Skip to content
Home » பௌத்த இந்தியா #9 – சமூகத் தரநிலை

பௌத்த இந்தியா #9 – சமூகத் தரநிலை

பௌத்த இந்தியா - சமூகத் தரநிலை

சமூக அந்தஸ்தை முடிவு செய்வதில் பழங்கால இந்தியர்களுடைய பார்வையில் நில உடமை, சொத்துடமை மற்றும் அவற்றின் பகிர்மானம் தொடர்பான பழக்கவழக்கங்கள் மிக முக்கியமானதாக இருந்தன. ஆனால், ஒருபுறம் மதம், மறுபுறம் அக மண உறவு உரிமையும் அனைவரும் சமமாக அமர்ந்து உண்ணும் வழக்கமும் என்ற இரண்டையும் தாண்டி சமூக படிநிலைகள் அவர்களது யதார்த்தமான நல்வாழ்விலும் தேசத்தின் முன்னேற்றத்திலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின.

உலகெங்கும், பழங்குடி மக்களிடையே மண உறவு உரிமை அதாவது வெவ்வேறு இனங்களுக்கு இடையில் புற மண உறவு கொள்வது மற்றும் சமமாக அமர்ந்துண்ணும் உரிமை ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் இருந்தன என்பதைச் சமீபத்திய ஆண்டுகளில் அறிந்துள்ளோம். குலத்துக்குள்ளும், குலத்துக்கு வெளியிலும் அதாவது அகமண உறவு மற்றும் புற மண உறவு கொள்வது ஆகிய இரண்டுமே உலகம் தழுவிய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக ஓர் ஆண் தனது குடும்பத்துக்குள் மணம் செய்துகொள்ள இயலாது; தனது குலக்குழுவிற்குள் மணம் செய்து கொள்ளலாம்; குலத்துக்கு வெளியில் அவன் மணம் செய்துகொள்ளக் கூடாது.

பல்வேறு பழங்குடி இனத்தவரிடையே நிலவிய கட்டுப்பாடுகள் அவர்கள் பின்பற்றிய மாறுபட்ட மரபான பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டவையாக இருந்தன. ஒரே மாதிரியாக இருக்கவில்லை. ஆனால், வரம்புகளும் கட்டுப்பாடுகளும் எப்போதும் இருந்தன. பழங்குடியினரின் புனித விருந்துகளில் அனைவரும் ஒன்றாக உண்ணும் வழக்கங்கள் இருந்தன; ஆனால், அதில் அந்நியர்கள் கலந்துகொள்ள முடியாது. குறிப்பிட்ட உறவு முறைக்கு அப்பால் இருப்பவர்களுடன் விசேஷமான சில சூழ்நிலைகள் தவிர்த்து, சமமாக அமர்ந்துண்ணும் வழக்கம் இருக்கவில்லை; ஒரு பழங்குடி மனிதருடன் அமர்ந்து உணவு உண்பதன் மூலம், ஓர் அந்நியர் அந்தப் பழங்குடி மனிதருடனான உறவில் சில உரிமைகளைப் பெறும் பழக்கம் நிலவியது. இங்கு, திரும்பவும் விவரங்கள் வேறுபடுகின்றன. ஆனால், சமமாக அமர்ந்து உணவுண்ணும் வழக்கத்தில் நிலவிய கட்டுப்பாடுகள் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் நிலவியது.

இந்தியாவிலும் கி.மு.ஏழாம் நூற்றாண்டில் இத்தகையப் பழக்கவழக்கங்கள் இருந்தன. ஆரியர், திராவிடர், கோல் இனத்தவர், மற்றவர்கள் போன்ற பல்வேறு பழங்குடியினர் மத்தியில், வெவ்வேறு வடிவங்களில் பரவலாக இவை நடைமுறையில் இருந்தன. இந்த இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து கலவையான மக்கள் திரள் ஒன்றை உருவாக்கினார்கள். கெடுவாய்ப்பாக ஆரியர்களின் ஆவணப் பதிவுகள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. அப்பதிவுகள். எல்லாம், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் மேலோட்டமாக எழுதியுள்ளன; அத்துடன் அவற்றை முற்றிலும் அறிந்தவர்களை நோக்கி எழுதப்பட்டுள்ளன. எனவே, நாம் குறிப்பால் உணர்த்துபவற்றின் உள் அர்த்தங்களைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது; ஆனால், பதிவான குறிப்புகள் அனைத்தும் இன்னமும் சேகரிக்கப்பட்டு, வகைப்படுத்தப்படவில்லை. எனினும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகள் கணிசமான எண்ணிக்கையில் ஏற்கனவே நன்கு ஆராயப்பட்டுள்ளன; அவற்றைக்கொண்டு ஓர் ஓவியத்தின் வெளிக்கோட்டுக்கான முக்கியப் புள்ளிகளை நாம் வரைய முடியும். எதிர்காலத்தில் அவற்றை ஒன்றிணைத்து, நிரப்பி முழுமைபெறச் செய்யலாம்.

சமூக வேறுபாடுகளைத் தீர்மானிக்கும் அடிப்படை விஷயமாக ’உறவுநிலை’ இருந்தது; அல்லது, தமது வெள்ளையான நிறம் குறித்து பெருமிதம் கொண்டிருந்த ஆரியர்கள் சொல்வதுபோல், ’நிறம்’ அடிப்படையாக இருந்திருக்கலாம். மக்களிடையில் ஒரு பொதுவான பதத்தை அவர்களது புனித நூல்கள் தொடர்ந்து திரும்பத் திரும்பக் கூறுகின்றன. குறைந்தபட்சம் ஆரியப் பிரிவினரிடையே இப்பதம் பொதுவானதாக இருந்திருக்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில், இந்த உலக மக்கள் அனைவரும் வர்ணங்கள் என்று சொல்லப்படும் நான்கு சமூகத் தரநிலைகளில் பிரிக்கப்பட்டனர்.

முதல் நிலையில் அரச வம்சத்தவர்களும் பிரபுக்களுமான க்ஷத்திரியர்கள் இருந்தனர், இந்தத் துணைக்கண்டத்தின் மீது ஆரியப் பழங்குடியினர் படையெடுத்து வந்தபோது அவர்களது தலைவர்களாய் இருந்தவர்களின் வழிவந்தவர்கள் என்று அவர்கள் தம்மைக் கூறிக்கொண்டனர். தந்தை மற்றும் தாய் என்று இரு உறவுமுறையிலும், ஏழு தலைமுறைகள் கலப்பு ஏதுமற்ற சுத்தமான வம்சாவளி என்பதில் அவர்கள் மிகவும் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டனர். அவர்கள், ‘நல்ல நிறமும் பார்ப்பதற்கு நேர்த்தியான கம்பீரமான தோற்றமும்’ கொண்டவர்கள் என்று விவரிக்கப்படுகிறார்கள்.

அடுத்து வருபவர்கள், பிராமணர்கள்; பலியிடல் சடங்குடன் யாகங்களை நடத்தும் புரோகிதர்களின் வழிவந்தவர்கள் என்று அவர்கள் தம்மைக் கூறிக்கொண்டனர். அவர்களில் பெரும்பான்மையோர் வேறு தொழில்களையும் செய்தனர்; உயர்ந்த பிறப்பு மற்றும் தெளிவான மேனி நிறம் ஆகியவற்றினால் அவர்கள் உயர் குடிகளுக்கு இணையாக இருந்தனர். இவர்களுக்குக் கீழே விவசாயக் குடிமக்கள் அதாவது வைசியர்கள் இருந்தனர். இறுதியாகச் சூத்திரர்கள் வந்தனர். ஆரியர் அல்லாத இனங்களைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் இந்த வர்க்கத்தில் இருந்தனர்; அவர்கள் கூலி வேலையில் ஈடுபட்டனர்; கைவினைப் பொருட்கள் செய்தனர் அல்லது சேவைப் பணிகள் புரிந்தனர். இவர்கள் கறுப்பு நிறத்திலிருந்தனர்.

பொதுவான தோற்றத்தில், இந்த வகைப்பாடு வாழ்க்கையின் யதார்த்த நிலைமைகளை ஒத்திருந்தது. ஆனால், இந்த நான்கு வர்ணங்களின் எல்லைகளுக்குள், ஒவ்வொன்றுக்குள்ளும் அறிவுக்கொவ்வாத தரநிலைகள் பல இருந்தன; அத்துடன் அந்த எல்லைகள் எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டவை; மற்றும் தெளிவாக வரையறுக்கப்படாதவை.

மக்கள் குறித்த இந்த விவரக் குறிப்புகள் இத்துடன் முழுமை பெறவில்லை. இந்த நான்குக்கும் கீழே, அதாவது சூத்திரர்களுக்கும் கீழே, மற்ற ‘தாழ்ந்த பழங்குடியினர்’ மற்றும் ’தாழ்ந்த பணிகள் செய்வோர்’ ’ஹீன-ஜாதி மற்றும் ஹீன-சிப்பானி’ இருந்ததாகக் குறிப்பிடுகிறது.

முதலில் குறிப்பிடப்படுவோரில் நாணல் புல் கொண்டு பொருள் செய்வோர், பறவைகள் பிடிப்பவர்கள், வண்டிகள் செய்பவர்கள் என்று இந்தத் தொழில்களில் பரம்பரையாக ஈடுபட்ட கைவினைஞர்களாகப் பூர்விகப் பழங்குடியினர் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

அடுத்ததாகச் சொல்லப்படுவோரில் பாய் முடைவோர், முடி திருத்துபவர்கள், குயவர்கள், நெசவாளர்கள் மற்றும் தோல் தொழிலாளர்கள் இருந்தனர். இவர்கள் மத்தியில், பிறப்பால் தீர்மானிக்கப்பட்டதாக நிரந்தரமான, உறுதியான விதிகள் ஏதும் இல்லை. இந்தத் ’தாழ்ந்த பணிகளில்’ ஒன்றுக்குப் பதிலாக மற்றொரு தொழிலை மாற்றிக்கொள்ள முடியும்; அவ்வாறு, அவ்வப்போது தங்கள் தொழில்களை அவர்கள் மாற்றிக்கொண்டனர்.

காதல் வயப்பட்ட க்ஷத்திரியன் ஒருவன் – அவமதிப்போ அபராதமோ இன்றி-குயவனாக, கூடை முடைபவனாக, பூமாலை தொடுப்பவனாக, சமையல்காரனாக அடுத்தடுத்து வெற்றிகரமாகப் பணிகள் செய்தான் என்று ஒரு ஜாதகக் கதை (5.290) கூறுகிறது. மற்றொரு ஜாதகக் கதையில் (6.372), ஒரு ’சேத்தி’ தையல்காரனாக, குயவனாக வேலை செய்கிறான்; அத்துடன், அதே நேரம் அவனது உயர் பிறப்பின் மரியாதையையும் தக்கவைத்துக் கொள்கிறான்.

இறுதியாக மற்றொன்று: சமண மற்றும் பௌத்த நூல்களில் சண்டாளர்கள் மற்றும் புக்குசாக்கள் என்ற வனவாசிகளான பழங்குடியினத்தவர் குறித்துக் கேள்விப்படுகிறோம். இந்தத் தாழ்ந்த இனத்தவர், தாழ்ந்த பணிகளைச் செய்பவர்களைக் காட்டிலும் மிகவும் இழிவானவர்கள் என்று கூறப்படுகிறார்கள்.

மேற்கூறியவர்கள் தவிர்த்து, நடோடிகளும் அடிமைகளும் கூட இருந்தனர்: கொள்ளைக்காகச் செல்கையில் பிடிக்கப்படும் மனிதர்கள் அடிமைகள் ஆக்கப்பட்டனர். அல்லது நீதிமன்றங்களில் தண்டனையாக மனிதர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது; அல்லது சிலர் விருப்பத்துடனேயே அடிமைத்தனத்துக்கு ஆட்பட்டனர். இப்படியான அடிமைகளுக்குப் பிறந்தவர்களும் அடிமைகள் எனப்பட்டனர்; அடிமைத்தன நிலையிலிருந்து அவர்கள் மீட்கப்படும் நிகழ்வுகளும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அடிமை முறையில் பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்போல் அதாவது கிரேக்கச் சுரங்கங்களில், ரோமானியர்களின் பெரும் பண்ணைகளில், அடிமைகள் வைத்திருக்கும் பெரும் கிறித்துவச் செல்வந்தர்களின் தோட்டங்களில் அடிமைகள் அனுபவித்தப் பெரும் துயரங்களையும் ஒடுக்குமுறைகளையும் இந்தியாவில் நாம் கேள்விப்படவில்லை.

இங்கு பெரும்பாலான அடிமைகள் வீட்டு வேலைக்காரர்களாக இருந்தனர்; மோசமாக நடத்தப்படவில்லை; அத்துடன் அவர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் இருந்திருக்கிறார்கள் என்றும் தெரியவருகிறது.

மக்களிடையே பிரிவினைகள் இப்படித்தான் இருந்தன. மூன்று உயர் வர்க்கங்களும் தொடக்கத்தில் ஒன்றாகத்தான் இருந்தன; ஏனென்றால், க்ஷத்ரியர்களும் புரோகிதர்களும் உண்மையில் வைசியர்கள் என்ற மூன்றாம் வர்க்கத்திலிருந்து தம்மை உயர்ந்த சமூகத் தரநிலைக்கு உயர்த்திக் கொண்டவர்கள்தான். நடைமுறையைக் காட்டிலும் ஒருவகையில் அது சிரமமானது என்றாலும், ஒத்திசைவான சில மாற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியம் இருந்தது. ஏழைகள், பிரபுக்கள், க்ஷத்ரியர்கள் ஆக முடிந்தது. இருவரும் பிராமணர்களாகவும் முடிந்தது.

புனித நூல்களில் பல நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் சில பிற்காலத்து புரோகித நூல்களில், அவை ஜாதிக் கோட்பாட்டைப் பேசியவையாக இருந்தும், அவர்கள் அறியாமலேயே பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்வும் விதிவிலக்கான ஒன்று என்பதுபோல் குறிப்பிடப்பட்டுள்ளது; எனினும் ’வர்ணங்களுக்கு’ இடையிலான எல்லைக்கோடு அந்த நேரத்தில் இன்னமும் கடுமையாக வரையப்படவில்லை என்பதே உண்மை. உயர் வர்ணத்து மக்கள் அனைவரும் வெள்ளை நிறத்திலும் இல்லை.

சந்தேகமின்றி ஷத்திரியர்களில் சிலர், திராவிட மற்றும் கோல் இனத்துப் பழங்குடித் தலைவர்கள் மற்றும் பிரபுக்களின் வழிவந்தவர்கள்; அவர்கள் தம் சுதந்திரமான நிலையையும் சமூகத்தில் அந்தஸ்தையும் வெற்றியின் மூலமோ அல்லது ஏதேனும் உடன்படிக்கை மூலமோ பாதுகாத்துக்கொண்டனர். அதே பழங்குடி இனத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அவ்வப்போது அரசியல் முக்கியத்துவம் பெற்றனர்; அந்தத் தகுதியுடன், இன்னும் உயர்ந்த சமூகத் தரநிலையில் நுழைந்தனர்.

பொதுவாகக் காணப்பட்டதைக் காட்டிலும், வெவ்வேறு சமூகத் தர நிலைகளில் உள்ளோர் மாறிக்கொள்வதில் அதிகச் சுதந்திரம் இருந்தது என்பதை அடுத்துக் குறிப்பிடப்படும் தொழில் சார்ந்த நிகழ்வுகள் காட்சிப்படுத்துகின்றன.

1. ஓர் அரசனின் மகனான க்ஷத்திரியன் ஒருவன் தான் காதலிக்கும் வேறு வர்ணப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அந்தப் பெண்ணின் தந்தை ஒரு குயவராக, கூடை முடைபவராக, பூமாலை கட்டுபவராக, ஒரு சமையல்காரராக இருந்தாலும் அவர்களிடம் உதவியாளனாகப் பயிற்சி பெறுகிறான். அவனது செயல் வெளியுலகத்துக்குத் தெரிய நேர்ந்தாலும் அதனால் அவன் தனது சாதி நிலையை இழந்தான் என்று எந்தக் குறிப்பும் இல்லை.

2. மற்றொரு இளவரசன், தனது சகோதரிக்காக ராஜ்ஜியத்தில் தனது பங்கை விட்டுக்கொடுத்துவிட்டு, ஒரு வியாபாரியாக மாறிவிடுகிறான்.

3. மூன்றாவதாக ஓர் இளவரசன் ஒரு வணிகனுடன் வாழ்வதற்குச் சென்று ’உடலுழைப்பின்’ மூலம் தனது வாழ்வாதாரத்தைச் சம்பாதித்துக் கொள்கிறான்.

4. பிரபு ஒருவன் ஊதியத்துக்காக வில்லாளியாகப் பணியேற்கிறான்.

5. ஒரு பிராமணன் பிறர்க்கு தானம் கொடுக்கப் பணம் திரட்டுவதற்காக வியாபாரத்தில் ஈடுபடுகிறான்.

6. இது போன்ற காரணம் ஏதும் சொல்லாமலேயே, இரண்டு பிராமணர்கள் வணிகம் செய்து வாழ்க்கை நடத்துகிறனர்.

7. ஒரு பிராமணர், இதற்கு முன் நெசவுத் தொழிலாளியாக இருந்து இப்போது வில்லாளி ஆகிவிட்ட ஒருவனிடம் உதவியாளராகப் பணிபுரிகிறார்.

8. பிராமணர்கள் சிலர் வேட்டையாடுபவர்களாகவும், விலங்குகளையும் பறவைகளையும் பொறிவைத்துப் பிடிப்பவர்களாகவும் வசித்தனர்.

10. ஒரு பிராமணர் வண்டிச் சக்கரங்கள் சீர் செய்பவராக இருந்தார்.

பிராமணர்கள் விவசாயத்திலும் ஈடுபட்டனர்; மாடு மேய்ப்பவர்களாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் தம்மை அவர்கள் பணிகளில் அமர்த்திக் கொண்டனர் என்றும் அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறது. இவை அனைத்தும் ஜாதகக் கதைகளில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள். இதைப் போன்ற விஷயங்களில் பௌத்தம் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது என்று ஒரு வலிமையான வாதம் இருக்கிறது; அதை நாம் ஏற்கவில்லை என்றால், பௌத்தம் எழுச்சிப் பெறத் தொடங்கிய நேரத்தில் இந்த நிலைமைகள் இன்னும் தளர்வாக இருந்திருக்கவேண்டும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

மண உறவு உரிமை தொடர்பான வழக்கங்கள் எவ்வகையிலும் நான்கு வர்ணங்களுடன் ஒத்திசைவாக, அதே காலஅளவுக்கு நீடித்திருந்ததாகத் தெரியவில்லை. ஆரியர்கள் மத்தியில் அவை முற்றிலும் மாறுபட்ட சிந்தனை அடிப்படையில் புழக்கத்தில் இருந்தன. அதாவது, அந்த இனத்தின் ஆண்களது குழுவைச் (கோத்திரத்தைச்) சார்ந்து இருந்தன.

பிற மக்களிடம் அந்தப் பழங்குடி இனத்துக்குள் அல்லது கிராமத்துக்குள் என்பதாக அவ்வழக்கம் இருந்தது. மண உறவு கொள்ளும் இரு தரப்பினரும் பிறப்பால் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படும் எந்த நிகழ்வும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மறுபுறம், ஒழுங்கற்ற முறையில் நடந்த எண்ணற்ற உறவுகள் குறித்துப் பல நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. மேலும், சில நேரங்களில் இத்தகைய மண உறவில் வந்த வாரிசுகள் பிரபுக்களாகவும் (க்ஷத்திரியர்களாகவும்) அல்லது பிராமணர்களாகவும் தரநிலை பெற்றனர்.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *