Skip to content
Home » பௌத்த இந்தியா #30 – ஜாதகக் கதைகள் – 4

பௌத்த இந்தியா #30 – ஜாதகக் கதைகள் – 4

ஜாதகக் கதைகள்

ஜாதகப் புத்தகத்தில் உள்ள குறிப்புகள் அனைத்தையும் வடகிழக்கு இந்தியாவில் நிலவிய சமூக நிலைமைகளுடன் தொடர்புபடுத்தி ஒரு விரிவான மற்றும் கவனமான ஆய்வை டாக்டர் ஃபிக் செய்துள்ளார். கதைகளின் செய்யுள்களும் உரைநடைப் பகுதிகளும், அவை வெளிவடிவத்திலிருந்து வேறுபட்டுள்ளன என்ற முடிவுக்கு வருகிறார். ஆரம்பத்தில் அவை இருந்த நிலையிலிருந்து, ஒருவர் மற்றொருவருக்கு வாய்மொழியாக இக்கதைகளைக் கூறியபோது அரிதாக மாற்றப்பட்டிருக்கலாம். புத்த மதத்தின் ஆரம்பகாலத்தில் இது நிகழ்ந்திருக்கலாம். சந்தேகத்துக்கு இடமின்றி அவை அக்காலத்துச் சமூக நிலைமைகள் எல்லாவற்றுடன் தொடர்புடையவையாக – புத்தரின் காலம் வரை ஒப்பிடக் கூடியவையாக இருக்கலாம் என்கிறார்.

ஹோஃப்ராத் பியூலர், இந்திய வரலாறு குறித்துப் பேசுவதற்கு ஆக உயர்ந்த அதிகாரம் பெற்றவர்; அவர் பாதி பௌத்தர் என்று எவராலும் குற்றஞ்சாட்ட முடியாத ஓர் அறிஞர்: அவர் இவ்வாறு கூறுகிறார்: ‘பௌத்த துறவிகள் மற்றவர்களுக்கு அக்கதைகளைக் கொடுக்கும்போது அதிக மாற்றங்கள் செய்துள்ளனர்; குறிப்பாக, வாழ்க்கை நிலைமைகள் குறித்து ஜாதகங்களில் கூறப்படும் விளக்கங்கள் இந்தியாவில் பௌத்தம் முக்கிய சக்தியாக மாறிய காலத்துடன் ஒத்துப்போகின்றன என்றால், கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் அது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், அந்தக் கதைகளில் பௌத்தத்தின் சில தடயங்கள் மட்டுமே உள்ளன என்பதுதான் இதற்கான பதிலாக இருக்கமுடியும். அதுமட்டுமின்றி அக்கதைகள் கி.மு. மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டின் இந்தியாவின் நிலையை விவரிக்கவில்லை. அதற்கும் முந்தைய இந்தியாவைப் பற்றி கூறுகின்றன.’

அத்துடன் அவர் அதற்கான தனது காரணங்களையும் கூறுகிறார்: ‘மக்களின் அரசியல், மதம் மற்றும் சமூகம் சார்ந்த நிலைமைகள் பற்றி கதைகளில் காணப்படும் விளக்கங்கள், கீழ்த்திசையின் பெரும் அரச வம்சங்களான நந்தர்களும் மௌரியர்களும் எழுச்சி பெறுவதற்கு முந்தைய பழங்காலத்தைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன; அப்போது பாடலிபுத்திரம் இந்தியாவின் தலைநகராக மாறியிருந்தது. ஆனால், ஜாதகங்கள் இந்த இரண்டு ராஜ்ஜியங்களில் எதையும் குறிப்பிடவில்லை; இந்தியா முழுமையுமோ பெரும் பகுதியையோ உள்ளடக்கிய பெரும் பேரரசுகளைப் பற்றியும் அவற்றுக்குத் தெரிந்திருக்கவில்லை.

‘கதைகளில் பாத்திரங்களாக வரும் அரசர்கள் ஆட்சி செய்யும் ராஜ்ஜியங்களின் எண்ணிக்கை மிகவும் கணிசமானது. மத்ரம், இரண்டு பஞ்சாலங்கள், கோசலம், விதேகம், காசி மற்றும் விதர்ப்பம் போன்ற பெரும்பான்மை ராஜ்ஜியங்களின் பெயர்கள் வேத இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளுடன் ஒத்துப் போகின்றன; கலிங்கம் மற்றும் அஸ்ஸகா (அல்லது அஸ்மகா) போன்ற, ராஜ்ஜியங்களும் பிராமண இலக்கியங்களில் – முதலில் இதிகாசங்களிலும் மற்றும் பாணினியின் சூத்திரங்களிலும் – தோன்றுகின்றன. சிறப்பியல்பு கொண்ட பெயர்களான ஆந்திரர்கள், பாண்டியர்கள் மற்றும் கேரளர்கள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

‘ஓர் அரசியல் மையம் தேவையாக இருந்தது; அல்லது இருந்திருக்கலாம்; ஆனால், பிராமண இளைஞர்களுக்கும் அரச வம்சத்தினருக்கும் கல்வியளித்தல் தொடர்பாக அடிக்கடி கூறப்படும் செய்திகள் அறிவுசார் மையம் ஒன்று இருந்ததை வெளிப்படுத்துகின்றன; அந்த மையம், தொலைதூர ராஜ்ஜியமான காந்தாரத்தின் தலைநகர் தட்சசீலத்தில் இருந்தது. . . . அத்துடன் பாணினியின் பூர்விக நாடான காந்தாரம், கி.மு. நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் – ஒருவேளை இன்னும் முந்தைய காலம் தொடங்கி – பிராமணியக் கல்வி பெறுவதற்கான வலுவான மையமாக இருந்தது என்பது மிகவும் நம்பத்தக்க தகவல்.

‘இந்தியாவின் சமயம் தொடர்பான குறிப்புகள் ஒப்பீட்டளவில் இதற்கு இணையான முந்தைய காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. உயர் கல்விக்கான அடிப்படையாக மூன்று வேதங்கள் இருந்தன; அது போல, நடைமுறையில் இருந்த சமயம் அது குறிப்பிடும் சடங்குகள் மற்றும் பலியிடல், யாகங்களுடன் செயல்முறைகளுக்கான வழியாக இருந்தது; வாஜபேயம் மற்றும் ராஜசூயம் போன்ற பல யாகங்கள் சிறப்பித்தும் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுக்கு இணையாகப் பிரபலமான பண்டிகைகளும் நடக்கின்றன. குறிப்பிட்ட நட்சத்திரம் வந்துவிட்டது என்று அறிவித்து அந்த நாளில் கொண்டாட்டங்கள் நடந்தன. பொதுவான உற்சாக நிகழ்வுகள், இறைவனுக்குச் சுரா பானம் படைக்கப்பட்டு ஏராளமாக விநியோகமும் அருந்துதலும் நடந்தது. அதேபோல் துர் தேவதைகளையும் மரங்களையும் வணங்குதல் போன்ற அனைத்தும் பழங்காலத்துக்குத் திரும்பவும் அழைத்துச் செல்கின்றன.

‘காடுகளில் வசித்த துறவிகளையும், தேச சஞ்சாரம் செய்யும் துறவிகளையும் அனைவரும் அறிந்திருந்தனர் . . . ஜாதகங்களில் விவரிக்கப்பட்டுள்ள நாகரிக நிலை பல்வேறு அம்சங்களில் பழமையானதாக இருந்தது; மிகவும் குறிப்பாக அப்போது நிலவிய மர வேலைப்பாட்டுத் திறன் குறிப்பிடத்தக்கதாக இருந்தது; ஆரம்பகால சிற்பங்களைச் சான்றுகளாக வைத்துப் பார்க்கும்போது, இத்திறன் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட மறைந்தேவிட்டது. அரசர்களின் அரண்மனைகள் பொதுவாக மரத்தால் கட்டப்பட்டவை என்றே ஜாதகங்களும் விவரிக்கின்றன. மேலும் பல விவரங்கள் இத்துடன் சேர்க்கப்படலாம்; எனினும், கொடுக்கப்பட்ட தகவல்களே நமது நோக்கத்துக்குப் போதுமானவை.’

ஜாதக புத்தகத்தைத் தொகுத்தவரான பேராசிரியர் ஃபாஸ்போல், இறுதித் தொகுதியின் முன்னுரையில் இதே போன்ற ஒரு கருத்தை வெளிப்படுத்துகிறார். இந்தக் குறிப்பிட்ட விஷயம் குறித்து எழுதிய இந்தப் புகழ் வாய்ந்த அறிஞர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவுவது, குறைந்தபட்சம், சான்று தேட வேண்டிய சுமையைக் குறைக்கும் அளவுக்காவது போதுமானது. அவற்றை முற்றிலும் புறக்கணிப்பதற்கு பதிலாக, இந்திய வரலாறு பற்றி ஜாதகக் கதைகள் சொல்வதை – அந்தக் கதைகளில் கூறப்படும் உரையாடல்கள் மூலமாக (வெளிவடிவத்திலிருந்து அல்ல) அக்கால வரலாறு குறித்து நாம் அனுமானிக்க முடியும்.

குறிப்பாக, பௌத்தப் பாரம்பரியம் குறித்த தொகுப்பில் அக்கதைகளைச் சேர்த்ததன் மூலம் அந்தக் காலகட்டத்தை அனுமானிப்பதற்கான ஆதாரமாகக் கொள்வதற்கு நமக்காக அவை பாதுகாக்கப்பட்டன எனலாம். அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த வாய்ப்பு அது. பாரம்பரியம், அரசியல் மற்றும் சமூக விஷயங்களில் போதுமான அளவு முந்தையப் பார்வையை அவை பாதுகாத்திருப்பதாகத் தெரிகிறது.

அவை சில நூற்றாண்டுகள் பழமையானவை என்று மொழியின் வழியாக அறிந்துகொள்ள மிகவும் நம்பகமானவையாக நிச்சயமாகச் செய்யுள்கள் உள்ளன. ஆனால் உரைநடை, கதை முழுவதும் தொடர்ந்து வருவதாக இருந்திருக்க வேண்டும்; பண்டைய செதுக்குச் சிற்பங்களிலும் அப்படி எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதுபோன்ற நிலைமைகளில் அவற்றுக்குப் போதுமான மதிப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஜாதகக் கதைகளை ஒரு கதையை மற்றொன்றுடன் ஒப்பிடும் போது, குறிப்பாக மரபு உருவாக்கம் என்பதில் இருந்த இரண்டு நிலைகளில் அவற்றின் ஒப்பீட்டளவிலான காலகட்டத்தில் சில விஷயங்களை ஏற்கனவே கவனித்தோம். நீண்டதாக இருக்கும் கதைகள் – அவற்றில் நவீனக் காலத்து நாவல்கள் அளவுக்கு நீண்டவை – தொகுதி ஆறில் இருக்கின்றன; இதற்கு முந்தைய பதிப்புகளின் தொகுதிகளில் பார்க்க முடிவதைக் காட்டிலும், மொழியிலும், இந்தியாவில் சமூக நிலைமைகள் பற்றிய அவற்றின் பார்வையிலும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. இருப்பினும் அவற்றில் சில, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஏற்கனவே இருந்தன என்பதாக செதுக்குச் சிற்பங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விஷயம் செய்யுள்களுக்கு மட்டுமல்ல, உரைநடைக்கும் நன்கு பொருந்தும்; ஏனெனில், சிற்பங்கள் கதைகளின் உரைநடை பகுதிகளையே குறிப்பிடுகின்றன.

அத்துடன் ஆரம்பக் காலகட்டத்தில் (அதாவது, நிச்சயமாக, மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கி.மு.), பௌத்த மரபுக்குள் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில கதைகள், பழங்காலத்தைச் சேர்ந்தவை என்று முடிவு செய்வதற்குச் சாத்தியமுண்டு. ஜாதகக் காலத்துக்கு முந்திய புத்தக வடிவத்தைச் சேர்ந்தவை இவை என்று நாம் தடம் காணக்கூடிய பெரும்பான்மை கதைகள், அதாவது 60 முதல் 70 சதவீதம் வரையிலும் செய்யுள்களைக் கொண்டிருக்கவில்லை என்பதை இதற்குமுன்னர் பார்த்தோம்.

இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் தற்போதைய தொகுப்பிலும் கணிசமான எண்ணிக்கையிலான கதைகளிலும் செய்யுள்கள் இல்லை. (இந்தக் கதைகளை ஜாதகக் கதைகளாக மாற்றும் நோக்கத்துடன் சேர்க்கப்பட்ட) செய்யுள்கள் வெளிவடிவங்களில் மட்டுமே காணப்படுகின்றன. கதைகளில் செய்யுள்களே இல்லாத வேறு கதைகளும் உள்ளன. அவை ஒரு ‘கூட்டாக’, கற்பனை உருவம் அதாவது ஒரு தேவதை கூறுவதுபோல் அமைக்கப்படுகின்றன. உண்மையில் கதையுடன் அந்த உருவத்துக்கு வேறு எந்தத் தொடர்பும் இல்லை.

இந்தக் கதைகள் செய்யுள்கள் இல்லாதவையாக ஏற்கனவே இருந்திருக்க வேண்டும்; பௌத்த மரபின் வழியிலான ஜாதகக் கதைகளாக அவை சேர்க்கப்படுவதற்கு முன் அவற்றில் செய்யுள்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்; ஆகவே, அவை அநேகமாக, பௌத்தக் காலத்துக்கு முந்தயவை என்பதுடன், மிகவும் பழமையானவை.

மறுபுறம், இதற்கு முந்தைய அத்தியாயத்தில் பார்த்தது போல், கதைகள் அல்லது புராணக்கதைகளை உரைநடையாக வழங்குவதும், உரையாடலைச் செய்யுளாக கொடுப்பதும் என்ற இந்த அடிப்படை வழக்கம் சார்ந்து ஜாதகக் கதைகள் கூறப்படுவது பௌத்தத்துக்கு முந்தைய காலம்; இதிகாசக் காலத்துக்கு முந்தைய இலக்கிய வடிவத்துக்கான மிகவும் விரிவான மற்றொரு ஒரே எடுத்துக்காட்டு ஜாதகப் புத்தகம்; ஆரம்பக்கால நியதி நூல்களில் இவை போன்ற குறுகிய வடிவிலான மாதிரிகள் பல நமக்காகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

சிலவற்றை நாம் சுருக்கமாகக் கூறலாம்:

1. ஜாதகக் கதைகள் காணப்படும் நியதிப் புத்தகத்தில் செய்யுள்கள் மட்டுமே உள்ளன. இது ‘மத்திய ராஜ்ஜியம்’ என்று அழைக்கப்படும் வட இந்தியாவில், அசோகரின் காலத்துக்கு முன் இயற்றப்பட்டது. அது இன்னும் வெளியிடப்படவில்லை.

2. செய்யுள்கள் கலந்து கதைகளை வாய்மொழியாகக் கூறும் வழக்கம் முதலில் இருந்தே இருந்திருக்க வேண்டும் என்பது முற்றிலும் உறுதியான ஒன்று; ஏனெனில், கதைகள் இல்லாத செய்யுள்களைப் புரிந்துகொள்ள முடியாது.

3. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் செதுக்குச் சிற்பங்கள் இதைப்போன்ற உரைநடைக் கதைகள் பலவற்றைக் கூறுவது கண்டறியப்பட்டுள்ளது. அந்தச் சிற்பங்கள் ஒன்றில் ஒரு செய்யுளின் பாதியைக் காண முடிகிறது.

4. அந்த நியதிப் புத்தகங்களில் ஜாதகப் புத்தகத்தின் காலத்தைக் காட்டிலும் பழமையான ஜாதகக் கதைகள் காணப்படுகின்றன.

5. இந்தப் பழமையான ஜாதகங்களில் கூறப்படும் நிகழ்வுகள், உருவகங்கள், உவமைகள் அல்லது புராணக்கதைகளாக இருக்கின்றன; அவை பொதுவாக வெளிவடிவத்தையோ செய்யுள்களையோ தருவதில்லை. அவற்றில் புத்தர், அவரது முந்தைய பிறவியில் விலங்குடனோ அல்லது சாதாரண மனிதருடனோ அடையாளப்படுத்திக் கூறப்படவில்லை. பழங்காலத்தின் பிரபலமாக இருந்த சில முனிவர்களுடன் மட்டுமே அவர் அடையாளம் காணப்படுகிறார்.

6. தற்போது கிடைத்திருக்கும் பதிப்பு உரைநடையைக் கொண்ட பதிப்பு அல்ல; இது விளக்கவுரைக்கான பதிப்பு. சிலோனில் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வசித்த பெயர் தெரியாத ஓர் ஆசிரியரால் இது எழுதப்பட்டிருக்கலாம்.

7. இந்த விளக்கவுரையில், அவை இருக்கும் செய்யுள்கள் அனைத்தையும் உள்ளடக்கிய உரைநடையாகக் கூறப்படும் கதைகள் இருக்கின்றன. அத்தகைய கதை ஒவ்வொன்றும், அறிமுக அத்தியாயத்தின் வெளிவடிவம் ஒன்றையும் தருகிறது; அதாவது, எப்போது, எங்கே, எந்தச் சூழலில் புத்தர் இந்தக் கதையைக் கூறினார் என்ற விவரம். அத்துடன் ஒவ்வொரு கதையிலும் இறுதியாக, முந்தைய பிறப்பில் புத்தரும் அவரது சமகாலத்தவர்களும் ஏற்றிருந்த கதாபாத்திரங்களும் அடையாளத்துடன் கூறப்படுகின்றன.

8. சிலோனில் வழங்கப்பட்ட விளக்கவுரை வடிவம் பாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஒன்று. இப்போது தொலைந்து போய்விட்டதாகக் கூறப்படும் அந்த ஆரம்ப கால விளக்கவுரை, முழுவதும் சிங்கள மொழியில் இருந்தது; அதில் செய்யுள்கள் மட்டும் பாலி மொழியில் எழுதப்பட்டிருந்தன.

9. நமக்கு இப்போது கிடைத்திருக்கும் பாலி விளக்கவுரையில் இருக்கும் கதைகளில், பெரும்பாலும் கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து புழங்கிவரும் மரபுகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் ஒன்று அல்லது இரண்டு கதைகளில் வேறுபாடுகள் இருப்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

10. அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் பற்றிய சந்தேகத்திற்குரிய குறிப்புகளைப் பொறுத்தவரை, அவை பெரும்பாலும், புத்தர் காலத்திலும் அதற்கு முன்பும் வட இந்தியாவில் நிலவிய சூழலைப் பிரதிபலிக்கின்றன.

11. பெரும்பாலான அசல் ஜாதகக் கதைகள் படிப்படியாக உருவாகியவை. அவற்றின் உள் கட்டமைப்பு அல்லது உள்ளமைப்பு அப்போது வட இந்தியாவில் புழங்கிய நாட்டுப்புறக் கதைகளிலிருந்து எடுக்கப்பட்டது.

12. கதைகள் உருவான ஒப்பீட்டளவிலான காலகட்டத்தை நிர்ணயிப்பதில் ஏற்கனவே சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆறாவது மற்றும் கடைசி தொகுதிகளில் உள்ளவை நீளமான கதைகள் என்பதுடன் அவை சமீபத்திய காலத்தவை. இவற்றில் சில ஏற்கனவே கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் செதுக்குச் சிற்பங்களில் விளக்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

13. அனைத்து ஜாதகங்களிலும் செய்யுள்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் இந்தச் செய்யுள்கள் வெளிவடிவத்திலேயே உள்ளன; கதைகளில் இல்லை. அத்தகைய கதைகள், செய்யுள்கள் இல்லாமல், இந்திய நாட்டுப்புறக் கதைகளின் அசல் வடிவத்தில் கூறப்பட்டிருக்கலாம்.

14. ஒரு சில கதைகளில், செய்யுள்கள் கதைகளிலேயே காணப்பட்டாலும், அவை ஒரு வகை ‘கூட்டு வடிவமாக’ வெளிப்படுகின்றன. அத்துடன் கதையின் ஒரு பகுதியாக அமையவில்லை. வேறு சில நிகழ்வுகளிலும், இதே போன்ற முடிவை நாம் எடுக்கலாம்.

15. ஜாதகக் கதைகளின் முழுத் தொகுப்பும், உலகின் எந்த இலக்கியத்திலும் இப்போது நாம் காண முடிவது போன்று, மிகவும் பழமையான நாட்டுப்புறக் கதைகளின் மிகவும் நம்பகமான, மிக முழுமையான தொகுப்பாக உள்ளன.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *