Skip to content
Home » பௌத்த இந்தியா #4 – குலங்களும் தேசங்களும் – 1

பௌத்த இந்தியா #4 – குலங்களும் தேசங்களும் – 1

கபிலவாஸ்து

மன்னர்கள் தொடர்பான தரவுகளைப் போன்றுதான் குலங்கள் பற்றிய தரவுகளும் கிடைத்துள்ளன. நம்மிடம் பெருமளவுக்குத் தகவல்கள் உள்ளன; குறிப்பாக மூன்று அல்லது நான்கு குலங்கள் பற்றி அதிக தகவல்கள் கிடைத்துள்ளன. மீதமுள்ளவற்றைப் பொறுத்தவரையில் வெறும் பெயர்கள் தவிர்த்து வேறொன்றும் கிடைக்கவில்லை.

மிக இயல்பாக மற்ற குலங்களைக் காட்டிலும் சாக்கிய குலத்தைப் பற்றி அதிக விவரங்கள் கிடைத்துள்ளன. அவர்களது நாடு அமைந்திருந்த இடம், மற்ற இடங்களிலிருந்து அது எவ்வளவு தூரம் போன்றவற்றையெல்லாம் கிடைத்திருக்கும் விவரங்களால் அறிந்துகொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக, (கபிலவஸ்து) ராஜகிருகத்திலிருந்து 60 யோஜனை தூரம்- 450 மைல்கள்; வைசாலியிலிருந்து 50 யோஜனை தூரம் – 375 மைல்கள், சிராவஸ்தியிலிருந்து 6 அல்லது 7 யோஜனை தூரம் – 50 அல்லது 60 மைல்கள்.

நேபாள – பிரிட்டிஷ் இந்தியா எல்லைக்கு மிக அருகில் அந்த இடம் இருந்திருக்கவேண்டும்; மிகச் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதும், சாக்கியர்களால் அமைக்கப்பட்டதுமான பௌத்த நினைவுச் சின்னங்கள் அல்லது புதைமேடுகளால் இந்தத் தகவல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. புத்தரது சிதையிலிருந்து எடுக்கப்பட்ட அஸ்தியை அங்கு வைத்திருக்கிறார்கள்; அந்த இடத்தில் அசோகரின் கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது; புத்தர் பிறந்த இடமான லும்பினி தோட்டத்துக்கு அவர் விஜயம் செய்ததைக் கல்வெட்டு பதிவு செய்திருக்கிறது.

கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், கண் முன்னே தெரிகிற ஏராளமான இடிபாடுகளில், அந்த இனத்தின் முக்கிய நகரமான கபிலவாஸ்துவுடன் தொடர்புடையவை எவை? மற்ற நகர அமைப்புகளுக்குச் சொந்தமான இடிபாடுகள், எவை? எதிர்கால ஆய்வுகள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய கேள்விகளில் ஒன்று இது.

(கபிலவஸ்து முதுநகர், இன்றைய திலவ்ராகோட் என்ற இடத்தில் இருந்திருக்கலாம். சாக்கியர்களின் பௌத்த நினைவுச் சின்னங்கள் மீதான திரு.பெப்பியின் (Mr.Peppe) முக்கியமான ஆய்வுகள் புதிய-கபிலவஸ்துவில் நடந்திருக்கக்கூடும். அரசன் விதூதபா முதுநகரை இடித்துத் தள்ளியபின், புதிய நகரம் அமைக்கப்பட்டது- ஆசிரியர்)

மிகப் பழமையான பதிவேடுகளில் காதுமா, சாமகாம, கோமதுஸ்ஸா, சிராவஸ்தி, மெத்தலுபா, உலம்பா, சக்கரா மற்றும் தேவதாஹா போன்ற நகரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இறுதியாகக் குறிப்பிடப்பட்ட இடத்தில்தான் புத்தரின் தாய் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் அஞ்சனா; ஒரு சாக்கியர் என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (அபாதானா என்ற வாழ்க்கை வரலாறுகளின் தொகுப்பில் இந்தத் தகவல் உள்ளது). ஆகவே பிற்காலப் பதிவுகள் புத்தரின் தாய் கோலியர் குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றன. அத்துடன் அந்த நகரம், இளவரசன் தேவதாஹாவின் பெயரால்தான் அழைக்கப்பட்டது. அவரும் கோலிய குலத்தின் ஒரு தலைவரே. கோலியர்கள், சாக்கிய குலத்தில் தாழ்நிலையில் இருக்கும் ஒருவித துணைப்பிரிவு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நில உடமைச் சமூகத்தில், கணிசமான எண்ணிக்கையில் சந்தைகளுடன் நகரங்கள் இருந்துள்ளன; ஒரு வகையில் அது விரிவான பிரதேச ராஜ்ஜியங்கள் இருந்ததைக் குறிக்கிறது. இந்தப் பழைய பாரம்பரியம் குறித்த விவரங்களை புத்தகோசர் நமக்காகப் பாதுகாத்து வைத்திருக்கிறார். என்றும் சொல்லலாம்; புத்தருக்கு, அவரது தந்தையின் வழியில் எண்பதாயிரம் உறவினர் குடும்பங்களும், அதே எண்ணிக்கையில் தாய் வழி உறவினர்களும் இருந்தனர் என்று அவை கூறுகின்றன. சார்ந்திருப்போரையும் உள்ளடக்கி, ஒரு குடும்பத்துக்கு ஆறு அல்லது ஏழு நபர்கள் என்று வைத்துக்கொண்டாலும், சாக்கியப் பிரதேசத்தில் மொத்தம் பத்து லட்சம் பேர் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை முற்றிலும் தோராய அடிப்படையில் போடப்பட்டதுதான்; ஓர் எல்லைவரையில் இந்தக் கணிப்பு சரியாக இருக்கும் என்றே எடுத்துக்கொள்ளலாம்.

இனக்குழுவின் நிர்வாகம் மற்றும் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகள்/ விவகாரங்கள் கபிலவாஸ்துவில் இருந்த பொது அவையில் (சந்தாகாரா) நடைபெறும்; அந்த அவையில் சிறியவர்களும் பெரியவர்களும் ஒன்றாகவே கூடுவார்கள்; அத்தகைய மக்கள் அவையில்தான், அல்லது கலந்து பேசும் கூட்டத்தில்தான் (நாம் முன்பு பார்த்த) அரசர் பசநேதியின் முன்மொழிவு விவாதிக்கப்பட்டது. அம்பத்தன் என்பவர் கபிலவாஸ்துவுக்கு வியாபார விஷயமாகச் செல்கிறார். சாக்கியர்களின் அவை கூடியிருப்பது அறிந்து அங்கு சென்றதாக அறிய முடிகிறது. இதுபோல் மல்லர் இனக்குழுவின் பொது அவைக்குச் சென்றுதான் ஆனந்தன், புத்தர் இறந்த செய்தியைச் சொல்கிறார். கூட்டம் தொடர்ந்து நடந்த நிலையில், இந்த விஷயம் குறித்து அவர்கள் விவாதிக்கிறார்கள்.

ஒரு தலைவர் எப்படி, எவ்வளவு காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நமக்குத் தெரியவில்லை. அமர்வுகளின் போது அதற்குத் தலைவராக, பொறுப்பானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? அமர்வுகளே நடக்காத நிலையில், அந்த ராஜ்ஜியத்துக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? தெரியவில்லை. அவர் ராஜா என்ற பட்டத்தைப் பெற்றிருந்தார். அது ரோமானியர்களிடம் வழக்கத்திலிருந்த ’கான்சல்’ அல்லது கிரேக்கர்களின் ’அர்ச்சான்’ போன்ற ஒன்றாக இருந்திருக்கலாம். லிச்சாவியர்கள் மத்தியில் இதைப்போல் மூத்தவர்கள் பதவி வகித்ததைப் பற்றி எங்கேயும் கேள்விப்படவில்லை; அல்லது மேலே குறிப்பிடப்பட்ட உண்மையான மன்னர்கள், இதுபோன்ற அரசருக்குரிய தலைமைப் பண்புகளுடன் ஆற்றிய செயல்கள் குறித்தும் நமக்கு அறியக் கிடைக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் புத்தரின் உறவினரான இளைஞர் பத்தியா, ராஜாவாக இருந்தார் என்று கேள்விப்படுகிறோம்; மற்றொரு பத்தியில், புத்தரின் தந்தையான சுத்தோதனர் ராஜா என்று அழைக்கப்படுகிறார். பல இடங்களில் இவர் ஒரு எளிய குடிமகனாக, சுத்தோதனன் என்ற சாக்கியர் என்பதாகவே பேசப்படுகிறார்.

கபிலவஸ்துவில் ஒரு புதிய பொது அவை கட்டப்பட்டது; அருகிலிருந்த மகா வனத்தில் (பெருங்காடு) ஆலமரங்கள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்த நிக்ரோதர்மா என்ற சோலையில் அமைந்த குடிலில் புத்தர் தங்கியிருந்த காலத்தில் அந்த அவை கட்டி முடிக்கப்பட்டது. அனைத்துச் சிந்தனைப் பள்ளிகளையும் சார்ந்த, துறவு நிலை மேற்கொண்டு தனித்திருப்போருக்குத் தங்குவதற்காக அந்தச் சமூகத்தினர் வசதிகளைச் செய்திருக்கிறார்கள். புதிய பொது அவையைத் திறந்து வைக்கும்படி கௌதமரைச் சாக்கியர்கள் கேட்டுக் கொண்டனர். புத்தர் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றினார்; அறநெறிச் சொற்பொழிவுகள் மூலம் அதைச் செய்தார். இரவு முழுவதும் நீடித்த அந்த நிகழ்வில் அவரது சீடர்கள் நந்தாவும் மொகல்லானாவும் உரை அளித்தனர். இவை நமக்கு முழுமையான பதிவுகளாகக் கிடைத்துள்ளன.

இந்த முதன்மை நகரமான கபிலவஸ்துவில் அமைந்திருந்த பொது அவை தவிர்த்து, மேலே குறிப்பிடப்பட்ட வேறு சில நகரங்களிலும் இது போன்ற அவைகள் இருந்துள்ளன. சிறிது முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களிலும் இத்தகைய அரங்குகள் அல்லது மேலே கூரையுடன் சுவர்கள் இல்லாத பந்தல் போன்ற அமைப்புகள் இருந்தன; அவர்கள் அனைத்தையும் அங்கு பேசுவார்கள், விவாதிப்பார்கள், நடத்துவார்கள்; ஒவ்வொரு கிராமத்தின் தலமட்ட விவகாரங்களும் குடும்பத்தினர் அனைவரும் குழுமியிருக்கும் திறந்த கூட்டங்களில் மரங்கள் அடர்ந்த தோப்புகளில் நடத்தப்பட்டன.

மீக நீண்டதாகப் பரவிக்கிடந்த வண்டல் மண் நிரம்பிய சமவெளியில் அமைந்திருந்த ஒவ்வொரு கிராமத்துக்கும் மிகவும் தனித்துவமான அம்சமாக அந்த ’கூடுகை’ விளங்கியது. அந்தச் சமவெளி கிழக்கிலிருந்து மேற்காக ஐம்பது மைல்களும், இமயமலை அடிவாரத்திலிருந்து தெற்கே முப்பது அல்லது நாற்பது மைல்களும் பரவிக் கிடந்தது. இந்த சமவெளியில்தான் பெரும்பான்மை இனக்குழுக்கள் வசித்தன என்பதில் சந்தேகமில்லை.

அவர்களது நெல் வயல்களும் வளர்த்த கால்நடைகளும்தாம் இனக்குழுக்களின் வாழ்வின் ஆதாரமாக இருந்தன. நெல் வயல்களைச் சுற்றித்தான் கிராமங்கள் ஒரு தொகுப்பாக அமைக்கப்பட்டன; சுற்றியிருந்த காடுகளில் அவர்களது கால்நடைகள் அலைந்து திரிந்து புல் மேய்ந்தன. பிறப்பால் விவசாயிகளான சாக்கியர்கள் அனைவருக்கும் அந்த வனங்களின் மீது பொதுவான உரிமை இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் கைவினைஞர்கள் இருந்தனர், அநேகமாக அவர்கள் சாக்கிய இனத்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துடன் சில சிறப்புத் தொழில்களில் ஈடுபட்ட மனிதர்களும் இருந்தனர்; குறிப்பாக, தச்சர்கள், கருமார்கள், குயவர்கள் போன்றோர் தங்களுக்கென தனிக் கிராமங்களை அமைத்துக் கொண்டிருந்தனர். சமூகத்தினரின் அனைத்து அன்றாட நிகழ்வுகளுக்கும் தேவையாக இருந்த சேவைகளைச் செய்துவந்த பிராமணர்களும் தனிக் குடியிருப்பில் வசித்தனர், எடுத்துக்காட்டாக, கோமதுஸ்ஸா என்ற கிராமம் பிராமணர்களின் குடியிருப்பு.

கடைத்தெருக்கள் இருந்தன; சில கடைகளும் இருந்தன, ஆனால், அருகிலிருந்த ராஜ்ஜியங்களின் பெரிய தலைநகரங்களில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் வணிகர்களோ, வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களோ இருந்ததாக நமக்கு பதிவுகள் கிடைக்கவில்லை. ஒவ்வொரு கிராமமும் காடுகளால், ஒன்று மற்றொன்றிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தன. அந்தப் பெரு வனத்தின் பகுதிகள், விவாதிக்கப்படும் காலகட்டத்துக்கு முன்னதாகவே பரந்து விரிந்திருந்தன. உண்மையில் ஆரம்பத்தில் இமய மலையின் அடிவாரத்துக்கும் கங்கை என்ற பெரும் நதிக்கும் இடைப்பட்ட பகுதியாகப் பிரதேசம் முழுவதும் பரந்திருந்தன; வனத்தின் பல பகுதிகள், ஆங்காங்கே பல்வேறு குலங்களின் ஆளுகையில் இருந்தன. அண்டையிலிருந்த முடியரசுகளால் இந்தக் குலங்கள் அழிக்கப்பட்டன; அதன்பின் இந்தப் பெருங்காடு மீண்டும் நாடு முழுவதும் பரவியது.

நான்காம் நூற்றாண்டிலிருந்து, இன்றைய காலகட்டம் வரையிலும், தொன்மையான நாகரிகத்தின் எச்சங்களை அந்தப் பெருங்காடு பொதிந்து வைத்திருந்தது.

(தொடரும்)

 

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *