Skip to content
Home » பௌத்த இந்தியா #25 – இலக்கியம் – 5

பௌத்த இந்தியா #26 – இலக்கியம் – 5

பௌத்த இந்தியா

2. பாலி மொழி நூல்கள் (தொடர்ச்சி)

இந்தப் பொருள் குறித்து சுத்த நிபாதத்தில் வரும் இரு கதைப்பாடல்கள் பற்றி பேராசிரியர் வின்டிஷ்ச்  இவ்வாறு சொல்கிறார்:

‘பண்டைய புத்த காவியம் ஒன்றின் தடயங்கள் ஏதாவது ஒருவழியில் நமக்குக் கிடைத்திருந்தால், இந்த இரண்டு சுத்தங்களும் /சூத்திரங்களும் ஒரு காவியத்தின் பகுதியாகக் கருதப்பட்டிருக்கக் கூடும். ஆனால், அப்படி நினைக்கச் சாத்தியமில்லை. மாறாக, இந்தச் சுத்தங்கள் ஆரம்பக்காலத்தின் தொடக்க நிலைகளாகக் கருதப்பட வேண்டியவை. சில சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து புத்தர் காவியம் ஒன்று காலப்போக்கில் உருவாகியிருக்கக் கூடும்.

‘இலக்கியத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவமாக ஒரு காவியம் எவ்வாறு தோன்றுகிறது என்பதையும் எந்தச் செயல்முறையின் விளைவாக அந்தக் காவியம் நிறைவு பெறுகிறது என்பதையும் அசாதாரண எளிமையுடன் கூறமுடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு, மொழியியல் அறிஞர்களின் மாநாடு ஒன்று ஜெராவில் நடந்தது; அம்மாநாட்டில் ஐரிஷ் புனைவுகள் குறித்தும் அயர்லாந்து நாயகன் ஓஸியன் (Ossian) குறித்தும் கிடைத்திருக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று பேசினேன். இப்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை அவை. அந்த நேரத்தில் நான் பழைய-ஐரிஷ் புராணக்கதைகளுக்கு முதன்மை அழுத்தம் கொடுத்தேன். ஆனால், அதே நேரத்தில் பண்டைய இந்தியாவின் புராணக்கதைகளையும் ஒப்பிட்டுப் பேசினேன்.

‘இரண்டாவதாக நான் குறிப்பிடும் விஷயம் குறித்து பேராசிரியர் ஆல்டென்பெர்க், ‘ஆக்யானா’ (Akhyana) கீர்த்தனைகள் குறித்த அவரது பிரபலமான கட்டுரைகளில், ஒரு காவியத்துக்கு முந்தைய இலக்கிய வடிவங்களுடன் இருக்கும் தொடர்பை மிக விரிவாக விளக்கியுள்ளார்.

‘அதன் பின்னர் பேராசிரியர் கெல்ட்னர் இதே விஷயத்தை ஓரளவு புதிய கருத்துகளின் அடிப்படையிலான பார்வையில் ஆராய்ந்தார். கெல்ட்னர், (ஸோராஸ்ட்ரிய சமயத்தின் அடிப்படைக் கருத்துகளின் தொகுப்பான) ‘அவெஸ்டா’ (Avesta) விஷயத்தில் ‘Vedische Studien’ என்ற தனது கட்டுரையில் இதே அளவிலான ஆய்வு ஒன்றைச் செய்தார். ஆல்டன்பெர்க் முதன்முதலாகச் சுட்டிக்காட்டியதுபோல, பௌத்த இலக்கியத்திலும் காவிய பாணியிலான விவரிப்புகளும் வசனங்களும் கலந்திருப்பதை இப்போது நாம் பார்க்கிறோம். இயங்கும் மனிதர்கள், அவர்கள் இயங்கும் இடம் மற்றும் அவர்களது இயக்கம் ஆகியன அந்த விவரிப்பின் கூறுகளாக அமைகின்றன. ஆனால், அந்த இயங்கும் நபர்கள் உரையாடுபவர்களாகவும் கூறப்படும்போது மட்டுமே பின் குறிப்பிடப்படும் இயக்கம் உயிர் பெற்று எழுகிறது. அந்த உரையாடல்கள் பெரும்பாலும் குறைந்த அளவுக்காவது வரலாற்று ரீதியாகத் துல்லியமாக இருக்க வேண்டும்; ஆகவே, அந்த இடத்தில் விவரிப்பவரின் கற்பனையும் புனைவும், பாடலாசிரியரின் கலைத் தன்மையும் பெருமளவுக்குப் பங்கு வகிக்கின்றன.

‘விவரிப்பின் முதல் பகுதியான உரையாடல் (பேசுதல் அதற்கு மறுமொழி கூறுதல்) வசனமாகத் தரப்படுகிறது. குறிப்பாக கதையின் முக்கியமான இடங்களில் இந்த உரையாடல் இடம்பெறுகிறது. இங்கே, காவியத்தின் தொடக்கமும் நாடகமும் நெருக்கமாக அமைகின்றன. உலகின் எல்லா நாடுகளிலும் காணப்படும் மிகப் பழமையான இதிகாசங்களில் பேச்சு- எதிர்ப்பேச்சு வடிவில் உரையாடல்கள் பல காணப்படுகின்றன; இதை நாம் ‘இலியட்’ காவியத்தில் பார்க்கமுடியும். பிற்காலத்து இதிகாச வடிவங்களில்தான் இந்த நாடகக் கூறு பின்புலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த வகையில் பார்த்தோமானால், பழைய-கிரேக்க நாடகங்களில் தூதர்களின் உரைகளில் காவியத்தின் கூறு இருப்பதைக் காண முடியும். ஆனால், வசனமாக இருக்கும் உரையாடல்களுடன் யாப்பு வடிவத்தில் கதையின் கட்டமைப்பும் சேர்க்கப்படும்போது மட்டுமே ஒரு பாடல் முழுக்க முழுக்கக் காவியமாகிறது. இறுதி கட்டம் இப்படி அமைகிறது; உரையாடல்கள் சுருக்கமடைகின்றன; அல்லது இல்லாமல் போகின்றன; நிகழ்வுகள் மட்டுமே வசனத்தில் கொடுக்கப்படுகின்றன.’

இந்தப் பரவலான பொதுமைப்படுத்தலில் காணப்படும் பொதுவான துல்லியத்தையும், பெரும் முக்கியத்துவத்தையும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். இங்கு குறிப்பிடப்படும் பரிணாம வளர்ச்சியின் அனைத்து வகையான தொடக்க வடிவங்களும் இப்போது நமக்கு நிகாயாக்களில் கிடைத்துள்ளன. எடுத்துக்காட்டாக தேரா கதை- தேரி கதை. இவற்றில் காணப்படுவதுபோல், நியதிப் புத்தகங்களிலும் வசன வடிவில் உரையாடல்களைப் பார்க்கிறோம். அந்த உரைநடை வடிவிலான வசனங்கள் இல்லாவிடில் அவற்றைப் புரிந்துகொள்வதும் கடினம். விளக்கவுரை எழுதப்பட்டிருக்கும் உரைநடை எழுதும் அமைப்பும் மரபு வழியில் அடுத்தவருக்கு அளிக்கப்பட்டதே.

தீக நிகாயாவின் இரண்டாவது தொகுதியில் உள்ள சுத்தந்தங்களைப் போலவே, நியதிப் புத்தகங்களிலும் உரையாடல்கள் வசன நடையிலும் உரைநடையிலும் இருப்பதைப் பார்க்கிறோம். அத்துடன் (பேராசிரியர் விண்டிஷ்ச் விவாதித்த இரண்டு சுத்தந்தங்களைப் போன்ற) கதைப்பாடல்களிலும் உரையாடல்களும் கட்டமைப்பும் வசன வடிவில் இருப்பதைக் காண்கிறோம். ஆனால், நீண்ட காலத்துக்குப் பிறகுதான், அதாவது கனிஷ்கரின் காலத்தில்தான் முழுமையாக உருவான புத்தக் காவியம் நமக்குக் கிடைக்கிறது.

அப்படியானால், உலகெங்கிலும் இருந்த ஏனைய ஆரிய குலத்தினரிடமிருந்து (எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவிதத்தில் அவர்கள் உறவினர்கள் தாமே!) முற்றிலும் வேறுபட்ட மன அமைப்பை இந்தியர்கள் பெற்றிருந்தனர் என்று நாம் கருதலாமா? அல்லது பௌத்தச் சமூகம் பிற மக்களிடமிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்ட பிரிவாகத் தன்னை உருவாக்கிக்கொண்டது என்று கருதலாமா? அவர்களைச் சுற்றி அருகிலிருந்த மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பெரும் இந்திய இதிகாசங்களின் இருப்பால் தாக்கமுறாமல் இருந்தனரா? ராமாயணம், கோசல நாட்டில், அந்தப் பிரதேசத்தில் வசித்த பாணர்கள் நாடு முழுவதும் திரிந்து பாடிப் பிரபலமாக்கிய கதைப் பாடல்களின் அடிப்படையில் இயற்றப்பட்டது என்று பேராசிரியர் ஜேக்கோபி கூறுகிறார். ஆனால், மறுபுறம் பௌத்தர்களின் இலக்கியச் செயல்பாட்டு மையமாக, மிகத் துல்லியமாகக் கோசலம் தான் இருந்தது.

ஒரு காவியத்தின் தனிச்சிறப்புகள் கொண்டதாக, மிகப் பூரணமான ஒரு காவியமாக இராமாயணத்தை அங்கு எல்லோராலும் அறிந்துகொண்ட பிறகு, புதிய கோட்பாட்டைத் தழுவிக்கொண்ட கோசலத்தின் மக்கள் அதன் பின்னரும் இதிகாசம் ஆக்கும் தொன்மையான முறையைத் தொடர்ந்து பின்பற்றியிருப்பார்களா? இணையாக நடந்திருக்க முற்றிலும் வாய்ப்பில்லை. ஆனால், இந்த அனுமானத்துக்கும் (சாத்தியமான ஒன்றல்ல) மாற்று முன்மொழிவுக்கும் இடையில்தான் நமது தேர்வு இருக்க முடியும்; அதாவது, நிகாயாக்களில் பார்க்க முடிகிற உரைநடையும் வசனங்களும் கலந்த கதைப்பாடல் இலக்கியம் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தது என்று நம்மால் கூறமுடிந்தாலும், இதிகாசங்களான மகாபாரதமும், ராமாயணமும் அதற்குப் பின்னர்தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.

இந்தப் பௌத்த இலக்கியம் இயற்றப்பட்ட காலத்தில் இதிகாசங்கள் ஏற்கனவே இருந்திருந்தால், நிச்சயம் அவை அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். ஆனால், அவ்வாறு இல்லை. மறுபுறத்தில், பாணர்கள் பாடிய, உரைநடையும் வசனங்களும் கலந்து தொகுக்கப்பட்ட கதைப்பாடல்கள் (இந்த நிலையிலிருந்துதான் காவியங்கள் தோன்றின) மிகப் பழமையான ஆவணங்கள் ஒன்றில் ஆக்ஹானக்கள் (சம்ஸ்கிருதத்தில் ஆக்யானாக்கள்) என்ற அவற்றின் துறைசார்ந்த பெயரில் குறிப்பிடப்படுகின்றன. பல்வேறு வகையான அசாதாரணப் பொதுநிகழ்வுகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக அந்த ஆக்யானங்களைப் பாராயணம் செய்வது இருக்கிறது.

அத்துடன் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளக்கவுரையாளர் இதை மகாபாரதம், ராமாயணம் மற்றும் இவை போன்றவற்றைப் பாராயணம் செய்வது என்று கூறுகையில் விவிலிய விளக்கவுரைபோல் இது மிகச் சரியானதே. இதைப் போன்றதே புத்தகத்தில் குறிப்பிடப்படுவதும், ஆனால், பூரணமான காவியங்கள் அவரது காலத்தில் இருந்தன என்பதற்கும் அவர் விளக்கவுரை எழுதுகிற அந்தப் பழைய புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் இல்லை என்பதற்கும் அவரது குறிப்பு ஆதாரமாக இருக்கிறது.

இது ஒரு திசைதிருப்பும் முயற்சியாகத் தோன்றக்கூடும் என்று அஞ்சுகிறேன். ஆனால், இந்தக் காலகட்டத்தின் இந்திய இலக்கியத்தைப் பற்றி விவாதிக்கும் போதும், பரவலாகக் காணப்பட்ட வசன வடிவங்களை உருவாக்கும் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதும், அந்த இலக்கியம் எவ்வகை நிலையை அடைந்தது, எவ்வகை பாணியில் அது பெரும்பாலும் தொகுக்கப்பட்டது என்பதை விவாதிப்பதும் உண்மையில் நாம் கொண்டிருக்கும் நோக்கத்துக்கு மிகவும் தேவையானது.

நான்கு வகைப் பாடலாசிரியர்களைப் பற்றி கேள்விப்படுகிறோம்: கற்பனையாக எழுதும் பாடலாசிரியர் (அசலான வசனப் பாடல் வரிகளை எழுதுபவர்): மரபு வழி ஆசிரியர் (தற்போதைய வசனங்களைத் திரும்பவும் எழுதுபவர்); யதார்த்த வாழ்வைப் பாடுபவர் (சமயம் சார்ந்த தலைப்புகளிலிருந்து மிகவும் வேறுபட்ட உலகியல் சார்ந்த விஷயங்களைப் பாடுபவர்); மற்றும் தன்னியல்பாகப் பாடுபவர். இத்தகைய தன்னியல்பான வசனங்கள் பலவற்றை அந்தப் புத்தகத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.

விவரிக்கப்படுகிற அளவுக்கு அவை தன்னியல்பானவை என்று சொல்ல முடியாது; என்றாலும், கலையுணர்வு ஒரு திறன் வடிவமாக அப்போது அங்கீகரிக்கப்பட்டது என்பதை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை. ‘கவிதையின் போதையில் மூழ்கிவிட்டான்’ என்று ஒரு மனிதனைக் கூறும்போது, உத்வேகம் நிறைந்த தருணத்தில் அந்தப் பாடலாசிரியனின் மனமொருமித்த, தொலைநோக்குப் பார்வை அனைவருக்கும் பரிச்சயமில்லாத ஒன்றாக இருக்க முடியாது.

இந்தக் காலகட்டத்தில் எதிர்கால காவியம் ஒன்றின் உருவாக்கத்துக்கு முதல் அடி எடுத்துவைக்கப்பட்டது; அதுபோலவே, எதிர்கால நாடகப் படைப்புக்கான முதல் அடியும் எடுத்து வைக்கப்பட்டது என்பதற்கும் சான்றுகள் நம்மிடம் உள்ளன என்பதை அறிவது ஆர்வமூட்டுவது. பழங்குடியின மக்கள் கூடுகின்ற குறிப்பிட்ட விழா நாட்களில் மேடையில் இயற்கைக் காட்சித் திரைகளுடன், இசை மற்றும் நடனத்துடன் இவை நடத்தப்பட்டன. இத்தகைய சமஜ்ஜாக்கள் (நாடக நிகழ்வுகள்) இருந்ததற்கான ஏராளமான சான்றுகள் பௌத்த மற்றும் சமணப் பதிவுகளிலும், அசோகரது கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. சமஜ்ஜாக்கள் ஒரு வழக்கமான அமைப்புகளாக இருந்துள்ளன.

இவை பற்றிய குறிப்புகள் வேத பிராமணர்களின் புத்தகங்களில் இல்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. அவர்களுக்குப் பிடிக்காததை விடாப்பிடியாகப் புறக்கணிக்கும் வேத பிராமணர்களின் பழக்கத்தைச் சுட்டும் மற்றொரு எடுத்துக்காட்டு இது எனலாம். இத்தகையக் கூட்டங்களில் உரைநடையும் வசனமும் கலந்த (அக்கானா) பாராயணங்களும் அல்லது கதைகள் சொல்வதும் நிகழ்ந்ததாக சிகலோவாத சுத்தந்தாவில் பார்க்க முடிகிறது.

ஆனால், தற்போது நமக்குக் கிடைக்கக்கூடிய ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, இது தனித்துவமான ஒன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது; அத்துடன் நான் பயன்படுத்திய ‘இயற்கைக்காட்சிகள்’ என்ற சொல்லுக்கான விளக்கமும் சந்தேகத்துக்குரியதே. ஆகவே, நாடகம் என்பது பற்றி இப்போது நாம் பேச முடியாது. இந்தக் கூடுகைகள் மலைகளின் மேல் புனிதமான இடங்களில் நடந்தன: உயர் பொறுப்பில் இருந்தோர் அழைக்கப்பட்டனர்; அவர்களுக்கு சிறப்பு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன; இவற்றைப் படிக்கையில் நாமும் அங்கிருப்பதுபோல் உணர்கிறோம்; அவை தனிப்பட்ட நபர் எவரோ செய்த நிகழ்வாகத் தோன்றவில்லை. ஆனால், இத்தகையது போன்ற சமயம் சார்ந்த, சமூகம் சார்ந்த சடங்குகளில் நாடகம் போன்ற நிகழ்வை வேறு இடங்களிலும் பதிவாகியிருப்பதை நம்மால் பின்னோக்கித் தடங்காண முடிகிறது. ஆனால், இங்கு நாம் பேசுகிற சமயம், பிராமணர்களின் சமயம் இல்லை என்பது உண்மை. ஒரு பிராமணன் இத்தகைய நடனம் அல்லது இசையைப் பார்க்கவோ கேட்கவோ கூடாது என்ற பொதுவான விலக்கு அத்தகைய நிகழ்வுகளில் உள்ளடங்கி இருந்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் இந்த விஷயத்தில் நாட்டு மக்களிடம் காணப்பட்ட மிக முக்கியமான மற்றும் பரவலான நம்பிக்கையின் பகுதியாக அந்த நேரத்தில் இது இருந்தது.

பெயரிட்டு குறிப்பிடப்படும் பழமையான நாடகங்கள் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) கிருஷ்ணனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட புதிரான நாடகங்கள். இந்தக் காலகட்டத்தில் இருந்த நடிகர்கள் பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. ஆனால், தொடக்கக்கால நாடகங்கள் எதுவும் கிடைக்கவில்லை; தொலைந்துவிட்டன. கிடைத்திருக்கும் மிகப் பழமையானவை அனைத்தும் கி.பி.ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இந்த அத்தியாயத்தில் இலக்கியத்தின் வெளிப்புற வடிவம் மற்றும் பாணியை மட்டுமே ஆராய்ந்துள்ளேன். அதன் உள்ளடக்கத்தை அல்ல; பிறிதொரு இடத்தில் அவற்றை விவரித்துள்ளேன். வெளிப்படுத்தப்பட வேண்டிய கருத்துகளின் தகுதிக்கும் மற்றும் அவற்றை நன்றாக வெளிப்படுத்த முடியாத குழந்தைத்தனமான இயலாமைக்கும் இடையிலான ஆர்வமூட்டும் வேறுபாட்டை அது காட்டுகிறது. பின்பற்றிய பாணியைப் பொறுத்த அளவில் இந்திய மனத்தின் அனுபவமற்ற இளம் பருவத்தை மட்டுமே எடுத்துக்கொண்டோம். ஆனால், அதற்குத்தான் எத்தகு வீரியம்! எழுதும் பொருட்கள் இல்லாத நிலைமை உரைநடைப் பாணியைக் காட்டிலும் இயல்பாகச் சிறிய பாடல்களைக் குறைவாகப் பாதித்திருப்பது தெரிகிறது. அத்துடன், கதைப்பாடல்களிலும் சொற்களிலும் மிகவும் கரடுமுரடான மற்றும் ஒரு முரட்டுத்தனமான அழகு காணப்படுகிறது. இப்போது நாம் பார்க்கும் பாணியும், பெருமளவு சிந்தனையும் பௌத்தம் சார்ந்தது அல்ல; அது இந்தியாவினுடையது.

ஒருவிதத்தில், அக்காலத்து இந்திய மக்களின் இலக்கியத் திறனை அறிந்துகொள்வதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே சான்று. அவற்றிலிருந்து பின்னாட்களில் காவியங்கள் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படும் சில கதைப் பாடல்கள் நம்மிடம் இப்போதிருந்தால், அவை இதுபோன்ற வரம்புகளைக் வெளிப்படுத்தியிருக்கவே கூடும்; அத்துடன் இணையான ஆற்றலையும் வெளிப்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன். பிற்காலத்தில், கலைகள், சொல்லாற்றல் மற்றும் பாடல் முறைகள் குறித்து நடந்த மேலும் வெற்றிகரமான ஆய்வுகளுக்கான சான்றுகள் நம்மிடம் உள்ளன. ஆனால், ஒரு புறத்தில் உள்ளார்ந்த தீவிரமான ஆர்வத்துடன் அதே ஆற்றலையும், அதே அளவுக்கு ஆர்வமூட்டும் நகைச்சுவையும், முரண்நகையும், இயற்கையின் மீதான காதலும் கலந்த கலவையையும் நம்மால் காணமுடியவில்லை. மறுபுறத்தில் வாழ்க்கையின் மிக ஆழமான பிரச்னைகளை வியக்கும் வகையில் வல்லமையுடன் உள்வாங்கிக் கொள்வதையோ ஒருபோதும் காண முடியவில்லை. தத்துவம் சார்ந்த விஷயங்களில் தற்போது நாம் பார்க்க முடிவது போல, இந்த காலகட்டத்தில் இலக்கிய வெளியிலும், இந்தியா பொற்காலம் ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது என்பது உண்மை. ஆரம்பக்கால உபநிடதங்கள் மற்றும் நான்கு நிகாயாக்களின் துணிச்சலான ஊகங்களுக்கும் தெளிவான வாழ்க்கை முறைக்கும் புத்தகோசரும் சங்கரரும் அளித்த அமைப்புமுறைகளையும் அறிவார்ந்த விளக்கங்களையும் போல் பிற்காலத்தின் கற்றறிந்த, அலங்காரமான பாடல்கள் இந்தக் காலகட்டத்தின் இலக்கியத்துக்கு அமைந்தன.

0

‘இலக்கியம்’ அத்தியாயம் – பிற்சேர்க்கை

காலவரிசைப்படி பௌத்த இலக்கியப் பட்டியல் – புத்தர் காலம் தொடங்கி அசோகர் காலம் வரை

  1. அனைத்து புத்தகங்களிலும் இப்போது நாம் காணமுடிகிற பௌத்தக் கோட்பாடு குறித்து ஒரே மாதிரியான சொற்களாலான பத்திகளாகவும் வசனங்களாகவும் இருக்கும் எளிய அறிக்கைகள்.
  2. இப்போது கிடைத்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட புத்தகங்களில் காணப்படும் ஒரே மாதிரியான சொற்களாலான அத்தியாயங்கள்.
  3. சிலாக்கள், பாராயணங்கள், எட்டுத்தொகுதிகள், பாதிமோக்கம்.
  4. தீக நிகாயா, மஜ்ஜிமா, அங்குத்தரா மற்றும் சம்யுத்த நிகாயாக்கள்.
  5. சுத்த நிபாதம், தேரா கதை மற்றும் தேரி கதை, உடானாக்கள் மற்றும் குத்தக பாதம்.
  6. சுத்த விபங்கா மற்றும் காண்டகங்கள்.
  7. ஜாதகங்கள் (கதைகள்) மற்றும் தம்மபதங்கள்.
  8. நித்தேசம், இதிவுத்தகங்கள், பதிசம்பிதா.
  9. பேடா வத்து மற்றும் விமான வத்து, அபாதனங்கள், காரிய பிடகம் மற்றும் புத்த வம்சம்.
  10. அபிதம்மா புத்தகங்கள்; இவற்றில் மிகவும் ஆரம்பக் காலத்தது புகல பண்ணட்டி, மற்றும் இறுதியானது கதா வத்து.

இந்த காலகட்டத்தின் பரவலாகக் கிடைத்திருக்கும் பௌத்த ஆவணங்கள் இயற்றப்பட்டிருக்கக் கூடிய சாத்தியமான வரிசையை மேலே உள்ள பட்டியல் எடுத்துரைக்கிறது. அவை இன்னமும் எழுதப்படா நிலையிலேயே இருந்தன. அத்துடன் பெருமளவு தொலைந்துபோய்விட்டன என்பதில் சந்தேகமில்லை.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *