2. பாலி மொழி நூல்கள் (தொடர்ச்சி)
முன்னர் குறிப்பிட்டவாறு பாலி மொழி நூல்களில் அகச் சான்றுகள் சில நமக்குக் கிடைத்துள்ளன. பாலி மொழி நூல்களை வழக்கமாக வாசிக்கும் எவருக்கும், தம்மசங்கனியைக் காட்டிலும் நிகாயங்கள் பழமையானவை என்பது உடனடியாகப் புரியும்; இவை இரண்டும் (தம்ம சங்கினி மற்றும் நிகாயம்) கதாவத்துவுக்கு முந்தியவை; இவை மூன்றும் (தம்ம சங்கினி, நிகாயம் மற்றும் கதாவத்து) மிலிந்தாவைக் காட்டிலும் முந்தியவை என்பதையும் அறிந்துகொள்ள முடியும். மதிப்பீடு செய்வதில் மிகத் திறன் மிக்க பாலி மொழி அறிஞர்கள் இந்தக் கருத்திலும், மற்றும் இந்திய இலக்கிய வரலாற்றில் பாலி மொழி இலக்கியத்தின் பொதுவான நிலை குறித்தும் இசைவான கருத்துள்ளவர்களாக உள்ளனர்.
ஆய்வுகள் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு நினைவுச் சின்னங்களில் நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்தக் கட்டடத்தின் வெவ்வேறு பகுதிகளை (தூண்கள், உத்திரங்கள், செதுக்குச் சிற்பங்கள் போன்றவை) அமைக்க உதவியவர்களின் பெயர்கள் அந்தந்த இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. பெயர்கள் பொதுவானதாக இருந்தால், ஒரே பெயர் கொண்டவர்களிடமிருந்து நன்கொடை அளித்தவர்களை வேறுபடுத்திக்காட்டுவதற்கு சில அடைமொழிகள் சேர்க்கப்படுகின்றன. அத்தகைய அடைமொழிகள் அந்த நன்கொடையாளரின் ஊரை (நாம் வின்செஸ்டரைச் சேர்ந்த ஜான் என்று சொல்வது போல்) அல்லது ஒரு தொழிலைக் குறிப்பிடுகின்றன (நாம், கார்பென்டர் ஜான் அல்லது எழுத்தர் ஜான் என்று சொல்வது போல்). அல்லது வேறு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. கண்டறிந்த சில அடைமொழிகள் அடுத்துக் கொடுக்கப்படுகின்றன.
1. தம்ம-கதிகா – ‘அமைப்பு பற்றி போதிப்பவர்’. அமைப்பைக் குறிக்கும் ‘தம்மம்’ என்ற சொல் பௌத்தப் பள்ளிகளில் ஒரு தொழில்நுட்ப சொல்; நியதிகள் பேசும் விநய பிடகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தத்துவம் சார்ந்த மற்றும் அறநெறிக் கோட்பாட்டை ‘தம்மம்’ குறிப்பிடுகிறது.
2. பெட்டாகின் – ‘பிடகங்களை மனப்பாடம் செய்து அறிந்து வைத்திருப்பவன்’. பிடகம் என்பது சுத்த பிடகத்தில் காணப்படும் பௌத்தக் கோட்பாடு குறித்த மரபு வழியிலான விளக்கங்கள் ஆகும். பிடகம் என்ற சொல்லுக்குக் கூடை என்று பொருள். பௌத்த இலக்கியத்தின் ஒரு பகுதியைக் குறிப்பிடுவதற்கு பயன்படும் தொழில்நுட்ப சொல்லாக, பௌத்தர்களால் பிரத்தியேகமாக இது பயன்படுத்தப்படுகிறது.
3. சுத்தந்திகா – ‘சுத்தங்களை மனப்பாடம் செய்திருக்கும் மனிதன்.’
4. சுத்தந்தாகினி – ‘சுத்தங்களை மனப்பாடம் செய்து வைத்திருக்கும் பெண்’. சுத்தந்தா என்பதும் ஒரு தொழில்நுட்ப சொல். பௌத்த நியதி புத்தகங்களின் சில பகுதிகளை, குறிப்பாக உரையாடல்களைக் குறிப்பிட பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் சொல். நேரடியான பொருளில் ‘சுத்தங்களின் இறுதி’ என்பதாகும். அதனுடைய தொழில்நுட்ப அடிப்படையில் இலக்கு, நோக்கம், விளைவு என்ற பொருள். அத்துடன் அதிகம் முழுமையான மற்றும் விரிவான வடிவத்தில், அவற்றுக்கு அடிப்படையாக இருக்கும் மிகவும் குறுகிய சுத்தங்களின் பொதுவான விளைவுகளை வெளிப்படுத்தும் உரையாடல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
பௌத்தத்துக்குப் பிந்தைய எழுத்துகளில் வேதாந்தம் என்ற ஒத்திசைவான சொல்லைப் பிராமணர்கள் பயன்படுத்தி வந்தனர். முதலில் ஸ்வேதாஸ்வதரா மற்றும் முண்டக உபநிடதங்களிலும் அதன் பின்னர் உபநிடதங்களிலும் அடிக்கடிப் பயன்படுத்தினர். வேதாந்தம் என்பது வேதங்களின் ஆக உயர்ந்த விளைவு என்பதாகக் கூறினர். இதற்கு முன், இந்தச் சொல் அதன் நேரடியான பொருளில் ‘வேதத்தின் இறுதி’ என்று மட்டுமே அறியப்பட்டது. ஆகவே அதனுடைய இரண்டாம் நிலை பொருள், அநேகமாக அதனுடன் தொடர்புடைய (மற்றும் முந்தைய) பௌத்த சொல்லிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம்.
5. பஞ்ச-நிகாயிகா – ‘ஐந்து நிகாயங்களையும் மனப்பாடமாக அறிந்து வைத்திருப்பவர். ஐந்து நிகாயங்கள் அல்லது ‘தொகுப்புகள்’ இலக்கியப் படைப்புகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சொல்; நியதிகளைக் குறிக்கும் பௌத்த நூல்களுக்கு, அவற்றிற்கு மட்டுமே பொருந்தக்கூடியன. இந்த ஐந்து நிகாயங்களில், முதல் இரண்டும் சுத்தந்தங்கள்; அடுத்த இரண்டும் இரண்டு வேறுபட்ட வகையில் அமைக்கப்பட்ட சுத்தங்கள். ஐந்தாவது நிகாயம் ஒரு துணைத் தொகுப்பாகும்; பெரும்பாலும் அவை பிற்காலப் படைப்புகள்.
நிகாயம் என்பதற்கு பள்ளி அல்லது தனிக்குழு என்ற பொருளும் உண்டு. ஒருவிதத்தில் இது பலவிதப் பொருள் கொண்டது, தெளிவற்றது. பிற்கால சம்ஸ்கிருத இலக்கியங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட ஆகமம் என்ற சொல் அதை பின்னாட்களில் இடப்பெயர்ப்பு செய்தது. இதே போன்ற குறிப்பு, சுத்தந்தா என்ற தொழில்நுட்ப சொல்லுக்கும் பொருந்தும். அதுவும் படிப்படியாக, குறுகிய மற்றும் எளிதான சுத்தம் என்ற சொல்லால் இடப்பெயர்ப்பு செய்யப்பட்டது.
இங்கு விளக்கப்பட்டுள்ள சொற்கள் பௌத்த நினைவுச் சின்னங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன; அவை பௌத்த நூல்களைக் குறிக்கின்றன. இந்தக் கல்வெட்டு எழுத்துகளின் காலகட்டத்துக்குச் சில காலத்துக்கு முன்பு (அதாவது, தோராயமாகச் சொன்னால் அசோகரின் காலத்திற்கு முன்பு), வட இந்தியாவில் பௌத்த இலக்கியம் இருந்துள்ளது. அதாவது அந்தக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கும் பிரதேசத்தில் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த இலக்கியம் பிடகம், நிகாயம், சுத்தந்தம் என்ற தொழில்நுட்பப் பெயர்களால் அறியப்பட்ட பிரிவுகளுடன் இருந்தது என்பதற்கும், அப்போது ஐந்து நிகாயங்கள் இருந்தன என்பதற்கும் இவை உறுதியான சான்றுகள்.
ஆனால் இது அத்துடன் முடிவு பெறவில்லை. அசோகர் தனது பாப்ரா கல்வெட்டு சாசனத்தில் பௌத்த அமைப்புக்கு (சங்கம்) வேண்டுகோள் விடுக்கிறார்: அமைப்பின் சகோதரர்களையும் சகோதரிகளையும் மற்றும் இரண்டு பாலினத்தையும் சேர்ந்த சாதாரண சீடர்களையும் கேட்டுக் கொள்கிறார். நிகாயங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பத்திகளை அடிக்கடி படிக்கச் சொல்கிறார் (மனத்தில் பதியவைத்துக் கற்றுக்கொள்வது). அவற்றை தியானம் செய்யச் சொல்கிறார். அவர் குறிப்பிடும் அந்தப் பத்திகளின் பெயர்கள் நல்வாய்ப்பாகக் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு:
அ) ஆரிய-வசானி (தீக நிகாயத்தில் சங்கிதி சுத்தாந்தம் என்ற பகுதியில் இப்போது காணப்படுகிறது).
ஆ) அநாகதா-பயானி (இப்போது அங்குத்தர நிகாயத்தில் காணப்படுகிறது, தொகுதி. iii. பக். 105-108).
இ) முனி காதா (இப்போது சுத்த நிபாதாவில் காணப்படுகிறது. செய்யுட்கள் 206-220).
ஈ) மொனிய்ய சுத்தம் (இப்போது இதி-உத்தகாவிலும் ப.67, மற்றும் அங்குத்தர நிகாயத்திலும், தொகுதி. i. ப. 272, காணப்படுகிறது).
உ) உபதிஸ்ஸா பசினா. ‘உபதிஸ்ஸா முன்வைத்த கேள்வி’ (மிகவும் பொதுவாக சாரிபுத்தா என்று அறியப்படுகிறார்). புத்தகங்களில் இதுபோன்ற பல கேள்விகள் உள்ளன. அவற்றில் அநேகமாக எது குறிப்பிடப்படுகிறது என்பதில் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
இந்தப் பட்டியலின் தொடக்கத்தில் ஒரு சொல் இருக்கிறது. முழுப் பட்டியலுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு பெயரடையாக இருக்கலாம் அல்லது மற்றொரு பத்தியின் பெயராகவும் அது இருக்கலாம். அசோகரின் இந்தச் சாசனம் அவரது காலத்தில், அந்தப் புத்தகங்களில் சேர்க்கப்பட்ட சில பத்திகளின் உண்மையான தலைப்புகளை வழங்குகிறது, எனினும் அவை, இப்போது குறிப்பிடப்பட்ட கல்வெட்டுகளில் கூறப்படும் பெரிய பிரிவுகளாகவும் இருக்கலாம்.
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.