Skip to content
Home » பௌத்த இந்தியா #15 – எழுதுதல் – தொடக்க நிலை – 1

பௌத்த இந்தியா #15 – எழுதுதல் – தொடக்க நிலை – 1

பௌத்த இந்தியா - எழுதுதல்

அனைத்து வகை இலக்கியங்களும் அவை உருவாவதற்கான அடிப்படை விஷயங்கள் இல்லாமையால் கடும் சிரமத்துக்குப் பின்னரே படைக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் ஆர்வமூட்டுவது. நீண்ட காலத்துக்கு எழுது பொருட்கள் எதுவும் இல்லாத நிலை. புத்தகங்களின் ஆக்கத்துக்கோ, புத்தகங்களை மீண்டும் உருவாக்கவோ எளிதில் முடிந்திருக்கவில்லை. இந்தியர்கள் அவற்றின் தேவையை உணராமலே இருந்தனர்; அதுமட்டுமின்றி, எழுதுபொருட்களின் வசதி ஏற்பட்ட பின்னரும், பல நூற்றாண்டுகளுக்கு, புத்தகங்கள் என்ற விஷயத்தைப் பொறுத்தவரை, அவர்கள் அவை இல்லாமலே செயலாற்ற விரும்பினர் என்று கூறலாம். நமக்குக் கிடைத்திருக்கும் இத்தகைய தகவல் உலக வரலாற்றில் தனித்துவமானது. விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது.

எழுதுதல் பற்றிய மிகப் பழமையான குறிப்பு, ’சீலங்கள்’ என்று சொல்லப்படும் சிறு தொகுப்பில் காணப்படுகிறது, புத்தரின் உரையாடல் வடிவிலான சொற்பொழிவுகளில் அல்லது சுத்தந்தாவின் முதல் பகுதியின் முதல் அத்தியமாக அமைந்திருக்கும் பதின்மூன்று உரையாடல்கள் ஒவ்வொன்றிலும் இவை பொதிந்துள்ளன.

எனவே, புத்தரின் மரணத்துக்குப் பின்னர், அவரது தொடக்கக்காலச் சீடர்கள் புத்தரின் உரையாடல் வடிவிலான உபதேசங்களை ஒன்று திரட்டிச் சேர்த்தனர்; ஆகவே முதல் நூற்றாண்டுக்கு முன்னதாகவே, இந்த வெளியீடு ஒரு தனிப் படைப்பாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, சீலங்கள் குறித்த வெளியீடு ஏறத்தாழ கி.மு.450 வாக்கில் உருவாகியிருக்கலாம்.

பௌத்த சங்கத்தில் இருக்கும் ஒருவர் செய்யக்கூடாத செயல்களின் பட்டியல் ஒன்று அதில் இருக்கிறது. அதில் விளையாட்டுகளின் பட்டியல் ஒன்று உள்ளது. அந்த விளையாட்டுகளில் ஒன்று ’அக்காரிக்கா’ அதாவது எழுத்து வடிவம் தருதல். ’காற்றில் அல்லது விளையாட்டுத் தோழனின் முதுகில் எழுதும் எழுத்துகளை ஊகித்தல்.’ குழந்தைகளுக்கான ஏராளமான விளையாட்டுகள் அந்த இடத்தில் குறிப்பிடப்படுவதால், இதுவும் நிச்சயமாகக் குழந்தைகளின் விளையாட்டாகக் கருதப்பட்டிருக்கலாம்.

குழந்தைகள் அத்தகைய விளையாட்டை விளையாடியிருப்பதும், அதற்கு ‘எழுத்து வடிவம் தருதல்’ என்று பெயர் தந்திருப்பதும், நாம் விவாதிக்கும் அந்தக் காலகட்டத்தில் எழுத்துகள் குறித்த அறிவு போதுமான அளவு இருந்திருக்கவேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

பௌத்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்ட நியதிகள் வினயம் (ஒழுக்கம்) என்ற பொதுப்பெயரின் கீழ் தொகுக்கப்பட்டன. தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் வடிவம், ஓரளவு இளையதாக, ஒருவேளை இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு பின்னதாக இருக்கக்கூடும். அதில் பரிந்துரைக் குறிப்புகள் பல இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, எழுதுதல் (லேகா) அல்லது ஆவணப்படுத்துதல் ஒரு தனித்துவமான கலையாக வினயப் பிடகம் iv.7ல் பாராட்டப்படுகிறது. அதேநேரத்தில் பௌத்த சங்கத்திலிருக்கும் சகோதரிகள், இந்த உலகில் பரவலாகக் காணப்படும் கலை சார்ந்த விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பது ஒரு விதியாகக் கூறப்படுகிறது. ஆனால், விதிவிலக்குகளும் இருந்தன. அவற்றில் ஒன்று எழுதக் கற்றுக்கொள்வது.

‘அரசனின் அரண்மனைச் சுவரில் பெயர் எழுதப்பட்ட’ ஒரு குற்றவாளி (இப்போது நாம், காவல் துறையால் ‘தேடப்படுபவர்’ என்று சொல்வதுபோல்) பௌத்த சங்கத்துக்குள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒரு இளைஞன் எந்தத் தொழிலை மேற்கொள்ளலாம் என்பது குறித்த ஒரு விவாதம் நடக்கிறது; ஓர் ‘எழுத்தாளரின்’ தொழிலை ஏற்றுக்கொண்டால் அவனால் நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ்க்கையை நடத்த முடியும் என்று அவனது பெற்றோர் கூறுகிறார்கள்; ஆனால், மறுபுறத்தில், எழுதி எழுதி அவனது விரல்கள் வலிக்குமே என்றும் சொல்கிறார்கள்.

தற்கொலை செய்துகொள்வதால் விளையும் நன்மைகளைப் பற்றி, சங்க உறுப்பினர் ஒருவர் மற்றொரு நபருக்கு எழுதுகிறார் என்றால், அவர் அந்தக் கடிதத்தில் எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு குற்றம் செய்கிறார். (வினயப் பிடகம், iii 76. எழுதுதலைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல் ‘லேகம் சிந்தாதி’ அதாவது, ’எழுத்துக் கிறுக்கல்கள்’. இதனடிப்படையில் ப்யூலர் (Buhler) ஒரு கருத்துக்கு (’Indische Paleographie, p.88’) வருகிறார்; அதாவது எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள், மரம் என்பதே. ஆனால், கிறுக்கலுக்கான குறிப்பு, பனையோலையில் ஒரு பாணியில் எழுதியிருப்பதைச் சுட்டுகிறது.)

எனவே, மேற்குறிப்பிட்ட பத்திகள் எழுதப்பட்ட நேரத்தில் ’எழுதுதல்’ நடைமுறையில் இருந்தது என்பது தெளிவாகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுதல், தனிப்பட்ட மனிதர்கள் தமக்கிடையே கடிதங்கள் மூலம் தொடர்புகொள்ளுதல் ஆகியவற்றுக்கு இது பயன்படுத்தப்பட்டது. எழுதுவதில் ஒருவர் பெற்றிருந்த திறன், அவர் தனது வாழ்வாதாரத்தைச் சம்பாதிப்பதற்கு உதவும் கெளரவமான தொழிலாக இருந்துள்ளது.

எழுதுதல் குறித்த அறிவு ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கும் மட்டுமே உரியது என்று குறுக்கப்படவில்லை. சாதாரண மக்களும் பெண்களும் அந்தத் திறனைப் பெற்றிருந்தனர். அத்துடன், குழந்தைகளின் விளையாட்டுக்கான ஓர் அடிப்படை விஷயமாக ஆக்கப்படும் அளவுக்கு அது கணிசமான அளவில் வழக்கத்தில் இருந்துள்ளது. ஒரு சிலர் மட்டுமே தெரிந்து வைத்திருந்த எழுதும் கலை, இத்தகைய நிலையை நீண்ட காலத்துக்குப் பின்னரே, அநேகமாக சில நூற்றாண்டுகள் கடந்த பின்னரே அடைந்திருக்க வேண்டும்.

ஆனால், அரசாங்கத்துக்கு மட்டுமே குறிப்புகள் எழுதுதல் அல்லது தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு என்ற நிலைமையிலிருந்து, புத்தகம் எழுதும் நோக்கத்துக்கு அது பயன்பட்டது என்பது ஒரு நீண்டகால முயற்சியாக இருந்திருக்கும். அதுவும் பெரிய ஓர் இலக்கியம் படைப்பதற்கு மிகவும் குறைவாகவே பயன்பட்டிருக்கும். இணையாக, எழுதும் திறன் நன்கு அறியப்பட்ட ஒன்றாக இருந்தாலும், புத்தகங்கள்-இலக்கியங்கள் படைக்கும் அளவுக்கு இன்னமும் அந்தத் திறன் பயன்பாட்டு நிலைக்கு வந்திருக்கவில்லை. இதற்கு நாம் இப்போது மேற்கோள் காட்டிய புத்தகங்கள் மறுக்க முடியாத எடுத்துக்காட்டுகளாக உள்ளன.

நாம் விவாதிக்கும் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் புத்தகங்கள் குறித்த அறிவும், அவை பயன்படுத்தப்பட்டும் இருந்தால், அந்தக் கையெழுத்துப் பிரதிகளும், புத்தகங்கள் உருவாக்கத்துடன் தொடர்புடைய மொத்த அமைப்புகளும் பௌத்த அமைப்பின் உறுப்பினர்களுடைய அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றியிருக்க வேண்டும். இப்போது அந்த அமைப்பின் விரிவான விதிகள், அந்தச் சமூகத்தினருடைய ஒட்டுமொத்த ’தனிச் சொத்து’ விவரங்களையும் அல்லது சமூகத்தின் தனிநபர் சொத்து விவரங்களையும் நம் முன்னால் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன.

ஒவ்வொரு ‘அசையும் பொருளும்’, அதாவது வீட்டு உபயோகத்துக்கான சிறிய அளவிலான, குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் வரையிலும் குறிப்பிடப்படுகின்றன; அத்துடன் அவற்றின் பயன்பாடும் சுட்டிக்காட்டப்படுகிறது. சமூகத்தின் சாதாரண மக்கள் பயன்படுத்திய, ஆனால், பௌத்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அனுமதியற்ற பொருட்களும் குறிப்பிடப்பட்டுள்ளன; ஆனால் புத்தகங்கள் அல்லது கையெழுத்துப் பிரதிகள் பற்றிய மிகச் சிறிய குறிப்பின் தடத்தை, எந்த இடத்திலும் காணமுடியவில்லை.

உண்மையில் இது சந்தேகமற்றது. ஒன்றைப் பற்றிய குறிப்பை நியாயமாக எதிர்பார்க்கிறோம். அந்தக் குறிப்பு இல்லாத நிலையில், கொடுக்கப்படும் எதிர்மறை சான்றுகள் அந்த இடத்தில் நல்ல சான்றாக அமைந்துவிடலாம். அப்படிப்பட்ட அரிதான நேர்வுகளில் ஒன்று இது. ஆனால், இதுவே அனைத்துக்கும் எனக் கொள்ள முடியாது. நேர்மறையான சான்று, அது தேவைப்படும் இடத்தில் மிகச் சரியான இடத்தில் வந்து சேர்ந்துகொள்ளும்.

‘நூல்கள்’ இருக்கின்றன என்று போதுமான அளவுக்குத் தொடர்ச்சியான குறிப்புகள் உள்ளன; ஆனால், ’அவை’ மனனம் செய்து கற்றவர்களின் நினைவுகளில் மட்டுமே இருந்தன. அந்தச் சிரமம், மனனம் செய்தல், எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதற்கான விளக்கம் இங்கே நமக்குக் கிடைத்துள்ளது.

இவ்வாறு இறுதியில் ஒரு நம்பிக்கையின் நடைமுறைச் செயல்பாட்டில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அங்குத்தர நிகயத்தில் (3.107) விவாதிக்கப்படுகின்றன. கவிதை நயம் மிக்க, அழகான, அலங்காரமான சுத்தங்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படும்போது, சங்கத்தின் உறுப்பினர்கள் செவிமடுப்பார்கள், மனத்தில் கொள்வார்கள்; சிரமப்பட்டு மனனம் செய்து கற்றுக்கொள்ள அவை தகுதியானவை என்று நினைப்பார்கள். ஆனால், மிக ஆழமான, நுட்பமான, அதிகளவு தத்துவார்த்த நூல்களைப் புறக்கணித்துவிடுவார்கள்.

அங்குத்தர நிகயம் (2.147, சமயத்தின் சிதைவுக்கான நான்கு காரணங்களில் ஒன்றாக அடுத்து வருவதைக் கூறுகிறது. ‘அதிகம் கற்ற பிட்சுகளிடம் (உண்மையில், அவர்கள் அதிகமாகக் கேட்டவர்கள்) பாரம்பரியம் ஒப்படைக்கப்பட்டது; அந்தப் பிட்சுகள் கோட்பாட்டையும், ஒழுக்கத்தையும் உள்ளடக்கங்களையும் (அதாவது, நினைவு வைத்துக் கொள்வதற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட உள்ளடக்க அட்டவணைகள்) ஆகியனவற்றை தம் நினைவுகளில் சுமந்து தம்முடன் எடுத்து வந்தனர். ஆனால், மற்றவர்க்கு அவற்றைச் சொல்லித் தரும்போது, சுத்தந்தங்கள் சிலவற்றைத் தம் சீடர்கள் மனனம் செய்யாமல் விட்டுவிட்டதைக் கவனிக்கவில்லை. சொல்லித்தந்த பிட்சுகள் இறந்துபோன பின், குறிப்பிட்ட அந்தச் சுத்தந்தங்கள் அடிப்படைப் பாடத்திலிருந்தே நீக்கப்பட்டிருக்கும். அடுத்து வருபவர்கள் அது இல்லாமலேயே அடுத்தவருக்குச் சொல்லித்தருவார்கள்’.

அங்குத்தர நிகயம் 5.136, பலவித மன நிலைகளின் பட்டியலையும் ‘ஊக்கமளிக்கும்’ பொருளையும் கூறுகிறது. அது இன்றி அந்த நிலையைப் பெற முடியாது; அதை வளர்க்கவும் முடியாது. இந்த நிலைகளில் ஒன்று கற்றல் அதன்மூலம் புலமை பெறுதல். படித்தல், அதாவது புத்தகங்களைப் படிப்பது அதற்கு ஊட்டச்சத்தாக ஊக்கமளிப்பதாக அமைகிறது என்பதை பார்க்க முடியும். இல்லை, அப்படியில்லை. ஒருவர் ’தனக்குத் தானே திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்ப்பது’ தான் என்று சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்லிப் பார்ப்பதற்கு ஒருவித மதிப்பு இருக்கிறது.

ஒரு மனிதனின் தலையில் என்ன இருக்கிறது என்பதும், அவன் நினைவில் இருப்பதும் தான் கற்றலுக்கான அடிப்படை என்பதை இது குறிப்பாகச் சொல்கிறது. தொடர்ச்சியாகத் திருப்பிச் சொல்லும் வழக்கம், கற்றதை இழப்பதிலிருந்து அவனைத் தடுக்கிறது. ஒருவேளை புத்தகங்கள் பொதுவான பயன்பாட்டில் அப்போது இருந்திருந்தால் இத்தகையக் கற்றல் முறை நடைமுறையில் இல்லாமல் போயிருக்கலாம்.

பொது நியதிகளுக்கான விதிகளில், பரிந்துரைப்பது போல் இரண்டு விதிகள் காணப்படுகின்றன. வினயப் பிடகம் I.267ல் ‘வசிப்பிடம்’ ஒவ்வொன்றிலும் அல்லது மடாலயக் குடியிருப்பு ஒவ்வொன்றிலும் விதிகள் 227ம் தொகுக்கப்பட்டிருக்கும் ‘பாதிமோக்கம்’ மாதந்தோறும் மனப்பாடமாகப் பாராயணம் செய்யப்பட வேண்டும் என்பதை விதியாகக் குறிப்பிடுகிறது. மேலும், அங்குள்ள பிட்சுகள் எவருக்கும் விதிகள் மனப்பாடமாக அறிந்திருக்கவில்லை என்றால், அந்தத் தொகுப்பின் பிரதி ஒன்றைப் பெறுவதற்கு முயற்சி செய்யக்கூடாது. ஆனால், அவர்களில் இளைய பிட்சு ஒருவரை அண்டையிலிருக்கும் பிட்சுக் குடியிருப்புக்கு அனுப்ப வேண்டும். அங்கு அவர் பாதிமோக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த விதிகளுக்கான விளக்கங்களுடனோ இல்லாமலோ மனப்பாடமாகக் கற்றுவர வேண்டும்.

இதற்குச் சில காலத்துக்குப் பின்னர், மழைக்காலங்களில் பிட்சுகள் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று ஒரு விதி நடைமுறைக்கு வருகிறது. விதிவிலக்குகளில் ஒன்றாக, பிரபலமான சுத்தந்தங்களை எப்படிப் பாராயணம் செய்வது என்பதை ஒரு சாமானியர் தெரிந்துகொள்ளும் நிகழ்வும் சுட்டப்படுகிறது. அவன் ’பிட்சுகளிடம் ஒரு தூதரை அனுப்புகிறான். ”மரியாதைக்குரிய நீங்கள் வந்து இந்த சுத்தந்தத்தைக் கற்றுத் தர வேண்டும். இல்லையெனில் இந்தச் சுத்தந்தம் மறதிக்குள் போய் விழுந்துவிடும்”’. அவசரம் என்ற அடிப்படையில் மிகவும் முக்கியமானது என்பதால், மழை பெய்து கொண்டிருந்தாலும் பிட்சுகள் சொல்லித்தரச் செல்கிறார்கள்.

மேற்குறிப்பிடப்படும் இத்தகையப் பக்கங்களின் மூலமும் வேறு சிலவற்றின் மூலமும் ஒன்று தெரியவருகிறது: அதாவது, எழுதுவதன் மூலம் பதிவு செய்யலாம் என்பது, அதன் சராசரி நீளம் இந்தப் படைப்பின் அளவில் சுமார் இருபது பக்கங்கள் மட்டுமே இருக்கக்கூடிய சுத்தந்தமாக இருந்தாலும், பொது நியதிகளுக்கான விதிகளைத் தொகுத்த அல்லது அவற்றைப் பயன்படுத்திய மனிதர்களுக்குத் தோன்றவில்லை. வேதனை தரும் (விடுபடுதல்) விபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறையாக எழுதுவதைப் பயன்படுத்தலாம் என்ற சாத்தியத்தையும் அவர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆயினும், நாம் பார்த்ததுபோல், இந்திய மக்கள் எழுத்துகளுடனும், எழுதுவதுடனும் நீண்ட காலமாக, அநேகமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்பில் இருந்தனர்; அத்துடன் சிறிய தகவல் தொடர்புகளுக்கு கடிதம் எழுதுவதை மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தினர். அவர்களுக்கு மிகவும் முக்கியம் என்று தோன்றுகிற சந்தர்ப்பங்களில் எழுதுவதைத் தவிர்த்திருக்கவேண்டும் என்பது அசாதாரணமாகத் தோன்றுகிறது. அத்தகையப் புறக்கணிப்புக்கு இரண்டுவிதமான காரணம் இப்போது விளங்குகிறது.

முதலாவதாக இந்தியாவில் எழுதுதல், அதன் மக்களின் அறிவார்ந்த வளர்ச்சியின் பிற்பகுதியில் மிகவும் தாமதாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படி ஒன்று இருப்பதை அவர்கள் மிகத் தாமதமாகவே தெரிந்துகொண்டனர்; ஆனால், இலக்கியப் படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்பதற்கு மற்றொரு முறையை, சில அம்சங்களில் மிக அற்புதமான முறையை, ஏற்கனவே கண்டறிந்து இருந்தனர். அதில் உலக வரலாற்றில் அவர்களுக்கு இணையில்லை என்று சொல்லும் வகையில் முழுமையை அடைந்துவிட்டனர். முயற்சி செய்யப்பட்ட இந்தத் தொன்மையான வழிமுறையை புதிய-பயன் தரும் விநோதமான முறைக்காக அவ்வளவு எளிதாக அவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

இரண்டாவது, அவர்கள் அவ்வாறு செய்ய விரும்பினாலும், அவர்களால் அப்படிச் செய்ய முடியாது. ஏனென்றால், அவர்கள் எழுதத் தெரிந்துகொண்டிருந்த அந்த நேரத்தில், நீளமான பதிவுகளை எழுதுவதற்குத் தேவையான எழுது பொருட்கள் அவர்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கவில்லை.

எழுதுதல் குறித்த மிகவும் ஆர்வமூட்டும் நிலைகளைத் தெளிவாக அறிந்து கொண்டோம்; இந்தியாவில் எழுத்துமுறை அறிமுகமான வரலாற்றை நாம் அடுத்துப் பார்ப்போம்.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *