Skip to content
Home » பௌத்த இந்தியா #14 – பொருளாதார நிலைமைகள் – 2

பௌத்த இந்தியா #14 – பொருளாதார நிலைமைகள் – 2

பௌத்த இந்தியா

பயணிகளையும், உணவுப் பொருட்களையும் எரிபொருட்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து இப்போது மிக அதிகமாக இருப்பதுபோல் அப்போது இல்லை. பட்டு, மஸ்லின், நுட்பமாக நெய்யப்பட்ட சிறந்த துணி வகைகள், சமையல் கூடத்துக்கான பொருட்கள், வீரர்களுக்கான போர்க்கவசங்கள், ஜரிகை வேலைப்பாடு நிறைந்த பட்டுத்துணிகள், கையால் பூ வேலைப்பாடு போன்றவை செய்யப்பட்ட துணிகள், விரிப்புகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் மருந்துகள், தந்தம் மற்றும் தந்தத்தில் செய்த பொருட்கள், நகைகள் மற்றும் தங்கம் (அரிதாகத்தான் வெள்ளியின் பயன்பாடு) ஆகியன வணிகர்களின் முக்கியமான வியாபாரப் பொருட்கள்.

பழைய வணிகப் பரிவர்த்தனை முறையான பண்டமாற்று முற்றிலும் மறைந்துபோனது. பின்னர் வந்த நாணய நடைமுறையும், அரசாங்கத்தின் அதிகார அமைப்பு சுற்றுக்குவிட்டு, அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பணமாற்று வில்லைகளும் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. பரிவர்த்தனைகள் நடந்தன. பொருட்களின் மதிப்பு எடைபோடப்பட்டது; பேரங்களும் நடந்தன. 146 தானியங்களின் எடையுள்ள சதுர வடிவிலான செப்பு நாணயம் கஹாபணத்தின் அடிப்படையில் வியாபாரம் நடந்தது. தனிப்பட்ட நபர்கள் இந்த நாணயங்களில் பதிக்கும் முத்திரைகள்/ அடையாளங்கள் (punch-marks) நாணயத்தின் எடைக்கும் நேர்த்திக்கும் உத்தரவாதம் தந்தன. இந்த முத்திரைகள், வணிகர்களின் அல்லது வணிக அமைப்புகளின் அல்லது தங்க வணிகம் மட்டுமே செய்தவர்களின் பணமாற்று வில்லைகளா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

வெள்ளி நாணயங்கள் எதுவும் பயன்பாட்டில் இல்லை. அரை மற்றும் கால் கஹாபணாக்களும் இருந்தன. அநேகமாக இப்படிப்பட்ட வேறு நாணய வகை வேறு ஏதுமில்லை. தங்க நாணயங்கள் பற்றிய குறிப்புகள் பின்னாளில் கிடைத்துள்ளன; ஆனால், அவை சந்தேகத்துக்குரியவை. அத்தகைய நாணயங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. சாக்கிய நினைவுச் சின்ன வளாகத்தில் சில மெல்லிய தங்கத் தகடுகள் முத்திரைகளுடன் கிடைத்திருக்கின்றன. நாணயமாகப் புழங்கமுடியாத அளவுக்கு இவை மிகவும் மெலிதாக உள்ளன.

இந்தியாவில் இருந்தபோது அலெக்சாண்டர் தாமிரத்தில் அரை கஹாபணா நாணயம் ஒன்றை அடித்து வெளியிட்டார் என்பது சுவாரஸ்யமான செய்தி. அக்காலத்துக் கிரேக்க நாணயங்கள் போல் அது வட்ட வடிவில் இல்லை. அப்போது புழக்கத்திலிருந்த இந்திய நாணயத்தைப் பின்பற்றி சதுர வடிவில் வெளியானது.

பிந்தைய காலகட்டத்தில்தான் (எடுத்துக்காட்டாக மனு சாஸ்திரம் 8.401) அரசாங்கம் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் மூலம் சந்தை விலையை நிர்ணயம் செய்தது என்று கேள்விப்படுகிறோம். கி.மு.ஆறாம் நூற்றாண்டில் மதிப்பீட்டாளர் என்று அழைக்கப்பட்ட அதிகாரி மட்டும் இருந்துள்ளார். அரண்மனைப் பயன்பாட்டுக்கு வாங்கப்படும் பொருட்களின் விலையைப் பேசி முடிவு செய்வது அவரது பணி. ஆனால், இது நிச்சயம் வேறுபட்ட ஒன்று. பேரம் பேசுவதன் வாயிலாகச் சந்தைகளில் பொருட்களின் விலைகள் முடிவு செய்யப்பட்டன; இது குறித்து வெவ்வேறு நேரங்களில் இடங்களில் அவ்வப்போது நிகழ்வுகள் பல குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டு கட்டுரையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பொதுவான கருத்து ஒன்றுள்ளது. கஹாபணத்தின் மதிப்பு தாமிரத்தின் அப்போதைய மதிப்பின்படி, ஒரு பைசாவின் (பென்னி) மதிப்பில் ஆறில் ஐந்து பங்கு மட்டுமே; எனினும் அப்போது அதனுடைய வாங்கும் சக்தி இப்போது ஒரு ஷில்லிங்குக்கு இருக்கும் வாங்கும் சக்திக்கு இணையாகவே இருந்தது.

நாணயங்கள் தவிர்த்து, கடன் பத்திரங்களின் பயன்பாடும் பெருமளவில் இருந்தது. பெரிய நகரங்களில் இருந்த பெரிய வணிகர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கடன் பத்திரங்கள் எழுதிக் கொண்டனர். ’பிராமிஸரி நோட்டுகள்’ (உறுதிமொழிப் பத்திரங்கள்) பற்றியும் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றது. கெடுவாய்ப்பாக வட்டி விகிதங்கள் பற்றி எப்போதும் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால், மிகத் தொடக்கத்தில் வட்டி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சட்டங்களைக் குறித்துப் பேசும் புத்தகங்கள் அப்போது நடைமுறையிலிருந்த வட்டி விகிதம் பற்றி குறிப்பிட்டுள்ளன; பிற்காலத்தில், தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அளிக்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம், ஆண்டுக்கு பதினெட்டு சதவீதம் எனக் கூறப்படுகிறது.

அப்போது வங்கி போன்ற வசதிகள் இல்லை. அதனால் பணம் ஜாடிகளில் நிரப்பப்பட்டு வீட்டுக்குள் தரையில் புதைத்து வைக்கப்பட்டது; அல்லது யாராவது நண்பரிடம் கொடுத்து வைக்கும் வழக்கமும் இருந்தது; அந்தப் பரிவர்த்தனைக்கு எழுத்துபூர்வமான ஒப்புகைச் சீட்டும் வாங்கி வைத்துக்கொள்ளப்பட்டது.

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், செல்வம் வளம் மிக்க வணிகர்கள் மற்றும் பிரபுக்களின் செலவு செய்யும் சக்தி எப்படி இருந்தது என்பது குறித்து சில கருத்துகளை உறுதி செய்வதற்கு மேல் குறிப்பிட்ட விவரங்கள் நமக்கு உதவுகின்றன. நமது பெரும் நகரங்களில் நிலவும் தேவை குறித்து இப்போது நாம் அறிந்திருப்பதுபோல், அப்போது நகரங்களின் தேவை பற்றி ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு சுதந்திரமான மனிதன் கூலிக்கு வேலை செய்துதான் வாழ வேண்டியிருந்தது என்ற நாம் அறியும் மிக மோசமான, துரதிர்ஷ்டமான விஷயம் பதிவு செய்யப்படுகிறது. அத்துடன் மக்களின் குடியிருப்புகள் நன்கு நிலைபெற்றிருக்கும் கிராம/நகரப் பகுதிகளில் இருந்து சற்று தூரத்திலேயே சுத்தம் செய்து பயன்படுத்தக்கூடிய வகையில் ஏராளமான நிலம் இருந்தது.

அந்தக் காலத்தின் தரநிலை அடிப்படையில் செல்வந்தர்களாகக் கருதப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. மன்னர்கள் பலரைப் பற்றிக் கேள்விப்படுகிறோம், அவர்களது வருமானம் முதன்மையாக நில வரியால் வருகிறது. வேறு பல வருமானங்களும் சிறப்பு உரிமைகளும் அவர்களுக்கு இருக்கின்றன. பணக்கார பிரபுக்களும் சில புரோகிதர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். பிரபுக்களின் பொறுப்பிலிருந்த பிரதேசங்கள் மற்றும் கிராமங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைத்த பத்திலொரு பங்கு நிலவரியிலிருந்து புரோகிதர்களுக்கு மானியமாக (தானமாக) கொடுக்கப்படுகின்றன. இதுபோன்ற மரபுரிமைகளை அவர்களது முன்னோர்களிடமிருந்து ஸ்வீகரித்துக் கொண்டவர்களும் இருந்தனர்.

தட்சசீலம், ஸ்ராவஸ்தி, பனாரஸ், ராஜகிருஹம், வைசாலி, கோசாம்பி மற்றும் துறைமுக நகரங்களில் ஏறத்தாழ கோடீஸ்வர வணிகர்கள் பன்னிரண்டு நபர்களாவது இருந்தனர். இவர்களைக் காட்டிலும் சிறிய வணிகர்களும் இடைத்தரகர்களும் சில நகரங்களில் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால் இவர்கள் விதிவிலக்கானவர்கள். நிலப்பிரபுக்கள் என்று தனியாக எவருமில்லை. மக்களில் பெரும்பான்மையோர் நன்கு வசதி படைத்த விவசாயிகளாக அல்லது கைவினைஞர்களாக இருந்தனர்; பெரும்பாலும் அவர்களுக்குச் சொந்தமான நிலம் இருந்தது. இந்த இரு வகுப்பினரும் அவர்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்த உள்ளூர் தலைவர்களால் ஆளப்பட்டனர்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் இருந்த மிக முக்கியமான பொருளாதார நிலைமைகளைச் சுருக்கமாக விவரித்திருக்கிறேன். இதை முடிப்பதற்கு முன், வணிகத்துக்குப் பயன்பட்ட வழிகள் பற்றி புத்தகங்களில் காணப்படும் சில தகவல்களை ஒன்று சேர்த்துக் கூறுவது சரியாக இருக்கும்.

பௌத்தத்துக்கு முந்தைய இலக்கியங்களில் இவை குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. மிகப் பழமையான பாலி மொழி புத்தகங்களில், சுற்றித் திரிந்த பௌத்த ஆசாரியர்களின் பயண விவரங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, சற்று நீண்ட தூரப் பயணங்களுக்கு, ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதைகளையே பொதுவாக அவர்கள் பின்பற்றினர். வணிகர்களும் இந்தப் பாதைகளைத்தான் பயன்படுத்தினர் என்பதற்கு இவை உடனடிச் சான்றுகள். வணிகர்களால் உண்மையாகப் பயன்படுத்தப்பட்ட வர்த்தகப் பாதைகள் குறித்து பின்னாளில் நமக்கு விவரங்கள் கிடைத்துள்ளன. படகுகளிலோ அல்லது குழுக்களாக காளை மாட்டு வண்டிகளிலோ அவர்கள் பயணித்தனர். இவ்வாறு, புரிதலுக்காக உத்தேசமாக ஒரு பட்டியலை நாம் உருவாக்கமுடியும்.

1. வடக்கிலிருந்து தென்மேற்கு திசையில் சென்ற பாதை. சிராவஸ்தியிலிருந்து புறப்பட்டு பிரதிஷ்டானம் (அவுரங்காபாத்துக்குத் தெற்கிலிருக்கும் இன்றைய பைத்தான்) சென்று திரும்புவது. வழியிலிருக்கும் முக்கியமான நிறுத்துமிடங்கள்/ தங்குமிடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. (தென் திசையிலிருந்து செல்லும்போது…) மாஹிசதி, உஜ்ஜைனி, கோனார்தபுரம், விதிஷா (பழங்காலத்தில் பெஸ்நகர். போபாலுக்கு வடகிழக்கில் இந்த இடம் இருக்கிறது), கோசாம்பி மற்றும் சாகேதம் ஆகியன.

2. வடக்கிலிருந்து தென்கிழக்கு திசையில் சென்ற பாதை. அதாவது சிராவஸ்தியிலிருந்து ராஜகிருஹத்துக்குச் செல்வது. எனக்குத் தெரிந்தவரை இந்த இரண்டு பழங்கால நகரங்களுக்கிடையில் நேரான பாதை ஏதுமில்லை என்பது ஆர்வத்தை எழுப்புவது. எப்போதும் அவர்கள் வைசாலிக்கு வடக்கில் மலைகளின் அடிவாரத்தில் இருக்கும் பாதை ஒன்றில் பயணித்து அதன் பின்னர் கங்கை நதியை நோக்கித் தென் திசையில் திரும்பிப் பயணம் மேற்கொள்வார்கள். இந்தச் சுற்றுப் பாதையில் செல்வதால் மலைகளுக்கு அருகில் ஆறுகள் செல்லுமிடங்களில் இயற்கையாக அமைந்திருக்கும் கடவுத்துறைகளில் நதியைக் கடப்பது எளிதாக இருக்கும்.

ஆனால், இந்தப் பாதையை சுயமாகத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் சார்ந்த விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயங்களும் இருந்தன; ஆனால், அத்தகைய தேவை இல்லாத நிலையிலும் இந்தப் பாதைதான் தேர்வுக்கு உரியதாக இருந்தது. சிராவஸ்தியிலிருந்து தொடங்கும் பாதையில் இருக்கும் நிறுத்தங்கள்: சேதவ்யா, கபிலவாஸ்து, குசினாரா, பவா, ஹத்தி காமா, பந்தகாரம், வைசாலி, பாடலிபுத்திரம் மற்றும் நாலந்தா. அநேகமாக கயாவுக்கும் இந்தச் சாலையில் செல்ல முடியும். கடற்கரையிலிருந்து அதாவது அநேகமாக தாமிரலிப்தியிலிருந்து பனாரஸ் நோக்கிவரும் சாலையை ஓரிடத்தில் இந்தப் பாதை சந்திக்கும் எனலாம்.

3. கிழக்கிலிருந்து மேற்கு திசையில் சென்ற பாதை. இது ஒரு முக்கியமான பாதை; பெரிய நதிகள் வழியாகச் சென்றது; இந்த வழியில் வாடகைக்குப் படகுகள் குவிந்து கிடந்தன. மிக விரைவாகச் செல்லும் படகுகள் குறித்தும் கேள்விப்படுகிறோம். கங்கை நதியின் வழியாக மேல்நோக்கி மேற்கிலிருக்கும் சஹஜாதி வரையிலும் படகுகள் சென்றன; யமுனையில் மேற்குத்திசையில் கோசாம்பி வரையிலும் படகுகள் சென்றன.

கீழ்நோக்கிய பயணத்தில் குறைந்தபட்சம் பிந்தைய காலகட்டத்தில் படகுகள் கங்கை முகத்துவாரம் வரை சென்றன; அதன் பின்னர் அங்கிருந்து கடலின் குறுக்கே அல்லது பர்மாவின் கரையோரமாகச் சென்றன. ஆரம்பகாலப் புத்தகங்களில் கீழ் நோக்கி சென்ற படகு போக்குவரத்து மகதம் வரை மட்டுமே சென்றதாகக் கேள்விப்படுகிறோம்.

தொலைவில் இருக்கும் இடமாக சம்பாவை எடுத்துக் கொள்ளலாம். மேல்நோக்கிச் சென்ற போக்குவரத்து அங்கிருந்து கோசாம்பிக்குச் சென்று, தெற்கிலிருந்து வரும் பாதையை அந்த இடத்தில் சந்தித்தது (பாதை 1). அதன்பின் அங்கிருந்து வண்டிகள் மூலம் தென்மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தொடர்ந்து சென்றது.

மேற்கூறிய பாதைகள் தவிர்த்து விதேகத்திலிருந்து காந்தாரத்துக்கும் மகதத்திலிருந்து சோவ்லராவுக்கும், பாருகாச்சாவிலிருந்து கடற்கரையோரமாக பர்மாவுக்கும் வர்த்தகப் பாதைகள் இருந்தன; பனாரஸிலிருந்து கீழ்நோக்கி நதியின் போக்கில் முகத்துவாரத்துக்கும், அங்கிருந்து பர்மாவுக்கும் (இது தற்போதைய தட்டோன் என்ற இடம். பின்னாளில் இந்தத் தங்கக் கடற்கரை பகுதி சுவர்ணப் பூமி என்று அழைக்கப்பட்டது-முனைவர் மொபேல் போடே) வணிகர்கள் சென்றனர் என்று குறிப்பிடப்படுகிறது. சம்பாவிலிருந்தும் வணிகர்கள் பர்மாவுக்குச் சென்றனர்.

ராஜபுதனத்துக்கு மேற்கே இருக்கும் பாலைவனத்தை வணிகக் குழுக்கள் இரவில் மட்டுமே பயணித்துக் கடந்தன; கடலில் பயணம் செய்யும்போது நட்சத்திரங்களைக் கவனித்துச் சரியான பாதையில் செல்வது போல், ‘தரைவழி வழிகாட்டிகள்’ இவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பயணம் குறித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் முழு விளக்கமும் இது வாழ்க்கைக்கான ஒரு கண்டுபிடிப்பு என்று சொல்ல முடிகிற அளவுக்கு மிகத் துல்லியமாக இருக்கின்றன.

பாலைவனத்தின் ஊடாகவும் வர்த்தகப் பாதை இருந்தது என்பதற்கான ஆதாரமாக இதை ஏற்றுக் கொள்ளலாம்; அத்துடன் நட்சத்திரங்களின் உதவியுடன் கப்பலை அல்லது வணிகக் குழுக்களை வழிநடத்துகிற வழிகாட்டிகள் அந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களாக இருந்தனர் என்பதற்கான சான்றாகவும் கொள்ளலாம்.

பாவேரு அதாவது புராதன பாபிலோனுக்கும் நடந்ததாக ஒரேயொரு வர்த்தகப் பயண நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. அது கடல் வழியாக நடந்தது என்று கூறப்படுகிறது. (செருமா என்றழைக்கப்படும் ஒரு வெளிநாடு, மெசபடோமியாவின் சுமேர் மற்றும் அக்காடுடன் ஏதாவது வணிகத் தொடர்பில் இருந்திருக்குமோ என்பது சிந்தனைக்குரியது- ஆசிரியர்). எனினும், எந்தத் துறைமுகத்திலிருந்து பயணம் தொடங்கியது என்பது குறிப்பிடப்படவில்லை. ஒரு கதை உள்ளது; உலகம் முழுவதும் பேசப்படும் கதை; ’சைரன்’ (Siren) என்ற உயிரினங்கள், தம்பபண்ணி தீவில் வசித்தனர் என்ற கதை; அந்தத் தீவு கற்பனை நிலப்பரப்பு என்பாரும் உண்டு. அநேகமாக இது சிலோனைக் குறிக்கக்கூடும். லங்கா என்ற பெயர் வழக்கில் இல்லை. சீனாவுடன் நடந்த போக்குவரத்து முதலில் மிலிந்தா என்ற நூலில் (பக். 127, 327, 359) குறிப்பிடப்படுகிறது; ஆனால், அது சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *