பாபிலோனிலிருந்து மேற்குப் பகுதி இந்தியாவுக்கு எழுத்துகள் பற்றிய அறிவைக் கொண்டு வந்தவர்கள் இந்திய வணிகர்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் பாபிலோனில் மிக வெற்றிகரமாகப் பயன்பாட்டிலிருந்த எழுதும் முறையை இங்கு ஏன் அவர்கள் கொண்டு வரவில்லை என்ற கேள்வி எழக்கூடும். வணிகக் குறிப்புகள் எழுதுவதாக இருக்கலாம்; அல்லது களிமண் பலகைகளிலும், செங்கற்களிலும் எழுதும் முறையாகவும் இருக்கலாம்.
அவ்வாறு இங்கு கொண்டு வந்த பிரச்னை எளிதானதாக, சிரமமற்றதாக இல்லை. ஆனால், அது இந்தியாவுக்கு மட்டுமான பிரச்னையாக உருவாகவில்லை. யூப்ரடீஸ் சமவெளியில் எழுத்துகளைக் கற்றுக்கொண்ட உலகின் வேறு பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களும் பழங்குடியினரும்கூட களிமண் கற்களில் எழுதுகின்ற பழக்கத்தை எப்போதும் பின்பற்றவில்லை.
எழுத்துகளும் வாக்கியங்களும் பொறிக்கப்பட்ட களிமண் கற்களும், பலகைகளும் முத்திரைகளும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகக் கிடைத்துள்ளன. அனைத்துமே களிமண்ணால் செய்யப்பட்டவை. கற்களில் காணப்படும் எழுத்துகள் மிகவும் ஆர்வம் ஏற்படுத்துபவை; அவை மிகவும் தொன்மையான சான்றுகள். ஆனால் அவை, சாதாரண கொத்தனார்கள் ஏற்படுத்திய குறியீடுகளாகத் தோன்றுகின்றன; களிமண் பலகைகளில் பொறிக்கப்பட்டவை சமய நூல்களின் சிறு வாக்கியங்களாக இருக்கின்றன.
அது போலவே, முத்திரைகளில் காணப்பட்ட எழுத்துகளும் வழக்கமானவையே. எனவே, புத்தகங்கள்போல் எழுதும் நோக்கத்துக்கோ சிறிய தகவல் தொடர்புக்கான பொருளாகவோ களிமண் பலகைகளை மக்கள் பொதுவாகப் பயன்படுத்தவில்லை என்பது உண்மை. முனைவர் ஹோய் (Dr.Hoey) கண்டுபிடித்த, களிமண்ணில் எழுதும் முறைக்கான மாதிரிப் பலகை ஒன்றை அவரது பெருந்தன்மை மிக்க அனுமதியின் பேரில் இந்நூலில் கொடுத்துள்ளேன். நிச்சயமாக அது ஆர்வமூட்டும் ஒன்று.
பௌத்தச் சமயத்தின் சிறிய பிரச்சாரக் குறிப்பு ஒன்று அதில் காணப்படுகிறது. கிடைத்திருக்கும் செம்பு மற்றும் தங்க உலோகத்தினால் ஆன தகடுகள் நிச்சயமாக மிக ஆரம்பக் காலத்தைச் சேர்ந்தவை. அவை அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தட்சசீலத்தின் செப்புத் தகடுகளும், மாவ்ங்-கோன் (Maung-gon) தங்கத் தகடுகளில் ஒன்றும் இங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
மறுபுறம், பிர்ச் பட்டைகளும் பனை ஓலைகளும் இது போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இதற்கான ஏராளமான சான்றுகள் இலக்கியத்திலும் தொல்பொருள் ஆய்வுகளிலும் நமக்குக் கிடைத்துள்ளன. அவ்வாறு எழுதப்பட்ட புத்தகத்தின், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப் பழமையான மாதிரி ஒன்று கோசிங்கா விஹாரையின் இடிபாடுகளில் கையெழுத்துப் பிரதியாகக் கிடைத்துள்ளது. அந்த விஹாரம் கோட்டானில் (Khotan) இருந்து பதின்மூன்று மைல் தொலைவில் உள்ளது. இந்தக் கையெழுத்துப் பிரதி கரோஸ்தி எழுத்துகளில் பிர்ச் பட்டையின் மீது மை கொண்டு எழுதப்பட்டது. கி.மு.500ல் மிகத் தொலைவிலிருக்கும் இந்தியாவின் வடமேற்கு நிலப்பகுதியில் இந்த எழுத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
காந்தாரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இந்த எழுத்துமுறையைப் பயன்படுத்தினர். (மேலே நாம் விவாதித்த மற்ற எழுத்து முறைகளையும் அதே நேரத்தில் அந்த மக்கள் பயன்படுத்தினர். இதன் அடியொற்றி தற்போதைய அனைத்து இந்திய எழுத்துகளையும் நாம் மீண்டும் தடம் காண முடியும்). இந்தக் கையெழுத்துப் பிரதிகளின் பகுதிகள் பாரிஸ் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இடங்களின் காட்சியகங்களுக்குச் சென்றுள்ளன. இந்த எழுத்துகள் கிறித்துவச் சகாப்தம் தொடங்குவதற்குச் சற்று முன்போ அல்லது அதன் பிறகோ காந்தாரப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும். மேலும் இந்தப் பிரதிகளில் பௌத்த நடைமுறை நியதிகள் குறித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட புத்த சமய உரையாடல்களின் தொகுப்பு ஒன்றும் இருக்கிறது. பாலி மொழி எழுத்துகளைக் காட்டிலும் இளையதான, பேச்சுவழக்கில் அது எழுதப்பட்டு உள்ளது.
காலகட்டம் குறித்த நமது ஆய்விற்கு, நமக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு கையெழுத்துப் பிரதி மிகவும் இளையது. குச்சாருக்கு (Kuchar) அருகில் மிங்கை (Mingai) என்ற இடத்தில் கேப்டன் போவர் (Bower) அதைக் கண்டுபிடித்தார். ஒரு மருந்துக்கான ரசீது போல் அது தோன்றுகிறது; மற்றும் பாம்பை வசீகரிப்பதற்கான மந்திரங்களும் அதில் உள்ளன. கி.பி.நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டுகளின் எழுத்துகள் அவை.
பனை ஓலை போல் வெட்டப்பட்டிருந்த பிர்ச் மரப் பட்டையில் மை கொண்டு அவை எழுதப்பட்டிருந்தன. நூல் / கயிறு கொண்டு கோத்து இந்த ஏடுகளை ஒன்றாக இணைக்க ஏதுவாக மரப்பட்டையில் துளைகள் போடப்பட்டிருந்தன. இந்தத் துளை போடும் முறை பனை ஓலைகளுக்குத்தான் எப்போதும் பின்பற்றப்படுவது. ஆனால், பிர்ச் மரப் பட்டைக்கு மிகவும் பொருத்தமற்றது. ஏனெனில் அந்தப் பட்டை மிக எளிதாக உடையக்கூடியது; அத்துடன் அந்தக் கயிறு ஏடுகளைக் கிழிக்கவும் உடைக்கவும் செய்யும். கிடைத்திருக்கும் இந்த ஏடுகளில் அவ்வாறு நடந்துள்ளது.
இந்தக் கையெழுத்துப் பிரதியில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி செவ்வியல் சம்ஸ்கிருதத்துக்கு நெருக்கமாக இருக்கிறது. ஆனால், இப்பிரதியில் பார்க்க முடிகிற ஐந்து வெவ்வேறு சிறு விளக்கக் குறிப்புகள், பல்வேறு விதமான, ஓரளவு நல்ல பேச்சுவழக்குகளாகத் தோன்றுகின்றன. மேலும் பழமையான கையெழுத்து பிரதி ஒன்று, சமீபத்தில் துர்கெஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்திருப்பவற்றில் புரிந்துகொள்ளப்பட்டு, சரியாக எழுதி வைக்கப்பட்டிருக்கும் பிரதிகளில் இது பழமையானது. மற்றவை ஆய்வுக்காக இன்னமும் காத்திருக்கின்றன. அந்த நோக்கத்துக்காக அவை முனைவர் ஹோர்ன்லேவின் (Dr.Hoernle) கைகளில் இருக்கின்றன.
போவர் கண்டறிந்த கையெழுத்துப் பிரதி சம்ஸ்கிருதத்தில் (சரியான சம்ஸ்கிருதம் என்று கூறமுடியாது என்றாலும்) உள்ளது; கோசிங்காவில் கிடைத்தது இம்மொழியுடன் தொடர்புடைய பிரதேசப் பேச்சு வழக்கில் இருந்தது. ஆனால், பாலி மொழியைக் காட்டிலும் பிந்தையது. ஆகவே, நாம் இப்படி ஒரு முடிவுக்கே இயல்பாக வரவியலும்: சம்ஸ்கிருதம் பாலியைக் காட்டிலும் பழமையானது; ஆகவே, போவர் ஏடுகளில் காணப்பட்ட எழுத்துகள் நிச்சயமாக அதிகம் பழமையானவை. சேதமுறாமல் கிடைத்திருக்கும் அந்தக் கையெழுத்துப் பிரதி சில நூற்றாண்டுகளுக்குப் பிந்தையதாக இருக்கக்கூடும்.
லத்தீன் மொழிக்கு இத்தாலி போல், சம்ஸ்கிருதத்துக்கு பாலி மொழி. அவை எழுதப்பட்ட காலம் எதுவாக இருப்பினும், வெர்ஜில் படைப்பின் கையெழுத்துப் பிரதிகள் நிச்சயமாக தாந்தேவின் படைப்பைக் காட்டிலும் பழமையானதாகத்தான் இருக்கக்கூடும். எனவே இப்படி முடிவு செய்யலாம் என்று தோன்றுகிறது: சம்ஸ்கிருத மொழியில் இருக்கும் ஒரு படைப்பு, அது எழுதப்பட்டிருக்கும் அந்தக் கையெழுத்துப் பிரதியின் காலம் எதுவாக இருப்பினும், பாலி மொழிப் படைப்பைக் காட்டிலும் வெளிப்படையாக பழமையானது. மொழியியல்ரீதியாகப் பார்த்தால் பாலி மொழியைக் காட்டிலும் சிறிது இளையதான பேச்சுவழக்கிலான படைப்பைக் காட்டிலும் பழமையானது என்பது மற்றொரு வலிமையான வாதம்.
ஆனால், விநோதம் என்று சொல்லுமளவுக்கு, நமக்குக் கிடைத்திருக்கும் சான்று அதற்கு நேர்மாறானதாக இருக்கிறது. கோசிங்கா கையெழுத்துப் பிரதி, போவர் கண்டறிந்த கையெழுத்துப் பிரதியைக் காட்டிலும் பழமையானது. அதுமட்டுமின்றி, அதில் காணப்படும் பாடல் வரிகளும் போவர் பிரதியின் வரிகளைக் காட்டிலும் பழமையானவை. ஏனெனில், அவை பாலியுடன் நெருங்கிய தொடர்புடைய பேச்சுவழக்கு மொழியில் எழுதப்பட்டவை என்று துல்லியமாகத் தெரிகின்றன.
இந்த இரண்டு படைப்புகளின் அச்சிடப்பட்ட பிரதிகள் மட்டுமே நம்மிடம் உள்ளன; அந்த எழுத்தின் காலம் குறித்து தொல்லெழுத்துக்கலை அடிப்படையில் சான்று எதுவும் நம்மிடம் இல்லை; ஏனெனில், நாம் பரிசீலிக்கும் காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு புத்தகத்தை அல்லது கல்வெட்டை ஆய்வு செய்கையில், அதில் பேச்சு வழக்கிலான பாலி சொற்றொடர்கள் மற்றும் இலக்கண வடிவங்களின் கலப்பு இல்லாமல் தோராயமாக தூய சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாக இருக்குமெனில் சொற்பிறப்பியல் ரீதியாக, பாலியைக் காட்டிலும் சம்ஸ்கிருதம் பழமையானது என்று நம்மால் உறுதியாக அறிந்து கொள்ள இயலும்.
வெளிப்படையான இந்த முரண்பாட்டுக்கான விளக்கம் உண்மையில் மிகச் சரியாக தெளிவானது மற்றும் எளிமையானது. இலக்கியங்களை ஒப்பீடு செய்து பார்க்கையில் இது போதுமான அளவு தெளிவாகும், சொல்லப்போனால், கல்வெட்டு எழுத்துகளை ஒப்பீடு செய்வதன் மூலம் அதிகம் எளிதாக அறிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, சாக்கியா நினைவுச் சின்ன வளாகத்தில் திரு.பெப்பே (Mr.Peppe) கண்டுபிடித்த பூ ஜாடியில் காணப்படும் எழுத்துகளை எடுத்துக்கொள்ளலாம். என்னுடைய கருத்தில் இந்தியாவில் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகளில் இவை மிகப் பழமையானவை ஆகும்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிய வருகிறது?
1. மொழியைப் பொறுத்தவரை, இது முற்றிலும் பயன்பாட்டிலிருக்கும் உயிரோடு இருக்கும் மொழி; வட்டார வழக்கில் பேசப்படும் மொழி.
2. எழுத்திலக்கண முறையில் அடிப்படையில், மெய் எழுத்துகள் தோராயமாகவும் வளர்ச்சியற்ற முறையிலும் எழுதப்பட்டுள்ளன.
3.மெய்யெழுத்துகளில் அடையாளக்குறி இடப்பட்ட அடிப்படையில் வெளிப்படும் உயிரெழுத்துக்கள், i மற்றும் u மட்டுமே. சந்தேகத்துக்குரிய நேர்வில் அது e அல்லது o ஆகவும் இருக்கலாம்.
4. இரட்டை மெய்யெழுத்துகள் இரண்டு ஒலியாக உச்சரிக்கப்படுவது (இன்றைய இத்தாலிய மொழியில் இருப்பதுபோல்) வட்டார வழக்கின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தபோதிலும் மெய்யெழுத்துகள் எவையும் இரட்டையாக எழுதப்படவில்லை.
5. மெய்யெழுத்துகளின் குழுக்கள் எதுவும் (hundred என்ற சொல்லில் உள்ள ndr அல்லது plastic என்ற சொல்லில் உள்ள pl மற்றும் st போன்று) ஒருசேர எழுதப்படவில்லை. எனவே ’of the Sakiyas’ என்ற சொல்லுக்கு ’s ki y nm’ என்ற எழுத்துகளே அதில் எழுதப்பட்டுள்ளன. இந்த ஆசிரியரால் யோசிக்க முடிந்த மிக நெருக்கமான எழுத்திலக்கண அமைப்பு இதுவே. அந்தப் பிரதேசத்தில் வழக்கத்திலிருக்கும் பேச்சுவழக்கில் இந்தச் சொல் எப்படி உச்சரிக்கப்பட்டிருக்கலாம் என்று என்னைச் சிரமப்படுத்திக்கொண்டேன். அந்தச் சொல், Saakiydnaam or Sakkiyaanam ஆக இருக்கலாம். Sak-kiyanang என்றும் உச்சரிக்கப்பட முடியும்.
இங்கே, எழுத்திலக்கண முறை மிகவும் முழுமையற்ற வகையில் பயன்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க முடியும். மிகச் சரியாகச் சொன்னால், ’அசையெழுத்து’ என்று எந்த எழுத்தும் பயன்படவில்லை. நாம் பயன்படுத்தும் ’vocal’ என்ற சொல்லில் உச்சரிக்கப்படும், மெலிதாக ஒலிக்கும் உயிரெழுத்தான ’a’, வேறு உயிரெழுத்து எதுவும் இணைந்திராத ஒவ்வொரு மெய்யெழுத்திலும் உள்ளார்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
உயிரெழுத்துகளில், நீட்டொலிக்கும் குறுகிய ஒலிக்கும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இணை உயிரெழுத்துகள் (ஓரசையாக ஒலிக்கும் இரண்டு உயிரெழுத்துகள்) எதுவும் எழுதப்படவில்லை. உள்ளார்ந்த ’a’ என்ற ஒலியின்றி ஒரு மெய்யெழுத்து இறுதியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்ட, அதற்கு உதவி செய்யும் வகையில் எதுவும் இல்லை; இந்தத் தன்மையும், மெய்யெழுத்துக் குழுக்கள் இல்லாத நிலையும், மொழியின் அசல் பயன்பாட்டில் மிக அதிகமாக இரட்டை மெய்யெழுத்துகளை வெளிப்படுத்த இயலாமல் செய்து விடுகின்றன.
அடுத்த நிலையாக நாம் ஆய்வதற்கு நம்மிடம் இருக்கும் எழுத்துகள் அசோகர் காலத்துக் கல்வெட்டுகளில் காணப்படுபவை. (அதாவது, இது தற்போதைய நிலை; இந்தியாவில் தொல்பொருள் ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டால், ஓர் இடைப்பட்ட நிலை உருவாகக்கூடும் என்பதில் சந்தேகமில்லை). இதுவரையிலும் முப்பத்து நான்கு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‘Inscriptions de Piyadasi’ என்ற தனது நூலில் எம்.செனார்ட் (M.Senart) 1886க்கு முன் கண்டறியப்பட்ட அனைத்துக் கல்வெட்டுகளையும் முழுமையான மற்றும் விரிவான பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். இவற்றுடன் பர்ஹுத் நினைவுச் சின்ன வளாகத்தில் கிடைத்துள்ள அதிக எண்ணிக்கையிலான கல்வெட்டு எழுத்துகளையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அவற்றில் சில, சிறிது பழமையானவை, சில சிறிது பிந்தையவை; ஒன்றிரண்டு மட்டுமே அசோகர் காலத்தைக்காட்டிலும் பிந்தையவை.
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.