2. பாலி மொழி நூல்கள் (தொடர்ச்சி)
சிலோனைச் சார்ந்த, ஏன் தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு நபரையும் அல்லது இடத்தையும் புத்தகங்கள் குறிப்பிடவில்லை; கணிசமான எண்ணிக்கையிலான நிகழ்வுகளை அவை நமக்குக் கூறுகின்றன; பொதுவான அறிமுகங்களாக அல்லது ஓர் அறநெறிக் கருத்திற்கான விளக்கமாக அவை இருக்கின்றன. பிராமணர் புத்தகோசர் அவரது புத்தகமான ‘அத்த சாலினி’யில் (AtthaSalini) அவ்வப்போது குறிப்பிடுவதைப் போல் தகுதியான சிலோன் புத்தகங்கள் குறித்துப் போகிற போக்கில் சில குறிப்புகளைக் கூறுவது எளிதுதான். இந்த நூலும் பின்னாளில் சிலோனில் திருத்தி எழுதப்பட்டது. பிடகப் புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால், இந்த இயல்பான தூண்டுதலுக்கு அடிபணியக்கூடிய வாய்ப்பு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கலாம் அல்லவா?
மேம்படுத்தப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட கோட்பாடுதான் இப்போது பெருமளவில் நடைமுறையில் இருக்கிறது என்பதை அறிவோம். புதிய தொழில்நுட்பச் சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; பழைய சொற்றொடர்களுக்குப் புதிய அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு பிற்காலச் சிந்தனையோ, பிற்காலத்திய மொழி வடிவமோ, பிற்காலத் தொழில்நுட்பச் சொல்லோ, நியதி குறித்த புத்தகங்கள் எதிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பண்டைய பௌத்தத்தின் தத்துவக் கருத்துகளும், அவற்றிற்கு அடிப்படையாக இருந்த உளவியல் கருத்துகளும் பெரும்பாலும் சுருக்கமாகவும், எளிமையாகவும், தெளிவின்றியும் கூறப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களை சிலோனில் இருந்தவர்கள் படித்து, பாடுபட்டிருக்கிறார்கள். அவை மெருகூட்டப்பட்டன, தெளிவுபடுத்தப்பட்டன, முறைப்படுத்தப்பட்டன. இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் பல படைப்புகளில், பழைய கருத்துகளின் தொனியும் சொல்லப்படும் விதமும் காணப்படுவதை நாம் நன்கு அறிவோம்; சிலோன் அறிஞர்கள் நிச்சயம் இவற்றைத் தெளிவாகவும் முழுமையாகவும் அறிந்திருப்பார்கள். ஆனால், நியதி குறித்த புத்தகங்களில் இந்தப் பிற்காலத் தொனியும் சொல்லப்படும் விதமும் நுழைந்திருப்பதைச் சுட்டும் எந்த ஒரு நிகழ்வும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆகவே, வட இந்திய (பௌத்த) புத்தகங்கள் சிலோனுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவற்றில் செய்யப்பட்ட மாற்றமும் எதுவும் அற்பமானதாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. செய்யப்பட்ட அத்தகைய மாற்றங்களில் ஒன்றிரண்டு விஷயங்களை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தால் நிச்சயம் அது பெரும் பயனை அளிக்கக்கூடும். எந்த வகையான திருத்தத்தை, அதை எந்த அளவு செய்வது சரியானது என்று சிலோன் அறிஞர்கள் கருதினார்கள் என்பதைக் கூற முடியும். ஆனால், அவர்கள் நியதிப் புத்தகம் மூடப்பட்டதாகக் கருதினார்கள் என்பது தெளிவு.
மறுபுறத்தில், இந்தப் புத்தகங்கள் வட இந்தியாவில் இருந்தபோது, நியதிப் புத்தகம் மூடப்பட்ட ஒன்றாகக் கருதப்படவில்லை; மிகவும் மாறுபட்ட தொனிக்கான சான்று கிடைத்திருக்கிறது. முழுமையான புத்தகமான ‘கதாவத்து’ (KathaVatthu) பிற்காலத்தில், அசோகரின் காலத்தில் சேர்க்கப்பட்டது; அத்துடன் வெறுமனே பல்வேறு சோதனைக் கேள்விகளின் சரமாக அமைந்த ‘பரிவாரா’ (Parivara) மிகப் பழமையானது இல்லை. பெட்டா வட்துவின் ஒரு கதை அரசன் பிங்கலகனைப் பற்றியது; அதில் கூறப்படும் விளக்கத்தில் புத்தரின் காலத்திற்கு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சூரத்தில் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. மற்றொன்று, புத்தர் இறந்த பின்னர் ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின் நடந்த நிகழ்வைக் குறிக்கிறது. இந்தப் பழங்கதைகளின் தொகுப்பில், இரண்டாவதாகக் குறிப்பிடப்படும் செய்தி நிச்சயம் சரியான இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
முதலாவது குறிப்பிடப்படுவது அசோகரது கவுன்சிலின் (விளக்கவுரையாளர் நினைப்பது போல்) பரிந்துரையால் சேர்க்கப்பட்டிருக்கலாம். அப்படி நடந்திருந்தால், இந்தப் பழைய விஷயத்தை நூலில் சேர்ப்பதில் எந்தத் தீங்கும் இல்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்பதற்கான சான்றாக இது இருக்கும். அத்துடன் வசனங்கள் நிறைந்த இந்தச் சிறிய நூல் முழுவதும், அதை ‘விமானவத்து’வுடன் (VimanaVatthu) சேர்த்து (உண்மையில் இது ஒரே வேலையின் மற்றொரு பாதி மட்டுமே) நிகாயாக்களுடன் ஒப்பிடுகையில், காணப்படும் தொனி நிச்சயமாக மிகவும் பிற்காலத்திற்கு உரியதே.
கதைப் பாடல்களின் இரண்டு சிறிய தொகுப்புகள் குறித்தும் நாம் இவ்வாறே சொல்லமுடியும். அவற்றில் ஒன்று புத்த வம்சம். இருபத்தைந்து புத்தர்களில், ஒவ்வொருவரைப்பற்றியும் தனித்தனிப் பாடல்களைக் கொண்டது. ஒரு புத்தரைத் தொடர்ந்து மற்றொருவர் என்பதாக இது உள்ளது. மற்றொன்று காரியப் பிடகம்; வசன நடையில் கூறப்படும் முப்பத்து நான்கு குட்டி ஜாதகக் கதைகள். இவை இரண்டுமே பிந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில், நிகாயாக்களில் ஏழு புத்தர்கள் மட்டுமே குறிப்பிடப்படுகிறார்கள்; மேலும், தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் ஜாதகக் கதைகள் குறித்துச் சிந்திக்கப்படவேயில்லை. குறிப்பிட்ட ஜாதகக் கதைகளின் இந்தத் தொகுப்பு, பழைய புத்தகங்களில் எந்தப் பங்களிப்பும் செய்யாத கோட்பாடான பாராமித்தாக்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
போதிசத்துவராகப் பிறந்து, தொடர்ச்சியான எண்ணற்ற முந்தைய பிறப்புகளில் புத்தர் பெற்றிருக்க வேண்டிய குணங்களாக இந்தப் பத்துப் பரிபூரண நிலைகள் (Ten Perfections) – பாராமித்தாக்கள் கூறப்படுகின்றன. ஆனால், இது பிந்தையக் காலத்துக் கருத்து; நிகாயாக்களில் இது காணப்படவில்லை. போதிசத்துவம் என்ற சிந்தனை இந்தியர்களின் மனத்தை அதிகம் கவரத் தொடங்கியதன் பின்னர் அது படிப்படியாக வளர்ந்தது. பிற்காலத்தில் மகாயானம் என்ற கோட்பாடாக உருவான ஒன்றின் விதைகள் சமீபத்திய நியதி சார்ந்த புத்தகங்களில், ஏற்கெனவே ஊன்றப்பட்டுவிட்டதைப் பார்க்க முடிவது சுவாரஸ்யமானது. பேராசிரியர் பண்டார்கரின் கருத்துப்படி, புத்தமதத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக இறுதியில் இந்தக் கோட்பாடுதான் அமைந்தது.
ஜாதகக் கதைகளின் வரலாறு குறித்த இந்தக் கேள்விக்கான விளக்கங்களை அடுத்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம். நியதி நூல்களின் சில பகுதிகள் மற்றவற்றைக் காட்டிலும் பிந்தையக் காலத்தவை என்பதை விளக்க இங்குக் கூறப்பட்டவை பெருமளவு போதுமானவை. சந்தேகமின்றி, இதே போன்ற பிற சான்றுகளும் இனிமேல் கண்டுபிடிக்கப்படலாம். ஒப்பீட்டு அளவில் அவற்றின் காலத்தை முடிவு செய்ய நம்மிடம் உள்ள நூல்களில் சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு நியாயமான முடிவுகள் எடுக்க முடியும். ஆனால், நான்கு நிகழ்வுகளில்/ நூல்களில் – ‘பெட்டாவத்து’ மற்றும் ‘விமானவத்து’, ‘புத்த வம்சம்’ மற்றும் ‘காரியப் பிடகம்’ – இத்தகைய முடிவுகளை நாம் எடுக்க முடிகிற வகையில் அவை தெளிவாக இல்லை. எடுத்துக்காட்டாக, சுத்த நிபாதம் நூலை எடுத்துக் கொள்வோம்.
இதுவும் பாடல்களின் ஒரு சிறிய தொகுப்பு. இதில் ஐம்பத்து நான்கு பாடல்கள் இருக்கின்றன; அவை ஒவ்வொன்றும் மிகவும் சிறியவை; அவை நான்கு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன; பின்னர் வேறு சில பதினாறு பாடல்கள் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ளன; கதையின் கட்டமைப்பில் சரமாக இவை கோக்கப்பட்டுள்ளன. பாராயணம் என்று விளக்கவுரை எழுதியிருப்பவர்களால் அழைக்கப்படும் இறுதி காண்டம் ஒரு காலத்தில் தனிப் பாடலாக இருந்தது. அவர்கள் அதை சுத்தந்தம் என்று அழைக்கிறார்கள்; உண்மையில் உரைநடையில் கூறப்படும் ஒரு கதையின் கட்டமைப்பிற்குள் சரங்களாகத் தொகுக்கப்பட்ட வசனங்களை இது கொண்டுள்ளது; இது தீக நிகாயாவில் உள்ள சுத்தந்தங்களில் ஒன்று. இது ஒரு தனிப் பாடலாக நிகாயாவில் ஆறுமுறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது; பெயராலும் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு முந்தையக் காண்டம், அதாவது நான்காவது காண்டம், ‘எட்டுகள்’ (The Eights) என்று அழைக்கப்படுகிறது. அதில் உள்ள பெரும்பாலான பாடல்கள் ஒவ்வொன்றிலும் எட்டு சரணங்கள் உள்ளன. நியதி நூலின் மற்ற பகுதிகளில் இந்தக் காண்டம் இதே பெயரில் ஒரு தனிப்படைப்பாகக் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் தொடக்கக் காலத்தில் சிந்தனை அடிப்படையில் ஐந்தாவது காண்டத்துடன் இது நெருக்கமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ஆர்வமூட்டும் பழைய விளக்கவுரை ஒன்றின் பொருளாக இவை இரண்டும் ஒன்றாக இருந்துள்ளன. மட்டுமின்றி, நிகாயாக்களில் சேர்க்கப்பட்ட இந்த வகையிலான ஒரே படைப்பு இது. நித்தேசா என்ற அந்த விளக்கவுரை மற்ற மூன்று காண்டங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை; இந்தத் தொகுதி இயற்றப்பட்டபோது, அதுவரையிலும் ஐந்து காண்டங்கள் முழுவதும் ஒரு புத்தகமாக ஒன்று சேர்க்கப்படவில்லை என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.
முந்தைய மூன்று காண்டங்களிலும் காணப்படும் முப்பத்தெட்டுப் பாடல்களில் ஆறு பாடல்களுக்குக் குறையாமல் நியதி நூலின் பிற பகுதிகளிலும் காணப்படுகின்றன. இப்போது நாம் பார்க்க முடிகிற பல்வேறு தொகுப்புகளில் அவை சேர்க்கப்படும் முன்பாக, இன்றைக்குச் சமூகத்தில் பிரபலமாக இருக்கும் இவை தனிப்பட்டக் கீர்த்தனைகளாக இருந்திருக்கும். இந்த முப்பத்தெட்டுப் பாடல்களுடன், தனியாக எண்ணற்றப் பாடல்களை நாம் பார்க்க முடிகிறது. அவை பழங்கால ஆவணங்களில் சில இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. இதற்கு மிகவும் சாத்தியமான விளக்கம் ஒன்றுள்ளது. இப்போது வேறுபட்ட பாடல்களில் காணப்படுகிற அவை தனிப்பட்ட முறையில் ஒன்று சேர்க்கப்படுவதற்கு முன்பாக, அவை பழமொழிகளாக அல்லது பிடித்தமான சொற்றொடர்களாக – அந்தச் சமூகத்தில் அல்லது பெரும்பான்மை மக்களிடையே – நடைமுறையில் புழக்கத்தில் இருந்திருக்கலாம்.
எனில், இந்தப் படைப்பு தற்போதைய வடிவம் எடுப்பதற்கு முன்பே, தனி வசனங்களும், தனிப் பாடல்களும், தனிக் காண்டங்களும் இருந்ததைக் காண்கிறோம். இந்த நூல் உருவான விதத்தை மட்டுமின்றி, அந்தக் காலகட்டத்தின் அனைத்து இந்திய இலக்கியங்களும் வளர்ச்சியடைந்த விதத்தைச் சுட்டிக்காட்டுவதாக இது இருக்கிறது. சிந்தனைப் பள்ளிகளில் அது உருவானது; தனிப்பட்ட முயற்சி என்பதைக் காட்டிலும் ஒரு கம்யூனின் / ஒரு கூட்டு முயற்சியின் விளைவு இது. ஒரு தொகுதியின் ஆசிரியர் தான்தான் என்று எவரும் கனவு காணவில்லை.
பௌத்தச் சமய நியதி சார்ந்த படைப்புகள் முழுவதையும் பார்க்கையில் ஒன்றிற்கு மட்டுமே தனி மனிதர் ஒருவரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. அது மிக சமீபத்திய காலத்தைச் சேர்ந்தது. அவர், அசோகரின் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் பௌத்த அமைப்பின் முன்னணி உறுப்பினர். இதற்கு முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் கட்டுரைகளுக்கோ அல்லது பாடல்களுக்கோ படைத்தவரின் பெயர் கூறப்படவில்லை. மாறாக வசனங்களுக்கு மட்டுமே ஆசிரியர் யார் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாக்கப்பட்டுள்ள வசனங்களது தொகுப்புகளில் பலவற்றில் இரண்டிற்கு மட்டுமே பெயர் கூறப்பட்டுள்ளது. நியதித் தொகுதியில் இருக்கும் இருபத்தி ஒன்பது புத்தகங்களில், சமூகத்தைச் சேர்ந்தவர் தவிர்த்து, இருபத்தாறு புத்தகங்களுக்குக் குறையாமல் ஆசிரியர் எவரும் இல்லை.
இந்த விஷயத்தில் பெரும்பாலானவர்களின் உணர்வு தீர்க்கமானது. அத்துடன் வேதப் பிராமணர்களின் சிந்தனைப் பள்ளிகளிலும் அப்போது நடைமுறையில் இருந்த வழக்கங்களில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. படைப்புகளும் தனிநபர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல; வேதப் பிராமணர்களின் பல்வேறு பள்ளிகளில் அவை உருவாகின. அசோகரின் காலத்திற்கு முந்தைய வேதப் பிராமணர்களின் படைப்புகள் எதையும் தனி மனிதர் உருவாக்கியது என்று சொல்லமுடியாது.
மிகவும் தவறாக நினைக்கப்படாவிட்டால் ஒன்று கூறமுடியும்; இந்திய இலக்கிய வரலாற்றிற்குக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடிய மற்றொரு கருத்து இருக்கிறது. அது சுத்த நிபாதத்துடன் தொடர்புடையது. ஐந்தாவது காண்டம் ஒற்றைப் பாடலாகத்தான் கருதப்படுகிறது; மட்டுமின்றி மற்றப் பாடல்கள் அனைத்திலும், மூன்றில் ஒரு பங்கு கதைப்பாடல்களாகத் தான் இருக்கின்றன. அவை சிறிய சம்பவங்களை விவரிக்கின்றன; உரையாடல்கள் பெரும்பாலும் வசனங்களாக உள்ளன; ஆனால் கதை, பொதுவாக உரைநடையில் இருக்கிறது (சில இடங்களில் இவையும் வசனமாக உள்ளன). இந்த வகையில் இவை நியதி நூல்களின் பிற பகுதிகளில் காணப்படும் பெருமளவிலான சுத்தந்தங்களை ஒத்துள்ளன.
எடுத்துக்காட்டாக, ‘சக்காவின் புதிர்கள்’ (Riddles of Sakka) போன்ற சில சுத்தந்தாக்களும் இவ்வகையான உருவாக்கத்தின் பண்புகளைக் கொண்டவை. நிச்சயமாக இது நமது பழமையான ஆவணங்களில் ஒன்று; சம்யுத்தாவில் இதன் பெயர் குறிப்பிடப்பட்டு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. உண்மையில், உரைநடையாக இருக்கும் சுட்டாவிற்கு அடுத்து இது இருக்கிறது. இந்தக் காலகட்டத்தின் இலக்கிய முயற்சிக்கான மிகவும் பிரபலமான பாணி இதுவாக இருந்தது.
ஒருவர் தமது கருத்துக்களை அப்போது எப்படி வெளிப்படுத்தினார் என்பது முற்றிலும் தெரியவில்லை. ஆனால், உலகம் முழுவதும் ஒரு காவியத்தின் முன்னோடியாக அது அறியப்பட்டுள்ளது. பேராசிரியர் வின்டிஷ்ச்(Windisch), உள்ளுணர்வின்பாற்பட்டு உருவான பழங்கதைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதைப் பாடல்களை அவருடைய தலைசிறந்த தனிவரைவான ‘Mara and Buddha’வில் முழுமையான ஆய்வுக்குரிய பொருளாக எடுத்துக் கொண்டார்.
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.