Skip to content
Home » பௌத்த இந்தியா #18 – எழுதுதல் – வளர்ச்சிநிலை 2

பௌத்த இந்தியா #18 – எழுதுதல் – வளர்ச்சிநிலை 2

பௌத்த இந்தியா

மூன்றாம் நூற்றாண்டின் இந்தக் கல்வெட்டுகளில் இரண்டு போக்குகள் சிறப்பாகக் தென்படுகின்றன. முதலாவது, எழுதுவதற்கான வழிமுறைகள் மிகவும் மேம்பட்டதாக இருக்கின்றன. நீட்டொலி உயிரெழுத்துகள் அனைத்தும் அவ்வாறே இப்போது குறிக்கப்பட்டுள்ளன. ஓரிடத்தில் இணை உயிரெழுத்து ஒன்றும் காணப்படுகிறது. பல மெய்யெழுத்துகளின் குழுக்களும் அவ்வாறே எழுதப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் எழுத்துகள் மிக நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் எழுதப்பட்டுள்ளன/ செதுக்கப்பட்டுள்ளன. எனவே, மிக அதிக அளவுக்குத் துல்லியமானதாக, அதிகளவுக்குப் படிக்க முடிவதாக, முழுமையாக, சரியாக எழுதப்பட்டதாக எழுத்துகள் உள்ளன.

மறுபுறத்தில், எழுதுபவர்கள் அல்லது எழுத்தைச் செதுக்குபவர்கள் பின்பற்றிய வழக்கங்களையும் பார்க்கவேண்டும். வாழும் மொழியில் நடைமுறைப் பயன்பாட்டிலிருந்த உண்மையான வடிவங்களை அவர்கள் பயன்படுத்தவில்லை; அதற்குப் பதிலாக, மிகவும் அறிவார்ந்தவை மற்றும் இவைதாம் சொற்களின் சரியான வடிவங்கள் என்றும் அவர்கள் கருதியதை எழுத்துமுறையில் வெளிப்படுத்துகிற பழக்கத்தைப் பின்பற்றினர். எனவே, அந்த எழுத்துகள் மிகக் குறைவானத் துல்லியத்துடன் இருந்தன; வாழும் மொழியின் பேச்சு வழக்குக்கு விசுவாசம் குறைவான சித்திரத்தைக் கொடுத்தன.

இறுதியாகக் குறிப்பிடப்படும் போக்கு, நமது (ஆங்கில) மொழியில் சொற்களின் உச்சரிப்புப் பிரச்னை தீர்க்கப்பட்டபோது என்ன நிகழ்ந்தோ, அதற்கு மிகச் சரியாக இணையானதாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் இப்போது போலத்தான் ’would’ மற்றும் ’could’ சொற்களை அப்போதும் பெருமளவுக்கு உச்சரித்திருப்பார்கள். ஆனால், முந்தைய ’would’ உச்சரிப்பு முறையில் (ஜெர்மன் மொழியின் wollteல் இருப்பது போல) ஒரு l இருந்தது என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். எனவே, அந்தச் சொல் ’l’ உடன் தான் உச்சரிக்கப்பட்டது. ஆனால், இப்போது நடைமுறை வழக்கில், வாழும் மொழியின் பேச்சு வழக்கில் இல்லை. சிலர் (தன்னை அதிகம் கற்றவராகவும், சரியானவராகவும் நினைத்துக் கொள்ளும் சிலர், பாதுகாப்பு கருதி) could என்ற சொல்லை l என்பதைச் சேர்த்தே உச்சரித்திருக்கலாம். இந்த நேர்வில், சற்று பழைய வடிவத்திலும் அல்லது இப்போது பேசப்படுகிற மொழியிலும் ’l’ என்பது இல்லை.

இப்போது, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மேற்குறிப்பிட்ட இரண்டு சொற்களிலும் நாம் ’l’ ஐப் பயன்படுத்துகிறோம். இந்தப் பிந்தையப் போக்குதான் இந்தியாவில் வெற்றி பெற்றதாக நிலவுகிறது. மொழியின் உண்மையான விஷயங்களை வெளிப்படுத்துவதற்கு நடந்த முயற்சிகள், மிகவும் படிப்படியாக முற்றிலும் மற்றொரு முயற்சிக்கு வழிவகுத்தன; அதாவது, ஓர் அறிவார்ந்த சொற்றொடரை எப்படிப் பேசுவது என்ற முயற்சிக்கு உதவின.

சொற்களின் கடந்த கால வரலாறுதான், அவற்றின் உண்மையான ஒலியைக் காட்டிலும் அதிகம் கருத்தில் கொள்ளப்பட்டது. கல்வெட்டுச் சொற்களின் மொழியும், பின்பற்றப்பட்ட உச்சரிப்பு முறைகளும் அதிக அளவுக்குச் செயற்கையானதாக மாறிவிட்டன. பல நூற்றாண்டுகளுக்கு இந்த இரட்டைச் செயல்முறை தொடர்ந்தது; எழுத்துகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டன; உலகம் இப்போது கண்டிருக்கும் சொற்களை உச்சரிக்கும் முறைக்கு மிகச் சரியான கருவியாக அது மாறும்வரையிலும், இணையாக, எழுத்தும் மேம்பாடு அடைந்துகொண்டே இருந்தது; மற்றொரு செயல்முறையும் உச்சரிப்பும் அதன் உச்சத்தை எட்டிவிட்டது. வழக்கத்திலிருந்த பேச்சுமுறை நினைவுச் சின்னங்களில் இருந்து முற்றிலும் மறைந்துவிட்டது. அத்துடன் அனைத்துக் கல்வெட்டுகளிலும் செவ்வியல் சம்ஸ்கிருதம் என்று அழைக்கப்பட்ட, புழக்கத்தில் இல்லாத மொழியில்தான் எழுத்துகள் பொறிக்கப்பட்டன.

இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தூய்மையான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகளில் மிகப் பழமையானது கத்தியவாட்டின் கிர்னாரில் கிடைத்திருக்கும் ருத்ரதாமனின் கல்வெட்டுதான். சந்தேகமின்றி, அது சகா சகாப்தத்தின் 72 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டது. அதாவது, கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் மத்திய காலத்தைச் சேர்ந்தது அது. அசோகரின் காலத்திலிருந்து இந்த நிலையை அடைவதற்கு நான்கு நூற்றாண்டுகள் ஆகியுள்ளன. இறுதிக் காலகட்டம் அறிவுச் செருக்குடன் மாற்றியமைக்கப்படவில்லை; எனினும், பிரதேச மொழியில் எழுத்துகள் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தன. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து வழக்கத்திலிருந்து மறைந்து போனதாகக் கருதப்பட்ட மொழி ஆதிக்கம் செலுத்தியது.

நாணயங்களின் விஷயங்களைப் பொறுத்தவரை சாத்தியமான அளவுக்கு அவை அதிகம் தகவல் அளிப்பவையாக இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மிகப் பழமையான நாணயம், மேற்கு க்ஷத்ரபா வம்சத்தின் சத்யதாமனின் தனித்துவமான நாணயமே. அதன் தோராயமான காலகட்டம் கி.பி.200. இந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஏழு சொற்களும் சம்ஸ்கிருதச் சொற்களே. அதில் ஒன்று மட்டுமே, சம்ஸ்கிருதத்தில் கடைப்பிடிக்கப்படும் சந்தி விதிகளுக்குப் புறம்பாக அமைந்துள்ளது. இதற்கு முந்தியவை எனக் கூறப்படும் அனைத்து நாணயங்களிலும் பாலி அல்லது பிரதேச மொழி எழுத்துகளே உள்ளன.

போதுமான அளவு விநோதமாக, இதற்குப் பின் கிடைத்துள்ள நாணயங்கள் அனைத்தும், அடுத்து சுமார் இரண்டு நூற்றாண்டுகள், இவ்வாறே உள்ளன. மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், மீண்டும் முயற்சி செய்யவில்லை. எழுத்துகள் மத்தியில் சிதறலாக சம்ஸ்கிருதத் தனிச்சொற்களை ஆங்காங்கே பார்க்க முடிகிறது; அப்படி இல்லையெனில் அவை பிரதேச மொழியில் தான் உள்ளன. நாணயம் அச்சடிக்கும் அதிகாரிகள் அல்லது நாணய அலுவலர்கள் தாம் படித்தவர்கள் என்று தெரியப்படுத்துவதில் விருப்பம் கொண்டிருந்தனர் என்பதை வெளிப்படுத்தும் சான்றுகள் இவை. ஆனால், மக்கள் புதிய சம்ஸ்கிருத எழுத்துகளைக் கண்டுபிடிப்பதில் விருப்பமற்றவர்களாக இருந்தனர். அத்துடன் மக்கள் மத்தியில் பிரபலமில்லாத நாணயங்களை வெளியிடுவதிலும் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.

நம் நாட்டிலும் (இங்கிலாந்திலும்) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலும் ஒரு செல்வந்தர் அல்லது வெற்றிகரமான ஆளுமை குறித்த முக்கியமான நினைவுச் சின்ன ஆவணம் ஏதாவது உருவாகினாலும், ஏறத்தாழ அது எப்போதும் லத்தீன் மொழியில்தான் எழுதப்பட்டது. நாணயங்கள் பெரும்பான்மையாக இன்னமும் லத்தீன் மொழி எழுத்துகளைத்தான் கொண்டுள்ளன. ஐரோப்பா முழுவதும், சிறிது காலத்துக்கு முன்வரையிலும் பல்வேறு வகையான பாடப் புத்தகங்களும் லத்தீன் மொழியில்தான் எழுதப்பட்டன; கல்வியும் பெரும்பாலும் அந்த மொழியில் கற்பிக்கப்பட்டது. 1855-ல், ஐரோப்பாவில் முதன்முதலில் எடிட் செய்யப்பட்ட பாலி படைப்புகள், லத்தீன் மொழி அறிமுகத்துடன், லத்தீன் குறிப்புகளுடன், லத்தீன் மொழிபெயர்ப்புடன் தான் திருத்தி வெளியிடப்பட்டன.

கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் ஏற்பட்ட அந்த நிலையை ஆங்கிலேயர்களாகிய நாம் ஒருபோதும் எட்டவில்லை; அதாவது புழக்கத்தில் இல்லாத ஒரு மொழியைப் பிரத்தியேகமாகப் பயன்படுத்திய நிலை. ஆனாலும் நாம் அதிலிருந்து வெகு தொலைவில் இல்லை. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, இரண்டு கண்டங்களிலும் நிலைமை கூறப்படுவதைக் காட்டிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. இந்தியா ஒரு தேசம் என்பதைக் காட்டிலும் ஒரு கண்டம் என்றுதான் கூறமுடியும். பலி கொடுப்பது போன்ற சமய நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் புழக்கத்தில் இல்லாத மொழியே பயன்பட்டுள்ளது.

அந்த மொழிக்குப் பெருமளவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சமயம் சார்ந்த தன்மை கொண்டது. ஆனால், பல்வேறு மொழிகளைத் தங்கள் மொழியாக மக்கள் பேசிய நாடுகளின் ஊடாகப் பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒருவகை இணைப்பு மொழியாகவும் அது இருந்தது.

அந்தக் காலத்தில் கல்வி கற்பதற்கு முக்கியமான பொறுப்பாளர்களாக மதகுருமார்கள் பெரும்பங்கு வகித்தனர். ஆகவே, வட்டார மொழியின் மூலமாக மக்களைச் சென்றடைவதைக் காட்டிலும் படித்த, பெருமளவிலான மக்களை ஈர்ப்பதற்கான வசதியான மொழியாக அந்த ஆலயத்தின் மொழி இருந்தது. அத்துடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், பிரதேச மொழியை முதலில் பயன்படுத்தியவர்கள், சீர்திருத்தம் என்று அவர்கள் கருதியதை ஆதரித்துப் பேசியவர்களே; அந்த மொழியில் மக்களிடம் அவற்றைப் பரிந்துரைத்துப் பேச விரும்பியவர்கள்.

நிச்சயமாக, இந்த இரண்டு நேர்வுகளில் வேறுபாடுகள் உள்ளன. இதில் முக்கியமானது, காலகட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் பிரதேச மொழிதான் முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் ஒரு முக்கியமான விளைவு ஏற்பட்டது; வட்டார மொழிக்கும் புழக்கத்தில் இல்லாத மொழிக்கும் இடைப்பட்ட நிலையில் ஆர்வமூட்டும் பிரதேச மொழி ஒன்று உருவானது; இதைக் கலவையான சம்ஸ்கிருதம் அல்லது கலவையான பிரதேச மொழி என்று சமமாக அழைக்கலாம். ஏனென்றால், இரண்டும் ஏறக்குறைய, தோராயமாக, ஒன்று மற்றொன்றைப் போலவே இருந்தது.

மற்றொரு விளைவைப் பார்க்கலாம். பிரதேச மொழி ஆரம்பத்தில் வந்தது என்பதால், புழக்கத்தில் இல்லாத மொழியில் பயன்பாட்டில் இருப்பதைப் போன்ற வடிவத்திலேயே இலக்கணச் சொற்கள் ஏறக்குறைய இன்னமும் அதில் பயன்பாட்டில் உள்ளன. டாக்டர் ஜான்சன் ஆங்கில மொழிக்கு ஏராளமான லத்தீன் சொற்களை மேல்பூச்சாக அளிக்க முயன்றபோது, அந்தச் செயல் ஒருவிதக் கலப்பின பிரதேச மொழியின் நுழைவால் நின்றுபோனது.

கிறித்தவ சகாப்தத்துக்கு முன்னும் பின்னும் இந்திய எழுத்தாளர்கள் இதேவிதமான செயலைச் செய்தனர். அவர்களும் சம்ஸ்கிருத இலக்கணச் சொற்களை உள்வாங்கத் தொடங்கினர்; ஆனால், நிறுத்தத்தைத் தவிர்க்க முடியவில்லை. பிரதேச மொழியிலிருந்து எடுக்கப்பட்ட சில நடைமுறை வடிவங்களின் கலவையையும் சொற்களையும் அவர்கள் பயன்படுத்தினர். அவற்றில் சில சொற்களை அதிகம் கற்றவர்களுடையது என்று தோன்றுவதுபோல் சற்றே மாற்றினர்; சில வடிவங்கள் முற்றிலும் செயற்கையாக இருந்தன; பயனில் இருந்த மொழியில் அவை அறவே இல்லை.

சாத்தியமான ஒரே விளைவு இதுதான். முதல் வகை கீழ்மையானது என்றும், இரண்டாவது மடத்தனமான தவறு என்றும் கூறப்பட்டது, மூன்றாவது மட்டுமே சரியானது என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் பயன்படுத்திய கலப்பு மொழி மிக அதிக அளவு சம்ஸ்கிருதம் போன்றே இருந்தது. அதற்குப் போட்டி மொழியாகவும் இருந்தது. அதன்பின் நான்காம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து பிந்தைய மொழி மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அந்த நேரத்தில், மொழியியல் ரீதியாக புழக்கத்தில் இல்லாத மொழி உயர்ந்ததாக ஆட்சி செய்தது. செயற்கையான மாற்று மொழி, பயன்பாட்டில் இருந்த வாழும் மொழியை முற்றிலும் மறைத்துவிட்டது. மாற்றாக வந்தது, முறையான வாரிசின் இடத்தைப் பிடித்துக்கொண்டது. அந்த ஒட்டுண்ணி, பெரிதாக வளர்ந்தது; உயிருள்ள மரத்தை வளராமல் தடுத்தது; அதனிடமிருந்து வாழ்வாதாரத்தைப் பெற்றது; தனது பிறப்பை அதிலிருந்து பெற்றது.

அறிவுசார் வெளியில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் பார்வையில் இழப்பு மிகவும் பெரியதாக இருந்திருக்க வேண்டும். இதேபோன்ற கட்டுத்தளையிலிருந்து ஐரோப்பா தப்பித்தது ஒரு நல்வாய்ப்பே என்பதை யார் சந்தேகிக்க முடியும்? ஆனால், மயிரிழையில்தான் அது தப்பித்தது! செவ்வியல் சம்ஸ்கிருதம், அதற்கு முன்னர் வளர்த்தெடுக்கப்பட்ட வட்டார மொழியிலிருந்து அது ஸ்வீகரித்துக் கொண்ட செழுமையான வளங்களின் விளைவாக, பல்வேறுபட்ட உணர்ச்சி வெளிப்பாடுகளைக் கொண்டதாக உள்ளது. அக்காலத்தில் ஆங்கிலப் பேச்சு குறித்த ஹியூமின் (Hume) கட்டுரை நீக்கப்பட்டதுபோல் வெகு காலத்திற்கு வட்டார வழக்கிலிருந்து பாலி மொழி நீக்கப்படவில்லை.

ஆனால், நீண்ட கலவையான சொற்றொடர்களாக அது எழுதப்படுவதும் தொடரியல் இல்லாத நிலையும், மத்திய கால லத்தீன் மொழியுடன் ஒப்பிடும்போது சிரமமானதாகவும் எளிதில் கையாள முடியாததாகவும் இருந்தது. பயன்பாட்டில் இருந்த வாழும் மொழி எதனுடனும் ஒப்பிட்டாலும் அதிகம் சிரமமானதாகவே இருந்தது.

ஒரு மொழியில் பேசும், சிந்திக்கும் வழக்கமில்லாத ஒருவன் அந்த மொழியில் எழுதுவது ஒரு பின்னடைவாகத்தான் இருக்கும். அந்த மொழியில் இப்போதுள்ள படைப்புகள் சமயம், தத்துவம் மற்றும் வாழ்க்கை குறித்தச் சமூகப் பார்வைகளில் பழமைவாத (பிற்போக்கு என்று சொல்ல முடியாத) உணர்வுகள் நிறைந்ததாக இருந்தால் அந்தப் பின்னடைவு மேலும் குறையாமல்தான் இருக்கும்.

ஆகவே இந்தியாவில் பாலி மொழியில் எழுதப்பட்ட புத்தகங்கள், அல்லது பாலி மொழியுடன் தொடர்புடைய பிரதேச மொழியில் எழுதப்பட்ட புத்தகங்கள் அல்லது அத்தகைய பிரதேச மொழியும் மற்றும் தூய்மையான சம்ஸ்கிருதத்திலிருந்து எடுக்கப்பட்ட வடிவங்களும் சேர்ந்த கலவையான மொழியில் எழுதப்பட்ட புத்தகங்கள் அனைத்தும், செவ்வியல் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட புத்தகங்களைக் காட்டிலும் ஏன் பழமையானவை என்பது இப்போது தெளிவாகும்.

ஒரு நாணயம், ஒரு புத்தகம் அல்லது ஒரு கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் மொழி தோராயமாக வழக்கமான சம்ஸ்கிருதத்துக்கு நெருக்கமாக இருந்தால் அது ஏன் பிந்தையது, அதற்கு முந்தையது அல்ல என்பதும் தெளிவு. வட்டார மொழிதான் முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர், (வேதப் பிராமணர்களின் பள்ளிகளில் பயன்பட்ட வழக்கத்தில் இல்லாத மொழியிலிருந்து எடுக்கப்பட்ட) அறிவார்ந்த வடிவங்கள் என்று அதிகம் கருதப்பட்டவை படிப்படியாகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. வழக்கமான சம்ஸ்கிருதம், அது இறுதியில் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படத் தொடங்கிய காலம் வரையிலும் இது நிகழ்ந்தது.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *