Skip to content
Home » பௌத்த இந்தியா #22 – இலக்கியம்

பௌத்த இந்தியா #22 – இலக்கியம்

பௌத்த இந்தியா

2. பாலி மொழி நூல்கள்

இந்தியாவில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிறப்பு வகையானவை என்று சொல்லக்கூடிய இலக்கியங்கள் கணிசமான அளவு இருந்தன என்று பார்த்தோம். கையால் எழுதப்பட்ட புத்தகங்கள் இல்லை என்ற விஷயம் அவற்றைச் சுற்றி இருந்தது. செய்யுட்களோ பாடங்களோ அவற்றை, தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்பச் சொல்லி மனனம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. ஆகவே, பரவியிருந்த இலக்கியத்தின் எல்லை அன்றைய இந்திய மக்களின் அறிவுநிலைக்கும் ஆர்வத்துக்கும் பெருமளவு சான்றாக இருந்தன. ஆனால், அவற்றில் பெரும்பகுதி இலக்கியங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. ஆனால் வேறுபட்ட மூன்று சிந்தனைப் பள்ளிகளின் இலக்கியச் செயல்பாடுகளால் விளைந்தவற்றின் கணிசமான பகுதி கிடைத்துள்ளது. ஒவ்வொன்றும் விஷயங்களை வெவ்வேறு கோணத்தில் பார்க்கின்றன. அந்த மூன்று ஆவணங்களின் தொகுதிகளை ஒப்பீடு செய்து பார்ப்பதன் மூலம் அந்தக் காலகட்டத்தின் வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய முடியும்.

நமக்கு இப்போது கிடைத்திருக்கும் புத்தகங்கள் (என்றுமே எழுதப்படாத இவற்றைப் புத்தகங்கள் என்று அழைக்கலாம் என்றால்) பலியிடல்-யாகங்கள் மூலம் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்ட பிராமணர்களால் எழுதப்பட்டவை; பயன்படுத்தப்பட்டவை. கிடைத்திருக்கும் அவற்றின் பெரும்பகுதி இப்போது திருத்தப்பட்டவையாக, மொழிபெயர்க்கப்பட்டவையாக இருக்கின்றன. அவற்றிலிருந்து பெறப்பட்ட வரலாற்றின் கணிசமான பகுதி இப்போது தொகுத்து, விளக்கவுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், எழுதப்படவேண்டியவை இன்னும் அதிகமுள்ளன. மற்ற இரண்டு சிந்தனைப் பள்ளிகளின் ஆவணங்கள், இப்போது பிராமணியப் புத்தகங்களில் காணப்படக்கூடிய மற்றும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பத்திகளின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக்கூடியன என்று எதிர்பார்க்கலாம்.

பிரதேசம் குறித்த அறிவுடன், ஆனால், வரலாற்று ரீதியான விமர்சன நோக்கின்றி, நன்கு கற்ற ஆனால், கணிசமான அளவுக்கு முற்சாய்வு கொண்ட நவீன விளக்கவுரையாளர்கள் அவற்றுக்கு உணர்வு சார்ந்த பார்வையை அளித்திருக்கிறார்கள்; அதைப் பின்பற்றி அந்தத் தொன்மையான பதிவேடுகளை அப்படியே எடுத்துக் கொள்ளும் வருத்தம் தரும் வழிமுறையை ஐரோப்பிய அறிஞர்கள் மிகவும் இயல்பாக ஏற்றுக்கொண்டனர்; பின்பற்றினர். ஆனால், அந்த அறிஞர்கள் அதிகம் கற்றுக் கொள்ளவேண்டியிருந்தது.

ஒருவர் அந்த விளக்கவுரைகளின் உதவியை நாடுவதே மிகவும் நடைமுறை சார்ந்த, உண்மையில் அந்த நேரத்தில் சாத்தியமான வழியாக இருந்தது. அல்லது இந்த நூல்களைத் தமது அறிவு வெளிச்சத்துக்கு முற்றிலும் நம்பி வாழும் பண்டிதர்களின் உதவியை நாடுவது மற்றொரு வழி. வேதப் பாடல்களுக்கு விளக்கவுரை தருவதற்குப் பயன்பட்ட இந்த முறை இப்போது இறுதியாகக் கைவிடப்பட்டது. வில்சன் தனது மொழிபெயர்ப்பில் இதைப் பின்பற்றியிருந்தார். ஆனால், பௌத்தத்தின் எழுச்சியின் காலத்தை முடிவு செய்ய அந்த ஆண்டுகளுக்கு நெருக்கமாக இருக்கும் ஆவணங்களை விளக்கும் இடங்களில் இந்த வழிமுறை இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, பல நூற்றாண்டுகளின் தத்துவம் சார்ந்த அல்லது இறையியல் சார்ந்த விவாதங்களில் வெளிப்பட்ட கருத்துகள் மிகவும் பிரபலமான உபநிடதங்களின் பதிப்புகளில் இப்போதும் நிறைந்திருப்பதை நாம் பார்க்க முடியும். கி.மு. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் தொன்மையான நூல்களில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கரர் எழுதிய நூல்களின் பக்கங்களிலிருந்து இடப்பெயர்ப்புச் செய்யப்பட்ட கருத்துகள் காணப்படுகின்றன.

இந்த வகையான விளக்கவுரை அளிக்கும் வழிமுறை இரண்டு வழிகளில் தாக்கம் ஏற்படுத்துகிறது. ஒன்று, அந்தப் பழைய சிந்தனையாளர்கள் (அல்லது, செய்யுள் ஆசிரியர்கள் என்று சொல்லலாம்) மேலோட்டமாக எளிய முறையில் எழுதிய ஒரு பத்திக்குள் பிற்காலத்து கருத்துகளை வைப்பதன் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி, அந்தப் பகுதி அதிகம் சரியானதாகவும் துல்லியமாகவும் அமைகிறது. தெளிவான பொருளும் தருகிறது. மற்றொன்று, ஒற்றைச் சொற்களை, குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட தத்துவம் அல்லது அறநெறி சார்ந்த சொற்களை மொழிபெயர்க்கையில், அந்தச் சொல்லின் உட்பொருளை உண்மையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் அவர்கள் அறிந்துகொண்டதாக இருந்தாலும், முந்தைய அந்தக் காலகட்டத்துக்குப் பொருந்தக்க கூடியதாகவே இருக்கிறது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும், பொதுவான பார்வையில் ஒரு மேலான விளக்கம் நமக்குக் கிடைக்கக்கூடும். உபநிடதங்களின் காலத்துக்கு நெருக்கமான ஆவணங்களில் பாதுகாக்கப்படும் தத்துவம் சார்ந்த சொற்களின் மிகச் சரியான பொருளிலிருந்தும், அடிப்படைக் கருத்துகளில் அவற்றிற்கு எதிரான நிலையில் இருந்தாலும், ஒரு நல்ல விளக்கத்தைப் பெற முடியும்.

பேராசிரியர் ஜேகோபி இவ்வாறு சொல்கிறார்: ‘புத்தர் மற்றும் மகாவீரரின் காலத்தில் நிலவிய தத்துவம் சார்ந்த கருத்துகள் பற்றிய பௌத்தர்கள் மற்றும் ஜைனர்களின் பதிவேடுகள் மிகக் குறைவாகவே உள்ளன; (அவர்கள் ஏற்றுக்கொள்ளாத கருத்துகளை ஒட்டி, உடன் நிகழ்வாக எழுந்த குறிப்புகள் பற்றி ஜேகோபி பேசுகிறார்-ஆசிரியர்). எனினும், அவை அந்த சகாப்தம் குறித்து ஆய்வு செய்யும் வரலாற்றாசிரியனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.’

இந்தப் பதிவேடுகளில், பாலி மொழியில் எழுதப்பட்ட நூல்கள் ஏறத்தாழ அனைத்தும் இப்போது கிடைத்துள்ளன. அதற்குப் பெருமளவுக்குக் காரணமாக அமைந்த Pali Text Societyயின் கடந்த இருபது ஆண்டு கால, தொடர்ச்சியான முயற்சிகளுக்கு நன்றி சொல்லவேண்டும். கிடைத்திருக்கும் பதிவுகளில், அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மட்டுமின்றி என்ன செய்யவில்லை (பெரும்பாலும் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது) என்பதையும் கூறவேண்டும். கெடுவாய்ப்பாக, சமணர்களின் பதிவுகள் இப்போதும் சிறு சிறு பகுதிகளாகத்தான் கிடைத்துள்ளன. அவை முழுமையாகக் கிடைக்கும்படி செய்யவேண்டும்; அந்தக் காலகட்டத்தின் வரலாற்றை அறிவதற்கு மிகவும் அவசியமானதாக இது அமையும்.

அவற்றில் காணப்படும் தத்துவம் சார்ந்த, சமயம் சார்ந்த ஊகச் சிந்தனைகள் வேதாந்தம் அல்லது பௌத்தத்தின் அசல் தன்மையை அல்லது அகமதிப்பைப் பிரதிபலிக்கவில்லை. எனினும், அவற்றின் வரலாற்று முக்கியத்துவம், குறைவானதல்ல; ஏனெனில், மக்கள் அதிக அளவு நாகரிகம் அடைந்திராத, இயற்கைப் பொருட்களின் மீதும் அவற்றின் தாக்கத்தின் மீதும் அவர்கள் அதிகம் ஆர்வம் கொண்டிருந்த காலகட்டத்துக்கான சான்றுகளை அவை வழங்குகின்றன. அதாவது தொடக்ககாலம் குறித்துப் பேசுகின்றன. ஆவணங்களில் சில பகுதிகளை ஆய்வு செய்கையில், ஏற்கெனவே அவை வெளிப்படுத்தி இருப்பதுபோல், பண்டைய புவியியல் மற்றும் அரசியல் பிளவுகளைச் சந்தேகத்துக்கு இடமின்றி விளக்குகின்றன.

இதுவரையிலும் மிகவும் முழுமையற்ற முறையில் நாம் புரிந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் எப்படி இருந்தன என்பது குறித்து முக்கியக் குறிப்புகள் அவற்றில் இருப்பதைப் பார்க்க முடியும்.

இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை மற்றும் அதிகாரப்பூர்வத் தன்மை குறித்த ஆட்சேபனைகளை ஏற்பது கடினம். பேராசிரியர் ஜேக்கோபி 1884-ல் முன்வைத்த வாதங்கள் மிகவும் மறுக்க முடியாதவை; அத்துடன் உண்மையில் அவை தீவிரமாக மறுக்கப்படவும் இல்லை என்று தோன்றுகிறது. கி.மு.நான்காம் நூற்றாண்டில் பத்ரபாஹு அந்த சமூகத்தின் தலைவராக இருந்தபோது கணிசமான புத்தகங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டன என்று கூறப்படுகிறது.

சமணர்களின் அனைத்துப் பிரிவினரும் அல்லது சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் மிகவும் பழைய நூல்கள் (பூர்வ நூல்கள் அல்லது முந்தைய நூல்கள்) இருந்தன என்பதையும், இப்போது அவை தொலைந்து போய்விட்டன என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் ஏதாவது கதையைச் சொல்கிறார்கள் என்று நாம் எண்ணலாம். ஆனால், இப்படி அவர்கள் சொல்லியிருக்க வாய்ப்பில்லை; இப்போது இருக்கும் நூல்கள்தாம் அவர்களது அமைப்பின் அசல் இலக்கியங்கள் என்று கூறி இருப்பார்கள். இதுவரையிலும் கிடைத்துள்ள மொழியியல் மற்றும் கல்வெட்டு எழுத்தியல் சான்றுகள், சமணர்கள் மத்தியில் அப்போது நிலவிய மரபுகளின் பொதுவான நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன; மற்றும் இந்தக் குறிப்பிட்ட விவரத்தின் துல்லியத்தையும் பலவிதங்களில் உறுதிப்படுத்துகின்றன.

நிச்சயமாக, இந்த மரபில் பழைய நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள் அசல் பெயராக இருக்க வாய்ப்பில்லை. இன்றளவும் பாதுகாக்கப்படும் பதினொரு ஆகமங்களுடன் ஒப்பிடுகையில் அவை ’முந்தயவை’. அத்துடன் தற்போதிருக்கும் நூல்கள் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றால், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அமைப்புகள் அல்லது நிகழ்வுகளுக்கான சான்றுகளாக மட்டுமே, ஒரு விமர்சனம் சார்ந்த அக்கறையுடன் அவற்றைப் பயன்படுத்த முடியும். இந்த நிலையிலும், இந்திய வரலாற்றைக் கூறும் முக்கியமான தரவுகள் நம்மிடம் உள்ளன; ஆனால், அவை தற்சமயம் மிகவும் முழுமையற்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றன.

இப்போது பௌத்தர்கள் என்று நாம் அழைக்கும் மற்றொரு சிந்தனை பள்ளியின் தற்போது கிடைத்திருக்கும் ஆவணங்களுக்கும் / பதிவேடுகளுக்கும் இது மிகவும் பொருந்தக்கூடியதே. சிறப்பாகவும் முந்தயதைக் காட்டிலும் முழுமையாக அறியப்பட்டவையாக இவை இருக்கின்றன. எனினும், இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளன. பௌத்தர்கள் என்று அவர்கள் அழைக்கப்படுவதும், இவர்கள், ஓரு தனித்த வர்க்கம் என்று எண்ணுவதும் சந்தேகமின்றி அதற்குப் பகுதியளவு காரணம்; அந்தக் காலகட்டத்தின் மற்ற இந்தியர்களிடமிருந்து இவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்பதும் காரணம்.

பௌத்தர்கள், உண்மையில், பண்புரீதியாகவும், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அளவிலும் இந்தியர்கள்தாம். அநேகமாக கி.மு. நான்காம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில், பெரும்பான்மையான மக்கள் குறைந்தபட்சம் பௌத்தர்களாக இருந்தனர். அந்தப் பள்ளிகள் புறக்கணிக்க முடியாத எண்ணிக்கையில் இருந்தன. ஆனால், வேதப் பிராமணர்களின் நூல்கள் சுட்டிக்காட்டுவதுபோல் அவை தோன்றுவதற்கு அடிப்படையாக ஒரு சிந்தனை இயக்கம் இருந்தது. கி.மு.ஆறாம், ஐந்தாம், மற்றும் நான்காம் நூற்றாண்டுகள் குறித்து ஆய்வு செய்யும் வரலாற்றாசிரியர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மிகவும் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளில் ஒன்று இது.

பௌத்தர்களின் நியதிகளைப் பேசும் நூல்களின் காலத்தை முடிவு செய்வதற்கான சிறந்த சான்றுகளாக அந்த நூல்களின் உள்ளடக்கங்கள் – அதாவது அவற்றில் பயன்படுத்தப்பட்ட சொற்களின் வகை, அவை எழுதப்பட்டிருக்கும் பாணி, வெளிப்படுத்தும் கருத்துகள்- ஆகியன இருக்கின்றன. இதுபோன்ற அகச் சான்றுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று அதற்கு எதிராகச் சமீபத்தில் ஆட்சேபனை எழுப்பப்பட்டது உண்மைதான். ஆனால், அத்தகைய ஆதாரங்களைப் பயன்படுத்தும் பொதுவான கொள்கையை எதிர்க்கக்கூடாது. அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஆட்சேபனை செல்லுபடியாகக்கூடும்.

எடுத்துக்காட்டாக, வட இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் எப்போதும் வழக்கமாக நடைபெறும் ஒன்று என்பதுபோல, லிங்க வழிபாடு மஹாபாரதத்தில் அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறது. அறிவீனமான அல்லது மூடநம்பிக்கை அடிப்படையிலான வழிபாட்டுமுறைகளாகப் பௌத்தர்கள் கருதும் அனைத்து வகையான வழிபாட்டு முறைகளும் நிகாயாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் குறிப்பிட்டவகையான, லிங்க வடிவிலான சிவ வழிபாடு குறித்து ஒருமுறை கூடக் குறிப்பிடப்படவில்லை.

மஹாபாரதம் அதர்வண வேதம் பற்றிக் குறிப்பிடுகிறது. நடைமுறையில் இருக்கும் ஒரு வேதமாக, நான்காவது வேதமாக அதைப் பேசுகிறது. நிகாயாக்கள், மற்ற மூன்று வேதங்களையும் தொடர்ச்சியாகக் குறிப்பிடுகின்றன. ஆனால் அதர்வண வேதம் பற்றிப் பேசவில்லை. இரண்டு நிகழ்வுகளுமே சுவாரஸ்யமானவை. ஆகவே, நம்மிடம் கிடைத்திருக்கும் நிகாயாக்கள், இப்போது நம்மிடம் இருக்கும் மகாபாரதத்தின் வடிவத்தைக் காட்டிலும் மிகவும் பழமையானவை என்ற முடிவு எடுக்கலாமா? அதற்கு முன், மேலே குறிப்பிட்டதுபோல் ஒரே திசைவழிச் செல்லும் அதிக எண்ணிக்கையிலான நடப்புகளை நாம் ஆய்வு செய்யவேண்டும். அதுபோலவே, இதற்கு எதிரான போக்குகொண்ட வேறுவிதமாக விளக்கமுடியாத நிகழ்வுகள் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதை வேறுவகையிலும் கூறலாம். சில கையெழுத்துப் பிரதிகள் நமக்குக் கிடைக்கின்றன; (எடுத்துக்காட்டாக பேக்கனின் Bacon கட்டுரைகள் மற்றும் ஹியூமின் Hume கட்டுரை போன்று) அவை ஒரே கையெழுத்தில் இருக்கின்றன; ஆனால், அவை எப்போது அல்லது யாரால் எழுதப்பட்டன என்பதை அறிந்துகொள்ள, அவற்றில் எதுவுமில்லை. அதிலுள்ள விஷயம் தவிர்த்து, நமக்கு வேறு எதுவும் தெரியாது. எனினும், நாம் தெரிந்துகொள்ள வேண்டியது உள்ளது. ஒப்பீட்டளவில் இரண்டில் எது மிகவும் பழையது என்பதை முற்றுறுதியுடன் அறியவேண்டும். அத்துடன் மிகக் குறுகிய காலத்துக்குள் இரண்டு படைப்புகளும் எழுதப்பட்ட நிஜமான காலகட்டத்தையும் தீர்மானிக்க முடியவேண்டும். ஆதாரம் மறுக்க முடியாததாக இருக்கவேண்டும்; ஏனெனில், அதற்குள் மொழி சார்ந்த – எழுத்துப் பாணி போன்ற- நுட்பமான கருத்துகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும்; அனைத்துக்கும் மேலாக, கூறப்பட்டிருக்கும் கருத்துகள் ஒரே திசையில் நகர்வனவாக இருக்கும்.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *