பெரிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நமக்கு இப்போது கிடைத்திருக்கும் இலக்கியங்கள் குறுகிய பத்திகள் கொண்டதாகவே இருக்கின்றன. அவர்கள் முற்றிலும் எதுவும் அறிந்திராத இந்தப் பழைய கல்வெட்டு எழுத்துகளில் பயன்படுத்தப்பட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்பச் சொற்களை அசாதாரணமாக நிகழ்ந்த தொடர் வாய்ப்புகளால், சிலோன் எழுத்தாளர்கள் உபயோகித்தனர் என்ற அடிப்படையில்தான் இவை சிலோனில் தொகுக்கப்பட்டவை என்று கருதமுடிகிறது. அந்தச் சொற்களை அவர்கள் உருவாக்கிய இலக்கியங்களின் பெரிய பிரிவுகளுக்குப் பெயர்களாக அளித்தனர். ஆனால் அவற்றில் இரண்டு அப்போதே கிட்டத்தட்ட பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டன.
அத்துடன் அவர்களுக்குக் கிடைத்த மற்றொரு அசாதாரணமான தொடர் வாய்ப்புகள் மூலம், அவர்கள் அந்தப் பிரிவுகளில் பல குறுகிய பகுதிகளை/ பத்திகளையும் சேர்த்தனர் என்று நாம் கருதலாம். அவை ஒவ்வொன்றும் அவர்களின் காலத்துக்கு முன்பே அதாவது அசோகரின் சாசனங்களில் பெயர் சொல்லிக் குறிப்பிடப்பட்டிருக்கும் நூல்களுடன் மிகச் சரியாகப் பொருந்துகின்றன. அதைப்பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. கிடைத்த தகவல்கள் குறித்து மிகச் சாத்தியமான விளக்கமாக அத்தகைய கோட்பாடு ஒன்றை ஏற்றுக்கொள்வது நிச்சயம் அபத்தமானதுதான்.
அப்படியானால், உடனடியான கேள்வி என்னவாக இருக்கும்? பௌத்தம் அல்லது இந்திய வரலாறு குறித்த தற்போது கிடைத்திருக்கும் புத்தகங்கள், அனைத்திலும் இல்லாவிடினும் ஏறத்தாழ பெரும்பான்மை நூல்களில் இந்தக் கோட்பாடு எவ்வாறு சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது? நியதிகள் குறித்த பாலி இலக்கியம் எப்போதுமே ‘திருத்தப்பட்ட தென் திசை பதிப்பு’ அல்லது ‘சிங்களத்து நியதி நூல்’ என்று அழைக்கப்படுகிறதா?
விளக்கம் தெளிவற்றதாக இருக்கிறது; அத்துடன் தவறாக வழிநடத்த ஏற்றதாகவும் உள்ளது. இந்தப் புத்தகங்கள் சிலோனில் தொகுக்கப்பட்டவை என்று சந்தேகத்துக்கு இடமின்றிக் கருதும்வகையில் சில நேரங்களில் அவை பயன்படுத்தப்பட்டன; எனினும் அதன் உண்மையான பொருள் இது அல்ல. கவனம் மிக்க எழுத்தாளர்கள் இவ்வாறு ஒருபோதும் பயன்படுத்தவில்லை. பௌத்தம் குறித்து முதன் முதலில் படித்த ஐரோப்பிய அறிஞர்கள் அறிந்திருந்த படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளில் சில சிலோனில் இருந்து வந்தவை; மற்ற படைப்புகளிலிருந்து இவற்றை வேறுபடுத்திப் பார்க்கும் நோக்கில் தெற்கிலிருந்து வந்தவை என்று இந்தப் படைப்புகள் அழைக்கப்பட்டன. அதுபோல் நேபாளத்திலிருந்து வந்த கையெழுத்துப் பிரதிகள் வடக்கிலிருந்து வந்தவை; வடக்கைச் சேர்ந்தவை என்று அழைக்கப்பட்டன.
இத்தகைய பேச்சுகள் பிரபலமானதற்கு முக்கியக் காரணமாக பர்னூஃப் இருந்தார்; நியதி சார்ந்த படைப்புகள் உண்மையில் இலங்கையில் எழுதப்பட்டவை என்ற கருத்தின் பக்கம் அவர் முதலில் சாய்ந்திருந்தார். அவர் தனது முதல் படைப்பில் இந்த நூல்கள் குறித்து ‘இந்தியாவின் பாலி புத்தகங்கள்’ என்று எழுதவில்லை; ‘இலங்கையின் பாலி புத்தகங்கள்’ என்றுதான் எப்போதும் எழுதினார். ஆனால், அந்தச் சொற்றொடரும் தெளிவற்றதுதான். மிகக் குறைவாக அதுவும் தாமதமாகத்தான் சில படைப்புகளை ஆய்வு செய்திருந்தார் என்ற உணர்வு அவருக்கு இருந்தது.
அதோடு, முதலில், கவனமாகச் செயல்படும் அறிஞராக தெளிவான கருத்தைத் தெரிவித்தார். இருப்பினும், நீண்ட உழைப்பின் முடிவில், நிச்சயமாக முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கு அவர் மாறினார். அவரது Lotus என்ற அற்புதமான படைப்பின் இறுதிப்பகுதியில், பக்கம். 862, பாலி மொழிப் படைப்புகள் ‘தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியிலும், மகதம் மற்றும் அவுத் பிரதேசத்தின் பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்திருக்கலாம்; அதே நேரத்தில் பௌத்த சம்ஸ்கிருதப் படைப்புகள் பிராமணர்களின் பயன்பாட்டில் இருந்திருக்கலாம்’ என்று கூறுகிறார்.
ஆகவே அவர் அவற்றை வட இந்தியப் படைப்புகளாகக் கருதினார். அவர் கல்வெட்டு எழுத்துகள் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. புத்தகங்களில் காணப்படும் சான்றுகளை மட்டுமே அவர் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டார். இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் அவரது இந்தக் கருத்தை மிகச் சரியானது என்ற கூறமுடியாவிட்டாலும், படைப்புகளின் அடிப்படையில் அவர் எடுத்த முடிவுக்கு கிடைத்த மிகப்பெரும் மதிப்பை அது பிரதிபலிக்கிறது.
இந்தக் கண்ணோட்டத்துடன் அவர் தொடங்கியிருந்தால், இந்தப் படைப்புகள் இலங்கையில் எழுதப்பட்டிருக்கலாம் என்று பரிந்துரைக்கும் தெளிவற்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதிலிருந்து நாம் காப்பாற்றப்பட்டிருப்போம். பௌத்த ஆய்வுகளில் பெரிய முன்னோடியாக இருந்தவர், இறுதியில் அவரே ஏற்றுக்கொண்ட பார்வையிலிருந்து பின்வாங்குவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருத்து இது.
இந்தப் பொருள் குறித்து எழுதப்பட்ட, புலமை மிக்கவை என்று கூறிக்கொள்ளும் எந்தவொரு படைப்பிலிருந்தும் இத்தகைய சொற்றொடர்கள் நீக்கப்படவேண்டும்; அதுமட்டுமின்றி, ‘வடக்கு’ மற்றும் ‘தெற்கு’ என்ற சொற்களும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், இந்தச் சொற்கள் விளக்குவதற்குத் தோதாக இருக்கின்றன என்று கருதுவது பரிதாபமானது. ஆனால், தோதாக இருக்கும் அச்சொற்கள் தவறான எண்ணத்தை வெளிப்படுத்தினால் பொய்த்தோற்றம் ஏற்படும்.
நாம் எதிர்கொள்ள இரண்டு வேறுபட்ட ‘பௌத்தங்கள்’ இங்கே இருக்கின்றன என்று பெரும்பாலான மக்கள் முடிவு செய்கிறார்கள் என்று துணிவுடன் உறுதியாகக் கூறுவேன். ஒன்று நேபாளத்தில் தோன்றியது என்றும் மற்றொன்று சிலோனில் தோன்றியது என்றும் கருதுகிறார்கள். இந்தக் கருத்து தவறு என்பதை அனைவரும் இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். இங்கு இருப்பது இரண்டு சமயங்கள் மட்டுமல்ல; வேறுபட்ட வகையிலான பல பௌத்தங்கள். அநேகமாக ஒவ்வொரு புத்தகமும் வேறுபட்ட ஒரு (பௌத்த) கோட்பாட்டைப் பேசுகிறது.
மிகவும் நம்பத் தகுந்த தகவல்கள் நிறைந்த பாலி மொழியில் அல்லது பௌத்த சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பழமையான புத்தகங்கள் எவையும் வடக்கு அல்லது தெற்கு சார்ந்தவை அல்ல. இவற்றின் நவீன பிரதிகள் கிடைத்த இடங்கள் இவை என்ற அபத்தமான முக்கியமற்ற விவரங்களைக் கருத்தில் கொள்ளாமல் பார்க்கையில் அவை அனைத்தும் எவ்வித விதிவிலக்குமின்றி தேசத்தின் மத்தியப் பகுதியைச் சேர்ந்தவை எனலாம். உண்மையில் அவை அந்தப் பிரதேசத்துக்குச் சொந்தமானவையே. அப்பகுதியை இந்தியர்கள் கங்கைச் சமவெளி என்று அழைக்கிறார்கள்.
ஒவ்வொன்றும் அடுத்துக் கூறப்படும் புத்தகம் கூறும் கோட்பாடுகளில், அவற்றின் தேதியைக் குறிப்பிடுவதில் சிறிய அளவில் வேறுபடுகின்றன. நிகாயங்களுக்குள்ளாகவே இத்தகைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. பல சம்ஸ்கிருதப் புத்தகங்கள் பிற்காலத்தில் வெளிப்பட்ட சில கருத்துகளின் விவரங்களைக் கொண்டிருக்கின்றன. அவை பழமையான பாலி மொழி நூல்களிலிருந்து வேறுபடுகின்றன. இருந்தபோதிலும், அவற்றை மற்ற சம்ஸ்கிருதப் படைப்புகளுடன் வகைப்படுத்தாமல் ஒட்டுமொத்தமாக பாலி படைப்புகளுடன் தாம் வகைப்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக, மகா வஸ்து (உயர்ந்த வாழ்வியல் கதை ) சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்; அந்தப் படைப்பு ‘நல் நியதிகளின் தாமரை’ (Lotus of the Good Law) போன்ற சம்ஸ்கிருத நூல்களைக் காட்டிலும் பாலி மொழியில் எழுதப்பட்ட ‘காரியா பிடகம்’ (நடத்தை மரபுகள்) நூலுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. மூன்றும், ஒன்று போலவே மத்திய நாட்டில் தோன்றியவை. இவை மூன்றில் எந்த ஒரு நூலும் அந்தப் பிரதேசத்தில் சரியாக எங்குத் தோன்றின என்று நம்மால் தீர்மானிக்க முடியவில்லை.
இரண்டு பழமையான படைப்புகளை மட்டுமே வடக்கில் தோன்றியவை என்று தெளிவாகக் குறிப்பிட முடியும். அவை மிலிந்தாவும் கோசிங்கா ஆந்தாலஜியும். இவை இரண்டும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை அல்ல. அத்துடன் தென்னாட்டுப் பௌத்தம் என்று அழைக்கப்படும் கோட்பாட்டுடன் ஒத்திருப்பவை. வடக்கில் தோன்றியவை என்று நமக்கு நிச்சயமாகத் தெரிந்த இரண்டு புத்தகங்களுக்கு அவை தெற்கில் தோன்றியவை என்று அடையாளச்சீட்டைச் செருகுவது அபத்தமான செயல் அல்லவா?
வடக்கைச் சார்ந்தவை என்று அழைக்கப்படுவதிலும் அல்லது தெற்கு பௌத்தம் என்று கூறப்படுவதிலும் கருத்திலோ மொழியிலோ ஒற்றுமை என்பது இல்லை; எப்போதும் இருந்தது இல்லை. உண்மையில் அத்தகைய ஒற்றுமை இருந்திராதபோது, அப்படி ஒன்று இருந்ததாகத் தொடர்ந்து பரிந்துரைப்பதில் ஒரு பெரிய குறைபாடு இருக்கிறது. ஒரு வார்த்தையில் சொல்லப்போனால், பௌத்த இலக்கியங்களை வடக்கு என்றும் தெற்கு என்றும் பிரிப்பது அறிவியல் அடிப்படையிலான செயலல்ல என்பதுடன் முற்றிலும் தவறானதும்கூட.
குறைந்தபட்சம் இரண்டு முக்கியமான விஷயங்களில் இது தவறான கருத்துகளைக் கூறுகிறது: அறிவியலை அடிப்படையைக் கொண்ட ஒரு பிரிவை இது தாண்டிச் செல்ல முயல்கிறது. அதாவது நமது நவீன காலத்தில் நூல்களின் பிரதிகளை எங்கிருந்து பெற்றோம் என்பதைப் பொறுத்துப் பிரிக்காமல், எழுதப்பட்ட காலத்தைப் பொறுத்தும், தோன்றிய ஆண்டின் அடிப்படையிலுமானது அந்தப் பிரிவு. பிறகு ஏன் நாம் ஒரு தெளிவற்ற சொற்றொடரைப் பின்பற்றிச் செல்ல வேண்டும்? அது தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்பது அனுபவத்தின் மூலம் நமக்குத் தெரியும்.
முடிவில்லாத குழப்பத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, அதைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகக் கைவிடுவதுதான். நானும் இவ்வளவு காலம் அதைப் பயன்படுத்திய தவற்றை ஒப்புக்கொள்வதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். எனது ‘பௌத்தம்’ நூலில், பதினைந்தாவது பதிப்பிலிருந்து அந்தத் தவறு திருத்தப்பட்டது. அது மிகவும் சிறிதான மாற்றம் என்பதால் அதை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ‘வடக்கு’ என்ற சொல் ‘திபெத்திய’, ‘ஜப்பானிய’, ‘மகாயானிகள்’ போன்ற சொற்களால் மாற்றப்பட்டுள்ளது. கட்டுரைகளின் தெளிவில், அல்லது சுருக்கமாக விளம்புவதில் எந்த இழப்பும் ஏற்படவில்லை; மாறாக, துல்லியமாகச் சொல்வதில் அதிகப் பலன் கிடைத்தது.
ஆகவே பாலி மொழியின் நியதி குறித்த புத்தகங்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அவை சிங்களத்தில் தோன்றியவை அல்ல; தெற்கில் மலைகளில் பனைமரத் தோப்புகளில் அமைந்திருந்த விகாரங்களின் சில காலம் அவை பாதுகாக்கப்பட்டிருந்தன; அந்த நேரம் அவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டனவா என்பதை, அவை தற்போதிருக்கும் நிலையில் ஒரு விமர்சனப்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தித் தீர்மானிக்க வேண்டும். அத்தகைய ஆய்வில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஏற்கெனவே சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகங்களில் அசோகரைப் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. பௌத்த எழுத்தாளர்கள் அவர் குறித்து – சரியாகவோ தவறாகவோ – மிகுந்த பெருமித உணர்வு கொண்டிருந்தனர்; மாபெரும் பௌத்தப் பேரரசரின் ஆட்சிக்கு பிறகு அவற்றில் ஏதேனும் தீவிரமான திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கலாம். அதனால் அவர் அப்படி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கலாமோ?
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.