ஜாதகக் கதைகள் தொகுக்கப்பட்ட புத்தகம் சில ஆண்டுகளாக நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. பேராசிரியர் ஃபாஸ்போல் தொகுத்த, பாராட்டுதலுக்குரிய பாலி மொழி பதிப்பு அந்தப் புத்தகம்; இப்போது பேராசிரியர் கோவல் மேற்பார்வையில் கேம்பிரிட்ஜில் வெளியிடப்பட இருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்திய மக்களின் அன்றாட நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த தகவல்கள் ஆகியவற்றை முழுமையாகக்கொண்டதாக அந்த நூல் இருக்கிறது. இந்தியர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் குறித்து எழும் பல்வேறு வகையான கேள்விகளுக்கான விடைகளால் அது நிரம்பியுள்ளது.
இந்நூலில் காணப்படும் சான்றுகள் பொருந்தக்கூடிய காலகட்டம் குறித்துத் தீர்மானிக்க மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை இவை. பிரச்னை சற்று சிக்கலானதுதான். ஆனால், வேறுபாடுகள் சரியாக வரையறுக்கப்பட்டால் மட்டுமே, பிரச்னைகளுக்கான தீர்வு கணிசமான அளவில் உறுதியாகவும், முற்றிலும் மிக எளிமையானதாகவும் கிடைக்கும் என்று தோன்றுகிறது.
ஒரே புத்தகத்தில் வெவ்வேறு பகுதிகளுக்கும் இடையிலும் நாம் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும் என்பதில் வியப்பில்லை. ஆரம்பகால உபநிடதங்களைப் பற்றி பேராசிரியர் டியூசென் கூறியதுபோல், மகாபாரதம் பற்றி பேராசிரியர் வின்டர்னிட்ஸ் கூறியதுபோல், நிகாயாக்கள் மற்றும் வினயப் பிடகம் குறித்து (அத்துடன் அபிதம்மத்தின் சில பகுதிகள் குறித்தும்) கூறுவது போலும் ‘ஒவ்வொரு தனித்தனித் தகவலையும் தனியாகவே நாம் மதிப்பிடவேண்டும்’. உண்மையில் இது மேலே சுட்டிக்காட்டப்பட்டவற்றின் மிக இயல்பான மற்றும் அடிப்படை விளைவு மட்டுமே. அதாவது புத்தகங்கள் படிப்படியாக அளவில் பெரிதாகின. ஆனால், நவீனக் காலத்தில் கூறும் பொருளில் அவற்றைப் புத்தகங்கள் என்று கூறமுடியாது; அத்துடன் அவற்றுக்கு ஓர் ஆசிரியர் மட்டும் இருக்கவில்லை.
வேறுபடுத்திப் பார்ப்பதற்கு எப்படிப் பிரிக்கலாம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டின் மூலம் சிறப்பாகக் கூறலாம். ஒரு வழக்கமான ஜாதகக் கதை ஒன்றின் சுருக்கம் அடுத்துக் கொடுக்கப்படுகிறது.
ஆலமர (Banyan) மான் பிறந்த கதை
‘அதற்குப் பதிலாக ‘ஆலமர’ மானைத் தொடருங்கள்’ குமார காஸப்பனின் தாயைப் பற்றியும் மேலும் பல விஷயங்களையும் ஜேதவனத்தில் இருந்தபோது புத்தப் பகவான் இந்தக் கதையைக் கூறினார்.
அப்போது இந்தப் பெண்ணின் கதையும் சொல்லப்படுகிறது. ஒழுக்கக்கேடான நடத்தை கொண்டவள் என்று தவறாகக் கூறப்பட்ட அந்தப் பெண், புத்தரின் தலையீட்டுக்குப் பின் நிரபராதி என்று அறிவிக்கப்படுகிறாள். பின்னர் ஒரு மாலை நேரத்தில் சங்கத்தில் சகோதரர்கள் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்; அப்போது புத்தர் அங்கு வருகிறார்; அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயத்தை அறிந்துகொள்கிறார். ‘அந்த இருவருக்கும் (அந்தப் பெண் மற்றும் அவரது மகன்) ஆதரவையும் பாதுகாப்பையும் ததாகதர் இப்போது மட்டும் (இந்தப் பிறவியில்) அளிக்கவில்லை; இதற்கு முன்பும் அவர் அப்படித்தான் இருந்தார்.’ பின்னர், அவர்கள் வேண்டிக் கொண்டதால் முற்பிறவியில் நடந்த, மறைக்கப்பட்ட கதையை அவர் கூறுகிறார்:
ஒரு காலத்தில், பிரம்மதத்தன் பனாரஸை ஆட்சி செய்துகொண்டிருந்தான். போதிசத்துவர் ஒரு மானாக, மான்களின் அரசனாக, ‘ஆலமர’ மான் என்ற பெயரில் பிறந்தார்’ . இவ்வாறு கதை மேலும் தொடர்ந்து கூறப்படுகிறது. இது ஒரு முறையான ஜாதகக் கதை. அரசனுடைய பூங்காவில் இரண்டு மான் கூட்டம் எப்படி அடைக்கப்பட்டது என்பதை அது சொல்கிறது.
அரசனோ அல்லது அவனது சமையல்காரனோ தினமும் மான் இறைச்சிக்காக வேட்டைக்குச் சென்றனர். ஒரு மான் கொல்லப்பட்டால், பல மான்கள் காயம்பட்டன; வேட்டையாடுபவர்கள் துரத்துவதால் மேலும் பல துன்புறுத்தப்பட்டன. எனவே, ஒரு கூட்டத்தின் அரசனான தங்க நிறத்தில் இருந்த ‘ஆலமர’ மான், மற்றொரு கூட்டத்தின் அரசனான ‘கிளை’ மானிடம் சென்று, பேசியது. மான்களைக் காப்பாற்ற ஓர் உடன்படிக்கை போடுவதற்கு ஒப்புக்கொள்ள வைத்தது; ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கூட்டத்திலிருந்து மான் ஒன்று சமையல்காரன் வெட்டுமிடத்துக்குச் சென்று வெட்டுப்பாறையில் தலையைக் கொடுக்கவேண்டும் என்று கூறியது. இவ்வாறே நடைபெற்றது. தினசரி ஒரு மானின் மரணத்தின் மூலம் மீதமுள்ள மான்கள் சித்ரவதையிலிருந்தும் துன்புறுத்தலிலிருந்தும் காப்பாற்றப்பட்டன.
ஒரு நாள் அப்படிச் செல்லவேண்டிய பொறுப்பு ‘கிளை’ மான் கூட்டத்தில் கருவுற்றிருந்த மான் மீது விழுந்தது. அந்தக் கூட்டத்தின் அரசனிடம் சென்ற அந்தப் பெண் மான், ‘ஒரே நேரத்தில் இருவர் மரணிக்கும்படி இருக்கக்கூடாது’ என்று கட்டளையிடும்படி வேண்டியது. ஆனால் கூட்டத்துக்குத் திரும்பிச் செல்லும்படி அரசன் கடுமையாகக் கூறியது. பின்னர் அந்தப் பெண் மான் ’ஆலமர’ மான் கூட்டத்தின் அரசனிடம் சென்று தனது பரிதாபக் கதையைச் சொன்னது. சரி நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிய அரசன், தானே சென்று வெட்டும் பாறையில் தலை வைத்துப் படுத்துக் கொண்டது.
பனாரஸ் ராஜா அந்த இரு மந்தைகளின் அரசன்களுக்கும் விலக்கு அளித்திருந்தான். அரசன் ‘ஆலமர’ மான் வெட்டும் பாறையில் தலை வைத்து படுத்திருப்பதைப் பார்த்த சமையல்காரன், விரைந்து சென்று ராஜாவிடம் (மனிதர்களின் ராஜா ) விஷயத்தைச் சொன்னான். உடனே அவர் தேரில் ஏறி, பெரும் பரிவாரங்களுடன் அந்த இடத்துக்கு விரைந்தார்.
தலையை வெட்டும் பாறையில் வைத்திருந்த மானை நோக்கி அவன் கேட்டான். ‘மான்களின் அரசனே! என் நண்பா, நான் உனக்கு விலக்கு அளித்திருந்தேனே! பின் ஏன் இங்கு வந்து தலையை வைத்திருக்கிறாய்?’
அப்போது அந்த மான் ராஜாவிடம் அனைத்தையும் கூறியது. மனித ராஜா மிகவும் நெகிழ்ந்து போனார். ‘எழுந்திரு! உனக்கும் அந்தப் பெண் மானுக்கும் உயிர்ப் பிச்சை வழங்குகிறேன்!’
அப்போதுதான் அந்த எதிர்க்கேள்வி மானிடமிருந்து வந்தது. ‘சரி, நாங்கள் இருவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். கூட்டத்தில் மீதமிருக்கும் மான்களின் கதி என்னவாகும் மனிதர்களின் ராஜாவே?’
எனவே அந்த மான்களும் பாதுகாப்பைப் பெற்றன. ‘ஆலமர’ மான் இதேபோல் அந்த இடத்தில் வாழும் அனைத்து வகை உயிரினங்களுக்கும் பாதுகாப்பைப் பெற்றது. மனித ராஜா நீதிநெறியுடனும் கருணையுடனும் நடந்துகொள்ளும்படி உபதேசம் செய்தது. ‘புத்தரின் கருணையுடன்’ அவருக்கு உண்மையைப் போதித்தது.
அந்தப் பெண் மான் அழகிய ஆண் குட்டியைப் பெற்றெடுத்தது. பூக்களின் மொட்டுகளைப் போல அழகாக இருந்த அந்தக் குட்டி கிளை மான் கூட்டத்தின் மான்களுடன் விளையாடியது. தாய் மான், குட்டிக்கு உபதேசம் ஒன்றை வசனப் பாடலாகக் கூறியது.
‘அன்பே, ஆலமர மானைப் பின்பற்றிச் செல்;
கிளை மான் கூட்டத்தை ஊக்குவிக்காதே!
கிளை மான் கூட்டத்தில் நீண்ட ஆயுளுடன்
இருப்பதைக் காட்டிலும்
ஆலமரக் கூட்டத்தில் இருந்து
மரணிப்பது சிறப்பாக இருக்கும்.’
அத்துடன் ஆலமர மான் மனிதர்களுடன் ஓர் ஒப்பந்தமும் செய்து கொண்டது; ஒரு வயலைச் சுற்றி இலைகள் கட்டப்பட்டிருந்தால் மான்கள் அங்கு அத்துமீறி நுழையக் கூடாது. மான்கள் அனைத்தும் இந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியது. அன்று தொடங்கி வயல்களின் இலைகள் கட்டப்பட்டிருக்கும் அடையாளங்கள் தென்படத் தொடங்கியதாகச் சொல்கிறார்கள்.
முறையான இந்த ஜாதக கதையான ‘கடந்த காலத்தின் கதை’ இவ்வாறு முடிவுறுகிறது.
பின்னர் புத்தப் பகவான் கதையின் கதாபாத்திரங்கள் யாரென்று கூறினார். முந்தைய பிறப்பில் அவரும், அவரது சமகாலத்தவர்களும் யார் யாராக இருந்ததாக அடையாளம் காட்டினார். ‘அப்போது கிளை மானாக இருந்தவர் இப்போது தேவதத்தர். அப்போது அவரின் கட்டுப்பாட்டிலிருந்த மான் கூட்டம், கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றிருக்கும் அவரைப் பின்பற்றுபவர்கள் என்றார். இப்போது குமார காசப்பனின் தாயாக இருப்பவள் முற்பிறவியில் அந்தப் பெண் மான். அதற்குப் பிறந்த குட்டி மான் இப்போது குமார காசப்பா. ஆனந்தன் தான் அப்போது மனிதர்கள் ராஜாவாக இருந்தவன். ஆலமர மான்களின் அரசன், நானே’ என்றார்.
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.