Skip to content
Home » பௌத்த இந்தியா #16 – எழுதுதல் – தொடக்க நிலை – 2

பௌத்த இந்தியா #16 – எழுதுதல் – தொடக்க நிலை – 2

பௌத்த இந்தியா

இந்தியாவில் எழுத்துமுறை அறிமுகமானதில் மிகவும் ஆர்வமூட்டும் நிலைமைகள் குறித்து சற்றுத் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது. எழுத்து முறை அறிமுகம் ஆனது எப்போது என்று, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒன்று சேரும் மூன்று வெவ்வேறு சிந்தனைகளுக்கான அடிப்படை ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அந்தக் காலம் குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் புறவய அறிவு உண்மையான விளக்கம் நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.

முதல் சிந்தனை: மேலே நாம் குறிப்பிட்டதுபோல், எழுதுதல் குறித்து இந்திய இலக்கியங்களில் காணக் கிடைக்கும் மிகப் பழமையான குறிப்புகள்.

இரண்டாவது சிந்தனை : அசீரிய எடைக் கற்களிலும் (Lion weights) கி.மு.ஏழாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளின் ‘மேசா’ (Mesa) என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டுகளிலும் பார்க்கமுடிகிற எழுத்துகளுடன் மிகத் தொன்மையான இந்திய எழுத்துகளில் ஒரு பகுதி மிக நெருக்கமாக ஒத்துப்போகிறது. பேராசிரியர் வெபர் இதை முதலில் கண்டறிந்தார். முனைவர் ஹோஃப்ராத் புயூலரும் விரிவான ஆய்வால் சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். வட செமிட்டிய எழுத்துகள் என்று அழைக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தின் இருபத்திரண்டு எழுத்துகளில் மூன்றில் ஒரு பங்கு, அக்காலத்திய, மிகப் பழமையான இந்திய எழுத்துகளின் வடிவங்களுடன் ஒத்ததாக இருந்தன.

மற்றுமொரு மூன்றில் ஒரு பகுதியும் ஓரளவுக்கு ஒத்திசைவுடன் உள்ளது. மீதமிருக்கும் மூன்றாவது பகுதியைப் பெரும் சிரமத்துடன் ஆராய்ந்து பார்த்தால், அது பொதுவில் குறைவாகவே இசைந்துபோகிறது. இந்திய எழுத்துகளுக்கும் செமிட்டிக் எழுத்துகளின் தென்பகுதி வடிவங்களுக்கும் இடையில் இதுபோன்ற ஒப்பீட்டை வேறு அறிஞர்கள் சிலரும் செய்துள்ளனர்; ஆனால், அவை திருப்தி அளிப்பதாக இல்லை. இதுவரையிலான சான்றுகளின்படி முடிவு இதுதான்: ஒன்று, வெபரும் மற்றும் புயூலரும் கூறுவதுபோல் வடக்கு செமிட்டியர்களிடமிருந்து இந்திய எழுத்துகள் பெறப்பட்டிருக்க வேண்டும். அல்லது முனைவர் டீக்கே, ஐசக் டெய்லர் மற்றும் வேறு சிலரின் கருத்துகளின்படி, தெற்கு அரேபியாவைச் சேர்ந்த தெற்கு செமிட்டியர்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கலாம்.

எந்தக் காலம் என்பதில் நேரடியாக ஒன்றிணைவதற்கு இப்போது சாத்தியம் உள்ளது. ஆனால், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இந்தியாவுக்கும் தெற்கு அரேபியாவுக்கும் இடையில் அமைந்திருக்கும் கடற்கரையோரப் பகுதியில் எழுத்து வடிவங்களில் ஒத்திசைவுத் தன்மை குறைவாக உள்ளது. ஆனால், பாலஸ்தீனத்தின் எல்லைப்புறத்தில் கண்டெடுக்கப்பட்ட ‘மேசா’ கல்வெட்டு எழுத்துகளுடன் ஒற்றுமை அதிகமாக இருக்கிறது. ஆனால், அவ்வெழுத்துகளைப் பொறித்த மனிதர்களுடன் இந்தியர்கள் நேரடியாகத் தொடர்பு வைத்திருந்தனர் என்று ஒருவரும் வாதம் செய்யவில்லை.

ஆகவே, நான் ஒன்றை முன்வைக்கத் துணிகிறேன்: இந்தியர்கள் எழுதிய எழுத்துகள் வடக்கு செமிட்டிய எழுத்துகளில் இருந்தோ தெற்கு செமிட்டிய எழுத்துகளிலிருந்தோ பெறப்படவில்லை. மாறாக யூப்ரடீஸ் பள்ளத்தாக்கில் பயன்பாட்டிலிருந்த, செமிட்டிக் காலகட்டத்துக்கு முந்தைய எழுத்து வடிவத்திலிருந்து மேற்குறிப்பிட்டவர்கள் பெற்றது போலவே, இந்தியர்களும் பெற்றிருக்கவேண்டும். இந்தக் கண்டுபிடிப்புகளை ஒன்றிணைக்கும் ஒரே கருதுகோளாக இதுதான் இருக்கிறது என்று கருதுகிறேன்.

எழுத்துகளின் வடிவங்களுக்கு இடையிலான ஒற்றுமை மிக அதிகமாக இருந்த காலத்தில் எழுத்துகள் பெறப்பட்டிருக்கக் கூடும் என்று முடிவு செய்யலாம். ஆகவே, காலத்தைப் பொறுத்தவரை, அது கி.மு.ஏழாம் நூற்றாண்டாகவோ அதற்கு முந்தியோ இருக்கலாம்: பிற்காலத்துப் பாபிலோனிய அல்லது செமிடிக் எழுத்து வடிவங்களை ஒப்பீடு செய்து பார்க்கையில் போதுமான ஒத்திசைவு காணப்படவில்லை.

அத்துடன், இந்திய எழுத்துகளின் தோற்றம், அதனுடைய மூல எழுத்துமுறை வலமிருந்து இடமாக எழுதப்பட்ட காலத்துக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும் கருத முடியும். இந்தியர்களிள் எழுதுமுறை நம்முடையதைப் (ஆங்கிலேயர்கள்) போலவே இடமிருந்து வலம் செல்கிறது. ஒரேயொரு நாணயத்தில் காணப்படும் எழுத்தும் (Coins of Ancient India என்ற கன்னிங்ஹாம் நூலில் விவரங்கள் காணப்படுகின்றன), இன்னமும் வெளியிடப்படாத இலங்கையின் சிறிய கல்வெட்டுகள் சிலவற்றில் காணப்படும் எழுத்துகளும் மட்டுமே வலமிருந்து இடம் எழுதப்பட்டுள்ளன. (நாணயம் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. கல்வெட்டு, Mr.White King சேகரிப்பில் இருக்கிறது).

கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் சிலவற்றிலும் சில எழுத்துக்களின் திரட்சியை, நாம் இப்போது கூறுவதுபோல் பின்னோக்கிப் படிக்க வேண்டியதாக இருந்தன. எழுத்து எழுதப்படும் திசை, பதிவுகள் எழுதப்பட்ட காலத்தின் நெகிழ்வுத்தன்மையைச் சார்ந்தே இருந்தது. ஆனால், இப்பதிவுகள் எவ்விதத்திலும் மிகப் பழமையானவை என்று கூறமுடியாது.

மூன்றாவது ஆதாரம், 1898 ஆம் ஆண்டின் ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் இதழில் திரு. கென்னடி எழுதிய கட்டுரையில் சிறந்த முறையில் ஒருங்கிணைத்துக் காட்டப்பட்டுள்ளது. அது சொல்ல விழைவது:

1. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இருந்த துறைமுகங்களுக்கும் பாபிலோனுக்கும் இடையில் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தொடர்ச்சியாக, விரிவான வர்த்தகம் நடந்திருக்கிறது.

2. அந்தக் காலகட்டத்துக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அத்தகைய வர்த்தகம் இருந்தது என்று சொல்வதற்குச் சாத்தியம் குறைவு.

3. பாபிலோனுக்குச் சென்ற இந்திய வணிகர்கள், பாபிலோனுக்கு அப்பாலும், உள் பிரதேசங்களுக்கு, அதாவது பாபிலோனிலிருந்து மேற்கு நோக்கிச் சென்றிருக்கலாம்; அல்லது அவர்கள் ஏமன் வரை தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்; அல்லது அவர்கள் ஆப்கானிஸ்தானின் ஊடாக, கணவாய்களைக் கடந்துதான் பாபிலோனை அடைந்தனர் என்பதற்கும் சாத்தியங்கள் குறைவு.

நாம் பார்த்த இந்த மூன்று வகையான ஆதாரங்கள் ஒவ்வொன்றின் விவரங்கள் சார்ந்தும் மேலும் அதிக அளவில் அவற்றை ஆராயவேண்டியுள்ளது. அவற்றில் எதுவும், இன்னமும் அதனளவில் முடிவானதாக இல்லை. ஆனால், மூன்றிலும் நாம் பார்க்க முடிகிற ஒருமித்த கருத்து, ஒவ்வொன்றுக்கும் உறுதித்தன்மையை அளிக்கிறது. அத்துடன், அடுத்துக் குறிப்பிடப்படும் விஷயங்கள் சார்ந்து இதை ஓர் அடிப்படைக் கருதுகோளாக எடுத்துக் கொள்ளலாம்:

1. கடல் பயணம் மேற்கொண்ட வணிகர்களிடம், பருவக் காற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கம் இருந்தது. கி.மு.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (ஒருவேளை அது எட்டாம் நூற்றாண்டின் இறுதியாக இருக்கலாம்) இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதியிலிருந்த துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு அப்போது பெரும் வணிக மையமாக இருந்த பாபிலோனுக்குச் சென்றனர். தொடக்கத்தில் சௌவீராவும் அதன் பின்னர் சுப்பராகாவும் பாருகாச்சாவும் பயன்பாட்டுக்கு வந்தன.

2. இந்த வணிகர்கள் பெரும்பான்மையாக திராவிடர்களே. ஆரியர்கள் அல்ல. பாபிலோனில் இறக்குமதி செய்யப்பட்டு, அந்தப் மேலைப் பிரதேசத்தினர் ஏற்றுக்கொண்ட பொருட்களின் இந்தியப் பெயர்கள் (சாலமனின் தந்தம், குரங்குகள் மற்றும் மயில்கள், எடுத்துக்காட்டாக ‘அரிசி’ என்ற சொல்) ஆகியன சம்ஸ்கிருதம் அல்லது பாலி சொற்களின் தழுவல் கிடையாது. மாறாக, அவை தமிழ் சொற்களின் தழுவல்.

3. அக்காடியர்கள் (Akkadians) என்று அழைக்கப்பட்ட செமிட்டிய இனத்துக்கு முந்தைய வெள்ளை இனத்தவர்கள் முதலில் கண்டுபிடித்து, பயன்படுத்தி வந்த எழுத்து வடிவத்திலிருந்து பெறப்பட்ட எழுத்துகளுடன் அங்கு சென்ற இந்த வணிகர்களுக்கு, ஓரளவு அறிமுகம் இருந்தது.

4. இதற்கு முன்பு, நாடோடிகளாய் அலைந்து திரிந்த செமிடிக் பழங்குடியினர் இந்த எழுத்துகளை, பாபிலோனிலிருந்து மேற்கு நோக்கி, வடமேற்கு மற்றும் தென்மேற்கு என்ற இரு திசைகளிலும் எடுத்துச் சென்றனர். அந்தச் செமிட்டிக் பழங்குடியினர் கல்வெட்டுகளில் பதிவு செய்திருக்கும் எழுத்துகளுடனும் பாபிலோனிய எடை கற்களில் காணப்படும் எழுத்துகளுடனும் இந்திய வணிகர்கள் கற்றுக்கொண்ட குறிப்பிட்ட சில எழுத்துகள் மிக நெருக்கமாக ஒத்துப்போகின்றன. இவையிரண்டும் இந்தியர்கள் வணிகப் பயணங்களை மேற்கொண்ட காலகட்டத்துக்கு சற்றே முந்தையக் காலத்தவை.

5. வணிகர்கள் அந்த எழுத்து முறையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர்; பிறகு அது படிப்படியாக விரிவடைந்தது; இந்தியாவின் கற்றறிந்த மனிதர்களின், மற்றும் பேச்சு வழக்கின் சிறப்புத் தேவைகளுக்கு ஏற்ப அது மாற்றியமைக்கப்பட்டது. இவ்வாறு தழுவிக்கொண்டு மாற்றியமைக்கப்பட்ட எழுத்துக்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், பிராமி லிபி, அதாவது மேன்மையான எழுத்து முறை என்று அறியப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், எடுத்துக்காட்டாக, அசோகரின் காலத்தில் அதற்கு என்ன பெயர் வழங்கப்பெற்றது என்பது தெரியவில்லை. இன்றைக்கு இந்தியா, பர்மா, சையாம் மற்றும் சிலோன் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து எழுத்துகளும் இதிலிருந்துதான் படிப்படியாக உருவாகின.

6. இந்த எழுத்துமுறை கி.மு. எட்டாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் முதன்முதலில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட நேரத்தில் இந்தியர்களிடம் விரிவான வேத இலக்கியம் ஏற்கனவே இருந்தது. வேத பிராமணர்களின் பள்ளிகளில் மனனம் செய்வதன் மூலம், மனனம் செய்ததை நினைவில்வைத்துக்கொண்டதன் மூலமே அவர்கள் பெற்றுக் கொண்ட இலக்கியம் அது. விரைவில் இந்த எழுத்துகளை வேதம் ஓதுவோரும் அறிந்துகொண்டனர். எனினும், அவர்கள் பழைய பாணியிலேயே தங்கள் பாடங்களை மற்றவர்க்குத் தொடர்ந்து அளித்து வந்தனர். எழுதப்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னரும், அவர்கள் முதன்மையாக நம்பியிருந்த நினைவாற்றலுக்கு உதவி செய்யும் வகையில்தான் அதைப் பயன்படுத்தினர் என்பதற்கே சாத்தியம் அதிகமுள்ளது.

7. பாபிலோனில் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் களிமண்ணால் செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் அவை இரும்பிலான பொருட்களில், இலைகளில், அல்லது மரப்பட்டைத் துண்டுகளில் குறிப்பாக பனை மரப் பட்டைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எழுதும் மை பயன்படுத்தப்படவில்லை; இதுபோன்ற உடையக்கூடிய பொருட்களில் எழுத்துக் கீறல்களை உருவாக்குவது மிகவும் கடினம்; அத்துடன் இலைகளோ அல்லது பட்டைகளோ, அவை எளிதில் உடைந்துவிடும்; அல்லது அழிந்து போய்விடும்.

8. நீண்ட காலத்துக்குப் பிறகுதான் உடைந்து போகாமல் இருக்கும் வகையில் பெரிய பட்டைகளையும் தாளி பனையின் ஓலைகளையும் எழுதுவதற்குத் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. அத்தகைய எழுதுபொருளின் மீது தடவுவதற்கான மையும் நீண்ட காலத்துக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டது; கீறல்களாக எழுதப்படும் எழுத்துகளை எளிதாகப் படிக்க இது பயன்பட்டது. இவை போன்றவை கண்டுபிடிக்கப்படும் வரை, எழுதி, அவற்றைப் புத்தகங்களாகப் பயன்படுத்த நடைமுறையில் எவ்விதமான எழுதுபொருட்களும் இல்லை. அவை விரைவாகக் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததற்கு, அத்தகையப் பொருட்களின் தேவை அதிகம் உணரப்படவில்லை என்பது காரணமாக இருக்கலாம்.

9. வேதப் பள்ளிகளைப் பொறுத்தவரை எழுதுபொருட்களின் தேவை உணரப்படவில்லை என்ற கூற்றுக் உண்மையில் போதுமான அழுத்தம் இல்லை. ஓர் அமைப்பாக வேதப்பிராமணர்கள் மந்திரங்கள் குறித்த அறிவை தங்கள் கைகளில் வைத்திருக்கவே மிகவும் ஆர்வமாக இருந்தனர்; அதைச் சார்ந்துதான் யாகப்பலி பீடத்தில் உச்சரிக்கப்படும் மந்திரங்களின் சக்தி இருந்தது. வேதப்பிராமணர்கள் கூறும் நியதிகள் குறித்தப் புத்தகங்களில், இவை குறித்து நேர்த்தியான விதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டன. அவை சங்கரரின் மனமொப்பிய அங்கீகரிப்பை பெற்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று (வேதாந்தச் சூத்திரங்கள் I.3.38).

‘வேதச் சூத்திரங்கள் ஓதுகையில் அதைத் திட்டமிட்டு கேட்கும் சூத்திரனின் காதுகளை உருக்கிய ஈயத்தால் நிரப்ப வேண்டும். அதை அவன் ஓதினால், அவனது நாக்கை அறுத்துவிட வேண்டும். நினைவுகளில் அதைப் பாதுகாத்து வைத்திருந்தால் அவனது உடலை இரண்டாகப் பிளக்கவேண்டும் (கௌதமர் xii 4-6).’ மரபு வழியில் புரோகிதர்களுக்கு மட்டுமே கற்பிக்கும் பிரத்தியேக உரிமையைக் கடவுள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார் என்பது வேதப்பிராமணர்களின் பார்வை (மனு I.88); ஒவ்வொருவரும், கடவுளைக் காட்டிலும் (மனு xi.85) பெரும் தெய்வாம்சம் (மனு ix 317,319) பொருந்தியவர்களாகத் தம்மைக் கருதிக்கொண்டனர்.

இந்த இலக்கியங்களை மற்றவர்களுக்கு அளிக்கும் லாபகரமான வழிமுறையாக எழுதுவதைப் பயன்படுத்தாமல் அவர்கள் அலட்சியமாக இருந்தனர்; அவர்கள் வைத்திருந்த பிரத்தியேகமான உரிமைகளுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடிய ஒரு முறை என்பதாலும் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள் என்று நாம் கருதினால் அது தவறாக இருக்க முடியாது.

இந்தியாவில் அறியப்பட்ட மரப்பட்டை அல்லது பனை ஓலையில் எழுதப்பட்ட மிகப் பழமையான கையெழுத்துப் பிரதிகள் புத்தச் சமயத்தைச் சேர்ந்தவை என்பதறிந்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. கருங்கல்லிலும் உலோகத்திலும் எழுதப்பட்ட தொடக்கக்காலப் பதிவுகள் பௌத்தச் சமயத்தினருடையவை. பௌத்தர்கள்தான் முதன்முதலில் நடைமுறை நியதிகளைப் பதிவு செய்ய எழுத்தைப் பயன்படுத்தினார்கள்.

அத்துடன், மிகப் பெரும் வேதகால இலக்கியமான வாசிஷ்ட தர்ம சூத்திரத்தில்தான் எழுதுதல் பற்றிய மிகத் தொடக்ககாலக் குறிப்பு இருக்கிறது. இது பிற்காலத்தில் சட்டப் புத்தகங்களில் ஒன்றாக மாறியது. மேலே குறிப்பிடப்பட்ட பௌத்த அமைப்பின் நடைமுறை நியதிகளிலிருந்து எடுக்கப்பட்ட பல குறிப்புகளின் நீண்ட தொடர்ச்சியாக இது இருந்தது.

சித்திர எழுத்து முறையிலிருந்து இந்தியாவின் வேதப்பிராமணர்கள் தங்களுக்கான எழுத்து முறை ஒன்றை உருவாக்கிக் கொண்டார்கள் என்ற முன் அனுமானத்துக்கு நிச்சயமாகச் சாத்தியமேதுமில்லை. அவர்கள் வெளியிலிருந்து பெற்ற எழுத்துகள் இத்தகைய எழுத்துமுறையின் மீதுதான் பிரயோகிக்கப்பட்டன. ஜெனரல் கன்னிங்ஹாம் இதை மேலும் தீவிரமாக ஆய்வு செய்கிறார். இந்திய மண்ணில் எழுத்துகள் முற்றிலும் அந்நாட்டவர்களால் உருவாக்கப்பட்டன என்று அவர் கருதினார். ஆனால், தற்போது அதற்கான ஆதாரம் நம்மிடம் இல்லை; அது மட்டுமல்ல. விஷயம் அதற்கு நேர்மாறானது. தற்போது கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களும் இந்திய எழுத்துமுறை ஆரியர்களுடையது அல்ல என்பதை எடுத்துரைக்க முற்படுகின்றன; திராவிட வணிகர்கள்தான் அதை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்; இத்தகைய கண்டுபிடிப்புகளைச் சுயநலம் காரணமாக எதிர்த்த போதிலும், இந்திய இலக்கியத்துக்கு வேதப் பிராமணர்கள் வேறு வழிகளில் மதிப்பிட முடியாத சேவைகள் புரிந்துள்ளனர்; எனினும், முடிவாகக் கூறப்போனால் இதற்கு முன் நீண்ட காலமாக இங்கிருந்த எழுத்துகள் குறித்த அறிவைப் பிரயோகித்து, நூல்களை உருவாக்கி உற்பத்தி செய்வதற்கும், அவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கும் உதவியாக அமைந்த மேம்பட்ட நுட்பமான தொழில்முறைகளைக் கண்டறிந்ததற்கு, வணிகர்களுக்கும், பாரபட்சமற்ற முறையில் இலக்கியம் பேசியவர்களுக்குமே எழுத்துத்துறையில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா கடன்பட்டுள்ளது.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *