நமக்குக் கிடைத்திருக்கும் பழமையான மற்றொரு ஆவணம், திக நிகயா. அதில் மற்றொரு வகைக் குளியல் விவரிக்கப்படுகிறது; திறந்தவெளிக் குளியல் அமைப்பு! அதில் இறங்குவதற்குக் கீழ் நோக்கிப் படிகள் செல்கின்றன. முழுவதும் கல்லால் அமைக்கப்பட்ட அந்தக் குளம் போன்ற அமைப்பின் சுற்றுச்சுவர்கள் பூக்கள் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இந்தக் குளியல் அமைப்புகள் சில பணக்காரர்கள் தமது பயன்பாட்டுக்காக அவர்களது தோட்டங்களில் நிறுவிய அழகான விஷயமாக இருந்திருக்கலாம்.
மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த இத்தகைய குளங்களை இப்போதும். இலங்கை-அநுராதபுரத்தில் பார்க்க முடியும். அவை கட்டப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் ஆகியிருக்கும்; எனினும், மிக நல்ல முறையில் அவை பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.
நூலில் இரண்டு குளியல் குளங்கள் விவரிக்கப்படுகின்றன. முதலாவதில் குளத்துக்குள் அமைந்திருப்பதுபோல் தோன்றும் ஓர் அடித்தளத்தைப் பார்க்க முடிகிறது; நிச்சயமாக அது, ஆடை அணிந்து கொள்வதற்காக மரத்தூண்கள் மீது அமைக்கப்பட்ட மண்டபம் போன்ற அறையின் அடித்தளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த இடம் குளிர்ச்சியாக வைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். அதற்கு உதவ, அந்த மேடையின் ஒரு பக்கமாக, நீரை நிரப்பிவைக்கச் சிறிய குளம் ஒன்று தனியாகக் கட்டப்பட்டுள்ளது.
மற்றொரு விளக்கப்படத்தில், குளிப்பதற்குக் கீழே செல்லும் படிகளின் மேல், அங்கு செல்வோர் வெயிலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள விதானம் அல்லது பந்தல் போன்ற அமைப்பைத் தாங்குவதற்கு வளைவான அமைப்புகள் (தண்டியம்-முட்டுவளை) இருப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது.
இந்தத் தொன்மையான கட்டடங்கள் குறித்த மேலுமொரு விவரம், குறிப்பாக, பழங்காலத்து அரண்மனையின் பகுதிகளை விவரிக்கும் புத்தகோசரால் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்வத்தைத் தூண்டுவதாக அது இருக்கிறது. பொதுவாக கட்டடத்தின் வெளிப்புறத்தை அழகுபடுத்தும் கொடி, பூ போன்ற வேலைப்பாடுகள் அலங்கரிக்கின்றன. அலங்கார வடிவங்கள் வேறுபடுகின்றன; அதுபோலவே, பயன்படுத்தப்பட்டிருக்கும் மூலப்பொருட்களும் வேறுபடுகின்றன. பொதுவாக, மர வேலைப்பாடு அல்லது பூச்சு வேலைப்பாடாக இருக்கிறது. ஏதாவது ஓரிடத்தில்தான், பர்ஹுத் நினைவுச் சின்ன வளாகத்தில் இருப்பதாகக் கூறப்படும் எடுத்துக்காட்டுபோல் கருங்கல் வேலைப்பாடாக உள்ளது.
ஆனால், அளவில் பெரிய, மாளிகை போன்ற வீடுகள் எண்ணிக்கையில் குறைவு. தாறுமாறாக அமைந்த, குறுகலான துர்நாற்றம் வீசும் தெருக்கள் இருந்திருக்கலாம்; மூங்கில் பிளாச்சுகள் கொண்டு அமைக்கப்பட்ட, களிமண் கொண்டு மெழுகப்பட்ட கூரைவேய்ந்த குடிசைகளான ஏழைகளின் அற்ப வசிப்பிடங்கள் அங்கே இருந்தன. நீண்ட வரிசையில் கடைகள் அமைந்த கடைத்தெருக்களை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. கடைகள் தெருப்பக்கம் மட்டுமே திறக்கமுடிகிற வாயிலுடன் இருந்தன. உண்மையில் அவற்றுக்கு ஜன்னல் இல்லை; அல்லது இருக்க வேண்டிய பகுதியில் உயரம் குறைவான மிகச் சிறிய சுவர் இருந்திருக்கும். கடைத்தெருவில் ஒரு தெருவில் பெரும்பாலும் ஒரே மாதிரியான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளே அமைந்திருந்தன.
மக்கள் கூட்டமாக வாழும் இடமாக, சத்தம் நிறைந்ததாக நகரம் இருந்தது. மிகப் பழமையான பதிவுகள் இந்தத் தகவலைப் பெருமையாகக் கூறுகின்றன. மேலும், இரண்டு தெருக்கள் சந்திக்கும் நாற்சந்தியில் அமைந்திருக்கும் வீட்டுக்கு மதிப்பும் விலையும் அதிகம் என்பதை அறியும்போது ஆச்சரியமாக இல்லை. ஆனால் புறநகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக சில பெரிய நகரங்களின் பரப்பளவு மிகப் பெரியதாகக் குறிப்பிடப்படுகிறது. அந்த நாட்களில் கூட்டமும் எழும் சத்தமும், குறைந்தபட்சம் கோட்டைகளுக்கு வெளிப்பகுதியில் இப்போதைக் காட்டிலும் குறைவாக இருந்திருக்கும்.
தற்போது கிடைத்திருக்கும் ஆவணங்களின்படி, சுகாதார ஏற்பாடுகள் சில செய்யப்பட்டிருந்தது தெரியவருகிறது. வடிகால்கள் பற்றி தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது; ஆனால், அவை நீர் போக்குவரத்துக்கு மட்டுமே; சிறிய அளவிலான அமைப்புகள் குளியலறை அல்லது தொட்டிகளிலிருந்து நீரை எடுத்துச்செல்லவும், பெரியவை கோட்டைக்குள்ளிருந்து மழை நீரை வெளியில் எடுத்துச் செல்லவும் பயன்பட்டிருக்கின்றன. பின்னால் குறிப்பிடப்படும் இந்தத் துவாரங்களின் வழியாகத்தான் நாய்களும் குள்ளநரிகளும் கோட்டைக்குள் நுழைந்தன; சில நேரங்களில் ஆண்களும் கோட்டை வாயில்கள் மூடப்பட்ட பின் இரவில் தப்பித்துச் செல்வதற்கான வழியாக அவற்றைப் பயன்படுத்தினர். ஆகவே, இவை அனைத்தும், ரோமானியர்களின் ’க்ளோகா’ (cloaca) என்ற அமைப்புடன் ஒத்திருந்தன என்று கூறுவதற்கு வாய்ப்பில்லை.
தற்போது மறைவான ஏற்பாடுகள் இருப்பதுபோல், பௌத்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிகமானோர் ஒன்றாக வசிப்பதால் எழக்கூடிய சுகாதாரம் சார்ந்த பல்வேறு சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு அரண்மனைகளிலும் பெரிய மாளிகைகளிலும், அப்போதும் குறைந்தபட்ச ஏற்பாடுகள் பயன்பாட்டில் இருந்திருக்கலாம்.
இறந்தவர்களுக்கான சடங்குகள் எப்படிச் செய்யப்பட்டன என்ற விவரங்களும் கிடைத்துள்ளன; சில அம்சங்கள் மிகவும் ஆர்வத்தைத் தருகின்றன. பிறப்பு அல்லது செல்வம் அல்லது அதிகாரப்பூர்வப் பதவி அல்லது பொது மக்களுக்கான ஆசிரியர் என்ற ஏதேனும் வகையில் உயர்ந்த நிலையில் இருந்து இறந்தவர்கள் தகனம் செய்யப்பட்டனர்; அவர்களது புதைக்கப்பட்ட அஸ்தி மீது நினைவு மண்டபம் அமைக்கப்படும் (பாலி மொழியில் இது தூபம். பௌத்த சம்ஸ்கிருதத்தில் ஸ்தூபம்).
ஆனால், சாதாரண மக்களின் சடலங்கள் தனித்த முறையில் அப்புறப்படுத்தப்பட்டு பொது இடம் ஒன்றில் வைக்கப்பட்டன. அந்த இடம் சிவாதிகா அல்லது அமகா-சுஸ்னா என்று அழைக்கப்பட்டது. (இவை இரண்டுக்கும், நல்லதொரு மாற்றுச் சொல்லாக கல்லறை என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் என்று மொழிபெயர்க்கப்படுகிறது). அங்கு, இறந்த உடல்களும் அல்லது சிதையின் எச்சங்களும் புதைக்கப்படுவதில்லை. பறவைகள் அல்லது மிருகங்கள் அவற்றைத் தின்று அழிக்கின்றன; அல்லது இயற்கையாக சிதைந்துபோக விடப்படுகின்றன.
கழுவேற்றும் முறையில் மரணதண்டனை நிறைவேற்றும் பொது இடமாகவும் இந்த இடம் பயன்படுத்தப்பட்டது. அந்த இடம் பொதுமக்கள் அனைவரும் அணுகக்கூடியதாக இருந்தது. ஆனால், உடனடியாகப் புரிந்துகொள்ள முடிவதுபோல் அந்த இடம், ஆவிகள் உலவும் இடமாகக் கருதப்பட்டது. மிகக் கடுமையான விரதம் பூண்ட எளிய துறவிகள் மட்டுமே அங்கு அடிக்கடி போய்வருவார்கள்.
சில நேரங்களில் இந்தக் கல்லறைகளில் ‘தாகபா’க்கள் அல்லது நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இவை பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளில், தனிப்பட்டவர்களின் தோட்டங்களில் அமைந்தன; அல்லது சிறப்பான மரியாதை செய்யப்பட வேண்டியவர்களுக்கு, நாற்சந்திகளில் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக நாம் அவற்றைப் பௌத்த நினைவுச் சின்னங்களாக எண்ணுவதற்குப் பழகிவிட்டோம். இவை பௌத்தத்துக்கு முந்தியவை.
உண்மையில் உலகளவில் நிலவிய வழக்கத்திலிருந்து சிறிய மாற்றத்துடன் மட்டுமே இங்கு புழங்கின: புதைத்த இடத்தை அடையாளப்படுத்த, மண் மேடோ கற்குவை அமைப்பதோ உலகளாவிய வழக்கமாக இருக்கவில்லை. ஆனால், நிச்சயமாக பண்டைய காலங்களில் இது பொது வழக்கமாக இருந்துள்ளது. அவற்றின் வடிவத்திலும், அளவிலும் நாம் பார்க்க முடிகிற வேறுபாடுகள் குறிப்பிட்ட இனத்தை அடையாளம் காட்டும் சான்றாகவும் கருதப்படுகின்றன.
இந்தியாவில் இருந்த ஆரியர்கள் அந்த நேரத்தில் வட்ட வடிவ அமைப்பையே பயன்படுத்தினர். மேலும், இதில் ஆர்வம் ஏற்படுத்தும் விஷயம் ஒன்று உள்ளது. நாம் விவாதிக்கும் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில், சில சமூகத்தினர் அவற்றை மண் மேடுகளாக அல்லது கல்லும் மண்ணும் பயன்படுத்தியோ அமைக்கவில்லை; மாறாக திடமான செங்கல் கட்டுமானங்களாக அமைத்தனர். மிகவும் தொன்மையான காலத்தில். இந்த வழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக, இவை மதகுருமார்களின் மீதான விசுவாசத்தைத் துறந்த சீடர்கள் முதிர்ந்த சிந்தனையாளர்களாக, சீர்திருத்தவாதிகளாக, தத்துவவாதிகளாக இருந்த தமது ஆசிரியர்களின் நினைவைப் போற்றுவதற்க்காக செய்தனர்.
இந்தச் சிந்தனையாளர்கள் முன்வைத்த கருத்துகளுடன் நாம் உடன்படலாம் அல்லது மாறுபடலாம்; வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பெரும் ஆர்வமூட்டும் ஓர் உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும்; இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் அனைத்தும் பக்தியுடன் மரியாதை செலுத்த வேண்டி கட்டப்பட்டவை; மன்னர்கள், குடித்தலைவர்கள், போர்வீரர்கள், அரசியல்வாதிகள் அல்லது பணக்கார தரும சிந்தனையாளர்கள் போன்றவர்களுக்காக அவை கட்டப்படவில்லை. வாழ்க்கையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குப் புதிய தீர்வுகளை முன்வைத்த அத்தகைய சிந்தனையாளர்களுக்கே நினைவுச் சின்னங்கள் அமைத்தனர். எனவே, பிராமணியப் பதிவுகள் இந்த நினைவுச் சின்னங்கள் குறித்த விஷயங்களை மிகக் கவனமாகத் தவிர்த்துவிட்டதை அறிந்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.
அநேகமாக முதல் நிலையாக, வழக்கத்தைக் காட்டிலும் மிகக் கவனமாக கற்களைக் கொண்டு கற்குவை அமைக்கிறார்கள். அதன்பின் அதன் மேற்பரப்பு பளிங்கு போன்று இருக்க வேண்டும் என்பதற்காக, வெளிப்புறத்தில் நேர்த்தியான சுண்ணாம்பால் பூசுகிறார்கள். இந்தியர்கள் இதில் மிகவும் திறமையானவர்கள். அடுத்தக் கட்டமாக, அக்காலத்தில் பயன்பாட்டிலிருந்த பெரிய அளவிலான செங்கற்களைக் கொண்டு கற்குவையைச் சுற்றி அடுக்குவார்கள். அதன்பின் அந்த இடத்தைச் சுற்றியும் மரச் சட்டங்கள் கொண்டு தடுப்புபோல் அமைப்பார்கள்.
மிகப் பழமையான கற்குவை எதுவும் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை; அல்லது சிதைந்து கிடக்கும் சிலவற்றை மீண்டும் சீர்படுத்தி அதை வரைய முடிகிற அளவுக்குப் போதுமான அளவு ஆய்வும் நடக்கவில்லை. ஆனால், பிந்திய காலகட்டத்தில் நமக்குக் கிடைத்த சிலவற்றிலிருந்து அவற்றைப் பற்றி நாம் அதிகம் சொல்லமுடிகிறது. எடுத்துக்காட்டாக, நாம் இங்கு பார்ப்பது கன்னிங்காமின் (Cunningham) திட்டம் மற்றும் புகழ்பெற்ற பர்ஹூட் நினைவுச்சின்ன வளாகத்தின் ஸ்தூபியை சீர்படுத்தி அவர் வரைந்தது.
கருங்கல் தடுப்புகளில் செதுக்கப்பட்டிருக்கும் புடைப்புச் சிற்பங்களில், அந்தக் காலத்துச் சிற்பியின் கற்பனையில் பலவகையான தூபிகள் எப்படி அமைக்கப்பட்டிருந்தன என்பதைக் காணமுடிகின்றது.
எப்படியிருப்பினும், கருங்கல்லால் ஆன தடுப்புத் தூண்களின் மேற்பரப்பை நிரப்புவதற்குச் செய்யப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகளில், முதலாவதாக நாம் பார்க்கும் முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது; அதில் உயரமான மற்றும் அகலம் குறைவான இடத்தை நிரப்பும் பணியில், அந்தச் சிற்பி குவிமாடத்தின் மேல்பகுதியில் தான் செய்திருக்கும் அழகுபடுத்தும் வேலைப்பாட்டுக்கு, தேவையான அளவைக் காட்டிலும் அதிக உயரம் கொடுத்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.
புத்தர் காலத்திலும், இதைப் போன்ற நினைவுச்சின்னங்களின் அளவு ஏற்கனவே கணிசமான பரிமாணங்களை எட்டியிருந்தது. புத்தரின் இறுதிச்சடங்கின் போது அவரது சிதையிலிருந்து சாக்கியர்களுக்குக் கிடைத்த அஸ்தியின் மீது திடமான குவிமாட வடிவிலான நினைவுச் சின்னத்தை அவர்கள் அமைத்தனர்; கூரையிலிருந்து அதன் உயரத்தை நாம் அளந்தால் (லண்டனில்) செயின்ட் பாலுக்கு அமைக்கப்பட்ட குவிமாடத்தின் அதே அளவு உயரம் இருக்கக்கூடும்.
வாட்டர்லூ பாலத்தில் இருந்து அதைப் பார்க்கையில், இடையில் அமைந்திருக்கும் பெரிய வீடுகள் தேவாலயத்தை மறைத்துவிடுகின்றன; எனினும் நம்மால் அந்தக் குவிமாடத்தைப் பார்க்க முடியும். வானத்தின் பின்னணியில் குவிமாடத்தின் அழகிய வெளிக்கோட்டு வடிவத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. இவற்றை ஒருபோதும் பார்த்திராத மனிதர்களுக்கு, இந்த குவிமாடங்கள் குறித்தும், அவை எப்படி இருக்கும் என்பது பற்றியும் சிறந்த சித்திரத்தை இது அளிக்கிறது.
கெடுவாய்ப்பாக, மிகத் தொன்மையான காலத்தைச் சேர்ந்த இவற்றில் ஒன்றைச் சீரமைத்து வரையும் முயற்சிகளில் எவரும் ஈடுபடவில்லை. ஆனால், பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த ஒன்றை திரு.டபிள்யூ. சிம்சன் நமக்குத் தந்துள்ளார். ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கில் அது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (படம் 14)
இயற்கையான அகண்ட நிலப்பரப்பின் பின்னணியில் ஒரு தாகபாவின் தோற்றத்தை இணைக்கப்பட்ட படத்தில் பார்க்க முடியும்; இது திரு.கேவ் பதிப்பித்திருக்கும் ’சிலோனின் சிதைந்த நகரங்கள்’ நூலில் காணப்படும் ஜெதாவன தகாபா.
இந்தத் தாகபா மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால், அதற்கு முன்புறம் நாம் பார்க்க முடிகிற நீர்ப்பாசனத்துக்கான பெரிய குளம், இந்தியாவிலேயே மிகப் பழமையானதாக இருக்கக்கூடும்; ஏனெனில், அது அசோகரின் காலத்துக்கு முன்பே கட்டப்பட்டது.
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.