உண்மையைச் சொல்லவேண்டுமானால், நாடகங்கள் எழுதப்பட்ட காலத்திலும்கூட தமது அன்றாட வாழ்விலும் சம்ஸ்கிருதத்தையோ பிராகிருதத்தையோ எவரும் பேசவில்லை; மாறாக எளிமையான பிரதேச மொழிகளைத் தாம் பேசினர் என்பதற்குச் சாத்தியமிருக்கிறது. சம்ஸ்கிருதம் முதன்மையான இலக்கிய மொழியாக மாறியிருந்த காலத்தில், நாகரிகமடைந்த மக்கள் பார்வையாளர்களாக இருக்கையில் நாடக ஆசிரியர்கள் தாம் அவர்களது நாடகங்களின் உரையாடல்களை சம்ஸ்கிருதத்துக்கும் மற்றும் அதற்கு இணையான கற்பனை நிறைந்த இலக்கியப் பிராகிருதத்துக்கும் இடையில் பிரித்து அமைப்பது சரியாக இருக்கும் என்று கருதினர். இது எப்படியும் இருக்கட்டும்; சாதாரண மக்கள் அவர்களது தினசரி வாழ்வில் உரையாடல் மொழியாக சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்தி இருந்தால் எனக்கு மிகவும் உன்னதமானதாகத் தோன்றுகிறது. எனினும், பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதிகம் எளிமையான, இயற்கையோடு இயைந்த சமூகத்தில் நிலவிய விஷயங்களைக் கணக்கில் கொள்ளும்போது இதற்கு முக்கியத்துவம் ஏதும் இல்லை எனலாம்.
குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது; ஆரம்ப காலங்களில் நடந்த சமயம் சார்ந்த மற்றும் தத்துவ அடிப்படையிலான உரையாடல்களில் பிராமணர்கள் பங்கேற்றனர்; அவர்களைப் பற்றிய விவரிப்புகளில் எப்போதும் மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள்; அத்துடன், மற்றவர்களுக்கு அவர்கள் எப்போதும் அளிக்கும் அதேயளவு மரியாதையுடன் அவர்களும் நடத்தப்பட்டார்கள்; (ஒன்றிரண்டு விளக்க வேண்டிய விதிவிலக்குகள் இருக்கலாம்). ஆனால், இவற்றிற்கு அப்பால், அவர்கள் எந்த முக்கிய பதவியிலும் இருக்கவில்லை. பெரும்பான்மை தேச சஞ்சாரிகளும், அவர்களில் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கியவர்களும் பிராமணர்கள் அல்ல.
நூல்களில் காணப்படும் பொதுவான கருத்து இதுதான்: பிராமணர்களைக் காட்டிலும் அதிகம் மதிக்கப்படாவிட்டாலும் அரசர்கள், பிரபுக்கள், அதிகாரிகள், வணிகர்கள், கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகள் போன்ற அனைத்து மக்களாலும் தேச சஞ்சாரிகளும் வேதப் பிராமணர்கள் அல்லாத குருமார்களும் பெருமளவில் இருந்தனர்.
‘இது இயல்பான ஒரு விஷயம்தானே’ என்பது வெளிப்படையான ஆட்சேபணையாக இருக்கும். நீங்கள் எடுத்துக்காட்டும் நூல்கள், அவர்களது கடுமையான எதிரிகளால் படைக்கப்படவில்லை என்றால், குறைந்தபட்சம் அவை சத்திரியர்களது செல்வாக்கின் கீழ் இயற்றப்பட்டவையாக இருக்கலாம். அவை பிராமணர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவையாக இருக்கும்.
விதிகளையும் நியதிகளையும் பேசும் நூல்களும் இதிகாசங்களும் பிராமணர்களை மையமாக வைத்துத்தான் இந்தியாவில் அனைத்தும் சுழல்வதாகக் கூறுகின்றன. அவர்களின் புனிதத்தன்மை மட்டும் அதற்குக் காரணமல்ல; ஏனையவர்களைக் காட்டிலும் அவர்கள் பெற்றிருந்த குறிப்பிட்டுச் சொல்லும்படியான அறிவு மேன்மையே காரணம். அல்லது இந்திய இலக்கியம் மற்றும் சமயம் குறித்துப் பேசும் ஐரோப்பிய நூல்களை எடுத்துக் கொள்ளுங்களேன். அவர்கள் இந்த விவாதப் பொருளை, பிராமண நூல்கள் எடுத்துரைக்கும் இலக்கியம் மற்றும் சமயம் சார்ந்த கருத்துகளுடன் நடைமுறையில் இணைந்து போவது போலத்தான் எடுத்துரைக்கின்றனர். எனில், நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தின் அறிவு சார்ந்த வாழ்க்கைவெளியில் பிராமணர்கள் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தியவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்.’
‘இவை இரண்டும் சுயாதீனமான சான்றுகள் அல்ல’ என்று ஒருவர் பதிலளிக்கலாம். ‘ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கு மற்ற நூல்கள் கிடைத்திருந்தால் மட்டுமே அவற்றையும் கருத்தில் கொள்ளத் தயாராக இருந்திருப்பார்கள். அவர்களுக்குக் கிடைத்த நூல்களை அவர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அத்துடன் நூல்களைச் சரிபார்த்துத் திருத்திக்கொள்ளும் செயலுக்கு அவர்களுக்கு உடனடியாக முதலில் கிடைத்த நூல்களையே இயல்பாகத் தேர்ந்தெடுத்தனர். அப்படி இருந்தாலும் நடைமுறையில் மதிப்பிடல்களுக்கு வேதப்பிராமணர்களின் புத்தகங்களே அவர்களுக்குக் கிடைத்தன. எனினும் ஆரம்பகாலத்தில் பிரத்தியேகமாக மேலாதிக்கம் செலுத்துபவர்களாகப் பிராமணர்கள் இருந்தனர் என்று சொல்வதற்கு அந்த நூல்களின் கருத்துக்களை ஏற்பதில் அவர்கள் ஒருமித்தக் கருத்துக் கொண்டிருக்கவில்லை.’
எடுத்துக்காட்டாக, பேராசிரியர் பண்டார்கரின் கருத்தைப் பார்க்கலாம்; அவர் ஓர் உயர்சாதி பிராமணர்; இந்திய அறிஞர்களில் மிகவும் பிரபலமானவர்; அத்துடன், வரலாற்று அடிப்படையிலான விமர்சன முறைகளில் தேர்ச்சிப் பெற்றவர். அவர் கூறும் கருத்துக்குச் சிறப்பான அழுத்தம்/ செல்வாக்கு உண்டு. குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியமான கட்டுரை ஒன்றில் கல்வெட்டு எழுத்துகளின் சான்றுகள் குறித்து அவர் குறிப்பிடுகிறார். கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பிராமணர்களுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது பதிவு செய்வது தொடங்கியுள்ளது. மூன்றாம் நூற்றாண்டிலும் அவ்வாறான சில நிகழ்வுகளின் பதிவுகள் உள்ளன. நான்காம் நூற்றாண்டு தொடங்கி, பிராமணர்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருப்பதைக் காட்டும் ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
அந்தக் காலகட்டத்தில் குப்த மன்னர்கள், அசுவ மேத யாகம் போன்ற மிகவும் சிக்கலான யாகங்களை, ஏராளமான பொருட்செலவில் செய்துள்ளனர். இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று யூபஸ்தம்பம் (பலிகொடுக்கப் போகிற விலங்குகள் கட்டுவதற்கான ஸ்தம்பம்) நிறுத்தப்பட்டதைப் பதிவு செய்கிறது, மற்றொன்று, சூரியன் கோயில் ஒன்றில் விளக்குகள் ஏற்றுவதற்கு அளிக்கப்பட்ட கொடையைப் பற்றிக் கூறுகிறது. இதைப்போல் யாகச் சடங்குகளை நடத்த கிராமங்கள் மானியங்கள் அளித்துள்ளன; பிராமணர்களுக்கும் அவர்களது பொறுப்பிலிருந்த கோவில்களுக்கும் ஏராளமான நிலங்கள் மானியங்களாக வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், இதற்கு முந்தைய நான்கு நூற்றாண்டுகளில் (அதாவது கி.மு. 300 முதல் கி.பி. 100 வரை) பிராமணர் எவரைப் பற்றியும் அல்லது பிராமணர்களின் கோயில், பிராமணர்களின் கடவுள், பலி கொடுத்தல் அல்லது சடங்கு சம்பிரதாயம் குறித்தும் ஒரே ஒரு குறிப்புகூட காணப்படவில்லை. அரசர்கள், இளவரசர்கள் மற்றும் குலத்தலைவர்கள், வணிகர்கள், பொற்கொல்லர்கள், கைவினைஞர்கள் மற்றும் சாதாரண குடும்பத் தலைவர்கள் வழங்கியவை என்று மிகப் பெருமளவிலான தானங்கள்/கொடைகள் குறித்துப் பதிவுகள் உள்ளன. ஆனால், பிராமணர்களுக்கு ஆதரவு அளிப்பது அல்லது தெய்விகம் சார்ந்த ஒன்றுடன் அல்லது அவர்களது நடைமுறையுடன் தொடர்புடையது என்ற அடிப்படையில் ஒன்றும் வழங்கப்படவில்லை.
பிராமணர்கள் மற்றும் அவர்களது சிறப்பு யாகங்களுக்கும் சாதகமானவையாகக் காணப்படும் பிற்காலக் கல்வெட்டு எழுத்துகள் சம்ஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. ஆனால், இவர்களைப் பற்றிக் குறிப்பிடாத ஆரம்பக் கால/ முந்தைய காலத்துக் கல்வெட்டுகள் ஒருவிதமான பாலி எழுத்துகளில் உள்ளன. அந்தக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசத்தில் புழக்கத்தில் இருந்திருக்கக் கூடிய அந்தப் பிரதேச மொழி என்று அதைக் கூறமுடியாது. ஆனால், பல அடிப்படை அம்சங்களில் பார்க்கையில் பிரதேச மொழியை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தமக்குள் பேசிக்கொள்வதற்கு பயன்பட்ட பேச்சுவழக்கிலான மொழியின் எழுத்துகள் அவை எனலாம். பௌத்தம் எழுச்சியுற்ற நேரத்தில் தமக்குள் விவாதம் செய்வதற்கு தேச சஞ்சாரிகள் இந்த மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதுகிறேன்.
இது இரண்டு காலகட்டங்களையும் சார்ந்த கல்வெட்டு எழுத்துகளில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைப் பார்க்க முடிகிறது: பதிவு செய்யப்பட்டிருக்கும் கொடைகள் எந்த நோக்கத்துக்காக வழங்கப்பட்டன மற்றும் பதிவுகள் எழுதப்பட்டிருக்கும் மொழி. இந்த இரண்டையும் வைத்து பேராசிரியர் பண்டார்கர் பின்வரும் முடிவுக்கு வருகிறார்:
‘நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் (அதாவது கி.மு.2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 4ம் நூற்றாண்டின் இறுதிவரையிலும்) பிராமணியச் சமயத்தின் பயன்பாட்டுக்கு என்று பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்டதாக ஒரு கட்டிடம் அல்லது சிற்பத்தின் தடயம் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால், நிச்சயம் பிராமணியம் இருந்தது; அநேகமாக, எந்த ஒரு வடிவத்தைப் பிற்காலத்தில் பிராமணியம் ஏற்றுக்கொண்டதோ அந்த வடிவம் நோக்கி இந்தக் காலகட்டத்தில் அது வளர்ந்து கொண்டு இருந்திருக்கலாம். ஆனால், அந்தச் சமயம் நிச்சயமாக ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால், பௌத்தம் இளவரசர்கள் முதல் எளிமையான சாதாரணத் தொழிலாளி வரையிலும் பெரும் திரளான மக்களால் பின்பற்றப்பட்டது.’ அத்துடன், முந்தைய நூற்றாண்டுகளின் கல்வெட்டு மொழி, ‘பிராமணிய வழியில் கல்வி கற்றவர்களைக் காட்டிலும், இந்த மொழியைப் பயன்படுத்திய மக்களுக்கு அதிகம் மரியாதை கிடைத்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது’ என்கிறார் அவர்.
இந்தக் கருத்தை அந்தக் காலகட்டத்துக்கு (கி.மு.200-கி.பி.400) துல்லியமாகப் பொருந்துவதாக ஏற்கலாம் என்றால், அப்போது, நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்துக்கும் பெருமளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நிச்சயம் மறுக்கமுடியாத வலிமையான வாதமாகத் தோன்றலாம். பேராசிரியர் ஹாப்கின்ஸ்,
‘பிராமணியம், கடல் நடுவில் ஒரு தீவாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. பிராமணியக் காலகட்டத்திலும் ஒப்பீட்டளவில் சிறிய குழுக்களாக இருந்தவர்களின் தனிப்பட்ட, தொடர்பற்ற நம்பிக்கையாகத்தான் அது இருந்தது; இதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆரிய மக்கள் அனைவரும் அதன் கட்டுப்பாட்டில் இல்லை’ என்கிறார்.
கல்வெட்டு எழுத்துகளைப் பொறுத்தமட்டில், இந்த விஷயம் முழுமையையும் விரிவாக ஆய்வு செய்த பின்னர் எம்.செனார்ட் (M.Senart) உறுதியாக ஒன்றைச் சொல்கிறார். இந்தச் சொற்களின் எழுத்துகளோ சொற்களோ எந்த நேரத்திலும் இந்தப் பிரதேச மொழியைச் சேர்ந்தது என்று நம்பும்படியான சித்திரிப்பு எதையும் நமக்குத் தரவில்லை. சம்ஸ்கிருதத்துடன் எந்த அளவுக்கு அவை நெருக்கமாக இணைந்து போகின்றன என்பதை அவதானிப்பது ஆர்வத்தையும் சுவாரஸ்யத்தையும் தரும். அரசியல், சமயம் மற்றும் இலக்கியத்தில் வரவிருக்கின்ற மாற்றத்தின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை அளவிடக்கூடிய கருவியாக இதைக் கொள்ளலாம்.
அவற்றின் வடிவத்தில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டது என்றாலும், அந்த வடிவ மாற்றம் அந்தப் பிரதேசம் சார்ந்த உண்மையான மொழி எது என்பதை வெளிப்படுத்தக் கூடியதாக இல்லை. ஆனால், இந்தியாவின் மொழியியல் வரலாற்றை நிறுவுவதற்கு விலைமதிப்பற்ற உதவியாக அது இருக்கிறது. இந்த விவாதப் பொருளை முழுமையாக ஆய்வதற்கு, அடிப்படை அளவில் என்றாலும், குறைந்தபட்சம் ஒரு தொகுதியாவது எழுத வேண்டும். ஆனால், அதன் முக்கிய அம்சங்கள் சிலவற்றைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம். காலவரிசை அடிப்படையில் இது கொடுக்கப்பட்டுள்ளது.
1. இந்தியாவின் ஆரியப் படையெடுப்பாளர்களும், திராவிடர்களும் மற்றும் கோலாரிய மக்களும் பேசிய பேச்சுவழக்கு மொழிகள்.
2. பண்டைய உயர்நிலை இந்திய, வேத காலத்து மொழி.
3. பெரும்பாலும் திராவிடர்களுடன் திருமணம் மற்றும் அரசியல் கூட்டணியால்/ கலப்பால் இணைந்து காஷ்மீர் முதல் நேபாளம் வரையிலான இமயமலைத் தொடரின் அடிவாரங்களில், அல்லது சிந்து சமவெளிப் பகுதியில் அதற்கு அப்பால் அவந்தி பிரதேசத்தின் ஊடாக அத்துடன் யமுனை மற்றும் கங்கை சமவெளிப் பிரதேசங்களில் குடியேறி வசித்துவரும். ஆரியர்கள் பேசிய பேச்சுவழக்கிலான மொழி.
4. இரண்டாம் நிலை, இந்திய மொழி பிராமணர்களுடையது; பிராமணங்கள் மற்றும் உபநிடதங்களின் இலக்கிய மொழி.
5. பௌத்தத்தின் எழுச்சியின்போது காந்தாரம் முதல் மகதம் வரையில் பேசப்பட்ட பிரதேச மொழிகள்; ஏறக்குறைய பரஸ்பரம் புரிந்துகொள்ள முடியாத அளவு அவை வேறுபட்டிருக்கவில்லை.
6. கோசலத்தின் தலைநகரான சிராவஸ்தியின் வட்டார பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்ட உரையாடல் பேச்சுவழக்கு; மேலும் கோசலத் தேசத்தின் அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் மிகவும் நாகரிகமடைந்த வகுப்பினரிடையே பொதுவாகப் பயன்பாட்டில் இருந்த மொழி. கோசல இனத்தவர் ஆதிக்கத்திலிருந்த பிரதேசம் மட்டுமின்றி கிழக்கிலிருந்து மேற்கில் டெல்லி முதல் பாட்னா வரையிலும், வடக்கிலிருந்து தெற்கே சிராவஸ்தியிலிருந்து அவந்தி வரையிலும் பேசப்பட்ட மொழி.
7. மத்திய நிலை இந்திய மொழி; பாலி மொழி, எண் 6-ல் கூறப்படுவதுபோல் அவந்தி பிரதேசத்தில் பேசப்பட்ட வடிவிலான இலக்கிய மொழி.
8. அசோகர் காலத்துப் பேச்சுவழக்கு. எண். 6-ல் காண்பதுபோல், குறிப்பாக பாட்னாவில் பேசப்பட்டது. ஆனால் எண்.7 மற்றும் 11-ல் குறிப்பிடப்படும் மொழிகளால் தோராயமாகத் தாக்கம் பெற்றது.
9. அர்த்த-மகதி, சமண ஆகமங்களின் பேச்சுவழக்கு.
10. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி புழக்கத்திலிருந்த குகைக் கல்வெட்டு எழுத்துகளின் பேச்சுவழக்கான ‘லேனா’. எண்.8ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அடுத்ததாக எண். II ல் குறிப்பிடப்படுவதற்கு தோராயமாக மிகவும் நெருக்கமாக, முற்றிலும் அதனுடன் ஒன்றிணையும் வரை இருந்தது. (லேனா என்ற பெயரைப் பேராசிரியர் பிஷெல் Grammatik der Prakritsprachen 1901 என்ற தனது நூலில் பரிந்துரைத்திருந்தார்).
11. தரநிலை அடைந்த உயர்நிலை இந்திய மொழி; இது வடிவத்திலும் மற்றும் சொல் திரட்சியிலும் எண்.4-லிருந்து விரிவடைந்த சம்ஸ்கிருதம். எண்.5 முதல் 7 வரையிலான பேச்சு வழக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட சொற்களால் முதலில் இது பெரிதும் வளம் பெற்றது; அதன் பின்னர் வடிவத்தில் மீண்டும் எண். 4-ல் குறிப்பிடப்படும் மொழியுடன் இணக்கமாக அமைந்திருந்தது. நீண்ட காலம் இது வேதப்பிராமணர்களின் பள்ளிகளில் மட்டும் இலக்கிய மொழியாக இருந்தது, கி.பி.இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி, முதலில் கல்வெட்டுகள் மற்றும் நாணயங்களிலும் இது பயன்பட்டது. அத்துடன் நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் இருந்து அகில இந்திய அளவில் இலக்கியத் தொடர்பு மொழியாக மாறியது.
12. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு மற்றும் அதற்கு பின்னரான இந்தியாவின் பிரதேச மொழிகள்.
13. பிராகிருதம். இந்தப் பிரதேச மொழிகளின், குறிப்பாக மகாராஷ்டிரியத்தின் இலக்கிய வடிவம். மொழி. இவை எண் 11 இலிருந்து (சம்ஸ்கிருதம்) பெறப்பட்டவை அல்ல. மாறாக எண். 12ல் இருந்து, அதாவது எண் 6-ன் பிற்கால வடிவங்களான, அதன் சகோதரப் பேச்சுவழக்குகளில் இருந்து பெறப்பட்டவை.
எண் 11 மற்றும் 13-ல் எடுத்துக்காட்டியபடி, சம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருதம் என்ற கலைச் சொற்கள் இந்தியாவில் நெகிழ்வின்றிப் பயன்படுத்தப்படுகின்றன. எண். 2-க்கோ அல்லது எண். 4-க்கோ சம்ஸ்கிருதம் எப்போதும் பயன்படுத்தப்படவில்லை. அதுபோல் எண்.7-க்கோ அல்லது எண்.8-க்கோ பிராகிருதம் பயன்படுத்தப்படவில்லை. சம்ஸ்கிருதம், இந்தியாவில் பல்வேறு எழுத்துக்களில் எழுதப்பட்டது, எழுதப்படுகிறது.
வடக்கில் ஓர் எழுத்தாளர் அவர் வசிக்கும் மாவட்டத்தில் வழக்கத்திலிருக்கும் தற்போதைய பிராமி எழுத்துகளின் வடிவத்தைப் பயன்படுத்துகிறார். தெற்கில் ஓர் எழுத்தாளர் திராவிட எழுத்துகளுடன் தொடர்புடைய வடிவத்தைப் பயன்படுத்தி எழுதுகிறார். இவ்வாறான பலவகை எழுத்துகளில் ஐரோப்பாவில் பொதுவாகப் பயன்படுத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட எழுத்து, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் மேற்கு இந்தியாவிலிருந்து பெறப்பட்ட எழுத்து. எனவே, அது பெரும்பாலும் சம்ஸ்கிருத எழுத்து என்றே அழைக்கப்படுகிறது.
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.