Skip to content
Home » பௌத்த இந்தியா #5 – குலங்களும் தேசங்களும் – 2

பௌத்த இந்தியா #5 – குலங்களும் தேசங்களும் – 2

குலங்களும் தேசங்களும்

ஆரம்பத்தில் இமய மலையின் அடிவாரத்துக்கும் கங்கை நதிக்கும் இடைப்பட்ட பகுதியாகப் பிரதேசம் முழுவதும் வனங்கள் நிறைந்திருந்தன. நான்காம் நூற்றாண்டிலிருந்து, இன்றைய காலகட்டம் வரையிலும், தொன்மையான நாகரிகத்தின் எச்சங்களை அந்தப் பெரு வனம் பொதிந்து வைத்திருந்தது.

இந்த வனம் அவ்வப்போது கொள்ளையர்களால், சில நேரங்களில் தப்பித்து ஓடிச் செல்லும் அடிமைகளால் ஆக்கிரமிக்கப்படும். ஆனால் குற்றங்கள் குறித்து நாம் அதிகம் கேள்விப்படவில்லை; கிராமங்களில் அவை அதிக அளவுக்கு இருக்க சாத்தியமில்லை எனச் சொல்லலாம். ஒவ்வொரு கிராமமும் சுயமாக நிர்வகிக்கப்பட்ட சிறிய குடியரசாகத் திகழ்ந்தன. கோலியன் மத்திய அதிகாரிகளுக்கு குற்றேவல் செய்யும் அல்லது காவல்துறை போல் பணியாற்றும் சிறப்புக் குழுவினர் இருந்தனர்; ஒருவகையான சீருடையும், தலைப்பாகையும் அவர்களை வேறுபடுத்திக் காட்டின; மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் வன்முறை போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுவதும் உண்டு. மல்லர்களிடம் இதுபோன்ற பணியாளர்கள் இருந்தனர். எனவே, அனைத்து குலங்களும் இதுபோன்ற பணியாளர் அமைப்பைப் பெற்றிருந்தன என்று சொல்லலாம்.

அருகிலிருந்த வலிமை மிக்க குலமான வஜ்ஜியர்களின் கூட்டமைப்பில் குற்றவியல் சட்டம் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டது என்பதைப் பிற்காலப் பதிவு ஒன்று கூறுகிறது. தொடர்ச்சியாக அங்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்: நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட விதிமுறைகளில் பயிற்சி பெற்றவர்கள், எட்டு குலங்களின் பிரதிநிதிகள் சபையினர், தளபதி, பிரதேச உதவித் தலைவன் அல்லது தலைவன் ஆகியோர். இவர்களில் எவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க முடியும். ஆனால் ஒருவரைக் குற்றவாளி என்று கருதினால், ஒவ்வொருவரும் அதிகார வரிசையில் அவர்களுக்கு மேலே உள்ளவர்க்கு வழக்கை அனுப்ப வேண்டும். தலைவன் இறுதியாக விதிமுறைப் புத்தகத்தின்படி அபராதம் விதிப்பார். சிறிய குலங்களில் இதுபோன்ற இடைநிலை அதிகாரிகள் இல்லை என்று நமக்குத் தெரியவருகிறது; அத்துடன் வஜ்ஜியர்களிடமும் (அவர்கள் அனைவரும் பதிவின் இந்தப் பகுதியில் “ராஜாக்கள்” என்று குறிப்பிடப்படுகிறார்கள்), மிகவும் சிக்கலான இந்த நடைமுறை உண்மையில் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை; ஆனால் சட்டப்பூர்வமான நடைமுறைகள் குறித்த புத்தகமும் சட்ட விதிகளும் வேறு சில இடங்களிலும் குறிப்பிடப்படுகின்றன. எனவே, உண்மையில் இந்த விஷயத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் பயன்பாட்டில் இருந்தன என்பதற்கான சாத்தியம் உள்ளது,

சாக்கியர்கள் தவிர மற்ற குலங்களின் பெயர்கள்:

2. சம்சமாரகிரி குன்றுப் பகுதியின் பக்காக்கள்
3, அல்லகப்பாவின் புலிகள் (Bulis)
4. கேசபட்டாவின் (கேசரியா) காலாமாக்கள்
5. ராம காமாவின் கோலியர்கள்
6. குஷிநகரின் மல்லர்கள்
7. பாவாவின் மல்லர்கள்
8. பிபாலிவனத்தின் மௌரியர்கள்
9. மிதிலையின் விதேகர்கள்
10. வைசாலியின் லிச்சாவியர்கள்
(விதேகர்களும் லிச்சாவியர்களும் வஜ்ஜியன்களின் துணைக் குழுவினர்)

வேறு பல பழங்குடிகளின் பெயர்களும் காணப்படுகின்றன. ஆனால், அவர்கள் குலங்களா அல்லது முடியரசுகளின் கீழ் இருந்தவர்களா என்பது இன்னமும் தெரியவில்லை. முடியாட்சியின் கீழ் இருந்த ஒரு பழங்குடி அமைப்பு, சுயாதீன அரசு என்ற நிலைக்குத் திரும்பிய நிகழ்வு ஓரிடத்தில் மட்டும் குறிப்பிடப்படுகிறது. ஒரு குலத்தில் ஒருவர் பெற்றிருக்கும் மிக உயர்ந்த அதிகாரம் எப்போதெல்லாம் மரபு வழியில் தொடர்கிறதோ, அங்கெல்லாம் சட்ட வரம்புகள் ஏதுமற்ற முழுமையான ஒரு முடியாட்சியே இருந்திருக்கும் என்பதாகத்தான் தோன்றுகிறது.

பௌத்தம் எழுச்சியுற்ற காலத்தில் அல்லது அதற்குச் சிறிது முன்னர் இந்தியாவின் அரசியல் ரீதியாகப் பிரிந்திருந்த பதினாறு பெரிய தேசங்கள், பதினாறு அதிகார மையங்களைப் புத்தகங்களில் பல இடங்களில் காணப்படும் பட்டியல் நன்கு விளக்குகிறது (அங்குத்தர சுத்தம்). இந்தப் பெயர்கள், இத்தாலியர்கள் அல்லது துருக்கியர்கள் என்று சொல்வது போல் மக்களின் பெயர்களாக இருக்கின்றன; அவை நாடுகளின் பெயர்கள் அல்ல என்பது சுவாரஸ்யமானது. இந்தப் பழைய பட்டியலை வரைந்தவர்கள் அல்லது பயன்படுத்தியவர்கள், இந்த மக்களை இன்னமும் பழங்குடியினத்து மக்களாகத்தான் மனத்தில் எடுத்துக்கொண்டுள்ளனர்; புவியியல் பிரிவுகளாக அல்ல என்பதைப் பட்டியல் எடுத்துக்காட்டுகிறது.

1. அங்க தேசம்
2. மகத தேசம்
3. காசி தேசம்
4. கோசல தேசம்
5. வஜ்ஜிய தேசம்
6. மல்ல தேசம்
7. சேதி தேசம்
8. வம்ச (வத்ச) தேசம்
9. குரு தேசம்
10. பாஞ்சால தேசம்
11. மச்ச (மத்ச) தேசம்
12. சூர சேன தேசம்
13. அஸ்ஸாக தேசம்
14. அவந்தி தேசம்
15. காந்தார தேசம்
16. காம்போஜ தேசம்

1. அங்கர்கள் மகதத்துக்குக் கிழக்கிலிருந்த பிரதேசத்தில் வசித்து வந்தனர். தற்போதைய பாகல்பூருக்கு அருகிலிருக்கும் சம்பா அவர்களது தலைநகராக இருந்தது. அதன் எல்லைகள் நமக்குத் தெரியவில்லை. புத்தரது காலத்தில் அது மகதத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மீண்டும் அது சுதந்திரம் பெற்றதா என்ற விவரம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ,முந்தைய காலங்களில் அது சுதந்திரமான அரசாக இருந்தது; இந்த இரு அண்டை நாடுகளுக்கும் இடையில் போர்கள் நடந்த வரலாறு உள்ளது. புத்தரின் காலத்தில் அங்க தேசத்தின் ராஜாவாக செல்வ வளம் மிக்க பிரபு ஒருவர் இருந்தார். அத்துடன் ஒரு பிராமணருடைய புரவலராக இருந்தார் என்பது தெரிகிறது.

2. மகதத் தேசத்தவர்கள், இப்போது பிஹார் என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் ஆட்சி செய்தனர். வடக்கில் கங்கை நதியும் கிழக்கே சம்பா நதியாலும், தெற்கே விந்திய மலைகளும், மேற்கில் சோனா நதியும் அதன் எல்லைகளாக இருந்திருக்கலாம். புத்தரின் காலத்தில் (அதாவது அங்க தேசத்தையும் சேர்த்து) எண்பதாயிரம் கிராமங்கள் இருந்ததாகவும் முந்நூறு லீகுகள் (சுமார் இரண்டாயிரத்து முந்நூறு மைல்கள்) சுற்றளவு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

3. காசி நகரத்தவர்கள், நிச்சயமாக பனாரஸ் நகரத்தைச் சுற்றியிருந்த பிரதேசத்தில் வசித்த மக்கள்தாம். புத்தர் காலத்தில், பாரதத்தின் இந்தப் புகழ்பெற்ற பழமையான இராஜ்ஜியம் அரசியல் முக்கியத்துவம் இழந்துவிட்டது. நகரத்தின் வருவாய் யாருக்குரியது என்று கோசலத்துக்கும் மகதத்துக்கும் இடையில் சர்ச்சை நிலவியது. அத்துடன் அந்த ராஜ்ஜியமே கோசலத்துடன் இணைக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் இது குறிப்பிடப் பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனெனில், காசி ஒரு சுதந்திரமான அரசுதான் என்ற எண்ணம் இன்னமும் மக்களின் மனத்தில் மாறாமலேயே இருக்கிறது. இரண்டாயிரம் மைல்கள் சுற்றளவு கொண்டதாக இந்தத் தேசம் இருந்தது என்பதை, இந்தச் செய்தி ஜாதகக் கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவதால் உறுதி செய்யமுடிகிறது. ஆனால், காசி இந்தக் காலகட்டத்தில் சுதந்திரமாக இருந்திருக்கவில்லை. அத்துடன் எல்லைகளும் தெரியவில்லை.

4. சிராவஸ்தியைத் தலைநகராகக் கொண்ட இராஜ்ஜியத்தை ஆள்பவர்களாக கோசலர்கள் இருந்தனர். தற்போதைய கோரக்பூருக்கு வடமேற்கே எழுபது மைல் தொலைவில் இருக்கும் அந்த நகரம் இப்போது நேபாளத்தில் உள்ளது. அதில் பனாரஸ் மற்றும் சாகேதா (அயோத்தி) நகரங்கள் இதற்குள் அடங்கும். அனேகமாக இந்த ராஜ்ஜியத்தின் தெற்கு எல்லையாக கங்கையும், கிழக்கு எல்லையாக கண்டகி நதியும், வடக்கு எல்லையாக மலைகளும் இருந்திருக்கலாம். கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சாக்கியர்கள் ஏற்கனவே கோசல தேசத்தின் ஆதிக்கத்தை ஒப்புக்கொண்டிருந்தனர்.

கோசல இராஜ்ஜியம் விரைந்து எழுச்சி பெற்றதும், மிக விரைவில் அதற்கும் மகதத்துக்கும் இடையில் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாமல் நடந்த போராட்டங்களும் தாம், புத்தர் கால அரசியலில் முன்னோடிப் பிரச்னையாக இருந்தது. கடினமான மலைப்பிரதேசத்தில் வசித்தவர்களும் மலையேறுவதில் திறமை பெற்றவர்களுமான கோசல குலத்தவர்கள் இமய மலைக்கும் கங்கைக்கும் இடையிலிருந்த அனைத்துப் பழங்குடியினரையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தனர். ஆனால், கிழக்குப் பகுதியில் அவர்களது ஆட்சி சுதந்திரமாக இயங்கிய இனக் குழுக்களால் தடுக்கப்பட்டன. அத்துடன் இந்தியாவில் மிக உயர்ந்த ஆதிக்கம் செலுத்துவது யார் என்பது குறித்து கோசலத்துக்கும் மகதத்துக்கும் இடையிலான போராட்டம், லிச்சாவியர்களின் வலிமை மிக்க கூட்டமைப்பு மகதத்தின் பக்கம் நின்றதும் அநேகமாக முடிவுக்கு வந்துவிட்டது. புத்தரது காலத்துக்கு முன் வனகன், தவசேனா மற்றும் கம்சன் ஆகிய கோசலத்தின் மன்னர்கள் காசி மீது வெற்றிகரமான பல படையெடுப்புகளை நடத்தியுள்ளனர். இறுதி வெற்றி கம்சனுக்குக் கிடைத்துள்ளது. ’காசியை வென்றவன்’ என்ற பட்டம் அவனது பெயருடன் சேர்ந்துகொண்டது.

5. வஜ்ஜியர்கள் எட்டு குலங்களின் கூட்டமைப்பு என்று சொல்லலாம்; அவர்களில் லிச்சாவியர்களும் விதேஹன்களும் மிகவும் முக்கியமானவர்கள். ஆரம்பக் காலங்களில் விதேகம் ஒரு ராஜ்யமாக இருந்தது என்றும் புத்தரின் காலத்தில் அது ஒரு குடியரசு என்றும் மரபான பதிவுகள் கூறுவது மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு தனி ராஜ்ஜியமாக அதன் பரப்பளவு முந்நூறு லீகுகள் (சுமார் இரண்டாயிரத்து முந்நூறு மைல்கள்) சுற்றளவு கொண்டதாக இருந்தது என்று கூறப்படுகிறது. அதன் தலைநகர் மிதிலை, லிச்சாவியர்களின் தலைநகர் வைசாலியிலிருந்து வடமேற்கே முப்பத்தைந்து மைல் தொலைவில் இருந்தது. பௌத்தத்தின் எழுச்சிக்கு சிறிது காலத்துக்கு முன் அங்கு ஜனக மன்னர் ஆட்சி செய்தார். தற்கால நகரமான ஜனக்பூர், பழங்காலத்தில் புகழ்பெற்றிருந்த சத்ரிய அறிஞரும் தத்துவவாதியுமான அவருடைய நினைவை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம்.

6. குஷிநகரம் மற்றும் பாவாவின் மல்லர்கள் சுதந்திரமான குலங்களாக இருந்தனர். சீன யாத்ரீகர்களின் குறிப்புகளின் அடிப்படையில் பார்த்தால், அவர்களது பிரதேசம், சாக்கிய பிரதேசத்தின் கிழக்கே இமயமலைச் சரிவுகளில் இருந்தது. வஜ்ஜியர்களின் கூட்டமைப்பு இவர்களுக்குத் தெற்கே இருந்தது. ஆனால், சிலர் இவர்கள் சாக்கியர் நிலத்துக்குத் தெற்கிலும், வஜ்ஜியர்களுக்கு கிழக்கிலும் இருந்ததாகக் கூறுகிறார்கள்.

7. பழங்கால ஆவணங்களில் குறிப்பிடப்படும் சேதி என்ற அதே பழங்குடியினர்தான் இவர்கள். இரண்டு தனித்துவமான குடியிருப்புகளைக் கொண்டிருந்தனர். ஒன்று, அநேகமாகப் பழமையான பிரதேசம். அது மலைகளில் இருந்தது. இப்போது நேபாளம் என்று அழைக்கப்படுகிறது. மற்றொன்று, அநேகமாகப் பிற்காலக் குடியிருப்பாக இருக்கலாம்; கிழக்கே கோசாம்பிக்கு அருகில் இருந்தது. அத்துடன் வம்சா என்ற குலத்தினரின் பிரதேசத்துடன் குழப்பிக் கொள்ளப்படுகிறது. ஆனால், இந்தப் பட்டியல் அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

8. வம்சா என்பது வத்சர்களின் நாடு. இதில் கோசாம்பி என்ற அதன் தலைநகரின் பெயர் மட்டுமே மிகவும் பிரசித்தமானது. அவந்தி தேசத்துக்கு வட திசையில் அடுத்ததாக, யமுனை நதிக் கரையில் அமைந்திருந்தது.

9. தற்போதைய டெல்லிக்கு அருகில் இருக்கும் இந்திரபிரஸ்தம் தலைநகராக இருந்த தேசத்தில் குரு வம்சத்தவர் ஆட்சிசெய்தனர்; அதற்குக் கிழக்கே பாஞ்சாலர்களும் தெற்கே மத்ஸ்ய தேசத்தினரும் இருந்தனர். பாரம்பரியப் பதிவேடுகள் அந்த ராஜ்ஜியம் இரண்டாயிரம் மைல் சுற்றளவைக் கொண்டிருந்தது என்கின்றன. புத்தரது காலத்தில் இவர்களுக்கு அரசியல் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே இருந்தது. குரு தேசத்தின் கம்மஸ்ஸ-தம்மாவில்தான் மிக முக்கியமான எடுத்துக்காட்டாக மகா சதிபத்தானம், மகா நிதானம் போன்ற சுத்தாந்தங்கள் உபதேசிக்கப்பட்டன. அத்துடன் ரதபாலன் குரு வம்சத்தின் அரச குடும்பத்தவன்.

10. குரு தேசத்தவர்களுக்குக் கிழக்கில், இமயமலைகளுக்கும் கங்கைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை இரண்டு பாஞ்சாலர்களும் ஆட்சி செய்தனர். அவர்களது தலைநகரங்களாக கம்பில்லாவும் கனோஜும் இருந்தன.

11. மச்சாக்கள், அல்லது மத்ஸ்ய தேசத்தவர்கள், குரு தேசத்துக்குத் தெற்கிலும் யமுனைக்கு மேற்கிலும் இருந்தனர், இந்த நதி அவர்களைத் தென் பகுதியில் பாஞ்சாலர்களிடமிருந்து பிரித்தது.

12. சூரசேனர்களின் தலைநகர், மதுரா; இவர்களது பிரதேசம் மத்ஸ்யர்களுக்குத் தென்மேற்கிலும் யமுனைக்கு மேற்கிலும் இருந்தது.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *