ஆலமர மான் பிறந்த கதை என்ற ஜாதகக் கதையின் பல்வேறு காட்சிகள், பர்ஹுத் பௌத்த நினைவிடத்தில் ஒரே சிற்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது.
இந்தக் கதையில் முதலில், நமக்குப் பொதுவான ஒரு வெளி வடிவம் கிடைக்கிறது. இதை அறிமுக அத்தியாயமும் இறுதியில் கூறப்படும் அடையாளங்களும் நமக்கு அளிக்கின்றன. இதில் ஒரு பூரணமான ஜாதகக்கதை பொதிந்துள்ளது. பாலி மொழியில் கூறப்படுவதுபோல், ’கடந்த காலத்தின் கதை’. அத்துடன் இக்கதையில், தற்போது கிடைத்திருக்கும் நியதி சார்ந்த ஜாதகப் புத்தகத்தில் பார்க்க முடிவதுபோல் அனைத்துக்குமான கருவாக, பாடல் ஒன்றைப் பார்க்க முடிகிறது. கதைகள் ஒவ்வொன்றுக்கும் தனி வரலாறு இருக்கிறது.
இயல்பாக, ஜாதகக் கதை எதையும் நாம் மிகப் பழமையான வடிவத்தில் எதிர்பார்க்கிறோம். அதற்குள் எளிமையான ஒரு கதையோ உவமையோ இருக்கும். வெளி வடிவம் இல்லாமல் பாடலும் இல்லாமல் இருக்கும். இவ்வாறு நிகாயாக்கள் ஒன்றில் மனம் நிலையாக இருப்பதைப் பேணுவதற்கு உபதேசம் ஒன்றும் இருக்கும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ’சரியான வெளி’ ஒன்றைத் தேடுவது. வேறுவிதமாக அவன் செய்தால், உலக விஷயங்களால் மனம் கிளர்ச்சியடைய அனுமதித்தால், அவன் தனது வழக்கமான, மூதாதையரிடமிருந்து தேடியடையும் திறனையும் இழந்துவிட்டால், தானிய வயல்களில் பறக்கும் பறவைகள் பருந்தின் வலிமையால் வீழ்த்தப்படுவதுபோல் வீழ்வான். கூறப்படும் அறிவுரைக்கு ஓர் அறிமுகமாகத்தான் அந்தப் புனைகதை சொல்லப்படுகிறது. இதுவரையிலும் அதற்கு வெளிவடிவம் எதுவும் கிடையாது. அத்துடன் அதில் பாடல் எதுவும் இல்லை. ஆகவே, அது இன்னும் ஜாதகக் கதையின் வடிவம் பெறவில்லை எனலாம்.
ஆனால், ஜாதகக் கதைகள் ஒன்றில் இந்தக் கதை மிகத் துல்லியமாகப் பெரும்பகுதியும் ஒரே மாதிரியான சொற்களில் கூறப்படுகிறது. இப்போது நாம் பார்த்த எடுத்துக்காட்டில் உள்ளதைப் போலவே, இதுவும் அறிமுகக் கதையின் சட்டகத்துடன் மற்றும் இறுதியில் கூறப்படும் அடையாளங்களுடன் அலங்காரமாகக் கூறப்பட்டுள்ளது. அதனுடன் இரண்டு பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன; ஒன்று அந்தக் கதைக்குள்ளாக மற்றொன்று சட்டகத்துக்குள்ளாக. இதில் பழைய ஆவணம் எது என்பது குறித்த கேள்வி இருக்க முடியாது; இந்தக் கதை முதலில் அசலாகக் காணப்படுகிற அல்லது குறிப்பிடப்படுகிற சம்யுத்தத்தின் பத்தியை தனது மூலமாகப் பெயருடனும் அத்தியாயத்துடனும் ஜாதகம் மேற்கோள்காட்டுகிறது.
இது ஒரு தனித்த நிகழ்வாகக் கூறமுடியாது. தற்போது கிடைத்திருக்கும் ஜாதகக் கதைகளின் தொகுப்பில் பின் குறிப்பிடப்படுவனவற்றை நியதி புத்தகங்களின் கொஞ்சம் பழமையான பகுதிகளில் கண்டுபிடித்தேன். இதுபோலவே மற்றவற்றையும் நாம் தடம் காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.
• ஜாதகா எண் 1 அப்பன்னகா, திக நிகயா 2.342 அடிப்படையாகக் கொண்டது
• ஜாதகா எண் 9 மகாதேவா, மஜ்ஹிம்ஹா 2.75 அடிப்படையாகக் கொண்டது
• ஜாதகா எண் 10 சுக விஹாரி, விநயா 2.183 அடிப்படையாகக் கொண்டது
• ஜாதகா எண் 37 தீத்திரா, விநயா 2.161 அடிப்படையாகக் கொண்டது
• ஜாதகா எண் 91 லித்தா, திக நிகயா 2.348 அடிப்படையாகக் கொண்டது
• ஜாதகா எண் 95 மகா சுதஸனா, திக நிகயா 2.169 அடிப்படையாகக் கொண்டது
• ஜாதகா எண் 203 காந்த வட்டா, விநயா 3.1095 அடிப்படையாகக் கொண்டது
• ஜாதகா எண் 253 மணி கந்தா, விநயா 3.145 அடிப்படையாகக் கொண்டது
• ஜாதகா எண் 405 பாக பிரம்மா, மஜ்ஹிம்ஹா 1.328 மற்றும் சம்யுத்தா 1.142 அடிப்படையாகக் கொண்டது
இந்தக் கதைகள் இரண்டில் வரும் நாயகர்கள் மகா தேவா மற்றும் மஹா-சுதாஸனா ஆகியோர், இந்தப் பழைய ஆவணங்களில் கதைகளின் முடிவில் புத்தரின் முந்தைய பிறவியில் அவருடன் இருந்தவர்களாக ஏற்கெனவே அடையாளம் காணப்படுகின்றனர். மஹா-சுதாஸனாவிலும், லித்தாவிலும், பாக பிரம்மா கதையின் இரண்டு பழைய வடிவங்களில் இரண்டாவதிலும் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற கதைகள் அனைத்திலும் அடையாளமும் மற்றும் பாடல்களும் கண்டறியப்பட வேண்டியுள்ளன.
தலைகீழான நிகழ்வுகள் அடிக்கடி வருகின்றன; அதாவது, பழைய ஆவணங்களிலும் இந்தக் கதைகள் சொல்லப்படுகின்றன; முந்தையப் பிறவியின் நாயகன் புத்தருடன் வெளிப்படையாக அடையாளம் காணப்படுகிறான்; அப்படி இருந்தும் அந்தக் கதைகள், இப்போது கிடைத்திருக்கும் ஜாதகத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. ஜாதகப் புத்தகத்தில் கதைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கு முன்பாகவே இவை ஜாதகங்கள் என்றே அழைக்கப்பட்டன.
பௌத்த இலக்கியங்கள் ஒன்பது பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன என்ற மிகப் பழமையான பிரிவு நிகாயாக்களில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று ‘ஜாதகம்’, அதாவது ஜாதகங்கள். இவை முன்னதாக நடைமுறையிலிருந்த புத்தகங்களில் காணப்படும் அத்தகைய அத்தியாயங்களைக் குறிக்கின்றன எனக் கொள்ளலாம். நியதிப் புத்தகத்தில் இப்போது சேர்க்கப்பட்டுள்ள ஜாதக நூலை இது குறிப்பிடுகிறது எனக் கூறமுடியாது, ஏனெனில் அது அப்போது புழக்கத்துக்கு இன்னும் வரவில்லை.
ஜாதகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஆரம்பக்காலத் தொகுப்புகளில் இருக்கும் கதைகள் எதிலும் புத்தர் அவரது முந்தைய பிறவியில் ஒரு விலங்குடன் அடையாளம் காணப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம். பழங்காலத்தில் புகழ் பெற்றிருந்த முனிவர்களுடன், உபதேசம் செய்பவர்களுடன் மட்டுமே அவர் அடையாளம் காணப்படுகிறார். ஜாதகம் என்ற சொல்லுடன் இணைக்கப்படும் முதல் சிந்தனை இதுதான். நியதிப் புத்தகத்தில் நாம் காண்பது பிற்காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே.
பௌத்த இலக்கியங்களில் பார்க்க முடிகிற ஜாதகங்களின் பழமையான வடிவங்கள் இவை. அவற்றிலிருந்து நாம் இரண்டு தகவல்களை அறிகிறோம்; இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. முதலாவதாக, இந்தப் பழமையான வடிவங்களில் பெரும்பாலும் வடிவமைப்பு எதுவும் இல்லை; பாடல்களும் இடம் பெற்றிருக்கவில்லை. அவை அனைத்தும் (விதிவிலக்காக இரண்டு உள்ளன) முற்றிலும் உரைநடையில் இருக்கும் கதைகள், உவமைகள், புனைவுகள்.
இரண்டாவதாக, தற்போது நம்மிடம் இருக்கும் ஜாதகப் புத்தகத்தில் பாதி பதிவுகளை மட்டுமே கொண்டதாக இருக்கிறது என்று கூறலாம். பௌத்தச் சமூகத்தினரின் அவர்களது ஆரம்ப கால இலக்கியங்களின் அனைத்துக் கதைகளும் அதில் இடம்பெறவில்லை.
இந்த அளவில் இந்தத் தகவல்கள் உறுதியானவை. ஆனால், நான் மேலும் சிறிது முன்னே சென்று பார்க்க முயல்கிறேன்; ஆரம்ப காலத்தைச் சேர்ந்த இந்தப் பத்து ஜாதகக் கதைகளின் பண்புகளை, ஜாதகமாக அவை உருவாவதற்கு முந்தைய வடிவத்தில் பார்க்கையில், அவற்றின் வரலாற்றுத் தடங்கள் முற்றிலும் பௌத்த இலக்கியங்கள் தோன்றிய காலத்துக்கு முன்னால் அழைத்துச் செல்கின்றன என்று கூறுகிறேன். குறிப்பாக, அந்த இலக்கியங்கள் எதுவும் பௌத்தம் சார்ந்தவை அல்ல; ஒருவேளை, அவை ஏறக்குறைய பௌத்த நெறிமுறைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பெருமளவுக்கு அந்தப் பாணியில் இருக்கும் மஹா-சுதஸனாவும், மிக முக்கியமாக, சூரிய வழிபாடு குறித்த பண்டைய இந்தியப் புராணக் கதையாக இருக்கிறது. மற்றவை அனைத்தும் பௌத்தத்துக்கு முந்தைய இந்திய நாட்டுப்புறக் கதைகள். விநோதமாக அவற்றில் பௌத்தம் குறித்து எதுவும் இல்லை. அவை புகுத்தும் நெறிமுறைகளும் இந்தியத் தன்மைகொண்டவை. பழமையான வடிவத்தில், இவை அப்படிப்பட்டவை என்று தேர்ந்தெடுக்கப்பட்டது தவிர்த்து அவற்றில் பௌத்த அடையாளம் என்று சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.
நிச்சயமாக, மூடநம்பிக்கைகளுடன் பிணைக்கப்பட்டிருக்கும் வேறு பல நாட்டுப்புறக் கதைகளும் இருந்தன. அவை விடுபட்டுள்ளன. அத்துடன், அவை பேசும் நெறிமுறைகளும் நிச்சயமாக மிக எளிமையான வகையைச் சேர்ந்தவை. குழந்தைகளுக்குப் புகட்டும் பால் போன்றவை. புகழ்பெற்ற பெரும் அரசன் மஹா-சுதஸனாவின் கதையில் இது தெளிவாக வெளிப்படுகிறது. பிற்கால ஜாதக வடிவத்தில் உள்ள அந்தக் கதை, உலக மாயை என்ற பழைய பாடத்தைச் சொல்லுகிறது. பூமியிலிருக்கும் அனைத்து விஷயங்களும் நிலையற்றவை என்று அழுத்தமாகக் கூறுகிறது. அதன் பழைய வடிவத்தில், ஒரு சுத்தந்தா போல், மெய்மறந்த நிலைக்கும் (ஜானா- தியான நிலை), மேலான நிலைக்கும் (பிரம்மா விஹாரம்- தெய்விக மனநிலை) அழுத்தம் தருகிறது. தனித்துச் சொல்லும்படியாக நிச்சயமாக இது பௌத்தத்துக்கு முந்தியது. எனினும், இதேபோன்ற ஒரு கருத்து பின்னாளில் யோக சூத்திரத்தில் காண முடிகிறது, i.33 என்பது முக்கியமானது. இவை அதிகம் ஆழமான, அதிகம் கடினமான விஷயங்கள்.
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.
பெளத்தம் தொடர்பான நூல்கள் இருப்பின் மகிழ்ச்சியோடு வாசிக்க விரும்புகிறேன்.