Skip to content
Home » பௌத்த இந்தியா #6 – குலங்களும் தேசங்களும் – 3

பௌத்த இந்தியா #6 – குலங்களும் தேசங்களும் – 3

குலங்களும் தேசங்களும்

பதினாறு தேசங்கள்/ மகா ஜனபதாக்களின் தொடர்ச்சியாக…

13. புத்தர் காலத்தில் அஸ்ஸாகர்களின் நகரம் கோதாவரி நதிக்கரையில் இருந்தது. அவர்களது தலைநகரம் போதானா அல்லது போதாலி (இன்றைய போதான்). மகதத்துடன், அங்க தேசம் குறிப்பிடப்படுவது போல அவந்தி தேசத்துடன் இந்தப் பிரதேசம் குறிப்பிடப்படுகிறது, தேசங்களின் பட்டியலில் சூரசேனர்களுக்கும் அவந்திக்கும் இடையில் இந்தத் தேசம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு வரைபடம் தயாரித்தால், இந்தத் தேசத்தின் அமைவிடம் அவந்திக்குத் தென்மேற்காக இருக்கும். எனில், இந்தக் கோதாவரிக் கரைக் குடியமர்வு பிற்காலத்தில் உருவானதாக இருக்கலாம். அத்துடன் போதானா (அல்லது போதாலி) நகரம் குறித்தும் எங்கும் குறிப்புகள் இல்லை என்பதன் மூலம் இது உறுதியாகிறது.

இந்தக் குலத்தினரின் பெயரும் தெளிவற்றதாக இருக்கிறது. சம்ஸ்கிருத எழுத்தாளர்கள் அஸ்மாகா மற்றும் அஸ்வாகா என்று இரண்டையும் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சொற்கள் உள்ளூர் மொழியிலும் பாலி மொழியிலும் அசாகாவாக இருந்திருக்கலாம். அல்லது இந்தப் பெயர்களில் இரண்டு வெவ்வேறு குலங்கள் இருந்திருக்க வேண்டும். அல்லது அஸ்வகா என்பது சம்ஸ்கிருதத்தில் தவறாக உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது அசாகா என்ற சொல்லை சம்ஸ்கிருதமாக்கியதில் தவறு நேர்ந்திருக்கலாம்.

14. அவந்தியின் தலைநகர், உஜ்ஜைனி. காண்டா பஜ்ஜோதா (கொடுமைக்காரன் பஜ்ஜோதா) என்பவன் அதன் அரசன். நாட்டின் பெரும்பகுதி வளமான நிலம். சிந்து சமவெளி வழியாக வந்த ஆரியர்கள் இங்கு குடியேறியிருக்க வேண்டும் அல்லது கைப்பற்றி இருக்கவேண்டும், இப்பிரதேசம் கட்ச் வளைகுடாவுக்கு மேற்குப் பகுதியிலிருந்தது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலும் இந்தத் தேசம் அவந்தி என்று அழைக்கப்பட்டது. ஆனால், ஏழு அல்லது எட்டாவது நூற்றாண்டு தொடங்கி மாளவம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

15. காந்தாரம். நவீன காந்தஹாரான இது கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஒரு மாவட்டமாக இருக்கிறது. இன்றைய பஞ்சாபின் வடமேற்குப் பகுதியையும் உள்ளடக்கியதாகதாக அன்று இருந்திருக்கும். இதன் தலைநகரம் தட்சசீலம். புத்தரது காலத்தில் காந்தாரத்தின் அரசனாக இருந்த புக்குசாதி, மகத மன்னன் பிம்பிசாரனுக்கு தூதுக்குழு ஒன்றையும் நட்பு வேண்டி கடிதமும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

16. தொலைதூரத்தில் வடமேற்கில் இருந்த நாடு காம்போஜம். அதன் தலைநகரம் ராஜபுரம் (அல்லது பூஞ்ச்)

ஓர் அரசியல் கண்ணோட்டத்தில் இந்தப் பட்டியல் ஆர்வம் தரக்கூடியதாக இருக்கிறது. மேலும் சில பெயர்கள் கண்டுபிடிக்கப்படவேண்டும்: எடுத்துக்காட்டாக, ஷிவி என்ற ராஜ்ஜியம், மத்ர தேசம், சொன்விரா தேசம், உத்யானா தேசம், விராட தேசம் போன்றவை. பௌத்தத்தின் தொடக்க ஆண்டுகளில் பெற்றிருந்ததைக் காட்டிலும் பிந்தைய காலத்தில் மிக முக்கியமான இடத்தை மல்லர்களும் சேதிகளும் பெற்றனர். விரைவில் மகதத் தேசத்தின் நகரமாக ஆகவிருந்த வைசாலி அப்போது சுதந்திர அரசாக இருந்தது. அண்டையிலிருந்த ராஜ்ஜியங்களால் பிற்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட அங்க தேசமும் காசி ராஜ்ஜியமும் வெளிப்படையாக மற்ற தேசங்களுடன் இணையான நிலையில் வைத்துப் பார்க்கப்பட்டன. இது பழைய பட்டியலாக இருக்கக்கூடும்.

இதற்குச் சிறிது காலத்துக்கு முந்தைய நிலைமைகளின் அடிப்படையில் பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கலாம். செவிவழித்தகவல்களின்படி பௌத்தப் பள்ளிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த செய்தி ஆர்வத்தையும் முக்கியத்துவத்தையும் மட்டுமே கூட்டுகிறது.

புவியியல் சார்ந்தும் இந்தப் பட்டியல் மிகவும் மேலோட்டமாகத்தான் சிலவற்றைச் சொல்கிறது. அவந்திக்குத் தெற்கில் இருக்கும் இடம் எதுவும் அதில் காணப்படவில்லை; அத்துடன் பட்டியலில் ஒரே ஒரு இடம் மட்டுமே தெற்கே மிகவும் தூரத்தில் இருப்பதாகக் காட்டப்படுகிறது; தென்னிந்தியா முழுமையும் மற்றும் சிலோனும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒரிசாவைப் பற்றியும், கங்கை நதிக்குக் கிழக்கே வங்காளம் பற்றியும் அல்லது தக்காணத்தைப் பற்றியும் குறிப்பிடப்படவில்லை. இந்தப் பட்டியலை வரைந்தவர்களின் கருத்திலிருந்த எல்லை நிச்சயமாக வடக்கில் இமயமலையாலும், தெற்கில் விந்திய மலைத் தொடர்களாலும், மேற்கில் சிந்துவுக்கு அப்பாலிருந்த மலைகளாலும், கிழக்கில் தென் திசை திரும்பும் கங்கை நதியாலும் சூழப்பட்டிருந்தது.

இந்தப் பட்டியலைப் பாதுகாத்து வைத்திருந்த புத்தகங்கள், அடுத்தடுத்த அரசியல் இயக்கங்களுக்கு, பல நிலைகளுக்கு ஏராளமான சான்றுகளையும் பாதுகாத்து வைத்துள்ளன. அத்துடன் புவியியல் சார்ந்த தகவல்களுடன் சேர்த்துப் பார்க்கையில், விஷயங்கள் பக்குவமான கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டதாகவே தெரிகிறது. பழைய பட்டியலை வரைந்தவர்களுக்கு தென் திசையிலிருந்த இடங்கள் குறித்து மிகவும் குறைவாகவே தெரிந்துள்ளது.

மிகப் பழமையான ஆவணங்கள் ஒன்றில், ஒரு பக்கத்தில் தட்சிணபாதை என்றொரு பதம் காணப்படுகிறது. தற்போது நாம் புழங்கும் சொல்லான தக்காணம் என்பதில் உள்ளடங்கும் ஒட்டுமொத்தப் பிரதேசத்தையும் அது குறிக்கிறது என்று சொல்லும் சாத்தியம் இல்லை. ஆனால், நாம் விவாதிக்கும் பத்தியிலேயே, கோதாவரியின் மேல்பகுதியில் சற்று உள்நாட்டிலிருந்த நகர அமைப்பு ஒன்றை அல்லது குடியிருப்பைக் குறிப்பதற்கு இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல் நான்கு நிகயங்களில் எந்த ஒன்றிலும் தென்படவில்லை. ஆனால், பிந்தையக் காலகட்டம் ஒன்றில் அந்தச் சொல் மீண்டும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், தெளிவற்ற முறையில் கோதாவரிக் கரையில் வரம்புக்குட்பட்ட பிரதேசத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் அவந்தி தேசத்துடன் அதாவது, பழங்காலப்பட்டியலில் இருக்கும் அவந்தியுடன் இணைத்தும் குறிப்பிடப்படுகிறது.

இந்தப் பதம் நமக்கு ஆர்வம் ஊட்டுவதாக இருக்கிறது. அதன் பொருள் ’தென் திசைச் சாலை’. நிலையாக அமைந்த எந்த ஒரு பிரதேசத்துக்கும் பொருந்தக்கூடிய விநோதமான பெயர். நாடுகடத்தப்பட்ட மனிதன் ஒருவன் ‘தென் திசை செல்லும் சாலையில்’ செல்வதாக வேதப் பாடல் ஒன்றில் குறிப்பு இருக்கிறது. அது பிற்காலத்திய செய்யுள் தான். அந்தப் பாதையில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை, வெவ்வேறு இடங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் மனிதர்கள் சென்றிருக்கலாம். புத்தரின் காலத்தில் மிகவும் தெற்கே இருந்த நகரம் பிரத்திஸ்தானம். பின்னாளில் அது கிரேக்கர்களால் பைத்தானா என்று அழைக்கப்பட்டது. நிச்சயமாக, தென் திசையில் கோதாவரி நதிக்கரையில் துறவிகள் வாழ்ந்த ஆசிரம் இதுவாகத்தான் இருக்கும்; மனிதர்கள் சென்ற மிகத் தூரத்திலிருந்த இடமாக இது இருக்கலாம்.

இதற்கு இன்னும் தெற்காக, புத்தர் காலத்தில் இருந்ததாக ஓரிடம் குறிப்பிடப்படுகிறது. பழங்காலத்து ஆசிரியர் / உபதேசிப்பவர் ஒருவரின் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது: அவர், தகாராசிகின். சிகின் என்பது அவரது பெயராக இருக்கலாம். அத்துடன் தகாரா (தற்போதைய மகாராஷ்ட்டிரத்தின் ஓஸ்மானாபாத் மாவட்டத்தின், தேர் என்ற இடம்) என்ற தனித்த முன்னொட்டு, அடைச்சொல், அவரது ஊரை, ‘தகாராவை’ சேர்ந்தவர் என்று குறிப்பதாக இருக்கலாம். ஆனால், இந்தத் தகவல் சந்தேகத்துக்குரியது. அந்த இடம் குறித்து வேறு எங்கும் குறிப்புகள் இல்லை, அத்துடன் பெயருக்கான மற்றொரு விளக்கம் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

தக்காணத்திலும் பரவியிருந்தனர் என்ற தகவல் தவிர்த்து, அந்நிலத்துக்கு அப்பால் நடந்த கடல் பயணங்களைப் பற்றியும் நிகயங்கள் பேசுகின்றன. அவற்றில், கலிங்கத் தேசத்தின் வனம் கடற்கரையோரமாக இருந்த குடியமர்வுகள், அதன் தலைநகராக தண்டபுரம் (கலிங்கத்தின் முன்னாள் தலைநகரம் தண்டபுரம்) விளங்கியது பற்றியும் அவை குறிப்பிடுகின்றன. விநய பிடகம், பரூச் என்ற நகரம் பற்றியும் உதானா (பௌத்த நூல்) சூர்ப்பராகாவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. இந்தச் செய்திகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், புவியியல் அறிவில் பெரும் வளர்ச்சி இருந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. வேறு சில இடங்களையும் இவ்வாறு கண்டறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த வளர்ச்சி வரம்புக்கு உட்பட்டதே என்பது குறிப்பாகச் சுட்டப்படுகிறது. ஆனால், தென்னிந்தியாவைக் குறித்தோ ராமாயணக் கதையில் பெரும் பங்கு வகிக்கும் சிலோனைப் பற்றியோ இதுவரை எந்தக் குறிப்பும் காணப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

(இராமாயணத்தின் பிற்பகுதி தொன்மங்களை அடிப்படையாகக்கொண்டது என்ற பேராசிரியர் ஜேக்கோபி உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்ளும் செய்தியை நாம் ஏற்றுக்கொள்ளலாம். மிகப் பழமையான தொன்மங்களில் காணப்படும் வானுலகில் நடந்ததாகக் கூறப்படும் போர்களை உள்வாங்கி வால்மீகி அவற்றைப் பூமிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார்; பழம்பாடல்களின் தெய்வங்களை மனித உருவிலான நாயகர்களாக உருமாற்றுகிறார். அந்தந்தப் பகுதியில் மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இயற்கை வேளாண் தெய்வங்களை, அந்த நாயகர்களின் நிலை அளவுக்கு அவர் உயர்த்தி, இலங்கை என்ற இடத்தில் நிகழ்வதாக அந்தக் கதையை முற்றிலும் புதிய முறையில் அனைத்து வசீகரங்களுடன் உருவாக்கினார். புராணங்கள் அறிவை உள்ளடக்கியதுதான், ஆனால் அதிகமான அறிவு அதற்குத் தேவையில்லை).

இந்தப் புவியியல் சார்ந்த கருத்துகள் பிற்கால வேத வரலாற்றுக்கும், தொடக்கக்கால சம்ஸ்கிருத இலக்கியங்கள் குறித்த வரலாற்று ஆய்வுக்கும் கணிசமான அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குப்தர் காலத்தின் பிராமண இலக்கியங்களை முழுமையாக மறுவடிவமைப்பது குறித்த பேராசிரியர் பண்டார்கரின் சமீபத்திய கருத்துக்களை உறுதிப்படுத்துவதற்கு இவை போதுமானவை. எடுத்துக்காட்டாக, முனைவர் ஹோஃப்ராத் பியூலர் அபஸ்தம்பா மற்றும் ஹிரண்ய-கேசின் ஆகிய படைப்புகள் தெற்கில், கோதாவரி நதி தீரத்துக்குத் தெற்கே எழுதப்பட்டதாகக் கருதினார். ஏனெனில், அவை நாம் இப்போது கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கும் சான்றுகள் அடங்கிய படைப்புகள் உருவான காலத்தைக் காட்டிலும் பிந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும்.

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருதுகோள்களால் இந்தக் கேள்வியை ஆய்வுக்கு உட்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அவை உண்மையான தகவல்களுடன் பொருந்தா நிலையில் இருந்தன. ஆரியர்களின் குடியேற்றப் பாதை கங்கை மற்றும் யமுனைச் சமவெளிகளில் இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், அது அவ்வளவு எளிதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மேலும் இரண்டு பாதைகளையாவது நாம் முன்வைக்க முடியும்; ஒன்று, சிந்து நதியின் ஓரமாகவே தென் பகுதிக்கு இடம்பெயர்ந்து கட்ச் வளைகுடாவைச் சுற்றிக்கொண்டு, அவந்தி தேசத்தை அடைதல்; மற்றொன்று காஷ்மீரிலிருந்து மலைகளின் அடிவாரத்தை ஒட்டி கோசல தேசத்தின் வழியாக, சாக்கிய நாட்டை அடைதல்; அதன்பின் திரிகூடம் வழியாக மகத தேசத்துக்கும் அங்க தேசத்துக்கும் செல்லுதல். இலக்கியத்திலிருந்தும் மற்றும் மொழியிலிருந்தும் கிடைத்திருக்க வேண்டிய முடிவுகளில் இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

இந்தியாவுக்குள் பழங்குடியினர் குடியேற்றம் குறித்து இதுவரையிலும் ஏராளமான சான்றுகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இலக்கியத்திலும், மொழியிலிருந்து நாம் பெற முடிந்த முடிவுகளைக் காட்டிலும் ஏராளமான சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன. எடுத்துக்காட்டாக, திரு. கிரியர்சன் ஒரு முக்கியமான உண்மையைச் சமீபத்தில்தான் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது ராஜஸ்தான் மக்களின் பேச்சுவழக்கு, இமயமலைப் பகுதியில் புழங்கும் பேச்சுவழக்குகளுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளது; நேபாளத்தில் மட்டுமின்றி இமயமலை அடிவாரத்தின் மேல் திசை நோக்கிச் செல்கையில் குறைந்தபட்சம் சம்பா (இமாச்சல் பிரதேசத்தின் சம்பா மாவட்டம்) பிரதேசம் வரையிலும் அந்த ஒற்றுமையைக் காணமுடியும் என்கிறார்.

அவர்களது முன்னோர்கள் கிழக்குத் திசை நோக்கியும் தென் திசையிலும் குடியமர்வுக்காக அலைந்து திரிந்த காலகட்டத்தில் அவர்கள் நெருக்கமாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை இது வெளிப்படுத்துகிறது. இரண்டு பாதைகளும் வடக்கு பஞ்சாபிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும்; ஆனால், இரண்டு பாதைகளும் கங்கை நதி தீரத்தை ஒட்டி நடந்திருக்கவில்லை.

அந்த மலைவாழ் மக்களின் பிள்ளைகள் வாரிசுகள் மலைகளிலேயே வாழ்வதற்கு முனைந்தனர்; அத்துடன், உலகெங்கிலும் பார்க்க முடிகிற மலைப்பகுதி மக்களைப்போல், அரசியல் மற்றும் சமயம் சார்ந்த விஷயங்கள் என்ற இரண்டிலும் பொதுவாக இவர்கள் தனித்த உறுதியான சுதந்திரத்துடன் விளங்கினர். பரவலாக, தனித்து வாழ்ந்த இவர்கள் எப்போதும் மிகுந்த இரக்க குணம் கொண்டவர்கள்; பௌத்தம் போன்ற எந்தவொரு முற்போக்கு தத்துவத்துக்கும் அவர்கள் மத்தியில் உடனடி ஆதரவு கிடைத்தது.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *