இந்தியாவில், மொழியியல் ஆதிக்கத்தின் மையம் அரசியல் அதிகாரத்துடன் இணைந்தே இருந்தது; அரசியல் மையம் மாறும்போது இயல்பாகவே இந்த மையமும் மாறிவிடுகிறது. முதலில் அந்த மையம் பஞ்சாபிலிருந்தது; பிறகு, கோசலத்திலும், பிறகு மகதத்திலும் இருந்தது. இறுதியில் சம்ஸ்கிருதம் இலக்கியத் தொடர்பு மொழியாக மாறிய காலகட்டத்தில், மிக முக்கியமான பிரதேச மொழிகள் பயன்பாட்டில் இருந்ததாக அறியப்பட்ட பிரதேசமான மேற்கு இந்தியாவில் இருந்தது.
ஒரு பிரதேச மொழியின் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பின்பற்றி ஆய்வதற்குப் போதுமான ஆவணங்கள் நமக்கு இலங்கையில் மட்டுமே கிடைத்துள்ளன. சிந்தனைப் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட வழக்கொழிந்த மொழியின் மனச்சோர்வைத் தந்த செல்வாக்குக்கு எதிராகத் தனித்து நிற்கக்கூடியதாகத் தனது செல்வாக்கை அந்த மொழி தக்க வைத்திருந்தது.
சிலோனில் புழங்கிய பிரதேச மொழிக்கும், கல்வெட்டு எழுத்துகளின் மொழிக்கும், பாடல்களில் பயன்படுத்தப்பட்ட எலு மொழிக்கும் (சிலோனின் பிராகிருதம்) மற்றும் பள்ளிகளின் பயன்பாட்டிலும், வழக்கத்திலும் இருந்து மறைந்துபோன மொழியான பாலி மொழிக்கும் இடையிலிருந்த தொடர்பு மிகத் தெளிவாக இந்தியாவின் மொழி வரலாற்றிற்கு இணையாக இருந்தது. (கல்வெட்டு மொழிகள் பொதுவாகப் பிரதேச மொழியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டன; எனினும் அதைக்காட்டிலும் சற்று ’உயர்வான’ மொழிகளில் அவர்களுக்கு இருந்த அறிவைக் காட்டுவதற்கான விருப்பத்தின் தாக்கம் அவற்றில் எப்போதும் இருந்தது. அதோடு அந்த எண்ணம் அதிகரித்தும் வந்தது).
ஆரிய மொழியின் வரலாறு முழுவதும், திராவிட மொழிகள் பேசப்பட்ட தகவல் பதிவாகியுள்ளது தெரிகிறது; அதுவும் வடக்கில், பொதுவாகக் கூறப்படுவதைக்காட்டிலும் மிகவும் பிந்தைய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் அவை பேசப்பட்டன என்று கருதுவதற்குத் துணிகிறேன். முன்குறிப்பிட்ட பட்டியலில் இரண்டாவதாகக் குறிப்பிடப்படும் ’வேதக்காலத்து மொழி’, ஒலிப்பு மற்றும் சொற்கள் என்ற இரண்டிலும் பெருமளவுக்குத் திராவிட மொழியின் செல்வாக்குக்குப் பெரிதும் ஆட்பட்டதாக இருந்தது.
இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வம்சாவளியும் இரத்த உறவுகளும் ஆரியம்-அல்லாத கூறுகளைப் பெற்றிருந்தன; அது போலவே, ஆரியர்களின் பிரதேச மொழிகள் மற்றும் பேச்சுவழக்குக்குப் பயன்பட்ட அனைத்து இலக்கிய வடிவங்களான பாலி, சம்ஸ்கிருதம், பிராகிருதம் ஆகியவற்றிலும் அவை காணப்படுகின்றன. இது ஒரு பெரிய விஷயத்தைச் சொல்கிறது.
ஆனால், கோதாவரியின் தெற்கில், இதற்கு நேர் எதிரான நிலையைக் காண்கிறோம். அங்கு ஆரியக்கூறுகளைக் கொண்டதாகவே திராவிடப் பேச்சு மொழி இருந்தது. ஆரியக் குடியேற்றங்கள் அப்பகுதியில் தாமதமாகவே நடைபெற்றுள்ளன; அத்துடன், அவற்றின் எண்ணிக்கையும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. பிராமணர்களின் குடியேற்றங்கள் ஆங்காங்கே ஓரளவு நியாயமான எண்ணிக்கையில்தான் இருந்தன. எனினும், இப்போது மிகவும் உச்சத்திலிருக்கும் பிராமண செல்வாக்கு, அந்தப் பிரதேசங்களில் அந்த மேலாதிக்கத்தை எட்டுவதற்கு நீண்ட காலம் ஆனது.
தென்னிந்தியாவில் பௌத்தர்களும் ஜைனர்களும்தாம் மிகவும் செல்வந்தர்களாகவும் அதிக நாகரீகம் அடைந்தவர்களாகவும் இருந்தவர்கள்; பின்னர் அவர்கள் ஹிந்து நம்பிக்கைக்கு மாறிவிட்டனர். ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் காஞ்சிபுரத்திலும் தஞ்சாவூரிலும் எழுதப்பட்டவை என்று கூறப்படும் பாலி புத்தகங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அத்துடன் பௌத்தம் வீழ்ச்சியடைந்த பின் சமணம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் பிராமணியச் செல்வாக்கு உயர்ந்தது; அந்தப் பிரதேசத்தில் நன்கு நிலைப்பெற்றது; அதன் பிறகுதான், தெற்கிலும் முக்கிய காரணியாக அது மாறியது. ஆனால், அத்தகைய நிலையை அடைந்தவுடன் வடக்கில் பெரும் தாக்கங்களை வெற்றிகளை ஏற்படுத்தும் அளவுக்கு மிக வலுவாக வளர்ச்சியுற்றது. அதற்கு இறுதி வெற்றி, குமரில பட்டர் காலம் தொடங்கி சங்கரர் வரையிலான (கி.பி. 700 முதல் 830 வரை) காலத்தில் கிடைத்தது. இருவரும் தென்னிந்தியாவில் பிறந்தவர்கள்; அவர்களில் ஒருவர் வெளிப்படையாக, பாதியளவு திராவிடர்.
வெற்றி பெற்றாகிவிட்டது. ஆனால், எந்த அளவுக்கு இது வெற்றி? சட்டம் மற்றும் சமூக நிறுவனங்களில் பிராமணர்கள் மட்டுமே நீதிபதிகள்/ நடுவர்கள் ஆகிவிட்டனர். சாதிகள் பற்றி அவர்கள் கூறிய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் அவர்களது சாதியினருக்குக் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு உயர்நிலை அளிக்கப்பட்டது. கற்பிப்பதற்கான பிரத்தியேக உரிமை வேண்டும் என்ற அவர்களது கோரிக்கைக்கு நடைமுறை அங்கீகாரம் கிடைத்தது.
ஆனால், சத்திரியர்கள் இவர்களது அதிகாரத்தை மறுத்தனர்; பௌத்தர்களும் ஜைனர்களும் அற்பமான சிறுபான்மையினராகப் படிநிலையில் கீழிறக்கப்பட்டனர். மீதமுள்ள அனைவரும் பெரும்பாலும் அவர்களுக்குப் பணிந்து போயினர். அவர்களது இறையியல் தத்துவம் தவிர்த்து, ஏனைய தத்துவங்கள் அனைத்தும் நடைமுறைவெளியிலிருந்து வெளியேற்றப்பட்டன.
ஆனால், வேதம் கூறிய உரிமைகள், வேதம் கூறிய தெய்விக விஷயங்கள், வேத மொழி மற்றும் வேதம் கூறிய இறையியல் ஆகியன போராட்டத்தில் ஒதுங்கிப் போயின. மக்களின் தெய்வங்கள் இப்போது மக்களால் அஞ்சலி செலுத்தப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டன. குருதி சிந்தும் பலியிடல் பூஜைகள் இப்போதும் எப்போதாவது நடத்தப்படுகின்றன; ஆனால் புதிய தெய்வங்களுக்கு.
பிராமணர்கள் இனிமேலும் சடங்குகளைத் தலைமையேற்று நடத்தாத நிலையை எடுத்தனர். வேதக் கடவுள்களைப் போற்றி வழிபடாத, மக்களின் சாதகத்தையும் ஆதரவையும் பெற, புதிய வழிபாடுகளுக்கு ஏற்றவாறு அவர்களது இலக்கியங்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. அவர்களது உரிமைகோரல்களுக்கு ஒத்துப்போகும் வகையில் கடந்த காலத்து நிகழ்வுகளை மாற்றிப்பேச வேண்டிய தேவை எழுந்ததால் வரலாற்று உணர்வுகள் முற்றிலும் காணாமல் போயின.
அதிகச் செலவில்லாமல் வழிபடக்கூடிய பிரதேசம் சார்ந்த கடவுளர்களையே சாதாரண மக்கள் விரும்பினர். மக்கள் அதிகம் விரும்பாத / பங்கேற்காத பலியிடல்களை நடத்துவதற்கான உரிமையை வலியுறுத்தாமல் வேதப் பிராமணர்கள் அவற்றைக் கைவிட்டனர். தங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்ற அவர்கள், பிரசித்திப் பெற்ற கடவுள்களின் பெருமையைப் பரப்புபவர்களாக, அவை குறித்த இலக்கியங்களின் பாதுகாவலர்களாக, அந்தக் கடவுள்களைப் பாடும் கவிஞர்களாக ஆனார்கள்.
அவர்களில் பெரும்பாலோர், எதை அதிகம் விரும்பினார்களோ அதைப் பெற்றிருக்கக்கூடும். அவர்களது முன்னோர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை விட்டுவிட்டுப் பிற நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம், எந்த வகையிலும் அவர்கள் வேறொரு நம்பிக்கைக்கு நிச்சயம் மாறவில்லை; அத்துடன் இப்போதும், தாம் வைத்திருக்க விரும்பும் எதையும் அவர்கள் கைவிடவும் இல்லை.
அவர்களில் மிகவும் திறன் மிக்கவர்கள், வேதகாலத்தவை என்று சொல்லப்படும் தெய்விக விஷயங்கள் குறித்து அக்கறை கொள்வதைத் தத்துவரீதியாக நிறுத்திவிட்டார்கள். அத்துடன் மக்கள் எந்தக் கடவுள்களை வழிபடுகிறார்கள் என்பது குறித்து அவர்கள் ஆர்வம் கொள்ளவும் இல்லை. வேதம் சார்ந்த கற்றல் என்ற அணையவிருந்த சுடரை, சிறிய மற்றும் குறைந்து வரும் சிறிய குழுக்களே தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருந்தனர்; அவர்களை பின்னாளில் இந்திய மக்கள் சிறப்பான நன்றியுடனும் மரியாதையுடனும் திரும்பிப் பார்த்தனர்.
இந்தியாவில் மொழி மற்றும் இலக்கியத்தின் பொதுவான வரலாறு குறித்த ஒரு விரைவான சித்திரம் இது. ஐரோப்பாவைப் போலவே, இந்த வரலாற்றிலும் உலகியல் சார்ந்த விஷயங்களுக்கும் ஆன்மிகச் சக்திகளுக்கும் இடையிலான போட்டி ஒரு முக்கிய காரணியாக இருந்தது; அதை எடுத்துக்காட்ட இந்தச் சித்திரம் போதுமானது: ஐரோப்பாவின் குயெல்ப் மற்றும் கிபெலின், வேதப் பிராமணர் மற்றும் பிரபுக்கள், சத்திரியர்கள் மற்றும் பிராமணர்கள். இவர்கள்தான் போட்டியிடும் சக்திகளாக இருந்தனர்.
இந்தியாவில் இதுவரை நமக்குக் கிடைத்திருப்பது வேதப் பிராமணர்களின் சமூகம் பாதுகாத்து வைத்திருந்தவையே. அவை அவர்களது பார்வையில் எழுதப்பட்ட ஒரு நீண்ட யுத்தத்தின் காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்த வடிவம் மட்டுமே. அந்தக் காலகட்டம் முழுவதும், அவர்களே முன்னணிப் பாத்திரம் வகித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை அப்படியும் இருக்கலாம்.
ஆனால், மறுபக்கத்தையும் கருத்தில் கொள்வது நல்லது; வேதப் பிராமணர்களின் நூல்களை நம்பி பிராமணர்கள் பெற்ற ஆதிக்க வெற்றியை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டுசென்றால், நாம் செய்யும் அந்தத் தவறு மிகவும் தீவிரமானது என்பதை மறந்துவிடக்கூடாது; வேறுவிதத்தில் சொல்லலாம் என்றால், விஷயங்களின் நிலை, போராட்டத்தின் தொடக்கத்தில் எப்படி இருந்ததோ அப்படித்தான் இறுதியிலும் இருந்தது என்று கருதலாம்.
நாம் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதைத் தவிர்ப்பது கடினம். வேதப் பிராமணர்கள் அப்போது இருந்தார்கள். அவர்கள் எப்போதும் போர்க்குணமிக்கவர்களாக இருந்தார்கள். எப்பொழுதும் அதிகாரம் பெற்றவர்களாக இருந்தார்கள் என்று திரும்பவும் கூறுவேன். அவர்களில் பலர் கற்றவர்கள். கற்றவர்களில் ஒரு சிலரே அரிதாகக் செல்வந்தர்களாக இருந்தனர். கற்றவர்களாகவோ செல்வந்தர்களாகவோ இல்லாவிட்டாலும் அனைவரும் தனித்த கௌரவத்துடன் இருந்தனர்.
முனைப்பு, அறிவாற்றல் அல்லது இரண்டுமே பெற்றவர்களாக அவர்கள் மத்தியில் சிறிய குழுவினரை வேறுபடுத்திப் பார்ப்பதும், பொருத்தமானவர் என்று வேறுபடுத்துவதும் என்ற தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. இந்தச் சிறிய குழுவினர் தத்துவம் மற்றும் அறநெறி சார்ந்த துறைகள் இரண்டிலும் தாக்கம் ஏற்படுத்தி மேலும் முன்னேற்றம் பெறுவதற்கான விஷயங்களில் பெரிதும் பங்களித்தனர்.
அவர்களில் சிலர் இந்தத் துறைகளில் தலைவர்களாகப் புகழ்பெற்றனர்; பிராமணச் சிந்தனைப் பள்ளிகளில் மட்டுமல்ல, தேச சஞ்சாரிகள் மத்தியிலும் அவர்கள் பிரபலமாக இருந்தனர். ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களிலும் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தவர்களில் சிறிய அளவில் பிராமணர்களும் இருந்தனர். ஆனால், அது எந்த அளவு என்பதே கேள்வி.
பிற்காலத்தில் அவர்கள் எழுதிய புத்தகங்கள் விஷயங்களை விடாப்பிடியாக மிகைப்படுத்தியும், தவறாகவும் சித்திரிக்கின்றன. அனைத்துக்கும் மேலாக (’suggestio falsi‘ என்ற மிகவும் வெற்றிகரமான முறையில்) எதிர்த்தரப்பைத் தவிர்த்துவிடுகின்றன. இதன் மூலம் இந்தியச் சமூகம் குறித்தும், பிரதேசங்கள் குறித்தும், அதில் வேதப் பிராமணர்கள் குறித்தும் முற்றிலும் திரிக்கப்பட்ட பார்வையை அவை கொடுக்கின்றன. கற்றவர்கள் அவர்கள் மட்டுமல்ல; அறிவார்ந்தவர்களும் அவர்கள் மட்டும் அல்ல; ஆனால், அவர்கள் மட்டுமே செல்வந்தர்கள் எனலாம்.
அவர்களது புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சமயமும் பழக்கவழக்கங்களும், எந்தக் காலகட்டத்திலும், இந்தியாவின் பலவிதமான மக்களும் பின்பற்றிய ஒரே மதமாகவோ ஒரே பழக்கவழக்கமாகவோ இருக்கவில்லை. பௌத்தத்தின் எழுச்சிக்கு முந்தி இருந்த அறிவு சார்ந்த இயக்கம் பெருமளவில் சாதாரண மக்களின் பாமர இயக்கமாக இருந்தது; வேதப் பிராமணர்களின் இயக்கமாக அல்ல.
அடுத்தடுத்த நூற்றாண்டுகளில், கிறித்துவச் சகாப்தம் வரையிலும், அதற்கு அப்பாலும், தேசியம் சார்ந்த நோக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்த சக்தி மிக்க நீரோட்டத்தில் வேதப் பிராமணர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். அதற்குப் பிறகும், சீன யாத்ரீகர்கள் தீட்டிய சித்திரங்களின் விவரிப்பிலிருந்து வேதப் பிராமணக் கலைஞர்களுடையது மிகுந்த அளவுக்கு வேறுபட்டே இருந்தது.
இப்போது நமது ஆய்வுக்குக் கிடைத்திருக்கும் மற்ற கருத்துகளை நியாயமாகவும் போதுமான விகிதாசாரத்திலும் பயன்படுத்துவதன் மூலம் வேதப் பிராமணர்களின் கருத்துகள் சரிபார்க்கப்பட வேண்டும். இட்டு நிரப்பப்பட வேண்டும்; இல்லாவிடில், இந்திய வரலாறு குறித்து, மங்கலான மற்றும் குழப்பமான கருத்தாக்கமே தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும்.
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.