அந்த வயதான பெண்மணி இறந்ததும், சுமனா, சங்கத்தில் சேர்ந்து பிக்குணி ஆனார். அப்போது அவரும் வயது முதுமை அடைந்துவிட்டிருந்தார். ‘தெரிகதை’யில் திரட்டப்பட்டுப் பாதுகாக்கப்படும் பௌத்தப் பிக்குணிகளின் கவிதைகளில் இவருடையதும் உள்ளது. அந்த வயதான பெண்மணி, பசநேதியின் பாட்டி. இவ்வாறு அந்தக் குடும்பத்தின் நான்கு தலைமுறைகள் நம் முன் இருக்கிறார்கள்.

திக நிகயம் (1.87) மற்றும் திவ்யாவதானா (620) ஆகியவற்றுக்கு இடையில் ஓர் ஒப்பீடு செய்யலாம். திக நிகயம்  உரையாடல்களின் தொகுப்பு; சுத்தபிடகத்தின் ஒரு பகுதி. திவ்யாவதானா பௌத்த தொன்மக் கதைகள் அடங்கிய சம்ஸ்கிருத நூல்; விநய பிடகத்தில் உள்ளவை இதில் குறிப்பிடப்படுகின்றன.

பழைய நூலில் அரசன் பசநேதி செய்ததாகப் பதிவாகியிருக்கும் அதே செயல்கள், காலத்தால் பிந்தைய நூலில் அரசன் அக்னிதத்தன் என்பவரின் செயல்களாகச் சொல்லப்படுகின்றன. மன்னர்கள் பலருக்கும் பதவிப்பெயராக பயன்படும் பசநேதி என்பது உண்மையில் ஒரு பட்டப் பெயராக இருக்கவும் அதிக சாத்தியம் உண்டு. எனவே, இந்த அரசனின் உண்மையான பெயர் அக்னிதத்தன் என்பதாக இருக்கலாம்.

கிறித்துவுக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டின் பௌத்த நினைவுச் சின்னங்கள் பாராஹாட் ஸ்தூபத்தில் காணப்படுகின்றன; அங்கு செதுக்குச் சிற்பங்கள் ஒன்றில் பசநேதியின் உருவத்தைப் பார்க்க முடியும். காற்றில் பிடரி மயிர்களும், வால்களும் பறக்க, நான்கு குதிரைகள் விரைந்து இழுத்துச் செல்லும் ரதத்தில் அவர் பயணம் செய்கிறார். மூன்று பணியாட்கள் அவருடன் வருகின்றனர். அவரது உருவத்துக்கு மேல் தர்ம சக்கரம் காணப்படுகிறது. கோசலத்தின் அரசனான அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட புதிய உபதேசத்தின் /போதனையின் சின்னம் அது.

மண உறவின் மூலம் புத்தரது குடும்பத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆசையில் அரசர் பசநேதி சாக்கிய இனத் தலைவரின் மகள்களில் ஒருவரை மனைவியாக்கிக்கொள்ளக் கேட்கிறார்; சாக்கியர்கள் சமுதாய அரங்கில் இது குறித்து விவாதித்தனர். இதைத் தங்கள் இனத்தின் கண்ணியத்துக்குக் குறைவானதாகக் கருதினர். ஆனாலும், தங்கள் முதன்மைத் தலைவர்களில் ஒருவருக்கு ஓர் அடிமைப் பெண் மூலமாகப் பிறந்த மகளான வாசபா கத்தியா என்ற பெண்ணை பசநேதிக்கு மணமுடித்தனர். அந்தப் பெண் மூலம்தான் பசநேதிக்கு நாம் முன்னர் குறிப்பிட்ட விதூதபா என்ற மகன் பிறந்தான்.

பின்னாளில் விதூதபாவுக்கு இந்த மோசடி தெரியவந்தது. அவர் இதயத்தில் பெருங்கோபம் எழுந்தது; அதன் விளைவாக, சாக்கியர்களைப் பழிவாங்க முடிவு செய்தார். அவர் அரியணை ஏறியதும் செய்த முதல் காரியம், சாக்கிய நாட்டின் மீது படையெடுத்து, அதன் தலைநகரைக் கைப்பற்றியதுதான். வயது வித்தியாசம் பாராமல், ஆண் பெண்ணென்றும் பாராமல் அந்த இனத்தவர் எண்ணற்றவர்களைக் கொன்றான்.

இந்த நிகழ்வின் விவரங்கள் மிகவும் பழைய பதிவேடுகளில் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், ஓர் இனத்துக்கு எதிராக நடந்த போருக்கான முக்கிய சூழ்நிலை மிகத் தெளிவாக விவரிக்கப்படுகிறது. சந்தேகமின்றி இது ஒரு வரலாற்று உண்மைதான். புத்தரின் மரணத்துக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முந்தியதாக இந்த நிகழ்வு கூறப்படுகிறது.

ஆனால், மறுபுறத்தில் இந்தக் கதையின் ஆரம்பம், மிகவும் இயல்பற்றதாக வலிந்து சேர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது. கிரேக்கக் குடியரசுகளைச் சேர்ந்த மேற்குடி பிரபுக்களின் குடும்பம் ஒன்று, தமது மகள்களில் ஒருத்தியை, அவர்களது கண்ணியத்துக்குக் குறைவாக, அண்டை நாட்டின் சர்வாதிகார ஆட்சியாளன் ஒருவனுக்கு மணம் செய்து வைப்பது குறித்துச் சிந்திப்பார்களா? தற்போது நாம் விவாதிக்கும் இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட அடக்குமுறை ஆட்சியாளன், அனைவரும் ஒப்புக்கொண்ட, அந்த இனத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தும் ஓர் அரசன்.

சாக்கியர்கள், கோசல அரச குடும்பத்தைத் தங்களைக் காட்டிலும் தாழ்ந்த பிறப்பினராகக் கருதியிருக்கலாம். சாக்கியர்களின் தற்பெருமை குறித்துப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு இருந்தும், அவர்கள் ஏன் மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டும் என்பதை நமக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் தகவல்களைக் கொண்டு புரிந்துகொள்ள இயலவில்லை.

ஏனென்றால், இதுபோலவே சுயாதீனமும், இணையான பெருமையும் கொண்ட மற்றொரு இனம், அண்டையிலிருந்த வைசாலியின் லிச்சாவியர்கள் (வஜ்ஜியன்களின் உட்பிரிவினர்); அவர்களது தலைவர்களில் ஒருவனது மகள் மகதத்தின் அரசன் பிம்பிசாரனுக்கு மணம் செய்து வைக்கப்பட்டதை அறிவோம். மேலும், சிரவாஸ்தியில் ஆண்டு கொண்டிருந்த அரச குடும்பம், பரம்பரையாக கோசல இனத்திடமிருந்து ஆளும் உரிமையைப் பெற்றிருந்த மேற்தட்டுப் பிரபு வம்சங்களில் ஒன்று என்பதும் ஏறத்தாழ உறுதியான ஒன்றே.

கோசலத்தில் அரச குடும்பம் தவிர்த்து, பிரபுத்துவக் குடியரசுகளாக இன்னமும் நீடிக்கும் பழங்குடியினத்தின் தலைவர்களும் முக்கிய மனிதர்களும் ’ராஜன் அல்லது அரசன்’ என்ற பெயரால்தான் குறிப்பிடப்படுகிறார்கள். அதுபோல் கோசலர்களின் முதன்மைத் தலைவர்களும் சாதாரண இனத் தலைவர்களும் (குல புத்திரர்கள்) அவ்வாறே குறிப்பிடப்படுகிறார்கள்.

அத்துடன் அவர்களது இனத்தைத் தோற்றுவித்த நபர்களின் குடும்பங்களின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூறுவது மிகவும் இயல்பான போக்குதான்; இந்த விஷயத்தில் சமணர்கள் மற்றும் பௌத்தர்களின் பிற்காலப் பதிவேடுகள் முந்தையப் பதிவுகளிலிருந்து வேறுபடுகின்றன. எனவே, சாக்கியர்கள் பிரதேசத்தின் மீதான விதூதபாவின் படையெடுப்புக்கு உண்மையான காரணம் மேலே குறிப்பிட்டதுதான் என்று சொல்ல முடியாமல் போவதற்கான சாத்தியம் இருக்கிறது.

சாக்கியர்களின் ஆணவத்தைப் போருக்கான ஒரு சாக்காக அவன் பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடும். உண்மையான காரணம் வேறொன்றாக இருக்கக்கூடும். அவனது நெருங்கிய உறவினன் மகதத்தின் அஜாதசத்ரு பின்னொரு சமயம் தனது உறவினர்களான வைசாலியின் லிச்சாவியர்களைத் தாக்கி வெற்றிகொள்ளத் தூண்டியது ஓர் அரசியல் நோக்கம்; பெரும்பாலும், அதே நோக்கம்தான் விதூதபா தனது உறவினர்களான சாக்கியர்களைத் தாக்கி வெற்றிகொள்ளச் செய்திருக்கும்.

புத்தரின் இறப்பு பற்றிக் கூறும் (மகா பரிநிப்பான சுத்தம்) நூலின் தொடக்க அத்தியாயங்களில் அவர்களைத் தாக்குவதற்கு அஜாதசத்ருவுக்கு இருந்த நோக்கம் குறித்து ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். அத்துடன் புத்தர் மிகவும் எளிமையான ஒரு முன்கணிப்பைக் கூறியதாகவும் குறிப்பிடப்படுகிறார்:

அதாவது லிச்சாவியர்கள் ஆடம்பர வாழ்க்கையால் பலவீனமடையும் நிலை நேரிட்டால் அஜாதசத்ரு தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளப் படையெடுப்பார் என்று குறிப்பிட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் முயன்றும் அஜாதசத்ருவால் அது இயலவில்லை. இறுதியில் வஸ்ஸகாரன் என்ற பிராமணர் செய்த துரோகச் செயலால், வைசாலி நகரத்தின் முன்னணி குடும்பங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகளை விதைப்பதில் வெற்றி பெற்ற பின், பெரும் படையுடன் அந்த நகரத்தின் மீது பாய்ந்து, அஜாத சத்ரு அதைக் கைப்பற்றி முற்றிலுமாக அழித்தான்.

உஜ்ஜைனியின் மன்னன் பஜ்ஜோதாவிடமிருந்து படையெடுப்பை எதிர்பார்த்து அஜாதசத்ரு தனது தலைநகர் ராஜகிருகத்தைப் பலப்படுத்திக் கொண்டான் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறான படையெடுப்பு எப்போதாவது நடந்ததா என்பதும், வெற்றியின் அளவு குறித்தும் அறிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதன் பின் காலப்போக்கில், கி.மு. நான்காம் நூற்றாண்டில் உஜ்ஜைனி மகதத்திடம் அடிபணிந்து போனது. இளைஞன் அசோகன் அதன் மன்னராக நியமிக்கப்பட்டார். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த நிலை ஏற்படுவதற்குக் காரணமாக நடந்த நிகழ்வுகள் குறித்து நமக்கு எதுவும் தெரியவில்லை.

நீண்ட காலத்துக்கு முன்பாகவே சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்த புத்தரின் முதல் உறவினன் தேவதத்தன், புத்தர் இறப்பதற்குச் சுமார் ஒன்பது அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன், கருத்து வேறுபாட்டால் சங்கத்துக்குள் பிளவை ஏற்படுத்தினார். அப்போது பட்டத்து இளவரசனாக இருந்த அஜாதசத்ரு, புத்தரின் முன்னாள் சீடரும் கசப்பான எதிரியுமான தேவதத்தனின் முக்கிய ஆதரவாளனாக இருந்தான் என்று அறிகிறோம். தேவதத்தன்தான், பௌத்தக் கதையின் யூதாஸ் இஸ்காரியோத்து.

இந்த நேரத்தில்தான் மன்னன் பிம்பிசாரன் ஆட்சிப் பொறுப்பின் கடிவாளங்களை இளவரசனிடம் ஒப்படைக்கிறார். ஆனால், இடையில் அரியணையை உறுதிப்படுத்திக்கொள்ள அரசனைக் கொன்றுவிட வேண்டும் என்று தேவதத்தன் அவரைத் தூண்டியிருக்கிறான்; அது நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்தது என்று சொல்லமுடியாது. இந்த யோசனையை, புத்தர் இறப்பதற்கு எட்டாவது ஆண்டுக்கு முன்பு, அஜாதசத்ரு செயல்படுத்தினான். அப்பாவைப் பட்டினிப் போட்டு, மெதுவாக இறந்துபோகச் செய்தான்.

ஆனால், காலப்போக்கில் இந்தக் கொலைச் செயல், அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. பெரிய பரிவாரம் பின்தொடர புத்தரைப் பார்க்கச் சென்றதாக அறிகிறோம். புத்த சங்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதால் இப்பிறவியில் கிடைக்கும் பலன்கள் என்னவென்று அவரிடம் கேட்கிறார். புகழ்பெற்ற ‘Samanna Phala’ சுத்தத்தில் இந்த உரையாடல் வருகிறது. எனது ‘Dialogues of the Buddha’ நூலில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரசன், புத்தருக்கு வந்தனம் செய்யும் இந்த நிகழ்வு,  ‘பர்குட் ஸ்தூபி’ பௌத்த நினைவுச் சின்னங்களில் நாம் பார்க்க முடிகிற செதுக்குச் சிற்பம் ஒன்றின் கருப்பொருளாக இருக்கிறது. வழக்கம்போல் அதில் புத்தரின் உருவம் சித்திரிக்கப்படவில்லை; அவரது காலடிகள் மட்டுமே காணப்படுகின்றன.

உரையாடலின் முடிவில், எதிர்காலத்துக்கான தனது வழிகாட்டியாகப் புத்தரை அரசர் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார்; தந்தையின் கொலையால் ஏற்பட்ட மன உளைச்சலையும் வெளிப்படுத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால், அஜாதசத்ரு பௌத்தத்துக்கு மாறவில்லை என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. புத்தரின் போதனைகள் அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின; என்றாலும் அவற்றை உண்மையில் அவன் தொடர்ந்து பின்பற்றினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நமக்குத் தெரிந்த வரையில், அவர் அதன் பின் ஒருபோதும் புத்தரையோ சங்க அமைப்பின் எந்த உறுப்பினரையும் சந்தித்ததில்லை; அறநெறி விஷயங்கள் குறித்து விவாதிக்கவும் இல்லை. புத்தரின் வாழ்நாளில், அவரது அமைப்புக்கு எவ்விதமான பொருளுதவியும் அரசன் அளித்ததாகவும் தெரியவில்லை.

எவ்வாறாயினும், புத்தர் இறந்தபின் அஜாதசத்ரு புத்தரது அஸ்தியின் பகுதியை (அவரும் புத்தரைப் போலவே, ஒரு க்ஷத்திரியன் என்ற அடிப்படையில்) கேட்டதாகவும் கூறப்படுகிறது; அஸ்தி அவருக்குக் கிடைத்தது. அதைப் புதைத்த இடத்தின் மேல் ஸ்தூபி ஒன்றை அமைத்தார். பழமையான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை; ஆனால், காலத்தால் பிந்தைய பதிவுகள் இவ்வாறு கூறுகின்றன: புத்தரின் இறப்புக்குப்பின் ராஜகிருகத்தில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் பதவியேற்புக்கான அரங்கம் அமைய வேண்டிய இடத்தை அரசரே அளித்திருக்கிறார்; நகரின் அருகிலிருந்த சப்த பர்ணி என்ற குகைக்கு வெளியில் ஏற்பாடுகள் செய்கிறார்; சங்கக் கொள்கை குறித்த முதல் விளக்கக்கூட்டமாகவும் அது அமைகிறது.

இவ்வாறாக அவர்களது அமைப்பில் இணைத்துக் கொள்ளாமலேயே பௌத்தர்களுக்கு அவர் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கலாம். நல்கியிருக்கலாம். இந்திய மன்னர்களுக்கே இருந்த சிறப்பியல்பான அனைத்துச் சிந்தனைப் பள்ளிகளுக்கும் ஆதரவளிப்பது என்ற அடிப்படையில் அஜாதசத்ரு அதைச் செய்திருக்கக்கூடும்.

பிற மன்னர்கள் குறித்து, எங்கேயோ ஓரிடத்தில் அல்லது தற்செயலாகத்தான் குறிப்புகள் காணப்படுகின்றன – சூரசேனர்களின் அரசன் அவந்திபுத்திரன்; கௌதமரின் குருவான (உத்தகா) உத்ரகா ராமபுத்ரரைப் பின்பற்றுபவர்களும் ஆதரவாளர்களுமான எலேய்யா மற்றும் அவனது அரசவையைச் சார்ந்தவர்கள் பற்றி சொற்ப குறிப்புகளே காணப்படுகின்றன. ஆனால், மேற்கூறிய நால்வர் குறித்து மட்டுமே சில கூடுதல் விவரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

(தொடரும்)

 

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *