Skip to content
Home » பௌத்த இந்தியா #7 – குலங்களும் தேசங்களும் – 4

பௌத்த இந்தியா #7 – குலங்களும் தேசங்களும் – 4

வாராணசி

நமக்குக் கிடைத்திருக்கும் புவியியல் சார்ந்த சான்றுகள் மற்றொரு விஷயத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. சிலோன் தேசத்தில் எப்போது காலனியமயமாக்கம் நடந்திருக்க முடியும்? நிகயாக்கள் தொகுக்கப்பட்டதற்கு முன், அதாவது கணிசமான காலகட்டத்துக்கு முன் நிச்சயம் நடந்திருக்க முடியாது. அசோகரின் ஆட்சிக்காலத்தில் பிக்குகள் அங்கு சென்றது நமக்கு நன்கு தெரியும். ஆகவே, இந்த இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் சிலோனில் காலனியமயமாக்கம் நடந்திருக்க வேண்டும்; அத்துடன், சந்தேகத்துக்கு இடமின்றி இரண்டில் முந்தையதற்கு நெருக்கமான காலகட்டத்தில் நடந்திருக்கும். சிலோனில் கிடைத்திருக்கும் காலவரிசைப் பதிவேடுகள் முதல் காலனியத்தை புத்தர் இறந்த ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருப்பதில் நிச்சயம் பிழை இருக்க வேண்டும். அவர்களது தொடக்ககால காலவரிசைப் பட்டியலில் இருக்கும் இந்தக் குழப்பமே அந்தப் பட்டியலைப் பிழையானதாக்குகிறது.

கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் வசித்த மக்களின் எண்ணிக்கை குறித்து முடிவு செய்ய வாய்ப்பிருந்தால், தெளிவற்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கப் பெரும் உதவியாக இருக்கக்கூடும். இருப்பினும், கிடைக்கும் எண்ணிக்கை மிகவும் தெளிவற்றதாகத்தான் இருக்க முடியும். பெரிய நகரங்கள் சிறிய எண்ணிக்கையில் தான் இருந்தன. அந்த நகரங்கள் தொடங்கி, புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பரந்து விரிந்திருக்கும் காடுகள் மற்றும் வனாந்தரங்கள் வரையிலும் கணக்கில் கொண்டால், நிச்சயம் அந்த எண்ணிக்கை மிகப் பெரிதாக இருக்கமுடியாது. ஒருவேளை ஒட்டுமொத்தப் பிரதேசத்திலும் ஒன்றரை அல்லது இரண்டு கோடி மக்கள் வசித்திருக்கலாம். கி.மு.நான்காம் நூற்றாண்டில், அலெக்சாண்டரை எதிர்ப்பதற்காக உருவாகிய கூட்டமைப்பு நான்கு இலட்சம் வீரர்கள் கொண்ட படையைத் திரட்ட முடிந்தது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில், போரில்லாத சமாதான காலத்தில் மகதத்தில் பராமரிக்கப்பட்ட படைகளை மெகஸ்தனிஸ் விவரிக்கிறார்: இரண்டு லட்சம் காலாட்படை வீரர்களும், முந்நூறு யானைகளும் பத்தாயிரம் ரதங்களும் இருந்ததாகக் கூறுகிறார்.

கி.மு.ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்த முக்கிய நகரங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அயோத்யா: (ஆங்கிலோ-இந்திய சொல் ’அவுத்’ இதிலிருந்து பெறப்பட்டது) சரயு நதிக் கரையிலிருக்கும் கோசல தேசத்தின் ஒரு நகரம். அந்த நகரத்துக்கான அனைத்துப் புகழுக்கும் ராமாயணத்தின் ஆசிரியர் அவரது கதையின் சம்பவங்கள் நடக்கும் காலகட்டத்தில் அதை தலைநகராகக் குறிப்பிட்டிருப்பதுதான் காரணம். மகாபாரதத்தில் இந்த நகரம் குறிப்பிடப்படவில்லை; புத்தரின் காலத்தில் இந்த நகரத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருந்ததாகத் தெரியவில்லை. தொலைவில் மேற்குத் திசையில் மற்றொரு அயோத்யா இருந்தது; மற்றும் மூன்றாவது அயோத்யா, (தவறுதலாக என்று நினைக்கிறேன்) கங்கை நதிக்கரையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வாராணசி: கங்கை நதியின் வடக்குக் கரையில் உள்ள நகரம்; இந்த நதியும் வருணா நதியும் சந்திக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில், அதன் பெயர் குறிப்பிடுவது போல, வாருணாவுக்கும் அஸ்ஸி என்ற சிற்றோடைக்கும் இடைப்பட்ட நிலத்தை உள்ளடக்கியதாக இருந்தது. சுதந்திர இராஜ்ஜியத்தின் தலைநகராக அந்த நகரம் ஒரு காலத்தில் இருந்தது (அதாவது, பௌத்தம் எழுச்சி பெறுவதற்குச் சில காலங்களுக்கு முன்பு); புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்து அதன் பரப்பளவு பன்னிரண்டு லீகுகள் அல்லது எண்பத்தைந்து மைல்கள் இருந்ததாக அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறது. மெகஸ்தனிஸ், அவர் வசித்த பாடலிபுத்திரத்தின் கோட்டைச் சுவர்களின் சுற்றளவு 220 ஸ்டேடியா (அல்லது சுமார் இருபத்தைந்து மைல்கள்) எனக் குறிப்பிடுகிறார்; இந்தப் பரப்பளவின் அளவுக்கு, நகரத்தை அல்லது ஒரு ’கவுண்டியை’ (மாவட்டத்தை) அமைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில் செழிப்பின் உச்சத்தில் வாராணசி இருந்த காலகட்டத்தில் இந்த வழமையிலிருந்து அந்நகரம் விலகியிருந்ததாகத் தோன்றவில்லை. அந்த நேரத்தில், ஆட்சி நிர்வாகம் சார்ந்த விஷயங்களை விவாதிக்கக் கூடும் ’அவையாக’ நகரத்தின் ’டவுன் ஹால்’ என்றைக்கும் பயன்படுத்தப்படவில்லை. மதம் சார்ந்த மற்றும் தத்துவம் சார்ந்த பிரச்னைகள் குறித்த பொது விவாதங்கள் அந்த அவையில் நடத்தப்பட்டன.

சம்பா நகரம்: அதே பெயரில் ஓடும் நதிக்கரையில், அங்க தேசத்தின் பண்டைய தலைநகரமாக இருந்தது. அந்த நகரம் இருந்த இடம் இதே பெயருடன் நவீன கிராமங்களாக பாகல்பூருக்கு கிழக்கே இருபத்தி நான்கு மைல் தொலைவில் இருப்பதாக கன்னிங்ஹாம் அடையாளம் கண்டிருக்கிறார். அத்துடன் மிதிலையிலிருந்து அறுபது லீகுகள் தொலைவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனுடைய அழகிய ஏரிக்காக இது கொண்டாடப்பட்டது; அந்த ஏரியை வெட்டிய ராணி ககாராவின் பெயர் ஏரிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கரையில் வனம் போல் சம்பகா மரங்கள் அடர்ந்திருந்தன. அவற்றின் அழகிய வெள்ளைப் பூக்களிலிருந்து வெளிப்படும் நறுமணம் காற்றில் நிறைந்திருக்கும். புத்தரின் காலத்தில், தேச சஞ்சாரம் செய்யும் குருமார்கள் அங்கு ஓய்வெடுக்கச் செல்வது வழக்கம். கோச்சின்சைனா பகுதியில் (வியத்நாமின் தென் பகுதி) குடியேறிய இந்தியர்கள், அவர்களது மிக முக்கியமான குடியமர்வுக்கு இந்தப் புகழ்பெற்ற பழைய நகரத்தின் பெயரை வைத்தனர். மேலும் அங்கத் தேசத்தின் சம்பா என்ற பெயர் காஷ்மீரிலிருக்கும் இன்னும் பழமையான சம்பாவுக்கும் வைக்கப்பட்டது.

கம்பிலா: வடக்கு பாஞ்சால தேசத்தின் தலைநகரம். இது கங்கையின் வடக்குக் கரையில், மேற்குத் திசையில் இருந்திருக்கிறது. ஆனால் நகரம் சரியாக எந்த இடத்தில் இருந்தது என்பது இன்னமும் உறுதியாக முடிவு செய்யப்படவில்லை.

கோசாம்பி: வத்ஸ்யர்கள் அல்லது வம்சாக்களின் தலைநகரம். யமுனை நதிக்கரையில் இருந்தது. வாராணசியிலிருந்து நதிப் பிரயாணத்தில் முப்பது லீகுகள் அதாவது இருநூற்று முப்பது மைல்கள் தூரம். தெற்குப் பிரதேசத்திலிருந்தும் மேற்கிலிருந்தும் கோசலத்துக்கும் மகதத்துக்கும் பொருட்களும் பயணிகளும் வருவதற்கான மிக முக்கியமான நுழைவாயிலாக இது இருந்தது. சுத்த நிபாதத்தில் (1010-1013) உஜ்ஜைனிக்கு தெற்கே இருந்த ஓரிடத்திலிருந்து தொடங்கும் பாதை முழுமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோசாம்பி மற்றும் குஸிநாரா வழியாகச் செல்லும் அப்பாதையின் இடையில் நிறுத்தங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கோசாம்பியிலிருந்து ராஜகிருஹம் செல்லும் வழி, நதிக்கரை ஓரமாகவே போகிறது.

புத்தரின் காலத்தில், கோசாம்பியின் புறநகர்ப் பகுதிகளில் அவரது சமயத்தின் நான்கு தனித்துவமான அமைப்புகள் இருந்துள்ளன: பதரிகா, குக்குடா, கோசிதா பூங்காக்கள் மற்றும் பவரியாவின் மாம்பழத் தோப்பு ஆகியன அவை. புத்தர் அடிக்கடி இவ்விடங்களுக்குச் செல்வார்; இந்த இருப்பிடங்களில் ஏதாவது ஒன்றில் தங்குவார். அங்கு அவர் ஆற்றிய உரைகள் பலவும் புத்தகங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரா: சூரசேனர்களின் தலைநகரான இது யமுனை நதிக்கரையில் இருக்கிறது. அந்தப் பெயரை எழுதும்விதத்தில் வேறுபாடு இருந்தாலும், தற்போதைய மதுரா இருக்கும் இடத்துடன் அதை அடையாளம் காண்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. மிகவும் தொன்மையான இடிபாடுகள் அங்கு கிடைத்துள்ளன. புத்தரின் காலத்தில் மதுராவின் அரசனுக்கு அவந்திபுத்திரன் என்ற பட்டம் இருந்திருக்கிறது. எனவே உஜ்ஜைனி அரச குடும்பத்துடன் அவர்களுக்கு இருந்த தொடர்பு தெரியவருகிறது. மதுராவுக்கு புத்தர் வருகை தந்துள்ளார். மிகவும் செல்வாக்கு மிக்க அவருடைய சீடர்களில் ஒருவரான மகா காசியபர் வசித்த நகரம். பாலி மொழிக்கு முதன்முதலில் இலக்கண அமைப்பைத் தந்தவர் இவர்; பழமையான பாலி இலக்கணம் இந்த அடிப்படையில் அழைக்கப்படுகிறது என்று பாரம்பரியப் பதிவுகள் கூறுகின்றன.

மிலிந்தா பதிவில் (331) மதுரா இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது; அதேநேரம் புத்தரின் காலத்தில் இந்நகர் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் வளர்ச்சியின் மிகப்பெரும் உச்சத்தில் நகரம் இருந்திருக்க வேண்டும். இன்னொரு மதுராவுக்கு இணையாக போதுமான அளவு பிரபலமாக இருந்திருக்கிறது. திருநெல்வேலிக்கு அருகில் என்று மகாவம்சம் முதலில் குறிப்பிடும் நகரம் மதுராவைப் போலவே புகழ் பெற்றதாக இருந்தது. மூன்றாவது மதுரா மிகத் தூரத்தில் வடக்கில் இருந்ததாக ஜாதகத்திலும் பெட்டாவத்து வண்ணனா பதிவிலும் குறிப்புகள் உள்ளன.

மிதிலை: விதேகத்தின் தலைநகரம்; மன்னர்கள் ஜனகர் மற்றும் மகாதேவரின் தலைநகரம்; இப்போது திரிகூடம் என்று அழைக்கப்படும் மாவட்டத்தில் இருந்தது. அதன் பரப்பளவு ஏழு லீகுகள் அதாவது சுமார் ஐம்பது மைல்கள் சுற்றளவு கொண்டதாக இருந்தது என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.

ராஜகிருஹம்: மகதத்தின் தலைநகரம்; தற்போதைய ராஜகிரி. இங்கு இரண்டு தனித்தனி நகரங்கள் இருந்தன; மலை மீதிலிருந்த கோட்டை மிகப் பழமையானது; மிகச் சரியாகச் சொன்னால் அதன் பெயர் கிரிப்பாஜா. தொன்மையான இக்கோட்டை கட்டடக் கலைஞன் மஹா கோவிந்தனால் அமைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. பிற்காலத்து நகரம், மலைகளின் அடிவாரத்தில், புத்தரின் சம காலத்தவரான பிம்பிசாரனால் கட்டப்பட்டது, இதுதான் இராஜகிருஹ நகரம். புத்தரின் காலத்திலும் அவருக்குப் பின்னரும் செழிப்பின் உச்சத்தில் இருந்தது. ஆனால், சிசுநாகாவால் இந்த நகரம் கைவிடப்பட்டது. அவன் தலைநகரை வைசாலிக்கு மாற்றிக் கொண்டான். அவனது மகன் கலாசோகா தலைநகரை பாடலிபுரத்துக்கு மாற்றினான். தற்காலத்து பாட்னாவின் அருகில் அந்த இடம் உள்ளது. கிரிப்பாஜா மற்றும் ராஜகிருஹம் இரண்டின் கோட்டைகளையும் இப்போதும் பார்க்க முடியும்; இவை முறையே நான்கரை மைல்கள் மற்றும் மூன்று மைல்கள் சுற்றளவு கொண்டவை. வலிமையான மலையரணான கிரிப்பாஜாவின் கோட்டைச்சுவர்களின் தென்புறத்து முனை, புதிய நகரமான ராஜகிருஹத்தின் (அரசனின் கிருஹம்/இல்லம்/மாளிகை) கோட்டைச் சுவர்களின் வடக்கு முனையில் இருந்து ஒரு மைல் வடக்கே அமைந்திருக்கிறது. கிரிப்பாஜாவின் கற்சுவர்கள் இந்தியாவில் இப்போதும் பார்க்க முடிகிற மிகத் தொன்மையான கல் கட்டுமானங்கள் ஆகும்.

ரோருகா: பிற்காலத்தில் ரோருவா என்றழைக்கப்பட்ட இது சௌவீரா தேசத்தின் தலைநகர். இதிலிருந்து தற்காலத்துப் பெயர் சூரத் உருவானது. கடல் வர்த்தகத்தின் முக்கிய மையமாக இது இருந்தது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அங்கு பயணிகளும் குழுக்களும் வியாபாரிகளும் வந்தனர்; ஏன், மகதத் தேசத்திலிருந்தும் வந்தனர். ஜோசபஸ் குறிப்பிடும் ஓஃபிர் என்ற இந்த இடம்- செப்டுவஜின்ட் சோஃபியிலும் கூறப்படுகிறது. அக்காலத்தில் பாலஸ்தீனத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட தந்தங்கள், குரங்குகள் மற்றும் மயில்கள் ஆகியன இந்தியாவிலிருந்து வந்தவை. எபிரேய மொழியின் காலவரிசைத் தொகுப்பேடுகளின் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் கிங் சாலமோனின் மரக்கலங்கள் வியாபாரம் செய்த துறைமுகமாக ரோருகாவாக இருந்திருக்கலாம். துறைமுகத்தின் மிகத் துல்லியமான பெயர் ரோருகா; மிலிந்தா நூலில் இந்தியர்கள் சௌராவுக்குக் கடற்பயணம் செய்வதைப் பற்றி பேசும்போது இந்தப் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். நகரம் இருந்த சரியான இடம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; ஆனால், நிச்சயமாக கட்ச் வளைகுடாவில், தற்கால காராகோடாவுக்கு அருகில் இருந்திருக்கலாம். அந்த நகரம் செழிப்பிலிருந்து வீழ்ந்தபோது, அந்தப் பகுதியை தற்போதைய பரோச் என்கிற பாருகச்சா எடுத்துக்கொண்டது; அல்லது தற்காலத்து சுப்பராகா. இந்த இடங்கள் ரோருகாவுக்கு எதிர்ப்புறத்தில் கத்தியாவார் தீபகற்பத்தின் தென்புறத்தில் இருந்தன.

சாகலா: இன்றைய சியால்கோட்டாக இருக்கலாம். இந்தப் பெயரில் மூன்று நகரங்கள் இருந்தன. ஆனால், தூரக்கிழக்கில் இருந்த இரண்டும் (கையெழுத்துப் பிரதிகளில் சரியாகக் கூறப்பட்டிருந்தாலும், இரண்டையும் நான் சந்தேகிக்கிறேன்) தொலைதூரத்தில் வட-மேற்கில் பிரபலமாக இருந்த சாகலா மன்னரின் பெயரைத் தாங்கி நிற்கின்றனது. அலெக்சாண்டரை மிகத் துணிவுடன் எதிர்த்து நின்ற நகரம். பின்னாளில் அரசன் மிலிந்தா இதை ஆட்சிசெய்தான். இந்த நகரம் மத்ரர்களின் தலைநகரமாக இருந்தது. கன்னிங்ஹாம், நகரின் இடிபாடுகளைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கருதினார்; ஆனால் அங்கு அகழ்வாராய்ச்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, ஆகவே, சரியான இடம் இன்னும் உறுதிசெய்யப்படாமலே உள்ளது.

சாகேதம்: இந்த இடம் இடிபாடுகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போதைய அவுத் (உ.பி.) மாகாணத்தின் உனாவ் மாவட்டத்தில் சுஜான் காட் சாய் நதிக்கரையில் இருக்கிறது. இன்னமும் ஆராயப்படாமல் இருக்கிறது. பழங்காலத்தில் இது கோசல தேசத்தின் முக்கியமான நகரமாக இருந்தது. இந்நகரம் சில நேரங்களில் தலைநகரமாகச் செயல்பட்டிருக்கிறது. புத்தர் காலத்தில் தலைநகராக ஸ்ராவஸ்தி இருந்தது. சாகேதம் பெரும்பாலும் அயோத்யாவாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் புத்தர் காலத்தில் இரண்டு நகரங்களும் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. லண்டன் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் போன்று அவை அருகருகே இருந்திருக்கலாம். ஆனால், இந்தியாவின் ஆறு பெரிய நகரங்களில் ஒன்றாக சாகேதம்தான் குறிப்பிடப்படுகிறது; அயோத்யா அல்ல; சாகேதத்துக்கு அருகில் இருந்த அஞ்சனா வனத்தில் சூத்திரங்கள் பலவற்றை புத்தர் உபதேசித்தார் என்று கூறப்படுகிறது. சாகேதத்திலிருந்து வடக்கு நோக்கிச் சென்றால் ஸ்ராவஸ்தி ஆறு லீகுகள், சுமார் நாற்பத்தைந்து மைல்கள் தூரத்தில் இருந்தது. ஏழு குதிரைகளில் மாற்றி மாற்றி சவாரி செய்து பயணித்தால் ஒரே நாளில் அடைந்துவிட முடியும். ஆனால், வழியில் அகலமான நதி ஒன்று இருந்தது. படகு மூலம் மட்டுமே அதைக் கடக்க முடியும்; நடைபயணத்தின்போது எதிர்கொள்ள நேரும் ஆபத்துகள் குறித்து தொடர்ந்து குறிப்புகள் காணப்படுகின்றன.

ஸ்ராவஸ்தி: வடக்கு கோசல தேசத்தின் தலைநகரம், அரசன் பசநேதி ஆண்டு வசித்த இடம். புத்தரின் காலத்தில் இந்தியாவின் ஆறு பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதன் இருப்பிடம் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கூறியிருக்க்கிறார்கள்; இந்தியாவின் ஆரம்பகால வரலாறு குறித்த பல கல்வெட்டுகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், விவாதத்துக்குரிய இந்த முடிவு ஏற்பட்டிருக்கலாம். இந்த நகரம் சாகேதத்துக்கு வடக்கே ஆறு லீகுகள் தூரத்திலும், ராஜகிருஹத்துக்கு வடமேற்கில் நாற்பத்தைந்து லீகுகள், சுப்பரகாவுக்கு வடகிழக்கில் நூறுக்கும் அதிகமான லீகுகள் தூரத்திலும், சங்கிஸ்யாவிலிருந்து முப்பது லீகுகள் தூரத்திலும் இருந்தது. அக்கிராவதி அல்லது ஐராவதி (இன்றைய ரப்தி நதி) நதிக்கரை நகரம் இது.

உஜ்ஜைனி: அவந்தியின் தலைநகர். கிரேக்கர்கள் அப்பகுதியை ஓசீன் (ஓசோன்) என்று நறுமணம் நிறைந்த வானிலைக்காக அழைத்தனர், அங்குதான் புத்தரின் முக்கிய சீடர்களில் ஒருவரான காசியபரும் மதம் பரப்ப சிலோனுக்குச் சென்ற அசோகரின் மகன் மகிந்தனும் பிறந்தனர். பிற்காலத்தில் அங்கே ’தெற்கு மலை’ என்ற புகழ்பெற்ற புத்தமடம் உருவானது. தொடக்கத்தில் (நர்மதைக் கரையில் இருந்த) மகிசாதி அல்லது மகிஸ்மதி தலைநகராக இருந்தது. சமீபத்தில் வேதிஸா என்ற இடத்தில் புகழ்பெற்ற பில்சா பௌத்த நினைவுச்சின்னங்களும், அதற்குச் சற்று அருகிலேயே நன்கு அறியப்பட்ட எரகச்சா என்ற இடத்திலும் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாடலிபுத்திரத்திலிருந்து வேதிஸா ஐம்பது லீகுகள் தூரத்தில் இருந்தது.

வைசாலி: இது லிச்சாவி வம்சத்தினரின் தலைநகராக இருந்தது. திருமண உறவின் மூலமாக ஏற்கனவே மகத அரசர்களுடனும் நேபாள மன்னர்கள் மற்றும் மௌரியர்களின் மூதாதையர்களுடனும் குப்த வம்சத்தவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். வலிமைமிக்க வஜ்ஜியர்களின் கூட்டமைப்பின் தலைமையகமாக இருந்தது. பின்னர் அஜாதசத்ருவால் . தோற்கடிக்கப்பட்டாலும், உடைந்துபோய்விடவில்லை. கி.மு.ஆறாம் நூற்றாண்டின் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான காரணியாக உருவெடுத்த சுதந்திரமான குலங்களின் பிரதேசங்கள் அனைத்திலும் ஒரே பெரிய நகரமாக இது இருந்தது. மாபெரும் இந்த நகரம் செழிப்பு மிக்கதாக இருந்திருக்கவேண்டும். அதன் இருப்பிடம் குறித்து பல்வேறு யூகங்கள் இருக்கின்றன; அவற்றில் எதுவுமே இதுவரை அகழாய்வு மூலம் உண்மை என நிரூபிக்கப்படவில்லை. தற்போதைய திரிகூடத்துக்கு அருகில் இருந்திருக்கலாம். கங்கை நதியின் குறிப்பிட்ட இடம் ஒன்றிலிருந்து மூன்று லீகுகள், அல்லது, இருபத்தைந்து மைல்கள் வடக்கே நகரம் இருந்தது. ராஜகிருஹத்திலிருந்து ஐந்து லீகுகள் அதாவது முப்பத்தெட்டு மைல்கள் என்று சொல்லலாம்.

இந்த நகரத்துக்குப் பின்னால் தான் வடக்கே இமயமலை வரை நீண்டிருந்த மகாவனம் என்ற பெருங்காடு இருந்தது. அந்த வனத்தில்தான் அந்தச் சமூகத்தினர் புத்தருக்காக தபோவனம் ஒன்றை அமைத்தனர். அங்கு அவர் பல சொற்பொழிவுகள் அளித்தார். அண்டையிலிருந்த புறநகர்ப் பகுதி ஒன்றில்தான் சமணர்களின் நிறுவனர் பிறந்தார். சில முன்னணி குலத் தலைவர்களுடன் நெருங்கிய உறவினர் அவர். நகரத்தைச் சுற்றியிருந்த மூன்று சுவர்களைப் பற்றி கேள்விப்படுகிறோம், ஒவ்வொன்றும் பசுவின் குரல் கேட்கும் தூரத்து இடைவெளியில் அமைந்திருந்ததாம். அந்த நகரத்தில் 7707 ராஜாக்கள் அதாவது லிச்சாவி குலத்தலைவர்கள் வசித்திருக்கிறார்கள். அவர்களுக்கு முடிசூட்டப்பட்ட புனிதமான குளம் குறித்தும் அறிகிறோம். நகரத்திலும் அதைச் சுற்றிலும் பௌத்தத்துக்கு முந்தைய காலத்தில் வழிபாடு நடந்த ஆலயங்கள் பல இருந்தன. அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்வது மிகவும் விரும்பத்தக்கது.

இதேபோன்ற விஷயங்களைப் பண்டைய நகரங்கள் அனைத்துக்கும் குறிப்பிட்டுப் பேசலாம். ஆனால், அந்த இடங்கள் ஒன்றிலும் முறையாக அகழாய்வு நடக்கவில்லை. இந்தியாவின் தொல்லியல் துறை, தற்போது 1910களில் வேலை நடைபெறாத துறையாக இருக்கிறது.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *