ஒன்றாக அமர்ந்துண்ணுதல் அல்லது உண்ணாமலிருத்தல் போன்ற வழக்கங்கள் குறித்து, பழங்கால நூல் தொகுப்புகளில் சில குறிப்புகள் மட்டுமே உள்ளன. ஒரு பிராமணர், க்ஷத்திரியர் ஒருவருடன் அமர்ந்து உண்ணுவது பற்றியும், மற்றொரு பிராமணர், சண்டாளர் ஒருவரின் உணவை உண்பதும், அந்தச் செயலுக்காக உளப்பூர்வமாக வருந்துவது குறித்த நிகழ்வுகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. சாக்கிய இனத்து இளம்பெண் கோசல நாட்டு மன்னன் பசநேதியை மணம் செய்து கொண்ட கதையைப் படித்தோம்; சொந்த மகளாகவே இருந்தாலும் அடிமைக்குப் பிறந்தவளாக இருந்தால், ஷத்திரியர் அவளுடன் அமர்ந்து உண்ணமாட்டார் என்ற நம்பிக்கையை நிகழ்வு வெளிக்காட்டியது. அத்தகைய வழக்கங்களை மீறும் மனிதர்கள் சாதிவிலக்குக்கு ஆளாக்கப்படுவது பற்றி கேள்விப்படுகிறோம். சண்டாளர் ஒருவர் பயன்படுத்திய அரிசிக் கஞ்சியுடன் கலந்துவிட்ட நீரைக் குடித்தற்காக சகோதர பிராமணர்களின் சமூகத் தரநிலையைச் சில பிராமணர்கள் பறித்துவிடும் சம்பவம் ஜாதகக் கதை (4.388) ஒன்றில் பதிவாகியுள்ளது.
இன்னமும் சற்று பழைய ஆவணம் ஒன்றில் பதிவாகியிருக்கும் ஓர் உரையாடலில் எப்படி இது செயல்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த நிகழ்வில் பிராமணர்கள் சிலர் ’ஏதோ குற்றம் செய்ததற்காக ஒரு பிராமணரை விலக்கம் செய்கிறார்கள். தலையை மழித்த பின், அவர் மீது சாம்பலைத் தூவுவதன் மூலம் இறந்தவர் போலாக்கி, அந்தப் பகுதியிலிருந்தும் நகரத்திலிருந்தும் அவரைத் துரத்துகிறார்கள்’. அந்தப் பத்தி மேலும் இவ்வாறு தொடர்கிறது: க்ஷத்திரியர்கள், இதை ஒரு க்ஷத்ரியருக்குச் செய்திருந்தால் பிராமணர்கள் அவரை அவரது இனத்திற்குள் மண உறவு கொள்ள அனுமதித்திருப்பார்கள். புனித விருந்துகளில் ஒன்றாக அமர்ந்துண்ணவும் சம்மதம் தெரிவித்திருப்பார்கள். மேலும் இவ்வாறு செல்கிறது: ’பிறப்பு அல்லது பரம்பரை பற்றிய சிந்தனைகளுக்கும், அல்லது சமூகத் தரநிலையின் பெருமிதத்துக்கும், மணவுறவினால் கிடைக்கும் தொடர்புக்கும் எப்போதும் அடிமையாக இருப்பவர்கள் விவேகம் அற்றவர்கள்; அத்துடன் பகுத்தறிவு அற்றவர்கள்.’ அந்தப் பத்தி முழுவதிலும் பௌத்தப் பார்வையின் சாயலை நம்மால் பார்க்கமுடிகிறது. எப்படியிருப்பினும், இது எழுதப்பட்ட காலகட்டத்தில், இத்தகையப் பழக்கவழக்கங்களும், பிறப்பால் உணரப்படும் பெருமிதமும் மக்களது சமூக வாழ்க்கையில் ஒரு காரணியாக அங்கீகரிக்கப்பட்டன என்பதற்கு இது நல்லதொரு சான்றாக இருக்கிறது.
மற்றுமொரு ஜாதகக் கதையில் (5.280), பிரபலமான கதை ஒன்றின் சாரத்தைப் பார்க்க முடிகிறது; க்ஷத்திரியர் ஒருவர் நிராகரித்த அவரது மனைவியை பிராமணர் ஒருவர் தனது ஒரே மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். மக்கள் அவரைப் பார்த்து நகைக்கிறார்கள். அவரது சமூகத் தரநிலைக்கு எவ்வகையிலும் தகுதியற்ற செயலை அந்த பிராமணர் செய்தார் என்பதற்காக அவர்கள் சிரிக்கவில்லை. உண்மையில் அவர் வயதானவர் என்பதுடன் அழகற்றவராகவும் இருந்தார் என்பதற்காகவே அப்படி நடந்துகொண்டனர்.
சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்த அனைத்துத் தரநிலைகளையும் சார்ந்த ஆண்களும் பெண்களும் மண உறவு கொண்டதைக் காட்டும் ஏராளமான நிகழ்வுகள் உள்ளன. மரபுகள் பற்றிப் பேசும் சமயம் சார்ந்த நூல்களிலும் இவை காணப்படுகின்றன. உயர்நிலையில் இருந்த ஆண்களுக்கும் தாழ்ந்த சமூகத் தரத்திலிருந்த பெண்களுக்கும் இடையிலான மண உறவுகளை மட்டும் அவை குறிப்பிடவில்லை; உயர்நிலையில் இருந்த பெண்களுக்கும் தாழ்ந்த சமூக தரத்திலிருந்த ஆண்களுக்கும் இடையில் நிகழ்ந்த உறவுகளைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
இந்தக் குறிப்புகளைக் கண்டு நாம் சிறிதும் வியப்படைய வேண்டியதில்லை. இவை இல்லையெனினும், கிடைத்திருக்கும் தகவல்களிலிருந்து என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள இயலும். இந்தியாவில் இப்போது சுத்தமான ஆரிய இனம் என்பது இல்லை என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பிராமணக் கோட்பாட்டைப் போல், நடைமுறை வழக்கம் கடுமையாகப் பின்பற்றப்பட்டிருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காது. இங்கிலாந்தில் ஐபீரியர்கள், கெல்ட்ஸ், ஆங்கெல்ஸ், சாக்சன்கள், டேன்ஸ், நார்மன்கள் ஆகியோர் இப்போது கலந்துவிட்டனர். கொள்கையளவில் கலப்பு திருமணத்துக்குக் கட்டுப்பாடுகள் இருப்பினும், அவர்கள் ஒரு தேசம் ஆகிவிட்டனர்.
அதுபோலவே வட இந்தியாவிலும் பௌத்தம் எழுச்சியுற்ற காலத்தில் ஆரியர், கோலரியர், திராவிடர் என்று தொன்மையான இன வேறுபாடுகளுடன் எவரையும் அங்கீகரிக்க முடியாத நிலையே இருந்தது. பழைய கட்டுப்பாட்டு எல்லைகள் குறைந்தபட்சம் முற்றிலும் மறைந்துபோன நீண்ட காலத்துக்கு முன்பே சாதி சார்ந்த புரோகிதக் கோட்பாடுகள், நடைமுறை செயல்பாட்டின் ஒழுங்குமுறையாக மாற்றப்பட்டுவிட்டன. இது நடந்துமுடிந்த நிகழ்வு. இந்த நவீனக் காலத்தில் பார்க்கப்படும் பிரிவுகள், இனத்துக்கு அவற்றில் முக்கியப் பங்கு இருந்தாலும், வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. அவை வெவ்வேறு கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவை.
இன்றைய முன்னேறிய மற்றும் நாகரிகம் அடையாத இனங்களுக்கிடையில் விரோதங்கள் எழுவதற்குப் பெருமளவு காரணமாக இருக்கும் வழக்கங்களும் அறிவுசார்ந்த பண்பாட்டு விஷயங்களும் போல், அக்காலத்தில் உடல் சார்ந்த விரோதம் அவ்வளவாக இல்லை என்பதை உடனிகழ்வாகச் சுட்டிக்காட்ட முடியும். ஆனால், இவற்றைக்காட்டிலும் அதிக அளவில் நிற வேறுபாட்டின் அடிப்படையில் இருந்தன. அதே நேரத்தில் கலப்புமணங்கள் அடிக்கடி நடந்தது என்ற தகவல் சந்தேகத்துக்கு இடமற்றது; எனினும் பெருமிதம் மிக்க க்ஷத்திரியர்களுக்கும் தாழ்ந்த சண்டாளர்களுக்கும் இடையிலிருந்த பெரும் இடைவெளி ஏறக்குறைய கண்ணுக்குத் தெரியாத பல நிலைகளால் நிரப்பப்பட்டது. அதுவும், இந்த நிலைகளுக்கு இடையிலான எல்லைகள் தொடர்ந்து மீறப்பட்டன. ஆயினும் சமத்துவமற்ற மண உறவுகளுக்கு நிஜமான தடைகளும் இருக்கத்தான் செய்தன. கட்டுப்பாட்டு எல்லை இன்னமும் கடினமாக, தீவிரமாக வரையப்படவில்லை; எனினும், எல்லை வரையறை இல்லாததாக சமுதாயம் இருக்கவில்லை; ஆனால், சக்திகள் ஒன்றையொன்று ஈர்ப்பதும் எதிர்ப்பதுமாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன என்பதை ஊகிக்க வேண்டியுள்ளது.
பிராமணர்களின் உரிமைகளை (நவீனக் கால இந்தியாவிலோ மனு சாஸ்திரம் மற்றும் இதிகாசங்கள் போன்ற வழிகாட்டும் நூல்களிலோ குறிப்பிடப்படுபவை) நன்கு அறிந்தவர்களுக்கு பிராமணர்கள் ’தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்’ என்று பேசுவதைக் கேட்கும்போது திகைப்பை அளிக்கலாம். மிகத் தெளிவாக, அரசர்களுடனும் பிரபுக்களுடனும் அவர்களை ஒப்பிடுகையில் பயன்படும் ஓர் அடைமொழி தான் அது. மிகவும் தொடக்க காலத்தில் ஒப்பீட்டு அளவில் அவர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்வதற்கான ஒரு வழி.
சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று மதகுருமார்கள் தம்மைக் கூறிக்கொள்வதை, அந்த நேரத்தில் வட இந்தியாவில் எந்த இடத்திலும் அதுவரையிலும் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. பௌத்தத்துக்கு முந்தைய மதகுருமார்களின் நூல்களும் நமக்கு மிகவும் பரிச்சயமான முந்தைய காலத்து நிலைமைகளை மறைமுகமாகக் குறிப்பிட்டன; பிற்கால நூல்கள் அவ்வாறு கூறவில்லை. கிழக்குப் பிரதேசத்திலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கும் வடமேற்கு மாகாணங்கள் தொன்மையான வழக்கங்களை மிகக் கடுமையாகப் பின்பற்றின என்று அவை கூறுகின்றன. அவர்களுக்கு உகந்த நிலப்பரப்பாக குரு தேசத்தையும் பாஞ்சால தேசத்தையும் சொல்கின்றன; காசியையோ கோசலத்தையோ அல்ல. ஆனால், பிற்கால இலக்கியங்களில் தனித்த அம்சமாகத் தென்படும் க்ஷத்திரியர்களுக்கு எதிராக அவர்கள் முன்வைக்கும் ஆணவக் கூற்றுகளை தொடக்கக்கால நூல்களில் எந்த இடத்திலும் அவை பதிவு செய்யவில்லை.
எவரிடமிருந்து அவர்கள் அங்கீகாரத்தையும் வெகுமதியும் எதிர்நோக்கி இருந்தார்களோ அந்த அரசர்கள் தாம் இவர்களது புரவலர்கள். நாம் இப்போது விவாதிக்கும் நேரம் வரை, க்ஷத்திரியர்கள் அனைவரும் இன்னமும் தீவிரச் சர்ச்சைக்குரியதாகப் பார்க்கும் உரிமைகோரல்களை அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த எதிர்ப்பைக் காட்டுபவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும், (ஒட்டு மொத்தத்தில் இவர்கள் சிறுபான்மையினர்) உன்னதமான பிறப்பில் வந்தவர்கள் மட்டுமே.
எடுத்துக்காட்டாக, சமூகத்தில் அந்தஸ்தைப் பொறுத்தவரை பிராமணர்கள்/ மதகுருக்கள் அரச குலத்தவருக்கு அடுத்தபடியாக இருந்தனர் என்ற தகவலை சமண நூல்கள் அத்தனையும் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். இந்த இரண்டு பேருக்கும் இடையில் இதுதான் இயல்பான உறவாக உலகம் முழுவதிலும் நாம் பார்க்க முடிகிறது. இந்தியாவில் சில பகுதிகளில், பொக்கரசாதி, சோனதண்டா போன்ற மத குருக்கள் சிலர் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தனர் என்பதை எடுத்துக்காட்டலாம். நமது வரலாற்றின் மத்திய காலத்தில் இருந்த பெரும் மடாதிபதிகள் மற்றும் பிஷப்களைப் போல் அவர்கள் இருந்தனர். ஆனால், சமூகத்தை மொத்தமாகப் பார்க்கையில் ஒரு வர்க்கமாக, மதகுருமார்கள் அரசர்களை நம்பியிருந்தனர். சமூகத்தில் அவர்களுக்குக் கீழானவர்களாகவே கருதப்பட்டனர்.
மண உறவு உரிமை மற்றும் ஒன்றாக அமர்ந்து உண்ணுவது சார்ந்த, அப்போது வட இந்தியாவில் இருந்தது போன்ற கட்டுப்பாடுகள், இதே மாதிரியான பண்பாடு கொண்ட மக்களிடையே உலகம் முழுவதிலும் காணப்பட்டன. பிற்காலத்தில் உருவான இந்தியச் சாதி அமைப்பின் தோற்றத்துக்கான திறவுகோல் அவை என்பது உண்மை. ஆனால், அந்த அமைப்பு இந்தக் கட்டுப்பாடுகளைக் காட்டிலும் அதிகமானவற்றை உள்ளடக்கியது. புத்தர் காலத்து இந்தியாவின் சாதிய நிலைமைகள் பற்றி, அதே காலகட்டத்து இத்தாலி அல்லது கிரீஸ் போன்ற நாடுகளில் நிறுவப்பட்ட ஒரு அமைப்பைக் குறித்துப் பேசுவதைக் காட்டிலும் துல்லியமாகப் பேசமுடியாது. அப்போது சாதி என்பதற்கு சொல் இருக்கவில்லை. கிடையாது. நவீனச் சொற்குறிப்புடன் (இது ஒரு போர்த்துகீசியச் சொல்லிலிருந்து எடுக்கப்பட்டது) அந்தச் சொற்கள் பெரும்பாலும் தவறாகவே வழங்கப்படுகின்றன. பிரச்னையுடன் ஏதோ ஒரு தொடர்பைக் கொண்டிருக்கின்றன; ஆனால், சாதியைக் குறிக்கவில்லை. வர்ணங்கள், சாதிகள் அல்ல. ஐரோப்பியர்கள் முதலில் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டதோ இப்போதும் அதே அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல் இப்போது பயன்படுத்தப்படுவதுபோல், வர்ணம் எதற்கும் சாதியின் தனித்துவ அடையாளங்கள் எதுவும் இல்லை.
இவற்றில் இருக்கும் மக்களிடையே, மண உறவோ அல்லது சேர்ந்துண்ணும் வழக்கமோ இருக்கவில்லை; ’ஜாதி’ என்பது ’பிறப்பால்’ வருவது; தொடர்ந்து சாதியைச் சுற்றிக் கட்டியெழுப்பப்படும் பாரபட்சங்களுடன், பிறப்பின் பெருமிதம் தொடர்புடையதாக இருக்கிறது; ஆனால், அது இன்று ஐரோப்பாவில், சாதி என்ற கருத்திலிருந்து மிகவும் வேறுபட்ட சிந்தனையுடன் புழக்கத்தில் உள்ளது. ‘குலம்’ என்பது சூழலுக்கு ஏற்ப ’குடும்பம்’ அல்லது ‘இனக்குழு’ என்று கருதப்படுகிறது. இடைக்காலத்துச் சாதி அமைப்புமுறை அதிக அளவுக்குக் குடும்பங்கள் மற்றும் இனக்குழுக்களுடன் தொடர்புடையதாக இருந்தது. எனினும், அடிப்படையில் வேறுபட்ட சொற்களுக்கு இடையில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகிறது. அல்லது இந்தத் தொன்மையான ஆவணங்களில் மத்திய கால சிந்தனை ஒன்றை மறுவாசிப்புக்கு உட்படுத்தவைக்கிறது. இந்தச் சொல்லின் சரியான அல்லது துல்லியமான பயன்பாட்டின் அடிப்படையில், சாதி அமைப்பு அதன்பிறகு நீண்ட காலத்துக்கு நடைமுறையில் இல்லை.
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.